கல்விக் குழப்பங்கள் – தொடர் (பகுதி 16 முதல் 20 முடிய)


கல்விக் குழப்பங்கள் – தொடர் (பகுதி 16 முதல் 20 முடிய)

– மு.சிவகுருநாதன்

16. இயற்கை வளங்கள் என்றால் என்ன?

“இயற்கையாகவே மனிதப் பயன்பாட்டிற்குப் புவியில் கிடைக்கும் பொருட்களே வளங்கள் எனப்படுகிறது”, இது ஒன்பதாம் வகுப்பு புவியியல் பாடத்தில் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது.

“அன்றாட வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்துப் பொருட்களையும் இயற்கை வளங்கள் என்கிறோம். (எ.கா.) நிலம், காற்று, நீர், சூரிய ஒளி, மண், கனிமங்கள், நிலக்கரி, கச்சா எண்ணெய், தாவரங்கள் மற்றும் விலங்குகள். மனிதர்கள் தாங்கள் உயிர்வாழ இவ்வளங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோப் பயன்படுத்துகின்றனர்.”. இது பத்தாம் வகுப்பு புவியியல் பாடம்.

இயற்கை மனிதனுக்கு மட்டுமானது என்கிற மிக மோசமான கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இம்மாதிரியான பாடங்கள் எழுதப்படுகின்றன. மனிதனது தேவைகளை நிறைவு செய்வது, அவனது பயன்பாட்டில் இருப்பது இயற்கை வளங்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய வன்முறை? மனிதன் பயன்படுத்தாத பொருட்கள் இருப்பின் அது இயற்கை வளமாகாதா? மனிதனுக்கும் சுழலுக்கும் உள்ள உறவைச் சரியான முறையில் விளங்கிக் கொள்ளாமல் இவ்வாறு கருத்தாக்கங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இன்று உலகம் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இவை எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாக இருப்பது மனிதனே. மனிதனைத் தவிர்த்து எந்த உயிரினமும் இச்செயல்களில் திட்டமிட்டு ஈடுபடுவதில்லை. நிலைமை இவ்வாறிருக்க, “உலகம் பிறந்தது எனக்காக…” என்ற திரைப்படப் பாடல் கருத்துக்களைக் கொண்டு இயற்கை வளங்களை வரையறுப்பது நியாயமா?

இந்தப் பூவுலகு யாருக்குச் சொந்தமானது? மனிதன் தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடுகிறான். அனைத்து உயிரினங்களுக்கும் சம உரிமை உண்டென்கிறோம். உயிரற்றப் பொருட்களின் இருப்பிற்கும் புவிக்கோளத்தில் இடமுண்டல்லவா!

இங்கு உயிர்வாழும் உரிமை முற்றிலும் மனிதனுக்கானது மட்டுமா? அப்படியான ஓர் பார்வையை நாம் இன்னும் வலியுறுத்தமுடியமா? நமது பார்வையில் கோளாறு இருக்கிறது என்று சொல்லவேண்டும். சமூகத்தில் கெட்டித்தட்டிப் போன இவ்வாறான சிந்தனைகளும் கருத்தியல்களும் நிரம்ப உண்டு. இத்தகைய சொல்லாடல்களை மீளாய்வு செய்து புதிய வரையறைகளை உருவாக்குவது மிகவும் தேவையானது.

புவி மக்கள், மாக்களுக்கானது மட்டுமல்ல. புவி புவிக்கானது என்பதை மிக வலியுறுத்திச் சொல்லவேண்டிய நமது பாடநூற்கள் ஏன் இவ்வாறு செய்கின்றன?

கல்வி என்பது சிந்தனையை வளர்ப்பதாக இருக்கவேண்டும். ஏன்? எதற்கு? எப்படி? என வினாக்கள் பல கேட்டு ஆராயும் மனப்பான்மையைத் தூண்டுவதாகவும் அமையவேண்டும். ஆனால் இங்கு மூளையை மழுங்கடிப்பதாகவே கல்வி இருக்கிறது.

