வரவேற்போம்! ஆனால்…?

வரவேற்போம்!  ஆனால்…?

 

மு.சிவகுருநாதன்

 

 

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சில குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வலிமையான, துணிச்சலான முதல்வர்கள் எடுக்கத் துணியாத செயல்களை இவர்கள் எடுத்துள்ளனர். இவற்றை வரவேற்போம்; பாராட்டுவோம்.

 

வழக்கமாக பலமான அரசுகள் வேண்டும் என்கிற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. மகாத்மா காந்தி போன்றவர்கள் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் இல்லாத, அதிகார பரவலாக்கம் பெற்றவையாக அரசுகள் இருக்க வேண்டுமென்று விரும்பினர். கருத்தியல் ஏதுமின்றி தனிநபர் தலைமை, கதாநாயகத் தன்மை ஆகியவற்றைக் கொண்டே முன்முடிவுகளுடன் மதிப்பிடுவது போன்ற அவலச்சூழல் இங்குண்டு.

 

சமூகம், மாணவர்கள் பால் அக்கறையுள்ள கல்வியாளர்கள் பல்லாண்டுகளாக முன்வைத்த கோரிக்கைகளில் சில ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மனநிறைவைத் தருகிறது. இருப்பினும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.

 

+1, +2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், தேர்வு நேரம் குறைப்பு போன்ற வரவேற்கத்தக்க அறிவிப்புகளை பத்தாம் வகுப்பிற்கும் விரிவு படுத்தவேண்டும்.

 

தொல்.திருமாவளவன் போன்றவர்கள் +1, +2 வகுப்புகளுக்கு இரு பருவமுறை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பத்தாம் வகுப்பிற்கும் இதேபோல் இரு பருவமுறை பற்றியும் யோசிப்பது இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது. பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில்தான் மாறப்போகிறது. +1, +2 போன்று 10 ஆம் வகுப்புக்கும் இவ்வாண்டே தேர்வு முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

 

மூன்றாண்டுகள் தொடர்ந்து பொதுத்தேர்வுகள் எனும்போது அவை ஒரே மாதிரியாக இருப்பது நல்லது. மேலும் இதை அமல் செய்வதில் எவ்வித சிக்கலும் இல்லை.

 

இனி +1 பாடத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் 9 ஆம் வகுப்புப் பாடம் கற்பிக்கப்படுவதை எவ்வாறு உறுதி செய்யப் போகிறார்கள்? இம்முறைகேட்டைச் சரிசெய்திருந்தால், +1 க்கு பொதுதேர்வே தேவைப்பட்டிருக்காதே! 9 வகுப்பு முடிய உள்ள வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்கள்: 2.30 மணி நேரத் தேர்வு போன்ற இங்கு அபத்தங்கள் இங்கு அதிகம். இப்போதைய கல்வித் துறை அணி அவற்றையெல்லாம் களையும் என நம்புவோம்.

6 முதல் 10 ஆம் வகுப்பு முடியுள்ள வகுப்புகளில் தகவல் தொழில் நுட்பக்கல்வி அறிமுகம் செய்யப்படுவதாக அரசாணை வெளியாகியுள்ளது. இதையும் வரவேற்போம். ஆனால் நான் பலமுறை எழுதியுள்ளது போல் அரசுப்பள்ளி கட்டிடங்கள் மாதிரி மிக மோசமான தரத்தில் எந்தத் துறையிலும் இல்லை என்கிற உண்மை பலருக்குத் தெரிவதில்லை. இங்கு பொருத்தப்படும் மின்னியல் கருவிகள், ஒயரிங் போன்றவை துளியும் தரமற்றவை. இந்தக் கட்டமைப்பு வசதிகளைச் சரிசெய்யாமல் கணினி போன்ற உபகரணங்களை பயன்படுத்த வழியில்லை.

 

இந்த அரசாணையில் சொல்லப்பட்ட ஓரம்சத்தைக் கவனிப்போம். “தமிழர்களின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வுகளை மாணவர்கள் பெறுவதுடன் அவர்கள் தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில் நுட்பத்தை கையாளச் செய்வது”, என்று சொல்லப்பட்டுள்ளது. (தி இந்து மே 24, 2017 – திருச்சி)

 

இம்மாதிரியான வெறியூட்டும் வேலைகளைச் செய்ய நிறைய இயக்கங்களும் தலைவர்களும் இருக்கிறபோது பள்ளிக் கல்வித்துறையும் இதை செய்ய வேண்டுமா? இதன் பலன் ஆண்டுக்குப் பலர் தீக்குளித்து இறப்பதுதான். தற்போதைய நமது பாடநூல்கள் இம்மாதிரி வெறியூட்டும் பணி செய்வதை எனது ‘கல்விக் குழப்பங்கள்’ (பாரதி புத்தகாலயம் வெளியீடு, மார்ச் 2017) நூலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

 

பள்ளிக் கல்வியில் தமிழைப் படிக்க வேண்டியதில்லை, தமிழ் கட்டாயப் பயிற்று மொழியாகவும் இல்லை. தமிழ்ப் பல்கலைக் கழகம், செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்றவை உரிய நிதி வசதியின்றி முடங்கியிருப்பது, தரமான தமிழ்ப் படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டு, வணிக எழுத்துகள் கொண்டாப்படும் விநோதம், பள்ளி நூலங்களில் நூல்கள் என்கிற போர்வையில் குப்பைகள் வாங்கிக் குவிக்கப்பட்டிருப்பது போன்ற பல்வேறு அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, தமிழின் பெருமை என்ற பேரில் வெறியூட்டும் வேலையை மட்டும் செய்வொம் என்பது சரியல்ல. முதல் வகுப்பிலிருந்து +2 வகுப்பு முடிய உள்ள தமிழ்ப்பாடங்களே தமிழுக்கு எதிரானவை. ஒரு நடுநிலையான குழு அமைத்து உண்மையைக் கண்டறியலம். இதையெல்லாம் செய்யாமல் தொன்மை என மொழிவெறியூட்டுதல் தயவு செய்து வேண்டாம்.

Posted in எதிர்வினை, கல்வியியல், Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

‘கல்விக் குழப்பங்கள்’ வாசிப்பு முகாம் அனுபவங்கள்

‘கல்விக் குழப்பங்கள்’ வாசிப்பு முகாம் அனுபவங்கள்

மு.சிவகுருநாதன்

IMG-20170504-WA0002.jpg

எனது முதல் நூலான பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ரன் வெளியிட்ட ‘கல்விக் குழப்பங்கள்’ நூலின் முதல் நூல் விமர்சனக் கூட்டம் வாசிப்பு முகாமாக நேற்று (04.05.2017) ஈரோடு சத்தியமங்கலம் மைசூரு சாலையில் திம்பம் அருகே கொள்ளேகால் சாலையில் உள்ள அரேபாளையத்தில் நடைபெற்றது. காங்கேயம் வாசகர் வட்டமும் சுடர் தொண்டு நிறுவனமும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தன.

IMG-20170504-WA0018.jpg

தோழர்கள் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி, கனகராஜ், சுடர் நட்ராஜ் ஆகியோர் வெகு சிரத்தையுடன் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த முகாம் இரண்டு நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் கோவை சதாசிவம் அவர்களின் ‘ஆதியில் யானை இருந்தது’ (விலை ரூ.40) என்ற நூலும் இரண்டாம் நாள் எனது ‘கல்விக் குழப்பங்கள்’ (விலை ரூ. 140) நூலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. விடுமுறை நாள்களில் அவர்களது சொந்தப்பணிகளையெல்லாம் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு ரூ. 180 மதிப்புள்ள இவ்விரு நூல்களை வாசித்து விவாதிக்க சில ஆயிரங்களைச் செலவு செய்து 25 பேர்கள் இம்முகாம்களில் பங்கேற்றது பாராட்டிற்குரியது. இவர்களில் பெரும்பாலானோர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை, திருப்பூர், பல்லடம், சேலம், கோவில்பட்டி, அந்தியூர், கரூர், திருச்சி போன்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர்.

