டாஸ்மாக் வேண்டும்!: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை


டாஸ்மாக் வேண்டும்!: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை

                                                                  – மு.சிவகுருநாதன்

ஓர் வாட்ஸ் ஆப் குழுவின் தோழரொருவர் கீழ்க்கண்ட பரிந்துரைகளை அனுப்பியிருந்தார். நிறைய யோசிக்கிறார்களே என மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவற்றை என்னால் ஏற்க இயலவில்லை. முதலில் அவரது யோசனைகள்:

TASMAC தொடரட்டும்! அரசுக்கு ஒரு ஆசிரியனின் ஆலோசனை!

  • அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நூலகங்களாக மாற்றிவிடுங்கள். அலமாரிகள் வாங்க வேண்டியதில்லை.
  • நிர்வாகியை நூலகராக ஆக்கிவிட வேண்டியது.
  • குளிர்சாதனப் பெட்டியை பதனீர் வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • புத்தகவரி (Book Tax) என்ற புதியவரியை அரசு விதித்து அதன் மூலம் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.
  • அந்தந்தப் பகுதி ஆசிரியர்கள் வாரத்திற்கு ஐந்து மணி நேரமாவது நூலகத்தில் செலவிட வேண்டுமென்று உத்தரவிடலாம்.
  • படி. படிப்பு வீட்டுக்கும் நாட்டுக்கும் பலம், என்று அதே பச்சைப்பலகையில் எழுதட்டும்.
  • TASMAC ( TAmilnadu State Mass Accessible Center) என்று மாற்றுங்கள்! TASMAC தொடரட்டும்!!

“ஆசிரியர்கள் ஐந்து மணி நேரம் நூலகத்தில் இருக்கவேண்டுமா? என்ன கொடும டா சாமி? “ – என நான் பதிலுரைத்தேன்.

“ஒரு வாரத்திற்கு 5 மணி நேரம் தானே.” – மற்றொரு நண்பர் சமாதானம் சொன்னார்.

“டாஸ்மாக் கடையை நூலகமாக்குவது குறித்த யோசனை பற்றி நிறைய சொல்லவேண்டியுள்ளது. பிறகு பார்க்கலாம். வாரம் 5 மணி நேரம் மட்டும் பிரச்சினை இல்லை.” என்று பதில் எழுதினேன்.

இது குறித்த எனது கருத்துக்கள் சில…

குடிக் கலாச்சாரம் பற்றிய நிறைய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. தமிழில் புலம், தமிழினி வெளியிட்ட நூற்களும் நினைவிற்கு வருகின்றன.

டாய்லெட், கிச்சன் போன்றவற்றை மாற்றிக் கட்டும் வாஸ்து பெருங்கும்பல் செய்வதைப் போல இருக்கின்றன இந்தப் பரிந்துரைகள்.

டாஸ்மாக் கடைகளை நூலகமாக்குவது என்கிற பரிந்துரை மெலோட்டமான பார்வைக்கு புரட்சிகரமாகத் தோன்றலாம். ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களின் மாற்று (புரட்டு) அரசியலுக்கு வேண்டுமானால் இது ஒத்துப்போகலாம். இவர்களுக்குத் தான் இது கைவந்த கலை.

தீட்டை அகற்றி புனிதத்தை வைப்பது அல்லது அழுக்கை அகற்றிவிட்டு அவ்விடத்தில் தூய்மையால் நிரப்புவது போன்ற மதவாத ஆதிக்கச் சொல்லாடலுக்கு நிகரானது இது.

இங்கு ஒன்றும் நூலகங்கள் இல்லாமலில்லையே! அவை எவ்வாறு பராமரிக்கப்படுகிறது? டாஸ்மாக் கடைக்கும் நூலகத்திற்கும் கூட நிறைய ஒற்றுமைகள் உண்டு.

முன்னதில் தமிழகத்து முன்னாள் இந்நாள் முதல்வர்கள் ஆலைகளில் தயாரிக்கப்பட்ட போலி மதுபானங்கள் கிடைக்கும். பின்னதில் இந்நாள் முன்னாள் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்களால் தயாரிக்க, எழுதப்பட்ட நூல்கள் கிடைக்கும்.

இங்கு ஏற்கனவே நூலக வரி உண்டே! இன்னொரு வரி போட்டால் ஆயிற்றா? பள்ளிக்கல்வியின் கீழுள்ள பொது நூலகத்துறையின் அரசியல் ஆதிக்கம் டாஸ்மாக்கை விட மோசமானது.

இங்கு நடக்கின்ற தரகு வேலைகள் வெளிப்படையாகவே நடக்கின்றன. பதிப்பகத்தார் அரசியல் கட்சிகளில் இணைந்து தங்களது நூல்களை விற்கும் வாங்கும் போக்கு உள்ளது. இதுகுறித்து எழுதினால் நீளும். இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஒவ்வோராண்டும் புத்தகக் கண்காட்சி நடக்கும்போது 5% கழிவை அரசே (மானியம் போல) ஏற்கிறது. விற்பனையாளர்கள் கழிவு 10% யுடன் சேர்த்து 15% ஆக வழங்கப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் ஏதேனும் தமிழகத்தில் உண்டா? வரிகள், உத்தரவுகள், அரசாணைகள் மூலம் நூலக மற்றும் புத்தக வாசிப்பை ஏற்படுத்தமுடியாது. இது இன்றைய கல்வியமைப்பின் / முறையின் தோல்வி.

