‘ஆசிரியக் கோமாளி’ நல்லமுத்து


‘ஆசிரியக் கோமாளி’ நல்லமுத்து

– மு.சிவகுருநாதன்

நல்லமுத்து

அரசுப்பள்ளிகள், ஆசிரியர்கள் மீதுள்ள தப்பெண்ணங்களை மாற்ற எங்கோ கடைக்கோடி குக்கிராமத்தில் யாரோ சிலர் அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு ஊடக வெளிச்சம் படவும் வாய்ப்பில்லை.

‘ஆனந்த விகடன்’ போன்ற வெகுஜன இதழ்கள் இம்மாதிரியான முகங்களை பொதுவெளிக்குக் கொண்டுவருவது பாராட்டிற்குரியது. பாரதி தம்பியின் ‘கற்க கசடற, விற்க அதற்குத் தக’ தொடர் மற்றும் அதற்குப் பின்னால் அரசுப்பள்ளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக பலரை அறிமுகப்படுத்தி வருகிறது. ‘அறம் செய விரும்பு’ கலாமின் காலடிச்சுவட்டில்… இதுவரைத் தேர்வான 70 பேரில் பலர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 14, 2015 (14.10.2015) ஆனந்த விகடன் இதழில் “நல்லமுத்து ஒருவர் உளரேல்…” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள அவ்வூர் மலை கிராமத்தில் ஓர் அரசுத் தொடக்கப்பள்ளியில் கல்விப் பணியாற்றிவரும் இடைநிலையாசிரியர் தோழர் நல்லமுத்து அவர்களைப் பற்றிய கட்டுரை அது.

பெரும்பாலான இன்றைய ஆசிரியர்கள் தம் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கும் நிலையில் தன்னை ‘ஆசிரியக் கோமாளி’ என்று அழைத்துக்கொண்டு குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிவிடுவது அவரது இயல்பாக உள்ளது. குழந்தைமையைக் கொண்டாட இங்கு யாருமில்லை. பெற்றோர்களுக்குக் கூட குழந்தைகள் வெறும் கச்சாப்பொருளாக மாறிவிட்ட நிலையில் குழந்தைமையை இவரால் பள்ளிகளில் தக்கவைக்க முடிவது பாராட்டிற்குரியது.

nm 01

இங்கு கோமாளித்தனம் என்பது வெறும் நகைச்சுவை என்பதாக சுருங்கிவிட்டது. உண்மையான கோமாளித்தன்மை அதுவல்ல. குழந்தைமையோடு அறிவுப்பூர்வமான செயல்பாடுகளின் ஒருங்கிணைவு இங்கு கோமாளித்தனமாக உருமாற்றமடைகிறது. நமது கூத்துமரபில் கோமாளிதான் அறிவுஜீவி. தற்கால சினிமா இந்த இலக்கணத்தை அழித்துவிட்டது.

அதனால்தான் கேரம், பேச்சுப்போட்டி போன்றவற்றிற்கு மாநில அளவில் மாணவர்களை உருவாக்கித்தர முடிகிறது. நல்லமுத்து இன்றைய கல்வி முறையின் குறைபாடுகளையும் போதாமைகளையும் உணர்ந்துள்ளார். அவருடன் உரையாடும்போது இது வெளிப்படுகிறது. அவற்றைப் பொதுவெளியில் பேசவும் செய்கிறார். இறுகிப்போன நம் கல்வியமைப்பிலுள்ள அதிகாரிகள் இவற்றை ஏற்றுகொள்வார்களா? இன்று உலக அளவில் பேசப்படுகின்ற வகையில் இவரது செயல்பாடுகள் இருக்க, நீலகிரி மாவட்ட அளவில் இவரது பள்ளிக்கு கிடைத்திருக்கும் தரநிலை C. இங்கு யாருக்கெல்லாம் நல்லாசிரியர் விருதுகளும் பட்டங்களும் வழங்கப்படும் என்பது நாமறிந்ததுதானே!

nm 02

இன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என்பவர் ஓர் அஞ்சல்காரர் அவ்வளவே. உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், வட்டார வள மையம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவனம் ஆகிய பல தரப்பிற்கும் புள்ளிவிவரங்களையும், தபால்களையும் தயாரித்துக் கொண்டு சேர்க்கிற வேலைக்கு 220 நாட்கள் போதாது.