IMG-20170504-WA0041.jpg

இயற்கையோடு இணைந்து நிகழ்ந்த முதல் நாளில் என்னால் பங்கேற்க இயலாமல்போனது வருத்தமே. பண்ணாரியிலிருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளின் முடிவில் திம்பம் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1150 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனைத் தாண்டி இயற்கை வனப்புமிக்க அரேபாளையம் மைராடா பயிற்சி மையத்தில் நிகழ்வு மிக அருமையான நடந்தேறியது. மலையிலிருந்து காட்டின் வனப்பை ரசிப்பது ஒருபுறம், அணிவகுத்து நின்ற சரக்கு வாகங்களிடையே வளைவுகளிலும் முந்திச் சென்று, நான் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் மேலும் திகைப்பூட்டினார்.ஒரு வளைவில் சரக்கு வாகனம் தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு வெளியே உள்ள மரத்தில் மோதி நிற்கிறது. இந்த மரம் இல்லையேல் வாகனம் பள்ளத்தாக்கில் வீழ்ந்திருக்கும்! இதைப்போல நிறைய விபத்துகளின் அடையாளமாக தடுப்புச்சுவர்கள், உலோகத்தடுப்புகள் உடைந்து கிடக்கின்றன. அவை சீரமைக்கப்படாமல் இருப்பது நமதி பீதியை இன்னும் கூட்டுகிறது. இவ்வழியே செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அதிக பட்ச எடை வரையறை உண்டு. பண்ணாரி சோதனைச்சாவடிகளில் இதற்குரிய ‘மாமூல்’ வசூலிக்கப்பட்டு முறைகேடாக இவை அனுமதிக்கப்படுகின்றன. இதனால் சாலைகள் பாதிப்பதும் விபத்துகளும் அன்றாட நிகழ்வு.

மாலை காரில் திரும்புகையில், வெள்ளைக்காரன் இந்தப்பகுதியில் தேயிலை, காப்பி , ரப்பர் தோட்டங்களை ஏன் அமைக்கவில்லை? என்று தோழரொருவர் கேட்டார். அதற்கு இப்பகுதியில் காலநிலை இடம் கொடுக்கவில்லை போலும்! என்றேன் நான்.

IMG_20170504_165751.jpg

நேற்றே (03.05.2017) ‘கல்விக் குழப்பங்கள்’ நூல் வாசிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அய்ந்து குழுக்களாகப் பிரிந்து தலா 10 தலைப்புகளை வாசித்து விவாதித்து நிறை குறைகளை மதிப்பிட்டனர். மதிய உணவிற்குப் பிறகு குழுத்தலைவர்களது விமர்சனமும் கலந்துரையாடலும் நடைபெற்றது. தோழர்கள் சு.மூர்த்தி, சுடர் நட்ராஜ் பசுபதிப்பாளையம் கோவி ரவி, திருச்சி தெய்வகுமார், சௌந்தர்ராஜன், கோவை சதாசிவம், கனகராஜ், வே. சங்கர், எஸ். கவிதா, பல்லடம் கணேசன், சேலம் நடராஜன் போன்ற பலர் கருத்துரைத்தனர். இறுதியில் அதிகம் பேச கால அவகாசமில்லை. சுருக்கமாக சிலவற்றைப் பகிர்ந்துகொண்டு விடைபெற்றோம். பசுபதிப்பாளையம் கோவி ரவி முத்தாய்ப்பாக படிக்க வேண்டிய 72 நூல்களில் பட்டியலை அனைவருக்கும் அளித்தார்.

‘கல்விக் குழப்பங்கள்’ நூல் குறித்த பகிரப்பட்ட கருத்துகள் சில:

பாராட்டுரையாக சில கருத்துகள்:

 • அறச்சீற்றம் உள்ளது.
  நியாயமான கோபம்.
  சரளமான எழுத்து நடை சிறப்பு
  சுருக்கம், கருத்து அடர்த்தி.
  இன்னும் விரிவாக மூன்று தொகுதியாகக் கூட வெளியிட்டிருக்கலாம்.
  சமூக அறிவியல், தமிழ், அறிவியல் போன்ற பல பாடக்கருத்துகள் உள்ளன.
  மறைநீர் பற்றிப் பேசப்படுகிறது; இன்னும் விரிவாக பேசவேண்டும்.
  கடலில் கலக்கும் வீணாவது அல்ல என்பதைச் சொன்னது நன்று.

IMG_20170504_152436.jpg

விமர்சனக் கருத்துரைகள்:

 • நூல் தலைப்பிற்கும் கட்டுரைகளுக்கும் தொடர்பில்லை.
  நூலில் வெறும் எதிர்மறைக் கருத்துகளே உள்ளன.
  இந்துத் தத்துவங்களில் (தலைப்பு: 05) மட்டுமே நேர்மறைக் கருத்துகள் உள்ளன.
  வரலாறு, தமிழ்ப் பாடக் கருத்துகளே மிகுதியாக உள்ளன.
  ‘ஆயிஷா’ நடராசனின் ‘வன்முறையில்லாத வகுப்பறை’யைப் போல மோசமாக, ஆசிரியர்களை அதிகம் குறை சொல்ல்கிறது.
  அரசுப்பள்ளி ஆசிரியரிடமிருந்து இத்தகைய கருத்துகளை எதிர்பார்க்கவில்லை.
  மார்க்சிய தாக்கம் அதிகம்.
  நூலில் தீர்வுகளே இல்லை; ‘கல்வித் தீர்வுகள்’ என்ற இன்னொரு நூல் எழுதப்படவேண்டும்.
  ‘சங்கம்’ என்ற சொல் தமிழிலிருந்து ஏன் பாலி மொழிக்குச் சென்றிருக்கக் கூடாது?
  ராகுல சாங்கிருத்தியாயனின் கருத்துகள் இந்நூலில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
  படையெடுப்புகளில் புதிய செய்திகள் இல்லை.
  பாபரில் தொடங்கி அவுரங்கசீப் ஈறாக நடத்திய கொடுமைகளை மதன் தனது வரலாற்று நூலில் விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியுள்ளார். இந்நூல் விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
  அவரங்கசீப் என்ற கொடிய மன்னரை நல்லவராகச் சித்தரிக்கும் போக்கு சமீபத்தில் திடீரென்று அதிகரிப்பது ஏன்?
  அனந்தவர்மன், அனந்தபன்மன் போன்ற பெயர்சிக்கலே இல்லை! நமது முன்னோர்கள் பெயர்கள் குறித்தே ஆய்வு செய்யவேண்டும்.
  படிப்போரை காயப்படுத்தும் விதமாக உள்ளது.
  கடுஞ்சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
  இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறது; இழிவு செய்கிறது.
  ‘சிவகுருநாதன்’ என்பதே இந்து மதக் கடவுளின் பெயர்தானே!
  தமிழ் மொழிப் பெருமையைக் கிண்டல் செய்கிறது; இந்தியத் தேசியப் பார்வையை வலியுறுத்துகிறது.
  என் மொழி, கலாச்சாரம் ஈடு, இணையில்லாதது. இது யாருக்கும் இல்லை; பெருமை பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை.
  கும்பிட்டு வணக்கம் சொல்வதைத் தீண்டமை என வரையறுப்பது மிக மோசமானது.
  மதச்சார்ப்பற்ற பள்ளிகள் பற்றிய கட்டுரையில் உள்ளது போல் எந்தப் பள்ளிகளிலும் இல்லை.
  கிருஸ்தவ மதத்தை உயர்த்திப் பிடிக்கிறது.
  துறவறம் குறித்து சொன்னதும் சரியல்ல.
  சனாதனி என்ற சொல்லே புரியவில்லை.
  நீதிபோதனை குறித்த பயிற்சிகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதில் சொல்லப்படும் கதைகளை யாரும் சொல்வதும் இல்லை.
  பாலியல் கல்வியை சொல்லிக் கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது.
 • இறுதியாக கால அவகாசமின்மையால் சில கருத்துகளை மட்டும் பகிர்ந்து விடைபெற்றோம். அவற்றுள் சில:
 • தீர்வுகள் ஒரு புள்ளியில் இல்லை. கச்சத்தீவை மீட்டு விட்டால் மீனவர் பிரச்சினை தீர்ந்து விடும் என்றோ, கங்கை – காவிரி இணைப்பு நடத்துவிட்டால் நீர்பஞ்சம் தீரும் என்றோ ஒரு வரியில் தீர்வு சொல்ல நம்மால் இயலாது. அனைவரும் கூடி பன்மைத் தன்மையுள்ள தீர்வுகளை உருவாக்க வேண்டும். பிரச்சினையை உணர்வதே முதல்படி.
  சாதி, மத, இன, மொழி, கலாச்சார ரீதியான அனைத்து விதமான வெறுப்பரசியல் ஒழிக்கப்பட்டு, பிஞ்சு மனங்களில் இதன் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே நமது கரிசனம்.