மனிதனது தலையீடு இன்றி இயற்கையில் உற்பத்தி செய்யப்படுபவை இயற்கை வளங்கள் என்றும் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு (புவிக்கு) இவை தேவைப்படும் பொருட்கள் எனவும் சொல்லலாமே!

நுகர்வியம் சார்ந்து இயற்கை வளங்களை வரையறுப்பதன் போதாமைகள் மட்டுமல்ல; அதன் புரிதல் குறித்த கேள்விகளும் இங்கு எழுவது தவிர்க்க முடியாதது. காலங்காலமாக மரபான இத்தகைய சிந்தனைப் போக்குகள் சமூகத்தில் தாக்கம் பெற்றுள்ளன. காலமாற்றத்தின் ஊடாக இவற்றை மறு பரிசீலனை செய்வது அவசியம்.

17. ஏரிகள் குளங்களான கதை!

நமது பாடநூல் புலிகளின் புள்ளிவிவரங்களுக்கு ஈடு இணை கிடையாது. இவர்கள் அள்ளித் தெளிக்கும் கற்பனைகளுக்கு அளவில்லை. இந்தப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது.

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் புவியியல் பகுதியில் தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்களின் எண்ணிக்கைப் பட்டியல் ஒன்று உள்ளது.

அதில் ஆறுகள் – 17, ஏரிகள் – 15, நீர்த்தேக்கங்கள் – 71, கால்வாய்கள் – 2395, குட்டைகள் – 21205, குளங்கள் – 40319, கிணறுகள் – 1908695 எனப் பட்டியலிடப்படுகிறது.

ஆறுகளைவிடவா ஏரிகள் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன? இனி வருங்காலங்களில் நிலைமை இப்படித்தான் இருக்கும் என குறிப்பால் உணர்த்துகிறார்கள் போலும்!

தமிழ்நாட்டில் சுமார் 39202 ஏரிகள் இருப்பதாகவும் அவற்றில் சுமார் 13710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் செய்திகள் சொல்கின்றன. இவற்றில் 1000 ஏக்கர் பரப்பு கொண்ட பெரிய ஏரிகள் 100 க்கு மேல். 5.4 லட்சம் ஹெக்டேர் பாசனப்பரப்பு ஏரிகளை நம்பி இருக்கிறது.

அடுத்த பாடம் வேளாண்மை. அதில் தமிழ்நாட்டு பாசன் ஆதாரங்களாக கால்வாய்கள், குளங்கள் மற்றும் கிணறுகள் பட்டியலிடப்படுகின்றன. இங்கு 39202 நீர்ப்பாசன குளங்கள் என்கிறார்கள். இங்கு ஏரிகள் குளமாக்கப்படுகின்றன. ஏதோ ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்கு இவர்களால் ஆன உதவி!

பொதுவாக நமது பாடநூல்களுக்கு பரங்கிக்காய், பூசணிக்காய் வேறுபாடுகூட தெரியாது. இங்கு குளம், ஏரி வேறுபாடு திட்டமிட்டு மறைக்கப் படுகிறது. 1000 ஏக்கர் பரப்பிற்கு மெற்பட்ட நூற்றுக்கணக்கான ஏரிகள் இருக்கும்போது அவைகள் குளமாக கணக்கு காட்டப்படுவதேன்?

நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்கவேண்டும் என நீதிமன்றங்களில் பொதுநல மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. அரசுக்கு நீதிபதிகள் உத்தரவுகள், காலக்கெடு போன்றவற்றைப் பிறப்பிக்கிறார்கள். இம்மாதியான உத்தரவிடும் இடம்கூட ஏரியில் கட்டபட்டது என்கிற உண்மை கசப்பானது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உலகனேரியில் கட்டப்பட்டுள்ளது. நம்புங்கள் அது வெறும் பெயர் மட்டுமல்ல; உண்மையான ஏரிதான்.

