01.ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு (இந்நூல் என் வாசிப்பில் … புதிய தொடர்)


01.ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு

(இந்நூல் என் வாசிப்பில் … புதிய தொடர்)

– மு.சிவகுருநாதன்

இன்றைய அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் அழகான நூலாக்கம், அச்சமைப்பு, நூல்கட்டு, அட்டைப்படம் என்று பலவகைகளில் சிறப்பான முறையில் நூற் தயாரிப்பு மேற்கொள்ளப் படுகிறது. வணிகமயம் இருப்பினும் சில பதிப்பகங்கள் மூலம் பல நல்லநூற்கள் தொடர்ந்து வெளியாகின்றன.

தமிழகமெங்கும் பரவலான புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் 7 கோடி மக்கள்தொகைக்கேற்ப ஒப்பீட்டளவில் வாசிப்பு, விற்பனை பேரளவிற்கு அதிகரித்துள்ளதாக சொல்லமுடியாவிட்டாலும் இப்போது நடக்கும் மாற்றமே வியப்பளிக்கக் கூடியது. பதிப்புத்துறை இன்னும் பல்வேறு மாற்றங்களைப் பெறுவதும் இதிலுள்ள சிக்கல்கள் களையப்படவேண்டியதும் மிக இன்றியமையாதத் தேவையாகும்.

ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் வாங்கிக் குவிக்கும் நூற்கள் இன்னும் படிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. குடும்பம், குழந்தை என வெறுமனே பொழுது கழிகிறது. குடிகொண்ட சோம்பேறித்தனம் அகல மறுக்கிறது. இலக்கு வைத்து படிக்கவேண்டும் போலிருக்கிறது அனைத்தையும் வாசித்துத் தீர்க்க.

உணவு மட்டும் அளித்து ஏதேனும் சிறையில் அடைத்தால் முழுநேரம் வாசிப்பது சாத்தியப்படுமா என்றும் தெரியவில்லை. அதற்கும் வாய்ப்பு கிட்டவில்லை, என்ன செய்வது? இந்த தலையணை அளவு புத்தகங்களைப் பிறகு எப்படித்தான் வாசித்துத் தொலைப்பது என்று தெரியவில்லை.

2003 ஆசிரியர் இயக்கத் தொடர் போராட்டங்களின் போது மறியல், கைது எல்லாம் நடந்தது. ஆனால் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று. இதற்காக நானும் சக தோழர் மா.அருள்பாபு அவர்களும் அலுமினியத் தட்டு, டம்ளர், கனத்த புத்தகங்கள் என பொதி சுமந்து சென்று மூன்று நாட்களும் காலையில் கைது மாலையில் விடுதலை என்று மனம் நொந்து திரும்பிய நாட்கள் அவை.

இனி சிறை நிரப்பும் போராட்டங்களுக்கு கூட வாய்ப்பு இல்லை போலும். சில நூறுபேர்கள் தெருமுனையில் நின்று முழக்கமிட்டுத் திரும்பவதுதான் இன்றைய போராட்டமுறை என்றாகிவிட்டது. வாழ்க்கைப் போராட்டத்தில் வாசிப்புப் போராட்டம் பலவீனமடைந்து விடாமல் பாதுகாக்கவேண்டும்.

எங்கோ கரும்பலகையில் “ஓர் ஆசிரியர் இரு நூல்களுக்கு ஈடு”, என கண்டதாக நினைவு. வாசிப்பைப் புறக்கணிக்க விரும்பும் ஒருவனது பாசிசம் இது. என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஓர் நல்ல நூல் யாருக்கும் ஈடில்லை. இந்தப் பழமொழிகள் அதிகார, ஆதிக்க வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்படுபவை. தங்களது தொழிலை மட்டும் புனிதமென்று கற்பிதம் செய்யும் ஆசிரிய சமூகம் இம்மாதிரியான பழமொழிகளையும் உற்பத்தி செய்வதில் வியப்பொன்றுமில்லை.

இத்தொடரில் எனது வாசிப்பு அனுபவங்களை, அந்நூல் பற்றிய விமர்சனம், கருத்துகள், அறிமுகம் என்பதாக தர இருக்கிறேன். முதல் நூல் அ.மார்க்ஸ் –ன் ‘இராணுவமயமாகும் இலங்கை’ உயிர்மை வெளியீடு (ஆகஸ்ட் 2014).