மொழியின் பெருமைகளை பேசினால் மட்டும் போதாது. மாறாக செயல்பாடுகள் வேண்டும். நமது தலைவர்கள் வெறும் பேச்சின் மூலம் வெறியூட்டுவதே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அறிவுசார் சமூகம் இதைத் தாண்டிச் செல்லவேண்டியத் தேவையிருக்கிறது.
நமது கலாச்சாரம் என்று சொல்வதில் நிறைய சிக்கலுண்டு. எவ்வித பகுத்தாராய்தல் இன்றி எல்லாவற்றையும் கலாச்சாரமாக சுமைக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தியத் தத்துவங்களனைத்தும் ‘இந்து’த் தத்துவங்களல்ல. மாறாக அவைதீக மரபுகளை இந்துத் தத்துவமாகச் சொல்வது தவறு.
தேர்வுகளை நல்ல முறையில் எழுத பயிற்சி அளிப்பதுதான் நமது வேலையேத் தவிர, கோயிலுக்கும் அழைத்துச் செல்வதும் சிறப்பு வழிபாடு நடத்துவதும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் பணியாக இருக்க முடியாது. பெற்றோரது பணிகளை நாம் அபகரிக்கக் கூடாது. இது மதச்சார்பற்ற, நமது அரசியல் சட்டத்தை மீறுவதாகும்.
எக்காரணம் சொல்லியும் தொட மறுப்பது தீண்டாமையே. கும்பிடுவதும் இதில் விதிவிலக்கல்ல. நீங்கள் கலாச்சாரம் என்று சொல்வதும் தீண்டாமைக் கலாச்சாரமே. தொடுவது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட தூர எல்லைக்குள் (64, 32, 16, 8 அடிகள்) வருவேதே இங்கு தீட்டாக வரையறுக்கப்பட்டதை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் புலையர்கள் பட்ட பாடுகள் அய்யன் காளியின் போராட்டங்கள் ஆகியன இங்கு மறைக்கப்பட்ட வரலாறு. இந்த வரலாறு ஏன் மறைக்கப்பட்டது என்பதும் அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் பல்லாண்டுகளாக இங்கு நடந்துவரும் போராட்டம்.
இந்துத்துவத்தைப் போன்றே தமிழ் தேசியமும் பாசிசமயமானது. இங்குதான் வெறுப்பரசியல் உற்பத்தியாகிறது. இளம் பிஞ்சுகளை பாசிச மயப்படுத்துவது நல்லதல்ல.
எனது பெயர் இந்துப் பெயராக இருப்பது குறித்து, பெரியார் ஈ.வே.ராமசாமி சொன்ன பதில்தான் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
மத அடிப்படையில் மன்னர்களை மதிப்பிடுவது நமது வரலாற்று எழுதியலின் துயரம். நடுநிலையாகச் செயல்பட்ட மராட்டிய மன்னர் சிவாஜியை இந்துத் திருவுருவாக மாற்றியதும் இத்தகைய அரசியல் செயல்பாடுதான் காரணம்.
1992 பாபர் மசூதி இடிப்பு, 2002 குஜராத்தில் மாநில அரசால் கட்டவிழ்த்துவிட்ட வன்செயல்களுக்கு பிந்தைய காலகட்டத்தைப் புரிந்துகொள்வது அவசியம். அவுரங்கசீப் பற்றிய ஆய்வுகள் முன்பே வெளியானதுதான். புதுதில்லியில் அவுரங்கசீப் மார்க்கை அப்துல்கலாம் மார்க்காக மாற்றப் பட்டபோது மீண்டும் ஒருமுறை பேசவேண்டிய கட்டாயம் ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்டது.
காலம் காலமாக எவ்வித கேள்வியுமின்றி சில கருத்துகள் நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆய்வுக்குட்படுத்துவதும் மாற்றைத் தேடவும் விரிவும் ஆழமான வாசிப்பு தேவைப்படுகிறது.
எதையும் அறிவியற்பூர்வமாக புறவயமாக அணுகும் முறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சாதி, மத, மொழி, இன, தேச தன்னிலை மறந்த / அழிந்த சிந்தனைப் போக்கு இங்கு வளர்த்தெடுக்கப்படவேண்டும்.

இறுதியாக சொல்ல மறந்த ஒன்று:

மதனின் நூல் கல்கியின் நாவலைப் போன்றதே. அதைத் தாண்டி அதில் ஒன்றுமில்ல்லை. இவற்றில் காணப்படும் உண்மைகளைவிட காழ்ப்பும் வெறுப்புணர்வும் மிகுதி. இங்கு நமது வாசிப்புத் தேர்வு முக்கியம். வரலாற்று நூல்கள் என்ற போர்வையில் இங்கு குப்பைகள் மிக அதிகம்.

Posted in செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள், நிகழ்வுகள், Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

‘டெட்’ (TNTET 2017) தேர்வு வன்முறை!

‘டெட்’ (TNTET 2017) தேர்வு வன்முறை!

முசிவகுருநாதன்

பொதுவாகவே தேர்வு என்றாலே அது வன்முறைதான்! மாணவர்களுக்குத்தானே தேர்வு, ஆசிரியர்களுக்கு ஏன் தேர்வு? என்று கேள்வி கேட்கும் ஆசிரியர் சமூகத்திற்கு நடந்த தேர்வு வன்முறை குறித்தும் பேசவேண்டியுள்ளது ஒரு நகை முரண். தேர்வுகளை நியாயப்படுத்தும் எவருமே கூட இந்த வன்முறைகளை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

ஆண்டுக்கு இருமுறை ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளை நடத்துவதாகச் சொல்லி, பல ஆண்டுகள் நடத்தாமல் வெறுமனே இருந்துவிட்டு, தற்போது திடீரென அறிவித்து ஏப்ரல் 29, 30 2017 ஆகிய நாட்களில் நடத்தி முடித்திருக்கிறார்கள். தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை என்பதையும் அதே நாளில் வேறு தேர்வுகள் இருக்கிறது என்கிற பல்வேறு கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இதை எழுதும் பலர் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் கொத்தடிமை ஊழியம் செய்பவர்கள். மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தாத அரசுகள், இந்த ஆசிரியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்யுமா? பள்ளிகள் விடுமுறை விட்ட பிறகு மே இறுதியில் நடத்தினால் வசதியாக இருக்கும் என்ற கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாததும் ஒரு வகையான வன்முறையே! பிறகென்ன மக்களாட்சி வேண்டிக் கிடக்கிறது?

போட்டித்தேர்வுகளும் முறைகேடுகளும் பிரிக்க இயலாதவை. வினாத்தாள் வெளியாதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் எப்பொதும் உண்டு. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக இம்முறை தேர்வர்களை கடும் வன்முறைக்குள்ளாக்கி அதன் மூலம் ‘டெட்’ தேர்வுகள் நியாயமாக நடைபெறுவதாக ஒரு தோற்றத்தை உண்டுபண்ணுவது ரொம்பவும் அபத்தம். அதில் ஒன்றிரண்டை மட்டும் பார்ப்போம்.

கர்ச்சிப் வைத்துகொள்ளக்கூடாது.

