ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…


ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…

– மு.சிவகுருநாதன்

(திருவாரூரிலிருந்து வெளியாகும் ‘பேசும் புதிய சக்தி’ மாத இதழில் (மார்ச் – 2015) வெளியான இக்கட்டுரை இங்கு பதிவிடப்படுகிறது. பேசும் புதிய சக்தி’ மாத இதழ் பற்றிய அறிமுகக் குறிப்பு தனியே உள்ளது. கட்டுரையை வெளியிட்ட இதழாசிரியருக்கும் ஆசிரியர் குழுவிற்கும் எனது நன்றிகள்.)

உலக மனித உரிமை நாள் கொண்டாடப்பட்ட டிசம்பர் 10, 2014 அன்று தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்ததுடன் அன்று மாலை பள்ளி வாயிலில் ஆர்ப்பட்டமும் நடத்தினர். இவர்களுடைய ஒரே கோரிக்கை மாணவர்களுக்குத் தண்டனை அளிப்பதைத் தடை செய்யும் அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்யவேண்டும் என்பதாகும். வெளிப்படையாகச் சொன்னால் மாணவர்களைக் கண்டிக்கும், அடிக்கும் உரிமையை வழங்கவேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்த அவர்கள்த் தேர்வு செய்த நாள் உலக மனித உரிமை நாள் என்பதுதான் நகைமுரண். மெத்தப் படித்தவர்கள் என்று சொல்லப்படும் ஆசிரியர் சமூகத்திலிருந்து இம்மாதியான கோரிக்கை வருவது கண்டு தமிழகம் அதிர்ச்சி அடைந்திருக்கவேண்டும். ஆனால் வழக்கம்போல் எதுவும் நடக்கவில்லை.

இத்தகைய நிகழ்விற்கு ஆசிரியர்களை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை என்றே தோன்றுகிறது. ஒட்டுமொத்தச் சமூகத்தையும் குற்றம் சொல்லவேண்டிய தேவையிருக்கிறது. ஆசிரியர்களுக்கு அடிப்பதற்கும் காவல்துறைக்கு போலி மோதல் படுகொலைக்கும் அனுமதி கொடுத்துவிட்டால் போதும்; வேறேதும் தேவையில்லையென நினைக்கும் பழமைவாத சமூக மதிப்பீடுகள் 21 ஆம் நூற்றாணடிலும் நீடிப்பதை எப்படி விளங்கிக் கொள்வதென்று தெரியவில்லை.

இன்னமும் நமது சமூகம் சாதியத்தை உயர்த்திப் பிடித்து, அசமத்துவத்தை உண்டாக்கிய குருகுலக் கல்விமுறையை போற்றிப் புகழ்கிறது. இதற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விமுறையை பல்வேறு குறைபாட்டுடன் தொடர அனுமதிக்கிறோம்.

கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் நுழைவுத்தேர்வை ரத்து செய்தோம். இதில் ஓரளவு பலன் கிடைத்தது உண்மைதான். ஆனால் இன்னொன்றும் நடந்தது. 11 ஆம் வகுப்பில் 12 ஆம் வகுப்புப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் நாமக்கல் – ராசிபுரம் – திருச்செங்கோடு ‘கோழிப்பண்ணைப் பள்ளிகள்’ தமிழகமெங்கும் பல்கிப் பெருகின. இப்பள்ளிகளில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, இடம் வாங்குவதற்காகவே 9 ஆம் வகுப்பில் 10 ஆம் வகுப்புப் பாடத்தைக் கற்பிக்கும் நடைமுறை எங்கும் அமலில் உள்ளது. இதைக் கண்காணிக்க வேண்டிய தமிழக அரசு தனது பள்ளிகளிலும் இதே முறையை மறைமுகமாக அறிமுகம் செய்ய விரும்புகிறது.