01.ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு

(உயிர்மை வெளியீடாக ஆகஸ்ட் 2014 இல் வந்திருக்கும் அ.மார்க்ஸ் –ன் ‘இராணுவமயமாகும் இலங்கை’ நூல் குறித்த பதிவு.)

தேசிய இனப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டில் சி.பி.எம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, 1990 கள் ‘நிறப்பிரிகை’ காலகட்டத்தில் ஈழத்தமிழருக்காக ‘புலம் பெயர் இலக்கிய மாநாடு’ நடத்தியது, ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் பலரும் கண்டுகொள்ள மறுத்த தமிழக அகதிகள் வாழ்வை அடிக்கடி உண்மையறியும் குழு மூலம் வெளிக்கொண்டு வந்தது, வெறும் புலிகள் ஆதரவு என்ற ஒற்றை நிலப்பாட்டைக் கொண்டு தமிழகத்தில் பலர் இயங்கும் சூழலில் ஈழப்பிரச்சினை குறித்த கரிசனங்களை தொலைநோக்கில் வெளிப்படுத்திவருவது என அ.மார்க்ஸ் ஈழச் செயல்பாட்டை பட்டியலிடலாம்.

2009 இறுதிப்போருக்குப் பின்னர் அங்கு பயணம் மேற்கண்ட தருணங்களை தனது நூற்களில் விவரிக்கிறார். ஆனால் இவை வழக்கமான பயண இலக்கிய நூல்களின் இலக்கணத்தை உடைத்தவை. பொதுவாக பயண நூல்கள் சுற்றுலாவையும் அதன் சுகங்களையும் மட்டுமே சொல்லிப் போகின்றன.

அ.மார்க்ஸ் –ன் முதல் அய்ரோப்பியப் பயண அனுபவங்கள் தொகுப்பு ‘வெள்ளைத்திமிர்’ (பிப். 1997) விடியல் வெளியீடாக வந்து பயண நூல்களில் ஓர் புதிய வெளியை உண்டாக்கியது. அய்ரோப்பாவில் இன்னும் நிலவும் நிறவெறி, பாசிசம், பாசிச எதிர்ப்பு இயக்கங்கள், புலம் பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வு, கல்வி முறை, உலகமயச்சூழல் போன்றவற்றை முன்வைத்த அந்நூலை பயண நூல்வெளியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ஒன்றாக சொல்லலாம். ஆனால் மறுபதிப்பு காணாத நூல்களுள் ஒன்றாக ‘வெள்ளைத்திமிர்’ இருப்பது வருத்தமளிக்கிறது.

அ.மார்க்ஸ் –ன் ஈழம் குறித்த ‘ஈழத் தமிழ் உருவாக்கமும் அரசியல் தீர்வும்’ என்ற முதல் நூல் இறுதிக்கட்டப் போருக்குப்பின் நவம்பர் 2009 இல் புலம் வெளியீடாக வந்தது. போருக்குப் பிந்தைய நிலை, புலிகள் அழிப்பிற்கு பிறகான நிலை, மலையகத் தமிழர்கள், புலிகளின் தமிழக ஆதரவாளர்கள், நிரந்தர அரசியல் தீர்வு என்கிற இன்றைய யதார்த்தை ஒட்டி பிரச்சினைகளை அணுகியது. பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்று கூவிக்கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களால் கடும் தூற்றலுக்கு உள்ளான இந்நூலின் பொருத்தப்பாட்டை இன்றும் வாசித்து உணரமுடியும்.

இறுதிக்கட்டப் போருக்கு பிந்தைய 6 ஆண்டுகளில் முதலில் இந்தியாவிலும் தற்போது இலங்கையிலும் ஆட்சிமாற்றம் நடைபெற்றுள்ளது. இலங்கை குறித்த அணுகுமுறையில் இந்திய அளவிலும் உலக அளவிலும் நடைபெற்றுள்ள மாற்றங்கள் என்னவாக இருக்கின்றன என்பது நம்முன் உள்ள கேள்வி. இந்தியாவில் பா.ஜ.க. அரசின் நிலைப்பாடு தமிழ் தேசியர்கள் நினைத்தைப் போலில்லாமல் காங்கிரஸ் நிலைப்பாட்டைத் தொடருவதாக உள்ளது. அமெரிக்காவின் சந்தர்ப்பவாத தமிழர் ஆதரவு நிலைப்பாடு இல்ங்கை ஆட்சிமாற்றத்திற்கு பிறகு தலைகீழ்மாற்றம் பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் அவதானிக்காமல் ஈழப்பரச்சினையை அணுகுவது சாத்தியமில்லை. இதைத்தான் அ.மார்க்ஸ் தொடர்ந்து தனித்த குரலில் ஒலித்து வந்தார்.