கொளுத்தும் வெயிலில் வேர்வையை எதில் துடைப்பது? கர்ச்சிப்பில் இதுவரையில் காப்பியடிக்கும் முறைகேடுகள் நடைபெற்றனவா? தேர்வு வாரியமே தேர்வர்களுக்கு கர்ச்சிப் விநியோகித்து விடலாம்! இதைப் போல பெல்ட்டில் பிட் வைத்து இந்தப் போட்டித்தேர்வுகளை எழுத முடியுமா என்ன?

தண்ணீர்ப் பாட்டில் கூடாது.

குடிநீர் பாட்டிலில் என்ன வகையான முறைகேடுகள் நடைபெற முடியும்? உடல்நலம் குன்றியவர்கள் கூட தாங்கள் கொண்டு வந்த நீரை பருக அனுமதிக்காததை விட வேறு கொடுமை இருக்க முடியுமா? எல்லாரும் ‘பாத்ரூம்’ பிளாஸ்டிக் வாளிகளில் வைக்கப்பட்ட சுகாதாரமற்ற நீரைக் குடிக்க வேண்டிய கொடுமையை என்னவென்பது? தேர்வறைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்காமலும் அவர்கள் கொண்டு வந்த நீரையும் அனுமதிக்காமல் இருப்பது வன்முறையன்றி வேறென்ன?

சாதாரண கைக்கடிகாரங்கள் கூட கூடாது.

பொதுவாக தேர்வுகளில் எலெக்ட்ரானிக் பொருள்கள் (செல்போன், கால்குலேட்டர், எலெக்ட்ரானிக் வாட்ச் போன்றவை.) கொண்டுவருவதைத் தடுப்பது என்பது வேறு. நேர மேலாண்மைக்காக சாதாரண கைக் கடிகாரங்களை அனுமதிக்காததை விட வன்செயல் இருக்க முடியாது. இதில் எப்படி முறைகேட்டில் ஈடுபடமுடியும் என்பதைத் தேர்வு வாரியம் விளக்கினால் நல்லது. ஒவ்வொரு தேர்வறைகளிலும் ஒரு சுவர்க்கடிகாரத்தை மாற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு அரை மணிக்கு ஒருமுறை மணியடிக்கப்படுவது என்பது போதுமானதல்ல.

தேர்வரின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் இவ்வாறான முடிவுகள் எப்படி, எங்கு, யாரல் எடுக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை. எதற்கும் நீதிமன்றத்தை நாடித்தான் பெறவேண்டும் என்கிற நிலை மக்களாட்சியை மதிப்பிழக்கச் செய்யும். தவறான வினாவிற்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றங்களைகளையே நாடவேண்டியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு விலங்கியல் பாடத்திற்கு இவ்வாறு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி வரும் தேர்வுகளில் இம்மாதிரியான கொடிய, ஆனால் தேர்வு முறைகேடுகளுக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லாத செயல்களை முற்றிலுமாக நிறுத்திக்கொள்வது அழகு. இல்லாவிட்டால் நீதிமன்றங்களை தேர்வர்கள் நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.

Posted in கல்வியியல், Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி

ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி

 

(மதிப்பீடு – விமர்சனம் – அஞ்சலி – நினைவுத் தொகுப்பு)

 

தேர்வும், தொகுப்பும்: மு.சிவகுருநாதன்

 

AGK_0001

 

      கீழத்தஞ்சை மாவட்டத்தில் தலித், அடித்தட்டு விவசாயக் கூலிகளுக்காக மக்கள் திரள் இயக்கம் கட்டிப் போராடி அவர்களுடைய தன்மானத்தையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் மீட்டெடுத்ததில் பி.எஸ்.ஆர்., மணலி கந்தசாமி, ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் ஆகிய ஆளுமைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. “செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம்”, என்று களப்போராளியாக பணி செய்தவர் ஏஜிகே. ஏஜிகே வின் முதலாண்டு நினைவு நாள்  ஆகஸ்ட் 10, 2017. அந்த நாளில் வெறும் புகழுரையாக இல்லாமல் அவரது வாழ்வையும் பணிகளையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யும் கட்டுரைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. கீழ்க்கண்ட தோழர்களின் பங்களிப்பில் இந்தத் தொகுப்பு உருவாகிறது.

 

 

 1. தியாகு
 2. பசு.கவுதமன்
 3. மு.இளங்கோவன்
 4. கொளத்தூர் மணி
 5. பொதிகைச்சித்தர்
 6. வ.கீதா
 7. அறிவுறுவோன்
 8. கோவை ராமகிருஷ்ணன்
 9. மலையூர் ஆறுமுகம்
 10. பொ.இரத்தினம்
 11. அரங்க குணசேகரன்
 12. கோ.சுகுமாரன்
 13. ஐ.வி.என். நாகராஜன்
 14. நாகை மாலி
 15. சோலை சுந்தரபெருமாள்
 16. கோ.கலியமூர்த்தி
 17. சாம்ராஜ்
 18. தய்.கந்தசாமி
 19. தெ.வெற்றிச்செல்வன்
 20. செ.சண்முகசுந்தரம்
 21. கவின்மலர்
 22. ப்ரேமா ரேவதி
 23. பாவெல் சூரியன்
 24. த.ரெ. தமிழ்மணி
 25. இரா. மோகன்ராஜன்
 26. மு.சிவகுருநாதன்
 27. ஏ.ஜி.வி. ரவி
 28. ஏ.ஜி.கே. கல்பனா
 29. ஏ.ஜி.கே. அஜிதா

 

 

       பட்டியல் இன்னும் நீளும். நீங்களும் இதில் பங்கேற்கலாம். ஏஜிகே பற்றிய கட்டுரைகள்  அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசி, மின்னஞ்சல், முகவரி வழியே தொடர்புகொள்ள வேண்டுகிறோம். கட்டுரைகளை மே 31 க்குள் அளிக்க வேண்டுகிறோம். தொகுப்பு நூல் ஏஜிகே நினைவு நாளில் (ஆகஸ்ட் 10, 2017) வெளியாகும்.

 

தொடர்புக்கு:

 

மு.சிவகுருநாதன்

நிலா வீடு,

2-396 பி புரட்டாசி வீதி,

கூட்டுறவு நகர்,

தியானபுரம்,

மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல்,  
திருவாரூர் – 610004.
 

                               

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

 

அலைபேசி: 9842802010, 9842402010

 

Posted in பதிவுகள், Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்

பொ. இரத்தினம், வழக்கறிஞர்,

நிறுவனர்,

சமத்துவ மக்கள் படை.

தொடர்புக்கு:

94434 58118

7010281861

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்சினையில் நடிகர் சத்யராஜின் பேச்சைக் கண்டித்து, அவர் நடித்து ஏப்ரல் 28 –ல் வெளியாகும் பாகுபலி 2 படத்தைத் திரையிட கன்னட சலுவாளி கட்சித் தலைவரும் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடி, எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் அறிவித்தனர். இதனையடுத்து கன்னட மக்களிடம் நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்து ஏப்ரல் 21 –ல் அறிக்கை வெளியிட்டார்.

நாட்டைக் கெடுக்க நிறைய அரசியல்வாதிகள் இருக்கும்போது நடிகர்கள் வேறு கிளம்பியுள்ளனர். ‘மானமிகு’ என்கிற அடைமொழிக்குள் மானங்கெட்ட பிழைப்பு நடத்துவது ஏன்? எப்படி வேண்டுமானாலும் நடித்து வியாபாரம் செய்துவிட்டுப் போங்கள். கொள்கை அது, இது என்று ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? பெரியாரை அவமானப்படுத்துவதே இவர்களைப் போன்றவர்கள்தான். உங்களுடைய வணிகத்தில் முற்போக்கு, பகுத்தறிவு ஆகியவற்றுக்கு இடமேது? பெரியாராக நடித்துவிட்டால் பெரியாராக மாறிவிடமுடியாது. குஷ்புகூட மிக நன்றாக நடித்துள்ளார்.