செங்கல்பட்டு என்றொரு மாவட்டம் பலபெயர்கள் தாங்கி தற்போது காஞ்சிபுரம் மாவட்டமாகியுள்ளது. சென்னையின் புறநகர்ப்பகுதியான இம்மாவட்டத்திற்கு ஓர் காலத்தில் தமிழக ஏரி மாவட்டம் என்ற சிறப்புண்டு. சென்னையின் முதன்மை நீராதாரமான செம்படம்பாக்கம் ஏரி உள்ளிட்ட தமிழகத்து பெரிய ஏரிகள் பல இங்கிருந்தன. ஆனால் இன்று?

தமிழகப் பாசனப்பரப்பில் ஐந்தில் ஒன்றாக (சுமார் 20%) உள்ள ஏரிப்பாசனத்தை வெறும் குளமாக சுருக்குவதன் பின்னணியில் சதிகூட இருக்கலாம் என்று தோன்றுகிறது.

மேலும் குளங்களை பொதுப்பணித்துறை, பஞ்சாயத்தார் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. (அது என்ன பஞ்சாயத்து; ‘காப்’ பஞ்சாயத்தா?) குளம், குட்டைகளை சிற்றூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களும் ஏரிகளை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பும் பராமரிக்கிறது. இங்கும் குழப்ப வேண்டுமா?

பெரிய ஏரிகள் என்று கூட 15 ஐ சொல்லமுடியாது. இது என்ன பொய்க்கணக்கு? போலிக்கணக்கு? இதைப்போலவே ஆறுகள் எண்ணிக்கையின் உள்ளே புகுந்தாலும் குழப்பமே மிஞ்சும். முதன்மை ஆறு, துணையாறு, கிளையாறு – ஆகியவற்றில் எந்த அடிப்படையில் பட்டியல் தயாரிக்கிறார்கள் என்பது யாருக்கும் விளங்காது.

18. குடவோலை முறை ஜனநாயகமா?

இனம், குலம், குடி, சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பெருமைகளைப் பேசுவதுதான் இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலானோரின் அன்றாடப் பணியாக உள்ளது. இத்தகைய பாசிச சக்திகளின் வளர்ச்சி இன்று அபரிமிதமாக உள்ளது. வரலாறு, மொழிப்பாடங்கள் இந்த பாசிசப் போக்கை வளர்க்கும் விதமாக இங்கு கட்டமைப்படுவதுதான் வேதனை.

பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக்கொண்டு வேதங்கள், நால்வர்ணப் பாகுபாடு என முற்றிலும் வைதீகப் பாரம்பரிய ஆட்சி செய்த பிற்கால சோழர்களை தமிழர்களின் ஒரே அடையாளமாக முன்னிறுத்தும் போக்கு இங்குள்ளது. இவர்களது வைதீக நடவடிக்கைகளை தமிழ் மொழி, இனப் பெருமைகளாகக் கட்டமைக்கும் அரசியல் பாசிசத்தன்மை மிக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரில் கிடைத்த இரு கல்வெட்டுக்களில் உள்ள அக்கால கிராம சபையைத் தேர்வு செய்யும் முறையான ‘குடவோலை முறை’ என்ற திருவுளச்சீட்டு முறையை இன்றைய மக்களாட்சி முறையோடு ஒப்பிடக்கூடிய அபாயம் வரலாற்றின் அவலங்களுள் ஒன்று. 1911 இல் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் தொடங்கிவைத்த இந்தவேலையை தற்போது தமிழ் தேசியர்கள் தொடர்கின்றனர். பார்ப்பன, வருணசிரம, இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் இவர்களுக்கு ஆதாரங்களாக உள்ளனர்.

தோட்ட வாரியம், ஏரி வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், உதாசீன வாரியம் என்ற பலதரப்பட்ட வாரியப் பொறுப்புகளுக்கு இவ்வாறு திருவுளச்சீட்டுப் பயன்படுத்தப்பட்டது. வேளாண்குடிகள் வாழ்ந்த இடம் ஊர் என்றும் பார்ப்பனச்சேரி கிராமம் என்றும் அழைக்கப்பட்டன. இதனை நிர்வகிக்கும் அமைப்புகள் முறையே ஊர் (ஊரவர்), சபை என்றும் சொல்லப்பட்டன.