2010 இலங்கைப் பயணத்திற்குப் பிறகு ‘என்ன நடக்குது இலங்கையில்?’ என்னும் இரண்டாவது நூலை ‘பயணி’ (2010) வெளியிட்டது. டானியல் நினைவுகள், பஞ்சமர்கள், மலையகத் தமிழர்கள், இலங்கை முஸ்லீம்கள் ஆகியவற்றோடு போருக்கு பின்னான இலங்கையைப் பதிவு செய்தது. இன்றைய உலக, இந்திய, இலங்கை, தமிழ்ச் சூழலைப் புரிந்துகொள்ளுதல், இதுவரை கற்ற பாடங்களிலிருந்து பெற்ற படிப்பினைகள், இனி நாம் செய்யவேண்டியன, கடந்த காலத்தவறுகளை மீண்டும் செய்யாதிருத்தல் போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவற்றின் பின்னால் வெளிப்படுவது தமிழர்களின் மீதான கரிசனம் மட்டுமல்ல; மனிதர்களின் மீதான வாஞ்சை. ஒரு மனிதஉரிமைப் போராளி இன்றைய காலத்தில் வேறு எப்படி செயல்படமுடியும்? ஆனால் இதுவே இங்கு பெரும்பகையை உருவாக்கித் தந்தது நகைமுரண்.

மூன்றாவது நூலாக ‘இராணுவமயமாகும் இலங்கை’ வந்துள்ளது (உயிர்மை வெளியீடு ஆகஸ்ட் 2014). இந்நூலில் ஆறு கட்டுரைகளும் இலங்கையில் அ.மார்க்ஸ் உரையாற்றத் தடுக்கப்பட்ட நிகழ்வு குறித்து மீனா கண்ட ஓர் நேர்காணலும் உள்ளது.

இலங்கையில் ஆயுதப்போர் தொடங்கிய 1980 களில் இருந்த இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 மடங்கு உயர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் இந்நூலில் கிடைக்கிறது. கல்வித்துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த இலங்கையும் இராணுவமயமாகிவரும் போக்கு பாரதூரமான விளைவுகளை ஏறபடுத்தக்கூடியது. தற்போது மைத்ரிபால சிறீசேனா அதிபராகி இருப்பதும் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய அரசு அமைக்கப்பட்டிருப்பதும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியிருப்பதும் இந்நிலையை மாற்ற உதவுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் உதாரணத்தைப் பார்க்கும்போது இராணுவமயத்தின் விளைவுகள் ஒட்டுமொத்த இலங்கைக்கும் பாதிப்பாகவே அமையும்.

13 வது சட்டத்திருத்தம் ஜனாதிபதியிடமும் அவரால் நியமிக்கப்படும் ஆளுநரிடமும் அதிகாரத்தைக் குவிக்கும் கேலிக்கூத்தாக இருப்பதை மற்றொரு கட்டுரை விளக்குகிறது. மாகாண அரசுகளின் அதிகாரங்கள் அனைத்தையும் ஆளுநரால் கட்டுப்படுத்துவது அதிகார பரவலாக்கத்தைத் தடுத்து தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக்குறியாக்கும்.

கொழும்பில் நிலவும் ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் பற்றி ஓர் கட்டுரை பேசுகிறது. “நீங்கள் தோற்றவர்கள்” தமிழர்கள் மீதான ஏளன அணுகுமுறை தொடர்வதையும் மாற்று மதத்தினர், தோற்றவர்கள் என்றாலும் இறந்தோரை மதிக்கும் குறைந்தபட்ச மானுட மரபைக் கூட கடைபிடிக்காமல் கல்லறைகளை இடித்துத் தள்ளும் நிலையும் விமர்சிக்கப்படுகிறது. இங்கு எல்லாளன் தோற்றபோதும் அவனது வீரத்தை மெச்சி அவனது கல்லறையைக் கடந்து செல்லும்போது துட்டகைமுனு வணங்கிச் செல்ல ஆணையிட்டிருந்ததை தேவா நினைவூட்டியதைக் குறிப்பிடுகிறார்.