வட்டாள் நாகராஜின் பூர்வீகம் தெலுங்கு என்று சொல்லப்படுகிறது. அவர் கர்நாடக மக்களில் ஒரு சிலரை வன்முறையாளர்களாக மாற்றி, வெறியூட்டி வைத்துள்ளார். கன்னட மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. கன்னட சமூகமே இவ்வ்வாறு இருப்பதாக எண்ணுவது தவறு. தமிழ்ச் சமூகத்திலும் சில கிரிமினலகள் மக்களை வெறியூட்டுவதுபோல அங்கும் நடக்கிறது. சில கிரிமினல்களின் பித்தலாட்ட, அரசியல், பிழைப்புவாத நடவடிக்கை என்பதில் அய்யமில்லை.

பெரியார் கூட கன்னடர் தானே! கர்நாடக மக்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்களே என்றா கேட்டார்கள்? சத்யராஜின் உதவியாளர் சேகர் ஒரு கன்னடக்காரர். இளைஞர்களை முட்டாள்களாக வைத்திருக்க விரும்புவது சினிமாக்காரர்களின் விருப்பம். எவனோ எழுதிக் கொடுத்த வசனத்தைக் கொண்டு இவர்கள் பிழைப்பு ஓடுகிறது. இவர்களை விட நூறு மடங்கு திறமையாக எழுதக்கூடியவர்களும் இந்த நாட்டில் உண்டு. காவிரி நடுவர் தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் ரசிகர் நடத்திய போராட்டம் இனவெறியைத் தூண்டியது. பின்பு நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவமும் நடந்தது. கன்னடத் திரையுலகமும் இம்மாதிரியான வெறித்தனங்களை உண்டு பண்ணுகிறது.

சாமானிய கன்னட, தமிழ் மக்கள் இம்மாதிரியான வெறித்தனத்திற்கும் பித்தலாட்டத்திற்கும் ஆட்படாதவர்கள். எனவே சினிமாக்காரர்கள் தங்கள் தொழிலைப் பார்த்துக் கொண்டு இருப்பது நல்லது. இவர்களது சேட்டைகள் மூலம் சமூகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இந்த சூதாடிக் கும்பல்களால் மக்களுக்கு எவ்விதப் பலனுமில்லை. ரஜினிகாந்த் போன்றவர்கள் தங்களது மாநில மக்களுக்கு தமிழகத்தைவிட அதிக அளவிற்கு நிதியுதவி செய்கின்றனர்.

மன்னிப்பு கேட்டால் நீங்கள் செய்கிற காரியத்தில், கொள்கையில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்துகிறவர்களில் சத்யராஜூம் ஒருவர். மன்னிப்பு கேட்டால் நீ செய்கிற செயலே தப்பு என்றுதானே பொருள்? பெரியார் மன்னிப்பும் கேட்டதில்லை; ஒரு கத்தரிக்காயும் கேட்டதில்லை. படத்தை வெளியிட எதிர்ப்பும் வருகிறது என்று சொன்னால், அப்போது மட்டும் தமிழனாக இல்லாமல் வியாபாரியாக மாறிவிடுகின்றனர். எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்பது வணிக உத்தியே. இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளில் இப்பகுதியை வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து வெளியிடலாமே! தன்மானத்தை இழந்த வியாபாரிக்கு பெரியார் முகமூடி எதற்கு?

“ஈழத்தமிழ் விதவையைத்தான் திருமணம் செய்துகொள்வேன்”, என்று சூளுரைத்த சீமான் என்னும் நடிகர், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் இரண்டாவது மனைவியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களும் ஏமாளிகள் என்பதை இவர்கள் தெளிவாக உணந்துள்ளனர். ஈழத்தமிழ் மக்களின் பணத்திற்கான இங்கே பல்வேறு கும்பல்கள் களமாடுகின்றன. தமிழ் தேசியப் போர்வையில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவில்லை. இதில் சினிமாவிற்கும் பெரும்பங்கு இருக்கிறது.

இறுதியாக ஒரு செய்தி:

பெரியார் படத்தில் நடித்ததற்காக நடிகர் சத்யராஜூக்கு பெரியார் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தை மு.கருணாநிதி மூலம் கி.வீரமணி வழங்கினார். இதனை எதிர்த்து தனது இறுதிக்காலம் வரை பெரியாரிஸ்ட்டாகவும் மார்க்சிஸ்ட்டாகவும் வாழ்ந்து சென்ற ஆண்டு ஆகஸ்ட் 10, 2016 –ல் மறைந்த ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் (ஏஜிகே) தனது ‘மடலுரையாடல்’ நூலில் (ஜனவரி 2008) பின்வருமாறு எழுதுகிறார்.

“வீரமணியார் விற்ற பெரியார் பச்சைக்கல் மோதிரத்தைத் திருப்பிப் பெற்று அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும். கருணாநிதியார் அதனை வலியுறுத்தி வீரமணியைச் செய்யவைக்கவேண்டும். தவறினால் அல்லது மறுத்தால் கருணாநிதியே அம்மோதிரத்தை மீட்டு அரசுக் காப்பகத்தில் வைத்துப் பாதுகாக்கவேண்டும். இருவருமே அதைச் செய்யவில்லை என்றாலும், நடிகர் சத்யராஜ், அதனை வலியச் சென்று தனக்கு அணிவித்த கருணாநிதியாரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். வாங்க மறுத்தால் அரசு வங்கியில் பெரியார் பெயரில் டெபாசிட் செய்து தனி லாக்கரில் வைத்திட வேண்டும். இவை இன உணர்வாளர்களின் விருப்பம் – இனப் போராளிகளின் விருப்பம் – பெரியாரியல்வாதிகளின் விருப்பம்”. (மடலுரையாடல் – தமிழர் தன்மானப் பேரவை வெளியீடு, ஜனவரி 2008)

Posted in அறிக்கை, Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை
உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை,

ஏப்ரல் 22, 2017

சுவரொட்டி 01.jpg

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி வியாபாரம் செய்யும் கோவிந்தன் எனப்படும் கோவிந்தராசு (42) என்பவர் கடந்த ஏப்ரல் 13 அன்று இரவு இராமநாதபுரம் நகர் B2 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (SI) தங்க முனியசாமி என்பவர் தலைமையில் சென்ற மூன்று பேர் அடங்கிய குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் கடந்த பத்து நாட்களாகப் பரபரப்பான செய்தியாக உள்ளது. கோவிந்தனின் குடும்பத்தார் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ள நிலையில் அவரது உடல் தற்போது இராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பான பிரச்சினையாக உள்ளதோடு இது ஒரு சாதிப் பிரச்சினையாகவும் உருப்பெறக்கூடிய நிலை உள்ளதை ஊடகங்களின் மூலம் அறிந்த நாங்கள் ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து நேற்று முழுவதும் இப்பகுதியில் பலரையும் சந்தித்தோம்.

எம் குழு உறுப்பினர்கள்:

1.பேரா.அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு

வழக்குரைஞர் ரஜினி, மதுரை,
வழக்குரைஞர் ஏ.செய்யது அப்துல் காதர் (NCHRO), மதுரை,
வழக்குரைஞர் எம். காஜா நஜ்முதீன் (NCHRO) , மதுரை,

5, வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், (NCHRO), மதுரை,

மு.சிவகுருநாதன், சமூக ஆர்வலர், திருவாரூர்,
கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை

பார்வை.jpg

இக்குழுவினர் நேற்று முழுவதும் உசிலன்கோட்டை, தொண்டி, இராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இது தொடர்பாகப் பலரையும் சந்தித்துப் பேசியது. நாங்கள் சந்தித்தவர்கள்: கோவிந்தனின் மனைவி பவானி (34), அவரது மகள்கள் பாண்டியம்மாள் (19), மோனிஷா (17), தனலட்சுமி (14), சகோதரர்கள் குமார் மற்றும் கண்ணன், தந்தை பாலு, தாய் காளியம்மாள், சகோதரி ஜெயந்தி, என்கவுன்டரில் கொலை செய்தவர்களும் தற்போது இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுமான எஸ்.ஐ .தங்கமுனியசாமி குழுவினர், இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் என்.மணிகண்டன். பரமக்குடி வழக்குரைஞர் சி.பசுமலை ஆகியோர் உட்படப் பலரையும் சந்தித்தனர். எமது வழக்குரைஞர்கள் அப்துல் காதர், காஜா நிஜாமுதீன் இருவரும் இராமநாதபுரம் சிறைக்குச் சென்று அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள துல்கருனை, சின்ராஜ் ஆகியோரை மனு போட்டு சந்தித்துப் பேசியபோது தங்களுக்குக் காவல்துறையினரே வக்கீலுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தாங்கள் அவர்களுடன் பேச முடியாது எனவும் கூறினர். கேணிக்கரைக் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோது இப்போது பஜார் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் என்பவரே அதற்கும் பொறுப்பாக உள்ளார் என்றனர். அங்கு சென்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. இன்று காலை தொலைபேசியில் அவரிடம் பேசினோம்.

