என்ன செய்யலாம் தீபாவளியை! (தீபாவளி: சில குறிப்புகள்)


என்ன செய்யலாம் தீபாவளியை! (தீபாவளி: சில குறிப்புகள்)

– மு.சிவகுருநாதன்

 • தீபாவளி ஆரியப் பண்டிகை; எனவே திராவிடர்கள் கொண்டாட வேண்டாம்!
  தீபாவளி இந்துப் பண்டிகை; ஆகவே தமிழர்களே கொண்டாடதீர்கள்!
  தீபாவளி சமணப் பண்டிகை; இந்துக்கள் ஏன் கொண்டாட வேண்டும்?
  தீபாவளி இந்துப் பண்டிகையே இல்லை; பிறகு ஏன் கொண்டாடவேண்டும்?
  அசுரன் நரகாசுரன் திராவிடன் (தமிழன்); அவன் கொலையுண்டதை கொண்டாடலாமா?
  வர்த்தமான மகாவீரர் வடநாட்டவர்; அவர் இறப்பை தமிழர்கள் ஏன் கொண்டாடவேண்டும்?
  தீபாவளியைக் கொண்டாடதீர்கள்! மாறாக அனைவரும் பொங்கல் கொண்டாடுங்கள்!
  ஆரியக் கலாச்சாரத்தை விட்டொழித்து, தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுங்கள்! பின்பற்றுங்கள்!!
  பட்டாசு வெடித்து சுற்றுச்சூழலை, காற்றை மாசுபடுத்தாதீர்கள்!
  சீனப் பட்டாசை வாங்காதீர்கள்! இந்திய பட்டாசை மட்டுமே கொளுத்துங்கள்!!

என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் நிறைய பரப்புரைகளைக் காணமுடிகிறது. இதைப் பற்றிப் பேசும் முன்பாக தீபாவலி குறித்த ஆய்வு ஒன்றைப் பார்த்துவிடுவது நலம்.

தமிழறிஞர், வரலாற்றறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி தனது சமணம் குறித்த ஆய்வு நூலில் தீபாவலி பற்றி எழுதிய ஆய்வுக்குறிப்பு அவருடைய சொற்களில்.

“தீபாவலி: இது சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கியிருந்தபோது, அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப்பொழுது ஆனபடியினாலே, சொர்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்க அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும், தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்தபடியே வீடுபேறடைந்தார். பொழுத் விடிந்து எல்லாரும் விழித்தெழுந்து பார்த்தபோது, மகாவீரர் வீடுபேறடைந்திருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து, உலகத்திற்கு ஞானவொளியாகத் திகழ்ந்த, மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும்பொருட்டு, அவர் வீடு பெற்ற நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது. (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை.) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்தபடியால், தீபாவலி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலயில் நீராடிய பின்னர்த் திருவிளக்கேற்றித் தீபாவலிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ?

சமணசமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்கமுடியாத இந்துக்கள், இதைத் தாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ர புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்தநாளைக் கொண்டாடுவதுதான் தீபாவலிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்டபிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்துப் போர்வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த வழக்கம். சமணர் கொண்டாட் வந்த, மகாவீரர் வீடுபேறடைந்த திருநாள் தீபாவலி என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.” (பக். 95 – 97, சமணமும் தமிழும், பூம்புகார் பதிப்பகம், சென்னை 18)

பொதுவாகவே பண்டிகைகளுக்கு மூடநம்பிக்கையே அடிப்படை. ஆனால் இன்று பண்டிகைகள் பெரும்பான்மையான மக்களை வசப்படுத்தி இருக்கின்றன. இவற்றைப் பிரிப்பது அவ்வளவு எளிதல்ல. காரல் மார்க்ஸ் சொன்னது போல், சாமானிய மக்களிடமிருந்து மதங்களையும் பண்டிகைகளையும் எடுத்துவிட்டு அவற்றிற்கு மாற்றாக எதைத் தரப்போகிறோம்?

சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் போன்ற பெரியாரின் சமூக இயக்கங்கள் இந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க பெருமுயற்சி செய்தன. ஆனால் இத்தகைய இயக்கங்களின் அடுத்தகட்ட வளர்ச்சி இங்கு இல்லாமற் போய்விட்டது.

