02. பசுவின் புனிதம் பற்றிய கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தும் ஆய்வு


02. பசுவின் புனிதம் பற்றிய கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தும் ஆய்வு

(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

– மு.சிவகுருநாதன்

(‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்’ என்னும் டி.என்.ஜா வின் நூல் வெ.கோவிந்தசாமி மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக டிச. 2011 இல் வந்துள்ளது. அந்நூல் குறித்தப் பதிவு இங்கே.)

பசிவின் புனிதம்

“The Hindus did not eat beef.”
(page: 73, English 8 th std. The brave Rani of Jhansi.)

“பசுக்களை இந்து சமயத்தினர் புனிதமாகவும், பன்றியை இஸ்லாமியர்கள் வெறுப்புக்குரிய விலங்காகவும் கருதினர்.” பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்.

இங்கே சமூக அறிவியல் பாடத்தைக் கூட மொழிப்பாடம் விஞ்சி விடுகிறது. எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவற்றையெல்லாம் எழுதுகிறார்கள் என்பது புரியாத புதிர்.

பசுவின் புனிதம் குறித்தானச் சொல்லாடல்களை இங்கு பன்னெடுங்காலமாக உருவாக்கி பல மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்றவையும் திரிபுரா, மிஜோரம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்கின்றன.

அரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உறித்த தலித்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, சில நாட்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற பொய்யான காரணம் சொல்லி இஸ்லாமிய முதியவர் படுகொலை செய்யப்பட்டது எனப் பல்வேறு படுகொலைகள் இந்துத்துவ வெறியர்களால் நடத்தப்படுகின்ற பின்புலத்தில் தெளிவான ஆதாரங்களுடன் பசுவின் புனிதத்தைக் கட்டுடைக்கும் இந்நூல் மிக முக்கியமானது.

விலங்குகளைப் பலியிடுதல் என்கிற நடைமுறை ரிக் வேதகாலத்திலிருந்து தொடர்கின்ற ஒன்று. பலியிடுதல் மட்டுமல்லாது அவ்வுணவைப் புசித்தல் என்பதும் இயல்பானது. அஸ்வமேதம், ராஜ்சூயம், வாஜபேயம் போன்ற வேள்விகளில் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகள் பலியிடப்பட்டன. குதிரைகள், பசுக்கள், காளைகள், வெள்ளாடுகள், மான்கள் என 180 விலங்குகள் பலி தரப்பட வெண்டுமென்று தைத்தீரிய சம்கிதம் விவரிப்பதை இந்நூல் விளக்குகிறது.

டி.என்.ஜா

வேள்விகளில் ‘கோசவா’ சடங்கு நிறைவேற்றப்பட்டது. இது வேறொன்றுமில்லை, பசுக்களை பலிதரும் சடங்கு. தனக்குப் பிறக்கும் மகன் நீண்ட ஆயுள், நல்ல அறிவுடன் இருக்கவேண்டும் என விரும்புவோர் வேக வைத்த கன்றின் அல்லது மாட்டிறைச்சியுடன் அரிசிச்சோறும் நெய்யும் கலந்துண்ண வேண்டும் எனப்து உபநிடதக் கட்டளைகளுள் ஒன்று.

வேத நூற்களும் தர்ம நூற்களும் பட்டியலிடும் உண்ணத்தக்க விலங்குகளின் பட்டியல் மிக நீண்டது. மீன், ஆடு, மாடு, காளை, பசு, எருமை, மான், இளம் கன்று, நாய் என்ற வழக்கமான பட்டியலில் ஹாட்கா (காண்டாமிருகம்), சூகரா (காட்டுப்பன்றி), வராகா (பன்றி/காளை), சராபா (குட்டி யானை) போன்ற காட்டு விலங்குகளும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கிருஸ்து பிறப்பதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகளாக தொடர்வதைத் தொல்லியல் ஆதாரங்கள் நிருபிக்கின்றன. அகழ்வாய்வில் மிக அதிக அள்வு எலும்புகள் கிடைத்துள்ள அட்ரான்ஜி கேராவில் (இதாக் மாவட்டம்) அடையாளம் காணப்பட்ட 927 எலும்புத்துண்டுகளில் 64% பசுவினுடையதாகும். இவை வெட்டுப்பட்டும் தீயில் கருகியும் உள்ளதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்டத்தில் ஆடு, மாடு, பன்றி, மீன், கடல் ஆமை, மான், காட்டுகோழி, சிறுத்தை (பரசிங்கம், நில்காய்) ஆகிய விலங்குகள் உண்ணப்பட்டிருப்பினும் மாட்டிறைச்சியே அவர்களின் விருப்ப உணவாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பவுத்தம் வேள்விக்காகவும் உணவிற்காகவும் விலங்குகள் கொல்லப்படுதலை எதிர்த்தது. இந்த அகிம்சைப் பிரச்சாரத்தையும் மீறி மாட்டிறைச்சி விருப்ப உணவாக இருந்ததை ஆதாரங்களுடன் இந்நூல் சுட்டுகிறது. புத்தரே கூட மாட்டிறைச்சி உள்ளைட்ட வேறு விலங்குகளின் மாமிசத்தை உண்டுள்ளார். அவர் கடைசியாக உண்டது பன்றி இறைச்சியாகும். அது “நல்ல நிலையிலும், மென்மையாகவும், மனத்துக்குப் பிடித்ததாகவும், நல்ல நறுமணத்தோடும், ஜீரணத்துக்கு ஏற்றதாகவும்” இருந்ததைக் குறிப்பிடு அவரது இறப்பிற்குக் காரணம் பன்றி இறைச்சி அல்ல அவரது பலவீனமே என்பதை மவுரியர் காலத்திற்கு பிந்தைய நூலான மிலிந்தாபான்கோ குறிப்பிடுவது டி.என்.ஜா வால் விளக்கப்படுகிறது.

