கவனிப்பாரற்றுக் கிடக்கும் பி.எஸ்.ஆர். நினைவு மண்டபம்


 கவனிப்பாரற்றுக் கிடக்கும் பி.எஸ்.ஆர். நினைவு  மண்டபம்


– மு. சிவகுருநாதன்
          சீனிவாசன் என்ற பெயர் தலித் குடும்பங்களுக்கு தொடர்பில்லாத ஒரு பெயராக இருப்பினும் இப்பெயரை நிறைய தலித் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழக்காரணமானவர் கர்நாடக மாநில பார்ப்பனச்சேரியில் பிறந்து கீழத்தஞ்சை பறைச் சேரிகளில் வாழ்ந்து மறைந்த பி.எஸ்.ஆர். என்று தலித் விவசாயக் கூலிகளால் அன்புடன் போற்றப்பட்ட தோழர் பி.எஸ். சீனிவாசராவ்.

பண்ணையடிமைகளாய், சாணிப்பால், சவுக்கடிக்காட்பட்ட விவசாயக் கூலிகளான தலித் சமூகத்தை மீட்டெடுத்து, இயக்கம் கட்டி, போராடி கீழத் தஞ்சை மாவட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தவர்.  இப்பகுதிகளில் திராவிட இயக்கம் செய்யாத அரும்பெரும் சாதனையை பிறப்பால் பார்ப்பனரான அவரால் செய்ய முடிந்தது என்றால் அதற்குக் காரணம் பொதுவுடைமைத் தத்துவம் என்றால் மிகையில்லை.  ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றிய தோழர் பி.எஸ்.ஆர். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராகப் பார்க்கப்படுவது அதிர்ச்சியளிக்கக் கூடியது.

பி.எஸ்.ஆரை கம்யூனிஸ்ட் என்று மட்டும் எண்ணியிருப்போருக்கும் ‘தியாகி பி. சீனிவாசராவ் நினைவு மண்டபம்’ என்பதைப் பார்த்தவுடன் வியப்பு ஏற்படக் கூடும்.  1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியில் கர்நாடக மாநிலத்தில் பிறந்த பி.எஸ்.ஆர்.  தனது கல்லூரி காலத்தில் நாட்டு விடுதலை உணர்வால் உந்தப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

1930இல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நடத்திய உப்புச் சத்தியாகிரகம், தனிநபர் சத்தியாகிரகம், அந்நிய துணிக்கடை மறியல் போன்றவற்றில் முழுவீச்சுடன் ஈடுபட்டு சிறை சென்றவர்.  பிறகு பொதுவுடைமைத் தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு தனது இறுதிக் காலம் வரை அடித்தட்டு உழைக்கும் மக்களுக்காகப் போராடி மறைந்தவர்.

        1961-ல் பி.எஸ்.ஆர். நிலச் சீர்திருத்தம் குறித்த விவசாயக் கூலிகளின் தீரமிக்க போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது செப்டம்பர் 29ஆம் தேதி மரணமடைந்தார்.  அவர் தனது 54 ஆண்டு கால வாழ்வின் பெரும்பகுதியை நாட்டின் விடுதலைக்கும் உழைக்கும் அடித்தட்டு மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கும் செலவிட்டவர்.  அவரது உடல் அவர் உழைத்த மண்ணிலேயே (திருத்துறைப்பூண்டி) அடக்கம் செய்யப்பட்டது.

இங்கு சுதந்தரப் போராட்டத் தியாகிகள் என்றால் காங்கிரஸ் குல்லா வைத்திருப்பவர்கள் என்ற பொதுப் புத்தியின்படி சிந்திப்பவர்களுக்கு இது வியப்பாகத்தான் இருக்கும்.  ‘லோக்பால் புகழ்’ அன்னா ஹசாரே போன்ற காந்தி குல்லாக்காரர்களுக்கும் உண்மைத் தியாகிகளுக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு என்பதை இன்றைய சமூகம் உணர்ந்து கொள்வதேயில்லை.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மு. கருணாநிதியால் பி.எஸ்.ஆருக்கு திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.  வயலில் கட்டப்பட்ட இம்மண்டபம் மழைக் காலத்தில் சுற்றிலும் தண்ணீர் தேங்கி தீவாகக் காட்சியளிக்கும்.  அந்த சிறிய இடத்தை நன்கு உயர்த்தவும் இல்லை; மண்டபத்தை உயரமாகக் கட்டவும் இல்லை.

           கடல் மட்டத்திலிருந்து குறைந்த அளவே உயரம் உள்ள இப்பகுதிகளில் அரசுக் கட்டிடங்கள் அனைத்தும் வயல்வெளிகளில் உயர்த்தப்படாமல் கட்டப்படுவதால் வெள்ளம், மழையால் பாதிக்கப்பட்டு பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகள், நூலகங்கள் ஆகியவற்றிலுள்ள புத்தகங்கள், ஆவணங்கள் சேதமடைவது வாடிக்கையாகி விட்டது.  அதைப் போலவே இம்மண்டபத்திற்குள்ளும் மழைக் காலத்தில் உள்ள செல்ல முடியாது.

ஒப்பீட்டளவில் இப்பகுதியை விட உயரமாக உள்ள பட்டுக்கோட்டையில் கட்டப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு மண்டபம் உயரமாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  அது கட்டப்பட்டிருக்கும் இடமும் வயல்வெளி அல்ல.  அதைப் போலவே தஞ்சாவூரில் கட்டப்பட்ட பல்வேறு மணி மண்டபங்களும் சதுக்கங்களும் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

பி.எஸ்.ஆர். நினைவு மண்டபம் பள்ளமான இடத்தில் கட்டப்பட்டிருப்பது மட்டுமல்லாது சுற்றிலும் புற்கள் புதர் போல் மண்டி காட்சியளிக்கிறது.  வாசலில் தொங்கும் பூட்டுதான் நம்மை வரவேற்கிறது.  இம்மண்டபம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே தெரியவில்லை.  பார்வையாளர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்கிற விவரமும் இல்லை.

சென்ற முறையும் இம்முறையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( CPI ) யைச் சேர்ந்த தோழர் உலகநாதன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.  இம் மண்டபத்தை உரிய முறையில் சீரமைத்துப் பராமரிக்க சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நகராட்சி நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி சந்தைப் பேட்டை  அருகே முள்ளியாற்றங்கரை யிலுள்ள பி.எஸ்.ஆரின் நினைவிடத்தை (உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பராமரிக்கிறது.  ஆனால் நினைவு மண்டபத்தை யார் பராமரிக்கிறார்கள் என்று கூட தெரியாமல் கவனிப்பாரற்று கிடப்பது வேதனைக்குரியது.  ஒரு தியாகியை, மக்கள் தொண்டனை அவமதிக்கா மலிருக்க இம்மாதிரியான நினைவு மண்டபங்கள் அல்லது நினைவிடங்களைக் கட்டாமல் இருப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் இருக்கும்.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in செய்திகள், செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள், வரலாறு and tagged , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s