எப்படியும் 100 விழுக்காடு தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக அரசுப்பள்ளி மாணவர்கள் கசக்கிப் பிழியப்படும் நிலையில் உள்ளனர். 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு சனி, ஞாயிறு வார விடுமுறை கிடையாது. தொலைக்காட்சி பார்க்க அனுமதியில்லை. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை பள்ளியிலேயே அவர்கள் இருக்கவேண்டும். மதிய உணவு இடைவேளை 10 நிமிடங்கள் மட்டுமே. எனவே காலை, மதியம் 10 நிமிட சிறு இடைவேளைக்குக் கூட இனி வாய்ப்பில்லைதான். பள்ளிக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கையைப் பார்க்கும்போது பள்ளியா அல்லது சிறுவர் கூர்நோக்கு இல்லமா என்று கேட்கத் தோன்றுகிறது. எது எப்படி போனாலும் இவர்களுக்குக் கவலையில்லை. 100 விழுக்காடு தேர்ச்சி மட்டுமே தேவை.

இது எவ்வளவு பெரிய குழந்தை (மனித) உரிமை மீறல்? பள்ளிக்கூடம் சிறைச்சாலையா, நாஜிகளின் வதை முகாமா? இப்படித்தான் ‘கோழிப்பண்ணைப்பள்ளிகள்’ இயங்குகின்றன. இந்நிலையை அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது மிகவும் ஆபத்தானது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டாகிறது. இப்பாட நூல்களிலுள்ள குறைகள் களையப்படவில்லை. மேனிலை வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி பல ஆண்டுகளாக ஒத்திபோடப்பட்டு வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளாக ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளுக்கு முப்பருவமுறை பாடத்திட்டமும் ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு முறையும் (Continuous and Comprehensive Evaluation – CCE) வழக்கில் உள்ளது. இம்மதிப்பீட்டு முறையிலும் குறைபாடுகள் இருப்பினும் மனப்பாட முறை கல்விக்கு ஓரளவு விடை கொடுக்கும் முறை என்பதால் இதை வரவேற்பதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் இம்முறைக்கு எதிராகவே இருப்பதாகத் தெரிகிறது. அதற்கு இப்போராட்டமும் ஓர் உதாரணம். இம்மதிப்பீட்டு முறையை ஆதரிப்பதாக இருந்தால் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் இதே மதிப்பீட்டு முறையை வலியுறுத்திப் போரடியிருக்கலாம் அல்லவா? முன்பொரு முறை அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை கபில் சிபல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ரத்து செய்யலாம் என்று சொன்னபோது அரசும் ஆசிரியர்களும் எதிர்த்தது நினைவிருக்கலாம்.

CCE முறையிலும் வளரறி (Formative Assessment – FA) மதிப்பீட்டிற்கு 40% -ம். தொகுத்தறி (Summative Assessment – SA) மதிப்பீட்டிற்கு 60% எனவும் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டிற்கும் சரிபாதி முக்கியத்துவம் அளிக்க மறுப்பது ஏன்? மீண்டும் தேர்வில் சரணடைவதைத்தானே இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கு 60 மதிப்பெண்களுக்கான வினாக்களுக்கு விடையளிக்க முன்பு போல் 2 மணி 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதிலிருந்து இங்கு எந்தப் புதுமையும் இல்லை என்பதும் மனப்பாடத் தேர்வு முறையே முதன்மைப்படுத்தப்படுகிறது என்பதும் நமக்கு விளங்குகிறது.