பார்ப்பனச் சேரிகளான பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம், அகரம் போன்றவற்றிலுள்ள சபைகளை நிர்வகிக்க பார்ப்பனர்களை மட்டும் தேர்வு செய்ய நடத்தப்பட்ட சீட்டுக்குலுக்கும் முறையே குடவோலை முறை என்பது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று வேதம் கற்ற பார்ர்பனராக இருக்கவேண்டும் என்பது முதன்மையானது. இந்தச் சீட்டுகளில் பார்ப்பனர்கள் பெயர்கள் மட்டுமே எழுதப்பட்டு, பார்ப்பனச் சிறுவன் ஒருவனால் திருவுளச்சீட்டாக எடுக்கப்படுவதாகும். இதில் எங்கே ஜனநாயகம் வந்தது? (இது குறித்த மேலதிக விளக்கம் மற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு இரண்டையும் பார்க்க: ஆய்வாளர் பொ.வேல்சாமி அவர்களின் கோவில்-நிலம்-சாதி, பொற்காலங்களும் இருண்ட காலங்களும் ஆகிய இரு நூற்கள், வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் – 629001)

இது குறித்து நமது வரலாற்றாசிரியர்கள் சிலர் சொல்வதைக் கேட்போம்.

“குடும்புகளால் நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும்கூடிக் குடும்புக்கு ஒருவராக மொத்தம் முப்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் வாக்குப்பதிவு முறை ஒன்று பிராமணர் கிராமங்களில் கையாளப்பட்டது. அம்முறைக்குக் ‘குடவோலை முறை’ என்று பெயர்.” இது டாக்டர் கே.கே. பிள்ளையின் வரையறை.

வாக்குப்பதிவு முறை என்றதும் அது எப்படி நடக்கிறது என்று அறிய ஆவலாக இருக்கிறதா? அவரே தொடர்ந்து எழுதுகிறார். “குடும்பினால் நியமனம் செய்யப்பட்டவர்கள் சபைக்கு உறுப்பினராகும் தகுதியுடையவர்களின் பெயர்களை ஓலை நறுக்குகளில் எழுதி அவற்றை ஒரு குடத்துக்குள் இடுவார்கள். பிறகு குடத்தை நன்றாக குலுக்குவார்கள். சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை ஓலை நறுக்குகளை எடுக்கும்படி ஒரு சிறுவனை ஏவுவார்கள். அவன் குடத்துக்குள் கையிட்டு வெளியில் எடுத்த ஓலைகளில் காணப்படும் பெயரினர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.” (டாக்டர் கே.கே.பிள்ளை: தமிழக வரலாறு மக்களும் பண்பாடும். வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600113) வாக்குப்பதிவு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறதா? இன்றும் இப்படியே வாக்குப்பதிவு நடத்தினால் பெரும் செலவு குறையுமே!

“ஓலைச் சுவடிகளில் தகுதியான ஆட்களின் பெயர்கள் எழுதப்பட்டு அவை ஒரு குடத்துக்குள் போடப்பட்டன. அக்குடத்தின் வாய் மிகக் குறுகலானது. அக்குடத்தை நன்கு குலுக்கிச் சபையின் முன்னிலையில், ஒரு குழந்தையை வரவழைத்து, எத்தனை குழுக்கள் நியமிக்கப்பட வேண்டியதிருந்ததோ அதற்கேற்ப அத்தனை ஓலைகளை அந்தக் குழந்தையை எடுக்கச் செய்தார்கள். இந்த ஏற்பாடுக்குக் ‘குட ஓலை முறை’ என்று பெயர்.” இது பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் விளக்கம். (சோழர்கள் தொகுதி 2 , பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். சென்னை 600098)

இங்கு சபை என்பது முழுதும் பிராமணர்களுக்கானது என்பதையும் இந்த குலுக்குச்சீட்டில் பிராமணர்கள் பெயர்களைத் தவிர எவரும் வேறு இடம்பெற வாய்ப்பு இல்லை மற்றும் சீட்டு எடுப்பவன்கூட பிராமணச் சிறுவன் என்கிற உண்மைகள் மிகக் கவனமாகத் திட்டமிட்டு மறைக்கப்படுவதை உணரலாம்.