பிரபாகரன் உயிருடன் இருந்தபோதும் இறந்தபிறகும் சிங்கள மக்களை பயமுறுத்தக்கூடியவராக இருப்பதை பிரபாகரன் ஆவி என்று பயந்தோடிய மக்கள் கூட்டத்தைப் பற்றிய குறிப்பும் உள்ளது. ஈழத்தமிழருக்குள்ள பல்வேறு சிக்கல்களை ஆழமாகப் புரிந்து கொள்வதன் அவசியமும் மிக எளிமையாகப் புரிந்துகொள்வது பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

துனீஷியா, எகிப்தைத் தொடர்ந்து அரபுலக எழுச்சி மத்திய கிழக்கு, வளைகுடா, வட ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் தீயாய் பரவுகிறது. இவற்றை முன்னெடுத்தவர்கள் புதிய இளைஞர்கள். புதிய சூழலுக்குரிய, புதிய மொழி ஒன்றைப் பேசுகிற, புதிய அரசியல் ஒன்றைக் கட்டமைக்கிற, புதிதாய் கிடைத்துள்ள கருவிகளைச் சாதுரியமாகப் பயன்படுத்துகிற இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டுமென வலியுறுத்துகிறார்.

இளைஞர்கள், பெண்கள் முன்னெடுத்தப் போராட்டத்தில் சமூக வலைத்தளங்களை கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்திய தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய அகன்ற நிறமாலைக் கூட்டணி, அமைதி வழியான ஆனால் அச்சம் தவிர்த்த உறுதிமிக்க போராட்டம் ஆகிய மூன்று அம்சங்களை அரபு எழுச்சியின் முக்கிய அம்சங்களாகக் கருதுகிறார். அரபுலகிற்கும் இலங்கைக்கு பெரிய அளவிலான வித்தியாசங்கள் இருப்பினும் வடக்கு, கிழக்கு மாகாணத்தினர், முஸ்லீம்கள், மலையத்தினர், தாழ்த்தப்பட்டோர், உழைக்கும் மக்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் தேவையை இளைஞர்களால் சாதிக்கமுடியும் என்கிறார்.

தமிழக அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களது நிலை, அவர்களது குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் பற்றி இறுதிக்கட்டுரை பேசுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கத் துடிக்கும் நமது அரசுகள் ஈழத்தமிழர்களைக் கண்டுகொள்வதில்லை. இவர்களின் வசிப்பிட மற்றும் க்யூ பிராஞ்ச் கொடுமைகள் என எழுத்தில் சொல்லி மாளாதவை. இங்குள்ளவர்களுக்கு பிரபாகரன் படத்தைப் போட்டு அவர் மீண்டும் வருவார் என முழங்கினால் மட்டும் போதும். இவர்களுடைய குரல்கள் யாரையும் எட்டுவதில்லை.

சுற்றுலா விசாவில் வந்ததால் உரையாற்றத் தடுக்கப்பட்ட நிகழ்வை மீனாவின் நேர்காணலில் விளக்கம் அளிக்கிறார். நூல் முழுவதும் ஈழமக்கள் அமைதியுடனும் சுதந்திரத்துடனும் வாழவேண்டிய அவசியம் குறித்த கரிசனமே மேலோங்கியுள்ளது. இந்நூல்களை முழுதும் வாசிக்காமல் அ.மார்க்ஸ் விடுதைப்புலிகளுக்கு எதிரானவர் என்ற ஒற்றைச் சொல்லாடலை மட்டும் வைத்துக்கொண்டு வாதிடுபவர்களை நாம் என்ன செய்யமுடியும்?

இராணுவமயமாகும் இலங்கை – அ.மார்க்ஸ், பக்கம்: 88, விலை: ரூ. 70, முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2014, வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -600018.
பேச: 044 – 249934448,
மின்னஞ்சல்: uyirmmai@gmail.com
இணையதளம்: http://www.uyirmmai.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in நூல் விமர்சனம் and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s