தோழர் சாலையில் போகும்போது கூட டாஸ்மாக் கடைகளையும் பார்களையும் எட்டிக்கூட பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது. இவைகள் பொதுக்கழிப்பிடமாகக் கூட பயன்படுத்த லாயக்கற்றவை. இதில் நூலகமா? வாரத்தில் ஐந்து நாட்களா? மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

நமது ஆசிரியர்களை அரசாணை மூலம் புத்தகங்களைப் படிக்க வைத்துவிடமுடியுமென எனக்குத் தோன்றவில்லை. பள்ளிகளில்கூட நூலகங்கள் பயன்பாட்டில் இல்லையே. டாஸ்மாக்கை நூலகமாக மாற்றி அதில் வாரம் 5 மணிநேரம் படித்து அப்பப்பா யுகப்புரட்சி நடக்கக் போகிறது!

பலரும் வலியுறுத்தும் மதுவிலக்குக் கொள்கை தெளிவற்றதாகவே உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் அடக்கம். இது வெறும் தேர்தல் முழக்கமாகிப் பின் காணமாற்போவதை நாமனைவரும் கண்டு களிக்க இருக்கிறோம். இல்லாவிட்டால் மதுவிலக்கு அமல் செய்துவிட்டு ஓராண்டில் தோல்வி என்பதையும் அறிவிக்க இவர்கள் தயார், நாமும் தயாராக வேண்டியதுதான்!

நேரக்குறைப்பு, கடைகள் குறைப்பு, வயதுக்கட்டுப்பாடு மதுவிலக்குப் பரப்புரை, போலி மதுபான ஆலைகள், அரசியல்வாதிகள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் மதுத் தயாரிப்புக்களை நிறுத்துதல், கரும்புச் சக்கையிலிருந்து காகிதம், எத்தனால் (எத்தில் ஆல்கஹால்) மட்டும் தயார்த்தல், பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்க யாரும் தயாராக இல்லை என்பதுதானே உண்மை.

பள்ளி மாணவர்கள் குடிக்கிறார்கள் என்றும் எல்லாரும் முழங்குகிறார்களே! சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவன் இறந்தான். அதன் பிறகாவது சிறுவர்களுக்கு மது விற்பனை செய்ய ஏதேனும் தடங்கல் வந்ததா?

(பார்க்க : ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்
http://musivagurunathan.blogspot.in/2012/02/blog-post_29.html

குடி சமூகச் சீரழிவு என்பதை ஏற்றுக் கொள்வோம். இங்கு இது சமூகப் பிரச்சினை மட்டுமல்ல; அரசியல் பிரச்சினையும் கூட. ஒரே நாளில் குடிசாலைகளை மூடிவிட்டால் எல்லாரும் உடன் படிக்கப் போய்விடுவார்களா? டாஸ்மாக்கை ஆசிரியர்களிடம் விட்டுவிட்டு குடி அடிமைகளிடம் என்ன தரமுடியும்?

டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதெல்லாம் இங்கு பிரச்சினை இல்லை. பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இதுவல்ல பிரச்சினை.

குடி இங்கு கலாச்சாரமாகவே இருந்து வந்தது. கள் குடிப்பது தமிழ்க் கலாச்சாரம் இல்லையென்று சொல்ல இயலுமா? கள்ளை அகற்றி அவ்விடத்தில் இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு (IMFL) மதுவகைகளை அனுமதித்தது நம் தலைவர்கள்தானே! அதோடு நில்லாது குடியை வணிகமாக்கியதும் இவர்களே.

தென்னை, பனை மரங்கள் வளர்ப்பவர்கள் கள் உற்பத்தி செய்ய அனுமதிமறுக்கும் அரசுகள் மாடு வளர்ப்பவன் பால் உற்பத்தி செய்யாதே என்று சொல்ல முடியுமா? கள்ளைத் தடை செய்து IMFL சரக்குகளை டாஸ்மாக் மூலம் விற்பனை செய்தவர்கள் தற்போது கடையை மூடினாலும் மீண்டும் கள்ளச்சாராயம் விற்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு வருமானம் குறையப் போவதில்லை. அரசுக்குத்தான் இழப்பு கூடுதலாகும்.

நமக்கு ஓர் சந்தேகம். அரசு மதுக்கடைகளை மூட நடக்கும் போராட்டங்களைப் போல் தனியார் பள்ளிகள் மூடுதல் / அரசுடைமையாக்குதல் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தச் சமூகம் போராட முன்வருமா? தனியார் பள்ளிகளால் சமூகச் சீர்கேடுகள் இல்லையென்று சொல்ல முடியுமா? சாராயம் வணிகமாவது நல்லதல்ல; கல்வி வியாபாரமாவது சரி என்று வாதிட வாய்ப்புண்டா?

இறுதியாக குடிப்பதற்கு மாற்றாக படிப்பை பதிலீடு செய்ய முடியாது. இரண்டும் வேறுபட்ட களன்கள். துய்ப்பு என்றாலும்கூட இரண்டையும் ஒன்றாக கலாச்சாரம் அனுமதிப்பதில்லை. கல்வி வணிகமயமான அதாவது படிப்பு பணம் பண்ணும் வழியாக மாற்றப்பட்ட நிலையில் பாடபுத்தகங்கள் தாண்டிய படிப்புக் கூட இங்கு போதையாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதிலும் உயர்வு-தாழ்வு, மேல்-கீழ், புனிதம்-புண்ணாக்கு, நன்மை-தீமை என்கிற முரண் எதிர்வுகள் வந்துவிடுகிறதே!

டிச. 31, 2012 –ல் எனது வலைப்பூவில் பதிவிட்ட கட்டுரையின் லிங்க்:
டாஸ்மாக தமிழகம்
http://musivagurunathan.blogspot.in/2012/12/blog-post_31.html

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in டாஸ்மாக், மதுவிலக்கு and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s