கிராம சபைகளில் “கிராமத்திலுள்ள அனைவரும் அங்கத்தினராவதற்குத் தடை ஏதும் இல்லையென்று தோன்றுகிறது.”

“எல்லாரும் சபைக்கு வந்தாலும் அனுபவமும் திறமையும் மிக்கவர்கள் மட்டுமே, அதனை முன்னின்று நடத்திச் சென்றனர். வயது,கல்வி, செல்வம், குடிப்பிறப்பு ஆகிய காரணங்களால் சிலர் எளிதாகத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.”

“பிரமதேயத்தின்பால் பரம்பரை உரிமையுடையவர்களாக இருந்தும், கிராம நிர்வாகத்தில் மற்றவர்களுக்கும் உரிய பங்கு தர முன்வந்தனர். தேவை ஏற்பட்டபோது தங்களது உரிமைகளைக் குறைத்துக் கொண்டு, கிராம நிர்வாகத்தில் பங்கு கொள்வதற்கு ஏனையோருக்கு வாய்ப்பு அளித்தனர்.” (மேற்கோள்கள் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் மேலே குறிப்பிட்ட நூல்)

என்றெல்லாம் பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பார்ர்பனப் பெருமைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறார்.

அவருடைய காலம் முடிந்து விட்டது. இது இன்று சூத்திர சாதி மற்றும் ஆதிக்க சாதி இந்துத்துவச் சொல்லாடலாக தொடர்ந்து மாற்றப்படுவதை அவதானிக்கலாம். இதன் பின்னாலுள்ள பாசிசக் கூறுகளை அம்பலப்படுத்துவது அவசியம்.

19. புத்தர் ஏன் துறவறத்தைத் தேர்வு செய்தார்?

“புத்தருக்கு ஆடம்பர சுக போக வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது. பசி, பிணி, மூப்பு, இறப்பு மக்களை வாட்டி வதைப்பதைக் கண்டு மனதுருகினார். துன்பம் மனித வாழ்க்கையில் சித்தார்த்தரை ஆழமாக பாதித்தது. இப்பிடியில் இருந்து மனித இனத்தை மீட்க வழி காண முற்பட்டார். இவர் தனது 29 –ம் வதில் மனைவி யசோதரையையும் , மகன் இராகுலனையும் விட்டு வெளியேறி ஒவ்வொரு இடமாய் சுற்றித் திரிந்தார். இந்நிகழ்வு பெரும்துறவு எனப்படுகிறது.” (9 –ம் வகுப்பு சமூக அறியியல் பாடநூல்)

மேற்கண்ட பெருங்கதையாடல் இங்கு தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. அறிவியலில் மட்டும் ஏன்? எதற்கு? எப்படி? என்று வினாக்கள் எழுப்பினால் போதாது. அனைத்திலும் இவ்வாறான வினாக்கள் எழவேண்டும். அப்போதுதான் இம்மாதிரியான பொய்மைகள் அம்பலப்பட்டு உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

நமது ஆசிரியப் பெருந்தகைகள் இந்தக் கதைகளை எவ்வளவு நாட்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள்? இதில் ஏதேனும் நம்பகத்தன்மை இருக்கிறதா? புத்தர் பிறந்தவுடன் அவரது தாய் மாயாதேவி இறக்கிறார். பிறகு சித்தி கவுதமியால் வளர்க்கப்பட்டார். எனவேதான் கவுதம புத்தர் எனப்பட்டார். 29 வயது வரையிலும் தாயின் மரணத்தையும் இறப்பு என்பதையும் அறியாமல் இருந்தாரா? அவரது அரண்மனையில் வைத்தியர் இருந்திருப்பாரே! அங்கு யாருக்கும் உடல்நலம் பாதிக்கப்படவில்லை. போர்கள் நடந்திருக்குமே! யாரும் இறக்கவில்லையா? இதைப்போல மூப்பையும் அறியாமல் இருந்ததாக ஏன் கதை சொல்லவேண்டும்? ‘சின்னத்தம்பி’ பிரபுவுக்கு எல்லாந்தெரியும். ஆனால் தாலி மட்டும் தெரியாது, என்பது போலல்லவா இருக்கிறது?