சம்பவம்:

கோவிந்தன் தேவேந்திரகுல வேளாளர் எனும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் பாண்டித்துரை என்பவர் 1997 -ல் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படுகிறார். இப்பகுதியில் இவ்விரு பிரிவினருக்கும் இடையில் சாதிப் பகை இருப்பது அனைவரும் அறிந்ததே. கோவிந்தன் சாதிப் பிரச்சினையில் கொல்லப்பட்ட பசுபதி பாண்டியனின் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவரும் கூட. பாண்டித்துரையின் கொலைக்குக் காரணமானவர் எனக் கருதப்பட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் 1998ல் கொல்லப்பட்டதை ஒட்டி கோவிந்தன் உட்பட 56 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனினும் இறுதியில் கோவிந்தன் விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து கோவிந்தன் அப்பகுதியில் சாதி மோதல்களில் தலையிட்டு பஞ்சாயத்து செய்பவரானார், இதை ஒட்டி அவர் மீது சில வழக்குகளும் உண்டு. சென்ர ஆண்டில் பழையனக்கோட்டையைச் சேர்ந்த மறவர் சமூகத்தினர் சிலர் சென்ற ஆண்டு கோவிந்தன் வீட்டில் இருந்தபோது அவரைத் தாக்க வந்ததாகவும் கோவிந்தன் அவர்களை அடித்து விரட்டி இருவரைப் பிடித்து வைத்ததாகவும் இதை ஒட்டி அவர் மீது ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவரது வீட்டார் கூறினர். காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்தபோது கோவிந்தன் மீது இப்படி மூன்று வழக்குகள் உள்ளன என்றார். எனினும் அவர் மீது கொள்ளை மற்ரும் வழிப்பறி தொடர்பான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதை அவரது வீட்டாரும் பிறரும் உறுதிபடக் கூறினர்.

வீடு.jpg

சென்ற 13 ம் தேதி மாலை 6.30 மணி அளவில் சாதாரண உடையில் வந்த சிலர் கோவிந்தனை ஏதோ விசாரிக்க வேண்டும் என அழைத்துச் சென்றதாகவும் நாண்ட நேரம் அவர் வராததை ஒட்டி சில மணி நேரம் கழித்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டபோது அடுத்த நாள் வருடப் பிறப்பிற்கு பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனினும் இரவு பத்தரை மணிக்குப் பின் அவரைத் தொடர்பு கொண்டபோது அவரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. செல்போனை யாரும் எடுக்கவில்லை என அவரது மனைவி கூறினார். காலை 5 மணி அளவில்தான் அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வீட்டாருக்குத் தெரிய வந்துள்ளது.

இது ஒரு பச்சைப் படுகொலை எனக் கூறி அவரது உடலை வீட்டார்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதற்கிடையில் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமல் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் முன்னர் கோவிந்தனின் வீட்டுக்கு வந்த போலீசார் கோவிந்தனின் உடல் மார்ச்சுவரியில் அழுகிக் கிடப்பது சுகாதாரக் கேடு உட்படப் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது எனவும் உடனடியாக உடலை எடுத்துச் செல்லாவிடால் தாங்களே எரியூட்டி விடுவதாகவும் எச்சரித்து ஒரு அறிக்கையை ஏப்ரல் 19 அன்று வீட்டுச் சுவர்களில் ஒட்டிச் சென்றுள்ளனர். குடும்பத்தார் மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவதும், அடிக்கடி போலீஸ் வாகனம் வந்து செல்வதாகவும், தாங்கள் தொடர்ந்து காவல்துறையால் மிரட்டப்படுவதாகவும் இது தங்களுக்கு அச்சத்தை ஊட்டி நிம்மதியைக் குலைப்பதாகவும் அவர்கள் கூறினர்.

சி.பி.ஐ விசாரணை, மறு பிரேத பரிசோதனை ஆகியவற்றைக் கோரி நீதிமன்றத்தை அணுகியபோது அவற்றை நீதிமன்றம் மறுத்துள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதையும், வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் காரணமாகச் சொல்லியுள்ளது.

தாங்களே கோவிந்தனின் உடலை எரித்துவிடுவதாகக் காவல்துறை அவரது வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது குறித்து கோவிந்தனின் மனைவி அடுத்த நாள் (ஏப்ரல் 21) உயர்நீதி மன்றத்தை அணுகினார். தற்போது அதற்குத் திங்கட்கிழமை வரை (ஏப் 24) தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு அதிகாரிகளிடம் அது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

காவல்துறை சொல்வது:

தொண்டி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி (எண் 111/17, தேதி ஏப்ரல் 14, 2017) இ.த.ச 279, 294(b), 332, 307, குற்ற நடவடிக்கைச் சட்டம் 176 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் சங்கு வகைகள், கடல் ஆமை முதலான தடை செய்யப்பட்ட பொருள்களை விற்கும் ஒரு வணிகர் எனக் கூறப்படுகிரது. இவர் சென்ற 11ம் தேதி தனது காரில் 9 இலட்ச ரூபாய் பணத்துடன் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்த கோவிந்தன் அவரைத் தாக்கி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினார், இது குறித்து காசிநாதன் இரண்டு நாள் கழித்து 13-ம் தேதி இராமநாதபுரம் கேணிக்கரைக் காவல் நிலையத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தார் (குற்ற எண் 291/17, பிரிவுகள் இ.த.ச 341, 395, 397,365). தனது ஓட்டுனர் தொண்டியைச் சேர்ந்த துல்கருணை என்பவர் மூலம் தான் பணம் கொண்டுவருவதை அறிந்து கோவிந்தன் இந்த வழிப்பறியைச் செய்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உடனடியாக இராமநாதபுரம் உட்கோட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவின்படி இராமநாதபுரம் B2 நகரக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் தங்கமுனியசாமி கேணிக்கரை பொறுப்பு காவல் ஆய்வாளர் கணேசனுக்கு உதவியாக சௌந்தரபாண்டியன், மோகன், மாரிமுத்து மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் சுரேஷ் பண்டியன், ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் ஆஜராகியதாக தங்க முனியசாமி மேற்கண்ட முதல் தகவல் அறிக்கையில் (தொண்டி 111/17) கூறுகிறார். துல்கர்னையை விசாரித்தபோது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தன்பங்காக கோவிந்தனால் கொடுக்கப்பட்ட ரூ 80,000 த்தை ஒப்படைத்ததாகவும். பின் ஒரு இன்டிகா காரை (TN 65 6361) வாடகைக்கு எடுத்துக் கொண்டு துல்கருனையை அழைத்துக் கொண்டு சென்றபோது கோவிந்தன் துல்கருனைக்குப் போன் செய்து சின்ராஜிடம் மேலும் 60,000 ரூ கொடுத்து அனுப்புவதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு போய்விடு எனச் சொன்னாராம்.

