ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?
                                                                                                               – மு.சிவகுருநாதன்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா? என்று கேட்டால் வாய்ப்பில்லை என்றுதான் பதிலளிக்கத் தோன்றுகிறது. பெங்களூரு உயர்நீதிமன்றம் மே 11 அன்று ஜெயலலிதா மற்றும் மூவரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு நீதியரசர் குமாரசாமியால் வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பில் கணிதப்பிழைகள் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அனைத்துவித முகாந்திரங்களும் உடைய வழக்கு என பலதரப்பு சட்ட வல்லுநர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வழக்கின் கர்நாடக அரசுத்தரப்பு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா, கர்நாடக தலைமை வழக்குரைஞர் ரவிவர்ம குமார் ஆகியோர் மேல்முறையீடு செய்ய பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் இவ்வழக்கில் மேல்முறையீட்டை வலியுறுத்தியுள்ளன. சில கட்சிகள் கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளன. மூத்த வழக்குரைஞரும் மனித உரிமைப் போராளியுமான பொ.இரத்தினம் அவர்கள் கர்நாடக அரசிற்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார்.
தீர்ப்பு வெளியாகி 20 நாட்கள் ஆனபிறகும் கூட சித்தராமய்யா தலமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு எந்த முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது பல்வேறு வகையான ஊகங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருப்பதுடன் ஊழல்களுக்கு எதிரான காங்கிரஸ் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமய்யா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துத் திரும்பியிருக்கிறார். அப்போது இது குறித்து விவாதிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏற்கனவே நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணத்தில் இப்பிரச்சினையைத் தட்டிக்கழிக்கும் தொனியே இருந்தது. நாளை (01.06.2015) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் நழுவதற்கு உரிய காரணத்தைத் தேடிக் காத்திருப்பது புலனாகிறது.
ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பெற்றுள்ள நிலையில் மேல்முறயீடு செய்ய தமிழக ஆளுநரின் அனுமதியைப் பெறவேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான வாதம்கூட இங்கு பரப்பப்படுகிறது. இத்தகைய அபத்தத்தை என்ன சொல்ல? இவ்வழக்கை மீண்டும் 20 ஆண்டுகள் பின்னகர்த்த ஆதிக்க சக்திகள் முயலுகின்றன.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த இந்த சொத்துக்குவிப்பு வழக்கை நீர்த்துப்போகச் செய்ய அப்போதைய பா.ஜ.க. மாநில அரசு அரசுத் தரப்பு வழக்குரைஞரான பி.வி.ஆச்சார்யாவுக்கு பல்வேறு நெருக்கடிகளை அளித்து அவ்வழக்கிலிருந்து விலக வைத்தது. தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்தால் அவர்கள் தத்தமது பதவிகளில் நீடிக்கலாம் என்கிற திருத்தத்தை ராகுல்காந்தி கிழித்து எறிந்துவிட்டதாலே காங்கிரஸ் ஊழல் எதிர்ப்பில் முன்நிற்கிறது என்று பொருளல்ல. ஓராண்டில் நாங்கள் ஊழலே செய்யவில்லையே என்று அப்பாவித்தனம் (?!) செய்யும் பா.ஜ.க. வினரும் ஊழலுக்கு எதிராக சிறு துரும்பையும் அசைப்பவர்கள் அல்ல.
தமிழகத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுக்கும் கொள்கைகள், ஊழல்கள் போன்றவற்றில் இம்மியளவும் வேறுபாடு இல்லை. அதைப்போலவே இந்திய அளவில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் இவற்றில் மயிரிழை வேற்றுமையும் இல்லை என்பதுதானே உண்மை. தமிழ்நாட்டில் உள்ள இவ்விரண்டு கட்சிகளையும் மத்தியில் ஆளும்கட்சிகளாக இருக்ககூடியவை எப்போதும் அனுசரித்தே வந்திருப்பது கடந்த 40 ஆண்டுகால வரலாறு.
இதையெல்லாம் எப்படி நேரடியாகச் சொல்வார்கள்? கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிடையே பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத காவிரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் அது தொடர்பான சிக்கல் நீடிக்கிறது. எனவே இரு மாநில மக்களின் மனத்தில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வைக் கணக்கில்கொண்டு இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை என கர்நாடக அரசு கருதுகிறது என்கிற ரீதியிலான அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடிய சாத்தியமே அதிகமாக உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு இன்னொரு சங்கரராமன் கொலை வழக்காக மாறும் நிலை இருப்பதை தற்போதைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in அரசியல் விமர்சனம், செய்திகள், செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள் and tagged , . Bookmark the permalink.

One Response to ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?

  1. பன்மை சொல்கிறார்:

    எனது எதிர்பார்ப்புக்கு மாறாக சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது. வரவேற்போம். சிறப்பு நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் ஏற்கனவே செய்த குளறுபடிகளை இனியாவது செய்யாமல் வழக்கை நேர்மையாக நடத்த கர்நாடக அரசு முயலவேண்டும். 0

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s