இந்தக் கதைப்புரட்டை அண்ணல் அம்பேத்கர் அறிவுப் பூர்வமற்றதென மறுக்கிறார். புத்தரின் துறவிற்காக உண்மைக்காரணத்தைக் கண்டடைகிறார். டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்ற வரலாற்று அறிஞர்களின் நூற்கள் வாயிலாகவும் இவற்றிற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

புத்தர் வாழ்ந்த காலகட்டத்திற்கு முன்பிருந்தே கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து வடஇந்தியாவில் ‘மகாஜனபதங்கள்’ இனக்குழு குடியரசுகள் 16 இருந்தன. அவற்றுள் காந்தாரம், அவந்தி, குரு, பாஞ்சலம், மதுரா, சாக்கியம், மகதம், கோசலம் போன்ற இனக் குழுக்கள் சில.

“கி.மு. 600 வாக்கில் கங்கை பள்ளத்தாக்கில் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தனித்தனி சமூகக் குழுக்கள் அக்கம்பக்கமாய் நிலவின” என்று சொல்கிறார் டி.டி. கோசாம்பி. (இந்திய வரலாறு ஓர் அறிமுகம் – டி.டி. கோசாம்பி. தமிழில்: சிங்கராயர் வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை – 641015)

பரம்பரை முடியாட்சிக்குப் பதிலாக குடியாட்சி அரசாக விளங்கியதுதான் இவற்றின் சிறப்பு அம்சம். ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுக்கென்று சங்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த சங்கத்திற்கு ‘சன்ஸ்தகார்’ என்று பெயர். இச்சங்கம் தங்களது இனக்குழுத்தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. சங்கத்தில் வயதுவந்த ஆண்களும் பெண்களும் இடம்பெற்றனர். மக்களிடையே எவ்விதப் பாகுபாடும் இல்லை.

பொதுவான பிரச்சினைகளில் சங்கத்தைக் கூட்டி விவாதித்து முடிவு எடுக்கவும் கருத்துவேறுபாடு இருக்கும்போது வாக்கெடுப்பு நடத்துவதும் வழக்கில் இருந்தன. சங்கத்தில் இடம் பெற்றிருந்த ஆண்-பெண் அனைவரும் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவைச் செயல்படுத்தும் அதிகாரம் சங்கத்திற்கு இருந்தது. எனவேதான் இதை குடியாட்சி அரசுகள் என்று நாம் வரையறுக்கிறோம். (நம்மூரில் திருவுளச்சீட்டு ‘குடவோலை முறை’தான் மக்களாட்சி; காமாலைக் கண்ணுக்கு இதெல்லாம் தெரியாது.)

ரோகிணி ஆற்று நீர்ப் பயன்பாடு குறித்து புத்தரது சாக்கிய இனக்குழுவிற்கு மற்றொரு இனக்குழுவாகிய கோலியர்களுக்கும் பகை உண்டாகிறது. இது குறித்து முடிவெடுக்க சாக்கிய இனக்குழுப் பேரவை கூட்டப்படுகிறது. கோலியர்கள் மீது படையெடுக்க வேண்டுமென பேரவையில் வலியுறுத்தப்படுகிறது. புத்தரோ போர் வேண்டாம், பேசிப் பார்க்கலாம் என மன்றாடுகிறார். உடன் வாக்கெடுப்பு நடக்கிறது. அவரது கருத்திற்கு ஆதரவில்லை. கோலியர்களுடன் போர் என முடிவு செய்யப்படுகிறது.