சற்று நேரத்தில் சின்ராஜ் அந்தப் பணத்தைக் கொண்டு வந்தாராம். தங்கமுனியசாமி குழுவினர் சின்ராஜையும் பிடித்து அழைத்துக் கொண்டு கோவிந்தனைத் தேடிச் சென்றார்களாம். தொண்டியிலிருந்து திருவாடனை நோக்கி அம்பாசடர் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த கோவிந்தனை மடக்கியபோது அவர் தன் காரால் இவர்கள் காரை மோதிவிட்டுத் தப்பி ஓடியதாகவும், திருவெற்றியூர் சவேரியார் நகரில் காரை நிறுத்திவிட்டுத் தப்பி ஓட முயற்சித்த கோவிந்தன் முதல்நிலைக் காவலர் சவுந்தரபாண்டியனையும் தன்னையும் அரிவாளால் வெட்டியதாகவும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோவிந்தனைத் தான் காலில் சுட்டு, இராமநாதபுரம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டுத் தானும் மருத்துவமனையில் அட்மிட் ஆகியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிந்தன் இறந்ததைத் தான் பின்னரே அறிந்ததாகவும் தங்கமுனியசாமி கூறுகிறார். ஊடகங்களில் இதுவே செய்தியாகவும் வெளி வந்துள்ளது.

கேணிக்கரைக் காவல்நிலையத்திற்குத் தற்போது பொறுப்பில் உள்ள ஆய்வாளர் டி.ஏ.வெங்கடேசனைத் தொடர்பு கொண்டபோது, அவர் தான் இந்தப் பகுதிக்குப் புதியவர் எனவும் இங்குள்ள காவலர்களின் பின்னணி தனக்குத் தெரியாது எனவும் காசிநாதன் வழிப்பறி குறித்துப் புகார் அளித்தபோது தான் அந்தக் காவல் நிலையத்திற்குப் பொறுப்பாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் எங்களிடம் கூறியவை:

காவல்துறைக் கண்காணிப்பாளர் என். மணிகண்டன் அவர்கள் எம் குழுவிடம் விரிவாகப் பேசினார். எங்கள் ஐயங்களை முன்வைத்தபோது தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளதால் இப்போது தான் இந்த வழக்கைப் பொருத்த மட்டில் ஒரு “மூன்றாம் நபர்” (third party) எனவும், தான் இது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது எனவும் கூறினார். இப்படியான ‘மோதல்’ கொலைகளில் சுட்டுக் கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் தான் உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி தற்காப்பிற்காகவே சுட்டுக் கொன்றதாகவும் நிறுவும் வரை என்கவுன்டர் செய்த காவலர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம், உச்சநீதி மன்றம் முதலியன கூறியுள்ளதையும் அவருக்குக் கவனப்படுத்திய போது அப்படி இருந்தால் அதை இப்போது பொறுப்பேற்றுள்ள சி.பி.சி.ஐ.டி தான் செய்ய வேண்டும் என்றார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடனேயே இதைச் செய்திருக்க வேண்டாமா எனக் கேட்டபோது தான் இது தொடர்பான விதிகளைப் பரிசீலிப்பதாகச் சொன்னார். சட்டவிரோதக் கடத்தல் தொழில் செய்யப்படுவதாகச் கூறப்படும் ஒரு நபர் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஒரு புகாரைச் செய்துள்ள நிலையில் உடனடியாக மற்ற காவல் நிலையம் ஒன்றிலிருந்து காவல்துறையினரை வைத்து ஒரு சிறப்புப்படை அமைக்க வேண்டிய அவசரம் ஏன் எனக் கேட்டபோது, கடத்தல்காரர் என்பதற்காகவே அவர் கொடுத்த புகாரை விசாரிக்காமல் இருக்க முடியாது எனவும், இப்படியான சிறப்புப் படை அமைப்பது வழக்கம்தான் எனவும் அவர் கூறினார். இது ஒரு சாதி வெறுப்புகள் கூர்மைப்பட்டுள்ள ஒரு பகுதி என்கிறபோது இப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உளவுத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பலர் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்கிற குற்றச்சாட்டு பற்ரிக் கேட்டபோது இதில் எல்லாம் சாதியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே எற்றுக் கொண்டுள்ளபோது இப்படி நீங்கள் சொல்வது சரிதானா எனக் கேட்டபோது இது தொடர்பாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இனி எல்லாப் பிரிவினருக்கும் வாய்ப்பளிப்பதாகக் கூறினார்.

இராமநாதபுரம் மருத்துவமனையில் ‘சி’ வார்டில் ‘சிகிச்சை’ பெற்றுவரும் தங்கமுனியசாமியையும் சௌந்தரபாண்டியனையும் பார்த்தோம். தங்கமுனியசாமி எதையும் சொல்லமுடியாது என மறுத்துவிட்டார். நீங்கள் காலில்தான் சுட்டீர்கள், பின் எப்படி அவர் இறந்தார் என்பதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. அவரைப் பார்த்துவிட்டு வரும் வழியில் அங்கு பொறுப்பில் இருந்த செவிலியர் ஒருவரை விசாரித்தபோது அவர் சிரித்துக் கொண்டே தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவிற்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை என ஒத்துக்கொண்டார்.

எமது பார்வைகள்:

சாதிமுரண்கள் மிகவும் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் இது குறித்த சிந்தனை சற்றும் இன்றிக் காவல்துறை செயல்பட்டுள்ளது. அதன் செய்ல்பாடுகள் இப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினருக்கே சாதகமாக உள்ளன. திருவாடனைச் சரகத்தில் உள்ள ஐந்து காவல்நிலையங்களிலும் உளவுத்துறையினராக (SB CID) ஆதிக்க சாதியினரே இருப்பதாகவும் குறிப்பாக திருவாடனையில் உள்ள ராஜா என்பவர் மிகவும் சாதி உணர்வுடன் செயல்படுவதாகவும் நாங்கள் சந்தித்த பட்டியல் சாதியினர் குற்றம் சாட்டினர். அதுவும் இதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினராக உள்ளதால் சாதி வெறுப்பு காவல் நிலையங்களில்கூடுதலாக உள்ளது என்பதையும் அவர்கள் கூறினர். என்கவுன்டர் செய்வதற்கு அனுப்பப்பட்டவர்களில் தங்கமுனியசாமியும் கமுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினரே. அவர்தான் என்கவுன்டர் செய்தவரும் கூட. அந்த டீமில் இருந்த சௌந்தரபாண்டியன் என்பவர் பட்டியல் இனத்தவர் எனச் சொல்லப்படுகிறது. இது வழக்கமாகக் காவல்துறை செய்வதுதான். அப்படியான ஒருவரையும் அவர்கள் டீமில் இணைப்பது இப்படியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காகத்தான்.
பரமக்குடி வழக்குரைஞர் பசுமலை அவர்களைச் சந்தித்தபோது அவர் உரிய ஆதாரங்களுடன் ஒரு முக்கிய தவலைக் கூறினார். சில ஆண்டுகள் முன் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுநாளில் (2011) ஆறு பட்டியல்சாதியினரைச் சுட்டுக் கொன்றதை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் கமிஷன் முன் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான முத்துக்குமார் என்பவரின் மனைவி பான்டீஸ்வரி ஒரு புகாரைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் தன் கணவரைச் சுட்டுக் கொன்றது இந்த தங்கமுனியசாமி எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியான ஒருவரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைப்பொன்றில் இருந்து செயல்படுபவரும், பஞ்சாயத்துக்கள் செய்பவருமான கோவிந்தனைப் பிடிக்க அனுப்பியது என்பதைக் காவல்துறை எப்படி விளக்கப் போகிறது எனத் தெரியவில்லை.
2011 பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தற்போது நடந்துள்ல இந்த என்கவுன்டர் எல்லாவற்ரையும் பார்க்கும்போது காவல்துறை பட்டியல்சாதியினரைத் தொடர்ந்து காழ்ப்புடன் அணுகிவருவது உறுதியாகிறது.
கோவிந்தன் மீது சாதிப் பஞ்சாயத்துகள் செய்பவர், சில வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்கிற புகார்கள் இருந்தபோதும் அவர் மீது வழிப்பறி செய்ததாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
இந்த என்கவுன்டருக்குத் துணை செய்த துல்கர்னை, சின்ராஜ் முதலானோருக்கு வழக்குரைஞர் முதலானோரை வைத்து எல்லா உதவிகளையும் செய்து காவல்துறை அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல ஐயங்களுக்குக் காரணமாகிறது.
பணம் பறிகொடுத்ததாகச் சொல்லப்படும் காசினாதன் என்பவர் ஒரு கடத்தல்காரர். 11ம் தேதி பணத்தைப் பரிகொடுத்ததாகச் சொல்லும் இவர் ஏன் 13ம் தேதிவரை புகார் கொடுக்காமல் இருந்தார் என்பதும், புகார் கொடுத்தவுடன் உடனடியாக ஒரு சிறப்புப்படையை நியமித்து அதில் இன்னொரு காவல்நிலையத்தைச் சேர்ந்த தங்க முனியசாமியைக் குறிப்பாகச் சேர்த்ததும் தற்செயலானவை அல்ல.
எந்தப் பெரிய காயங்களும் இல்லாத தங்கமுனியசாமியை மருத்துவமனையில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. காவல்துறையின் பிடிவாதத்தாலேயே அவர் அங்கு வைக்கப்பட்டுள்ளார். இதை அங்குள்ள செவிலியரும் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகின்றனர். காவல்துறை இந்தப் போலி என்கவுன்டருக்கு ஒரு ‘அலிபி’யை உருவாக்குவதற்காகவே இதைச் செய்கிறது. இதற்கு எந்த அறமும் இன்றி மருத்துவ நிர்வாகம் ஒத்துழைப்பது இழிவானது.
என்கவுன்டர் செய்து கொன்ற தங்கமுனியசாமி முதல் தகவல் அறிக்கையில் தான் கோவிந்தனைக் கால்களிலேயே சுட்டதாகக் கூறுகிறார். காலில் சுடப்பட்டு உயிருடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 42 வயதுள்ள ஆரோக்கியமான யாரும் அடுத்த சிலமணி நேரங்களில் இறப்பது என்பது சாத்தியமே இல்லை. கொவிந்தனின் உடலின் வீடியோ ஒன்றை எங்கள் குழு பரிசீலித்தபோது அவருக்கு விலா மற்றும் உடலின் மேற்பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரிகிறது. இந்நிலையில் உற்றார் உறவினர்கள் யாரும் இன்றி காவல்துறையினர் தன்னிச்சையாக பிரேத பரிசோதனை செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இதைக் காவல்துறையும் மருத்துவத் துறையும் விளக்க வேண்டும்.