மாணவர்களின் கற்றல் அடைவுகளைச் சோதிப்பதைவிட பதிவேடுகள் சோதனையே இங்கு அவசியமாகிப் போனது. ஓர் ஆசிரியர் வகுப்பறைக்கு போகவேண்டியில்லை, கற்பித்தல் பணிச் செயல்பாடுகள் நடைபெறவேண்டிய தேவையில்லை. 10 பக்க அளவிற்கு விரிவான பாடக்குறிப்பு எழுதிவிட்டால் போதும் என்கிற நிலை இருக்கிறது. இதுவே அடைவைச் சோதிக்கும் வழிமுறையாக மாறிப்போன அவலம் ஒட்டுமொத்த கல்விச் சீரழிவின் அடையாளம். பள்ளிகள் குழந்தைகள் உயிர்ப்புடன் வாழும் இடம். அதை ஆவணக்காப்பகமாக மாற்றிவிட்டது இன்றைய கல்வித்திட்டங்கள். எனவே நல்லமுத்துகள் குழந்தைகளுக்கு மட்டுமே நெருக்கமானவர், அதிகாரிகளுக்கல்ல. ஓர் நல்ல ஆசிரியன் கல்வித்துறைக்கும் அதிகாரிகளுக்கும் வேண்டியவனாக இருக்கவே முடியாது.

15 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இவர் நிறைய சாதித்திருக்கிறார். தன்னுடைய குழந்தைகளை தான் பணியாற்றும் அதே பள்ளியில்தான் படிக்க வைக்கிறார். அவர்களை இறுதிவரை அரசுப்பள்ளியில் படிக்க வைப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தன் பள்ளிக் கழிவறைகளை காலை, மாலை இருவேளையும் இவரே சுத்தம் செய்கிறார். கழிவறையைச் சுத்தம் செய்வது, மலம் அள்ளுவது போன்ற பணிகளை செய்ய வலியுறுத்தி அதற்கு முன்மாதிரியாக இருந்த மகாத்மா காந்தியை இங்கு நினைக்காமல் இருக்க முடியவில்லை. நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்?

இவரது செயல்பாடுகள் எண்ணற்றவை. அவற்றை இங்கு பட்டியலிட்டால் மிக விரிவாகப் போய்விடும். தோழர் நல்லமுத்து போன்ற ஒருசிலரது செயல்பாடுகள் நமது கல்வியமைப்பில் எவ்வித மாற்றத்தையும் உடனடியாகக் கொண்டுவந்துவிடாது. இவர்கள் செய்வது ஓர் இடையீடு அல்லது கலகம் மட்டுமே. இத்தகைய கலகத்தில் அளவு அதிகமாகி அது கல்விமுறை, கல்வித்திட்டம், பாடத்திட்டம் ஆகியவற்றை மாற்ற வருங்காலத்திலாவது துணைபுரியும் என்கிற நம்பிக்கை உண்டாகிறது.

விளம்பரங்களுக்காக இம்மாதிரியான சில வேலைகளைச் செய்யக்கூடிய நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நல்லமுத்து கல்வி குறித்து ஆழ்ந்த சிந்தனை உள்ளவர். அதன் குறைகளை எவ்விடத்திலும் வெளிப்படுத்தத் தயங்காதவர். அவரது கல்விப்பணியின் தொடர்ச்சியாக இதுவரை கையெழுத்து வடிவில் இருக்கும் பலநூறு பக்கங்களை நூல் வடிவில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதை அவர் விரைவில் செய்வார் என்று நம்புகிறேன். கல்வி குறித்தும் குழந்தைகள் குறித்தும் எழுத இங்கு ஆட்கள் மிகக் குறைவு. நிறைய எழுதுங்கள். ஆசிரியக் கோமாளிக்கு இனிய வாழ்த்துகள்.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in கல்வியியல், பள்ளிக்கல்வி and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s