இனக்குழு மரபுப்படி இம்முடிவுகளை ஏற்காதவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும். அனைத்து இனக்குழு உரிமை மற்றும் உறவினர்கள் அனைவரையும் விட்டு வெளியேறிவிடுவதுதான் மரணதண்டனையிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி. எனவேதான் புத்தர் தம் மனைவி மக்களைத் துறக்கிறார். இதுவே புத்தர் துறவறம் பூண்ட வரலாறு. (பார்க்க: இது மோடியின் காலம் – அ.மார்க்ஸ் வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை -600018)

. இங்கு வரலாற்றிற்கும் புனைவிற்குமான இடைவெளிகளே இல்லை எனலாம். தமிழகத்தில் கல்கியின் நாவல்களைப் படித்துவிட்டு தமிழக வரலாறு எழுதுபவர்கள் அதிகம். புனைவை வரலாறாக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது மிகவும் வசதியாகவே இருக்கிறது. புனைவை வரலாறு ஆக்குவது மட்டுமல்ல; வரலாற்றை புனைவாக உற்பத்தி செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. உலக, இந்திய அளவில் வரலாற்று ஆய்வுகளில் நாம் பின்தங்கியிருப்பதற்கு இதுவும் ஓர் காரணம்.

இதற்கு வந்த எதிர்வினை:

பாலாஜி

கௌதமி அவர்கள் சித்தார்த்தருக்கு சித்தி அல்ல பெரியம்மா…
//புத்தர் வாழ்ந்த காலகட்டத்திற்கு முன்பிருந்தே கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து வடஇந்தியாவில் ‘மகாஜனபதங்கள்’ இனக்குழு குடியரசுகள் 16 இருந்தன. அவற்றுள் காந்தாரம், அவந்தி, குரு, பாஞ்சலம், மதுரா, சாக்கியம், மகதம், கோசலம் போன்ற இனக் குழுக்கள் சில// – இதில் சாக்கியம், மதுரா தவிர மற்றவை இனக்குழு குடியரசுகள் அல்ல முடியரசுகள்…

எனது பின்னூட்டம் :

சிவகுருநாதன் முனியப்பன்

அன்புத்தோழர்! பாலாஜி.

தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி.

புத்தரின் வரலாறு எழுதிய மயிலை.சீனி.வேங்கடசாமி, “சித்தார்த்த குமாரன் பிறந்த ஏழாம் நாள் மாயா தேவியார் காலமானார். மாயாதேவியார் காலஞ்சென்றபடியினாலே அவர் தங்கையாராகிய மகாபிரஜாபதி கவுதமி என்பவர் சுத்தோதன் அரசருடைய பட்ட மகிரிஷியானார். இவர்தான் சித்தார்த்த குமாரனை வளர்த்தார்,” என்று குறிப்பிடுகிறார்.

புத்தர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த பதினாறு மகாஜனபதங்கள் பின்வருமாறு: 1.அங்கம் 2. மகதம் 3. கோசலம் 4. காசி 5. வஜ்ஜி 6. மல்லம் 7. கேதி 8. வத்சம் 9. குரு 10. பாஞ்சாலம் 11. மத்ஸ்யம் 12. சூரசேனம் 13.அஸ்மகம் 14. அவந்தி 15. காந்தாரம் 16. காம்போஜம். இவைதான் நான் குறிப்பிட்ட குடியரசு இனக்குழுக்கள்.

பின் வேதகாலத்திலும் கங்கைச் சமவெளியில் கோசலம், விதேகம், குரு, மகதம், காசி, அவந்தி, பாஞ்சாலம் போன்ற அரசுகள் தோன்றின. இவற்றில் அரசப் பதவி பரம்பரையானது. இதுவே முடியரசுகள் ஆகும். இவை இரண்டிற்கு காலவேறுபாடு உண்டு.

20. ஏன் பெண் கொசுக்கள் மட்டும் கடிக்கின்றன?

மனிதரில் மலேரியா நோய் அனாபிலஸ் (Anopheles gambiae) என்னும் பெண்கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது. இக்கொசு கடிப்பதன் வாயிலாக பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் என்கிற ஒருசெல் ஒட்டுண்ணியை நமது உடலுக்குள் செலுத்திவிடுகிறது. இந்த ஒட்டுண்ணிதான் மலேரியாவை ஏற்படுத்துகிறது.