இன்று முப்பருவ ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு முறையுடன் கூடவே பல்வேறு பயிற்று முறைகள் ஒவ்வொரு வகுப்பிற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. 1 முதல் 4 வகுப்புகளுக்கு செயல்வழிக் கற்றல் (ABL – Activity Based Learning) என்ற முறை நடைமுறையில் உள்ளது. 5-ஆம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (SALM – Simplified Active Learning Methodology) என்ற முறையும் 6-லிருந்து 8-ம் வகுப்பு முடிய (ALM – Active Learning Methodology) என்ற முறையும் 9-ம் வகுப்பிற்கு மட்டும் ALM+ என்ற கற்பித்தல் முறையும் பின்பற்றப்படுகிறது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல தேர்வுக்கு தயார் செய்யும் பழைய மனப்பாட முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நவீன கற்பித்தல் முறைகளை ஏன் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யவில்லை என்பது புதிராக உள்ளது. இதிலிருந்தே இவர்கள் தேர்வை ரத்து செய்ய விரும்பவில்லை என்பது புலனாகிறது.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களது குழந்தகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்பதை வாழ்க்கை வெறியாகக் கொண்டு செயல்படுகின்றனர். அரசும் இந்த நிலையை ஊக்குவிக்கிறது. அதற்கு எத்தகைய வழிமுறைகளையும் பின்பற்ற இவர்கள் வெட்கப்படுவதில்லை. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட மேற்கண்ட ‘கோழிப்பண்ணைப் பள்ளி’களின் பங்குதாரராக இருக்கும் நிலைகூட உள்ளது. நடுத்தரவர்க்கக் குழந்தைகளுடன் 90% ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீட்டுக் குழந்தைகள் இங்குதான் கல்வி கற்கிறார்கள். இவர்கள் மதிப்பெண் வெறியூட்டி ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போல வளர்க்கப்படுகிறார்கள்.

கல்வி என்பது பணமூட்டைகளைக் கொட்டிக்கொடுத்து அதே சாக்குப்பையில் அள்ளிவரும் பொருளாக இன்றைய பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இத்தைய மனப்பான்மையை வளர்த்ததில் அரசு, கல்வித்துறை, ஆசிரியர்கள், அதிகார வர்க்கம் ஆகியவற்றுக்குச் சம பங்குண்டு.

மஞ்சள் பத்தரிக்கைகள், காட்சி ஊடகங்கள் நடத்துபவர்கள் கூட 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை ஏதோ போருக்கு அனுப்புவதைப் போல ‘வெற்றி பெறுவோம்’, ‘ஜெயித்துக் காட்டுவோம்’ என மதிப்பெண்கள் வெறியூட்டுவதைத் தொழிலாகவேக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது.

அரசு உதவிபெறும் பள்ளிகள் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு உண்டான உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டே அதே பள்ளி வளாகத்தில் சுயநிதிப் பிரிவுகள் பல தொடங்கி கல்விக்கொள்ளையில் ஈடுபடுகின்றன. அரசுக்கு தெரிந்தும் இவற்றைக் கண்டுக்கொள்வதில்லை. உதாரணமாக 1,000 மாணவர்கள் படிக்கக்கூடிய ஒரு அரசு உதவிபெறும் பள்ளி ஆங்கில வழி மற்றும் மேனிலை சுயநிதிப் பிரிவுகள் மூலம் 500 மாணவர்களைக் கூடுதலாக சேர்ப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த 500 மாணவர்களிடம் பண வசூல் மட்டும் செய்யப்படுகிறதே தவிர அரசு உதவிபெறும் பிரிவு மாணவர்களின் உள் கட்டமைப்பு வசதிகளையே இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவது அரசு உதவிபெறும் ஏழை மாணவ மாணவிகள் மட்டுமே. இந்த சட்ட மீறலை அரசு தெரிந்தே அனுமதிக்கிறது. இதை யாரும் தட்டிக் கேட்பதில்லை.