சாஸ்திர நூல்களில் மிக முன்னோடியான மநு சாஸ்திரத்தில் (கி.மு. 200 – கி.பி. 200) இறைச்சி பற்றிய பல் குறிப்புக்களைக் கொண்டுள்ளது. பிற நூல்களைப் போல உண்ணக்கூடிய விலங்குகளின் பட்டியலை இதுவும் வரையறுக்கிறது. முள்ளம் பன்றி, முள்ளெலி, உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல், ஒட்டகம் தவிர ஒரு தாடையில் பல் இருக்கும் வீட்டு விலங்குகள் அனைத்தும் என மநு சொல்கிறது. விதிவிலக்குப் பட்டியலில் பசு இல்லை என்பது முக்கியமானது.

மத்திய காலத்தொடக்கத்தில் பசுவதையும் மாட்டிறைச்சி உண்ணுவதும் குற்றமாக்கப்பட்ட போதிலும் இதற்கு முன்னதாக தூய்மைப் படுத்தும் சடங்குகளில் பசுவும் அதன் பொருள்களான பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் ஆகியவையும் இவற்றின் கலவையான பஞ்சகவ்யமும் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியதை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். ஆனால் பசுவின் வாய் மட்டும் தூய்மையானதாகக் கருதப்படவில்லை.

பார்ப்பனிய தர்ம சாஸ்திரங்கள் முன்வைத்துள்ள பசு குறித்த படிமங்கள் பல நூற்றாண்டாக பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளன. இது முழுக்க முழுக்க முரண்பாடு கொண்டதாக இருக்கின்றன. பசு கொல்லப்பட்டிருக்கிறது. அதன் இறைச்சி உணவாக உட்கொள்ளப்பட்டிருகிறது.

பசு தெய்வமாகவோ அதன் பெயரில் ஓர் கோயிலோகூட எப்போதும் இங்கு இருந்ததில்லை. பசுவின் புனிதத்தன்மை என்பது ஏமாற்று வித்தை. உண்மையில் இந்து மதத்திற்கு ஒற்றை அடையாளம் கிடையாது. நவீன காலத்தி இந்துத்துவ சக்திகள் ஒற்றை அடையாளத்தைக் கட்டமைக்க முயல்கின்றன. பசுவின் புனிதம் குறித்த சொல்லாடல்களையும் இதன் ஓரம்சமாகவே நாம் பார்க்க வேண்டுமென டி.என்.ஜா தெளிவுபடுத்துகிறார்.

முன்னுரை, அறிமுகம் தவிர்த்து ஆறு தலைப்புகளில் உள்ள இவ்வாய்வு நூலை வெ.கோவிந்தசாமியின் அழகான மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் சிறப்புற வெளியிட்டுள்ளது. குறிப்புகளும் துணை நூற்பட்டியலும் இந்நூலின் தரத்தை அதிகரிக்கின்றன. இதன் விலையும் மலிவு. பசுவின் பெயரால் கொடிய மதவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் இம்மாதிரியான நூற்களை அனைத்து தரப்பிற்கு கொண்டு சேர்க்கவேண்டும்.

பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள் டி.என்.ஜா தமிழில்: வெ.கோவிந்தசாமி பாரதி புத்தகாலய வெளியீடு, டிச. 2011, பக். 176 விலை: ரூ. 90 பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018.

பேச: 044 – 24332424, 24332924, 24339024
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: http://www.thamizhbooks.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in நூல் விமர்சனம் and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s