இதைபோல கொசுக்கள் கடிப்பதன் வாயிலாக நிறைய நோய்கள் மனிதனுக்கு உண்டாகின்றன. சிக்குன் குன்யாவை ஏடிஸ் (Aedes aegypti or Aedes Albopictus) என்னும் கொசு உண்டுபண்ணுகிறது. க்யூலக்ஸ் கொசு (Culex tarsalis) ஃபைலேரியாஸிஸ் என்னும் யானைக்கால் நோயினைப் பரப்புகின்றன. இந்நோய் ஒரு வகை உருளைப்புழு (Wucheria bancrofti) ஒட்டிண்ணியால் உண்டாகிறது. டெங்கு காய்ச்சலையும் ஏடிஸ் வகைக் (Aedes aegypti) கொசு பரப்புகிறது.

பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கின்றன என்கிற அறிவியல் உண்மை இங்கு பெண்களை கிண்டல் செய்யப்பயன்படுகிறது. பாருங்கள், கொசுக்களில்கூட பெண்கள்தான் கடிக்கின்றன என்று! இதற்குக் காரணம் என்ன என யாரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. பாடநூற்கள் அனைத்தும் பெண்கொசுக்கள் கடிப்பதால் நோய்கள் வருகின்றன என்றுமட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுகின்றன. ஆண் கொசுக்கள் கடிக்குமா? கடிக்காதா? ஏன் கடிப்பதில்லை? என்பதைப் பற்றி எதையும் சொல்லாத நிலைதான் இருக்கிறது.

பெண்கொசுக்கள் தான் மனிதன் உள்ளிட்ட விலங்குகளைக் கடித்து அவற்றின் ரத்தத்தை உறிஞ்சுவதோடு நிற்காமல் விலங்குகளுக்கு நோயை உண்டுபண்ணும் ஒட்டுண்ணிகளையும் பரப்புகின்றன. இதை ஏன் பெண்கொசுக்கள் மட்டும் செய்ய வேண்டும். இது கொசுக்களின் வாழ்நாளோடு தொடர்புடைய ஒன்று.

வண்ணத்துப்பூச்சி, பட்டாம் பூச்சி, பட்டுப்பூச்சி, தவளை போன்று உருமாற்றம் நடைபெறும் உயிரிகளில் கொசுக்களும் ஒன்று. இவைகளின் வளர்ச்சி பலநிலைகளில் நடக்கிறது.

ஆண்கொசுக்களின் சராசரி வாழ்நாள் ஒரு வாரம் அல்லது ஏழு நாட்கள். இனச்சேர்க்கையுடன் ஆண்கொசுவின் வாழ்வு முடிந்துபோகிறது. இந்த 7 நாட்களில் ஆண்கொசுக்களின் வாயுறுப்பு மனித அல்லது விலங்கு ரத்தத்தை உறிஞ்சும் அளவிற்கு வளர்ச்சியடைவதில்லை. எனவே அவற்றால் நம்மைக் கடிக்க இயலுவதில்லை. தாவர இலைகளை இவை உண்டு வாழ்கின்றன. சில கனிகளின் சாற்றையும் உட்கொள்ளும்.

பெண்கொசுக்களின் சராசரி வாழ்நாள் ஒரு மாதம் அல்லது 30 நாட்கள். ஆகவே இவைகளின் வாயுறுப்பு ரத்தத்தை உறிஞ்சும் அளவிற்கு வளர்ச்சியடைகிறது. இதனால் இக்கொசுகள் நம்மைக் கடித்து, நோயையையும் பரப்புகின்றன. மேலும் இத்தகைய ஒட்டுண்ணிகள் கொசுக்களில் சில நாட்கள் வாழ்ந்து, பிறகு மனித அல்லது விலங்கு உடலுக்குள் வருகின்றன. வாயுறுப்பு போலவே இதற்கான கால அவகாசமும் ஆண்கொசுக்களின் வாழ்நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது பெண்களைக் கிண்டல் செய்ய, மட்டம் தட்ட பயன்படும் விடயமல்ல என்பதை நாம் முதலில் உணரவேண்டும். பாடநூற்கள் அதற்கான வாய்ப்புக்களை வழங்கவேண்டுமல்லவா?

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s