கோரிக்கைகள்:

இது ஒரு போலி என்கவுன்டர் என்று எம் குழு உறுதியாகக் கருதுகிறது. இதைக் கொலைக் குற்றமாகக் கருதி தங்கமுனியசாமி உள்ளிட்ட என்கவுன்டர் கொலைக்குக் காரணமானவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
கோவிந்தனின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் முன்னிலையில் மீண்டும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உடனடியாக அதிகாரிகளை நியமிப்பதோடு விச்சாரனையை முடிக்க காலகெடுவும் அறிவிக்கப்பட வேண்டும்.
சாதிபார்த்தெல்லாம் காவல்துறையினரை நியமிக்கக் முடியாது எனக் கண்காணிப்பளர் சொல்வதை ஏற்க முடியாது. இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே ஏற்றுக்கொண்டதன் விளைவாகத்தான் இங்கே வன்கொடுமத் தடுப்புச் சட்டம் முதலான சிறப்புச் சட்டங்கள் இயற்ற்றப்பட்டுள்ளன. சமூகத்தின் பன்மைத் தனமை ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதை சச்சார் கமிஷன் அறிக்கை உட்படப் பல ஆய்வுகளும் அறிக்கைகளும் சுட்டிக் காட்டியுள்ளன. சாதி முரண் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் பதவியில் உள்ள காவல்துறையினர், உளவுத்துறையினர் முதலானோரின் சமூகப் பின்னணி குறித்துக் காவல்துறை உரிய முறையில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதேபோல கோவிந்தனைப் பிடிக்க தங்கமுனியசாமி முதலானோர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியும் விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களால் குற்றம் சாட்டப்படும் சாதி உணர்வுள்ள உளவுத்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
இந்தப் போலி மோதலில் கொல்லப்பட்ட கோவிந்தராசுவின் குடும்பத்துக்கு உடனடியாகப் பத்து இலட்சரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மகள்களில் ஒருவருக்கு தகுதியுள்ள அரசு வேலை ஒன்று அளிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும், மிரட்டப்படுவதையும், அடிக்கடி காவல்துறை வாகனங்களை அனுப்பி அந்தக் குடும்பத்தின் மீதே மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுமாறு செய்வதையும் இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவற்றை உடனடியாகக் காவல்துறையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதுபற்றியான செய்தி வெளியீட்டில் ஊடகங்கள் சில காவல்துறையின் பொய்களை எந்த ஆய்வுகளும் இன்றி அப்படியே வெளியிடுவதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடமும் கருத்தைக் கேட்டே ஒருவர் பற்றிய குற்றச்சாட்டை வெளியிட வேண்டும் என்பதே ஊடக தர்மம். இந்தியாவில் நடைபெறும் என்கவுன்டர் கொலைகளில் 90 சதம் போலியானவை என்பது ஊடகத்தினர் அறியாத ஒன்றல்ல.

நன்றி: பேரா. அ.மார்க்ஸ்

Posted in அறிக்கை, உண்மை அறியும் குழு அறிக்கை, Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!

சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!.

மு.சிவகுருநாதன்

சுவரொட்டி 0001.jpg

சில நாள்களுக்கு ((ஏப்ரல் 08, 2017) முன்பு டாஸ்மாக் நன்றி சுவரொட்டிகள் பற்றிய பதிவிட்டிருந்தேன். இது தொற்று வியாதியாகத் தொடர்கிறது. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைகள் தவிர்த்து குக்கிராம மூலை முடுக்குகளில் திறந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோருக்கு நன்றி சொல்ல அபார துணிச்சல் வேண்டும்; மாறாக மனச்சாட்சிதான் தேவையில்லை.

நகரங்களில் உள்ள கடைகளை மூடிவிட்டார்களாம்! ஏதோ இவர்களாக மக்கள் நலன் கருதி மூடியதாகச் சொல்வது எவ்வளவு கொடூரம்? நகரத்துக் குப்பைகளை வெளியே கொட்டுவது போல் டாஸ்மாக் கடைகளைப் புறநகரில் திறக்கும் கொடுமைக்கு நன்றி ஒரு கேடா?

திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பெயரால் இப்போது நகரமெங்கும் சுவரொட்டிகள் முளைத்துள்ளன. மாவட்டந்தோறும், ஏன் தமிழகமெங்கும் போர்க்கால வேகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க முயலும் நிர்வாகத்திற்கு நன்றி சொல்வதைவிட வேறு இழிவு இருக்க முடியுமா?

சுவரொட்டி 0002.jpg

இவர்கள் நன்றி சொல்வதை விட்டுவிட்டு அருகே நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு ஏதேனும் செய்ய முயற்சித்தது உண்டா? திருவாரூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் காட்டூர் விளாகம் கடையை அகரத்திருநல்லூரில் திறக்க பெருமுயற்சி செய்யப்படுகிறதே! இதில் இந்த நன்றிக்குரியவர்களின் பங்கு என்ன? அடிப்படை வாழ்வாதாரமான தினக்கூலி வேலைகளுக்குக் கூட செல்லாமல் மக்கள் வாரக்கணக்கில் போராடுகிறார்களே! அவருக்கு நன்றி சொல்ல, ஆதரவளிக்க, இந்த கனவான்கள் ஏதேனும் செய்ததுண்டா?

அருகே நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் அண்ணாப்பேட்டையில் வேதாரண்யம் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற பெண்களும் இடதுசாரி இயக்கங்களும் நீண்ட நாட்களாகப் போராட்டம் நடக்கிறது. அது மாநில நெடுஞ்சாலை இல்லையாம்! எனவே கடை இன்னும் அகற்றப்படவில்லை. இவர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் கனவான்களே!

Posted in எதிர்வினை, செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள், டாஸ்மாக், Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக