அரசுப்பள்ளிகளையும் கல்வியையும் காப்பாற்றுபவர்கள்


அரசுப்பள்ளிகளையும் கல்வியையும் காப்பாற்றுபவர்கள்

                                                                                    – மு.சிவகுருநாதன்

சுட்டி விகடன் (30.09.2015) மாதம் இருமுறை இதழின் ‘கனவு ஆசிரியர்’ பகுதியில் அட்டைப்படக் கட்டுரையாக நண்பர் செ.மணிமாறன் கல்விப்பணி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்த நண்பர் செ.மணிமாறன் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்கிறார்.

அம்மையப்பன் அரசு மேனிலைப்பள்ளியில் படிக்கும்போது எனது மாணவர். இன்றும் இனிய நண்பர், நெருங்கிய தோழர். படிக்கும் காலத்திலிருந்தே அனைத்திலும் முதன்மையாய் மிளிர்பவர். பள்ளி பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர். அத்தகைய சிறப்புகள் கொண்ட தோழரின் கல்விப்பணிகளை வாழ்த்தி வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

குழந்தைகள் நாடகங்களுக்கு புது வடிவம் தந்த பேரா.வேலு சரவணன் அவர்களை அழைத்துவந்து பேருந்து வசதியே இல்லாத மேலராதாநல்லூர் குக்கிராமத்தில் நாடக நிகழ்வு நடத்தினார். கலிலியோ அறிவியல் மையம் மதுரை, சமூகக்கல்வி நிறுவனம் சென்னை ஆகியவற்றைக் கொண்டு கோளரங்கம், ராக்கெட் ஏவுதல் போன்றவற்றை நிகழ்த்திக்காட்டினார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக முதலுதவி உள்ளிட்ட பல்வேறு முகாம்கள், பட்டறைகள் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளிகளில் நூல் வாசிப்பு முகாம் நடத்துதல் போன்று புதிய முயற்சிகள் குறித்து அன்றாடம் பேசிவருகிறார்.

சென்ற கல்வியாண்டு கோடைவிடுமுறையில் மே முழுவதும் உதகமண்டலம், மதுரை, சென்னை என பல்வேறு பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டிருந்தார். அன்றாடம் 18 மணிநேரமும் விடுமுறை நாட்களிலும் ஒரே கல்வி குறித்த சிந்தனைகளில் ஈடுபடுகிறார். எனக்குத் தெரிந்த ஒருசிலவற்றை மட்டும் இங்கு பட்டியலிட்டுள்ளேன். தெரியாதது அநேகம்.

தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அரசுப்பள்ளிகளையும் கல்வியையும் பாதுகாக்க முனைந்துள்ளது பாராட்டுக்குரியது. நிறைய தோழர்களின் பணிகளைத் தனித்தனியே பாராட்டுவதுதான் பொருத்தமாக இருக்கமுடியும். அதில் தோழர் மணிமாறன் போன்றோரது செயல்பாடுகள் இவர்களது இலக்கை அடைய பேருதவியாக இருக்கும்.

இந்த எண்ணிக்கை இன்னும் உயர்ந்து கல்வியில் பெருமளவில் மாற்றம் கொண்டுவருவதாக அமையவேண்டும் என்பதே நாமனைவரின் விருப்பம். தோழர் மணிமாறன் போன்று கல்வியில் மாற்றம் கொண்டுவர முயலும் அனைவரையும் இந்த நேரத்தில் வாழத்துவோம். பாராட்டுவோம்.

இத்தகைய முயற்சிகளை வெளிப்படுத்தும் ‘விகடன்’ குழும இதழ்களையும் குறிப்பாக கல்வி பற்றிய பாரதிதம்பி போன்றோரின் கட்டுரைகளை வெளியிடும் ‘ஆனந்த விகடன்’ இதழையும் வாழ்த்தி நன்றி சொல்வோம். வெகுஜன இதழியலில் பிறர் கண்டுகொள்ளாத இந்த அம்சத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

பொதுவாக ஆசிரியர்களைப்பற்றி சமூகத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு. நம்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் என்கிற கண்ணோட்டத்தில் அணுகாமல் கொஞ்சம் புறவயமாக அணுகுவது நலன்பயக்கும். ஆனால் இது இங்கே நடப்பதில்லை.

இக்குற்றத்தரப்பை ஓர் வசதிக்காக இரண்டாகப் பகுக்கலாம் என்று தோன்றுகிறது. ஒன்று கல்வியில் பழங்கால குருகுல (வேதக்கல்வி) முறையின் வழி நின்று இன்றைய கல்வியை அணுகும் பிரிவு. இது சனாதனப் பார்வையிலிருந்து வருவது. இதை நாம் முற்றாக நிராகரித்து விடலாம். வேறு வழியேயில்லை.

மறைமுகமாக குருகுல பாணியை விரும்பும் இவர்கள் அனைவருக்குமான பொதுக்கல்வியை ஏற்படுத்திய பவுத்த-சமணப் பள்ளிகள் மாதிரியைப் பேச முன்வருவதில்லை. ஆசிரியர்களிடம்கூட இத்தகைய அணுகுமுறை பலரிடம் இருப்பது கவலையளிக்கக் கூடியது. ஆசிரியர் தினம், குரு வாரம், விருதுகள், டாகடர் ராதாகிருஷ்ணன் பெருமை, தற்போது அப்துல்கலாம் பெருமை எல்லாம் இந்த வகையில் வரக்கூடியதுதான்.

மற்றொன்று ஆசிரியர்களின் செயல்பாடுகள், கல்விசார் நடவடிக்கைகள் ஆகியவற்றின் எதிர்வினையாக வருவது. இதற்கு முழுமையும் ஆசிரியரை பொறுப்பாக்க முடியாதென்றாலும் இவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அரசு, கல்விக் கொள்கைகள், கல்வித் திட்டம், கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூற்கள், தேர்வு முறை போன்ற பல களன்களை உள்ளடக்கியது. கல்வி பற்றிய மரபான புரிதலை அகற்றுதல், புதிய சிந்தனைகளை ஏற்கும் மனப்பான்மை, மாற்றுக்கல்வி குறித்த புரிதல், சமூகம் பற்றிய உண்மையான அக்கறை, மாணவர்கள் மையக் கல்வியை நோக்கிய நகர்வு போன்ற பல்வேறு மாற்றங்களை ஆசிரியர்கள் உள்வாங்கவேண்டிய தேவை இருக்கிறது.

கல்வியிலும் சமூகத்திலும் பேரளவிற்கு நடக்கவேண்டிய மாற்றத்திற்கு இது போன்ற சிலரது முயற்சிகள் முதற்படியாய் அமையும் என்பதில் அய்யமில்லை. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in கல்வியியல் and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s