69% இடஒதுக்கீடு பற்றிப் பெருமை பேசுவதோடு நமது கடமை முடிந்து விடுவதாக இங்குள்ள அரசியற்கட்சிகள் நினைக்கின்றன. தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்பத்ற்கு வழக்காவது தொடுக்கப் பட்டது. ஆனால் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றுவது குறித்து யாராவது பேசியதுண்டா? நமது கல்வி முறையை அப்படியே பின்பற்றும் புதுச்சேரியில் கூட 11 ஆம் வகுப்பிற்கு ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தில் இது குறித்து யாரும் பேசுவதில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏன் சில அரசுப் பள்ளிகள் கூட கணிதப்பிரிவில் சேர 10 ஆம் வகுப்பில் 450 மதிப்பெண் பெற்றவர்களை மட்டுமே சேர்ப்பது என்ற நிலையை வைத்திருக்கிறார்கள். ஒரு சில மதிப்பெண்கள் குறைந்தாலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களை மேனிலை வகுப்புகளில் படிக்க முடியாமற் போகிறது. இங்கு 400 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்த தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கணிதப்பிரிவு படிக்க வாய்ப்பே இல்லாத சூழல் நிலவுகிறது. அரசு இட ஒதுக்கீட்டை மேனிலை வகுப்புச் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சமத்துவமான கல்விச்சூழல் உருவாகும்.

மாணவர்கள் மதிப்பெண்கள் எடுப்பதை மட்டும் குறிக்கோளாக அமையும் இன்றைய கல்வி முறையை மாற்றச் செய்யும் கோரிக்கைகள் எழுப்பவதுதான் இந்தச் சிக்கலுக்கெல்லாம் சரியான தீர்வாக அமையும். முதலில் பத்தாம் வகுப்பிற்கு CCE முறையை அமல்படுத்தவேண்டும், பிறகு 11, 12 வகுப்புகளுக்கும் இம்முறையை விரிவு படுத்தவேண்டும், கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவேண்டும், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படியான 25% இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடியிருக்க வேண்டிய ஆசிரியர்கள் இம்மாதிரியான போராட்டங்கள் செய்வது நியாயமல்ல.

சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று சொல்லப்படக் கூடிய ஆசிரியர்கள் பழமைவாதப் பிடியில் சிக்கி உழல்வது நல்லதல்ல. அவர்கள் பட்டியலிடும் கொலைகள், தாக்குதல்கள் நடைபெற்றது உண்மையென்றாலும் அதற்கான தீர்வு இதுவாக இருக்கமுடியாது. பழிக்குப்பழி, கண்ணுக்குக்கண் என்னும் மரணதண்டனையைப் போலவே இதற்கும் நாகரீக சமூகத்தில் இடமில்லை. இப்போதுள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்கு முழுமுதற்காரணமாக இருப்பது மனப்பாடத் தேர்வு முறைதான். இதை அகற்றினாலே பலவற்றிற்குத் தீர்வு கிடைத்துவிடும். மேலும் இதற்கு CCE மட்டும் சர்வரோக நிவாரணி என்றெல்லாம் நாம் சொல்ல வரவில்லை. இதனுடன் சேர்த்து பல்வேறு சீர்திருத்தங்களை கல்வியில் நடைமுறைப்படுத்துவது இந்நிலையை மாற்ற உதவும்.

கல்லூரிக் கல்விகூட ஒப்பீட்டளவில் ஓரளவிற்கு சுதந்திரமாக இருக்கும்போது பள்ளிக்கல்வி மட்டும் ஏன் வதைமுகாமாக இருக்கவேண்டும்? மாணவர்களுக்கு இன்று அளிக்கப்படும் பல்வெறு நெருக்கடிகள், இன்றைய புதிய சூழல் போன்றவற்றை அரசும் ஆசிரியர்களும் கணக்கில் கொள்ளவேண்டும்.

மதிப்பெண்ணுக்கான இன்றைய தேர்வு முறையில் செய்யப்படும் சிறிய மாற்றம்கூட இப்போதைய அவலங்களைக் குறைக்கும் மருந்தாக இருக்கும். தொடர்ந்து இதில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் அவற்றை முற்றாக ஒழிக்கும் என நம்பலாம்.

நன்றி: பேசும் புதிய சக்தி (மார்ச் – 2015)

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in கல்வியியல், செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள் and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s