இத்தகைய கலாச்சாரங்களுக்கு மாற்றாக ஒன்று இங்கு கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். பகுத்தறிவை வலியுறுத்திய பெரியார் இவற்றை விரும்பவில்லை. இன்றுள்ள சூழலில் மாற்று எல்லாருக்குமானதாக இருக்குமா? அனைவரையும் உள்ளடக்குமா? என்பது போன்ற வினாக்கள் எழுவதைத் தவிர்க்கமுடியாது.

தற்போது இங்கு கட்டமைக்கப்படும் தமிழ் தேசியம் எவ்வாறாக இருக்கிறது என்பதிலிருந்து எழும் அச்சம் நியாயமானது. தமிழ் தேசிய பாசிச உருவாக்கம் சாமானிய மக்களுக்கு எவ்வித நன்மையையும் உண்டாக்கப் போவதில்லை. மாறாக அவர்களைப் பிளவுபடுத்துவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு இவை இயங்குகிறது.

தீபாவளிக்கு மாற்றாக பொங்கலை முன் வைப்பது சரியல்ல. அது வேறு, இது வேறு. மக்களுக்கு தீபாவளி மாதிரியான ஓர் கொண்டாட்டம் தேவைப்படுகிறது என்றே நாம் கருதவேண்டியுள்ளது. சுற்றுச்சூழலைக் கெடுக்கின்ற பட்டாசு இல்லாத, அசுரன் நரகாசுரன் போன்ற இனவெறுப்பில்லாத ஒன்றை ஏன் உருவாக்கக் கூடாது? அல்லது மகாவீரர் நினைவு நாளை மீட்டெடுத்து பொது விழாவாகக் கொண்டாடலாமே! சமண நூலான திருக்குறளை மட்டும் உலகப்பொதுமறை என்று சொல்லும்போது இதைச் செய்வதில் என்ன சிக்கல்? ஆனால் இதற்கான வாய்ப்புகள் முற்றாக மறுக்கப்பட்டு பாசிச அரசியல் வேறூன்றி வருவதை கண்டும் காணமலும் அல்லது மவுனமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

பட்டாசு போன்ற சில வேறுபாடுகளைத் தவிர்த்து தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சடங்குகள், வழிபாடுகள் எல்லாமே ஒன்றாகவே உள்ளது. தமிழர் மரபில் இல்லாத போகியையும் பொங்கலுடன் சேர்த்துக் கொண்டாடுகிறோம். தீபாவளிக்கு பட்டாசு என்றால் பொங்கலுக்கு டயர்கள்.

தீயை வழிபடுதல் ஆரியர்கள் மரபு; நீரை வழிபடுவது திராவிடர் மரபு. சிந்துவெளி பெருங்குளத்தை இந்தக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்று தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சொல்கிறார். அனைத்து இந்து சைவ – வைணவக் கோயில்களிலும் நாம் குளங்களைப் பார்க்கலாம். நமது வழிபாட்டில் நீரும் நெருப்பும் ஒன்றாகவே இடம் பெறுகிறது. இவற்றைப் பிரித்து வேறுபடுத்துவது எப்படி? தீபாவளி மட்டுமல்ல சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் பிறரிடமிருந்து பெற்றவையே. இவற்றை ஒழித்துக் கட்டுவது இத்தனை ஆண்டுகாலம் சாத்தியமாகாதபோது வேறு வழிமுறைகளை யோசிப்பதுதான் நல்லது.

இறுதியாக, சீனப்பட்டாசு மற்றும் பொருள்களுக்கு எதிரான பரப்புரைகள் ரொம்பவும் அபத்தம்; சிறுபிள்ளைத்தனமாதும் கூட. நஞ்சில் நல்லது, தீயது உண்டா? பொதுவாக பட்டாசை நிராகரிக்கச் சொல்வதை ஏற்கலாம். சீனாவை மட்டும் நிராகரிப்பதன் பின்னணி அரசியல் என்ன? கடத்தப்பட்டு வருகிறது என்றால் நமது ‘வல்லரசு’ ராணுவம் எல்லைகளில் என்ன செய்கிறது? மாநிலங்களில் காவல்துறை இருக்கிறதா, இல்லையா? அமெரிக்கப் பொருள்களை வாங்கவேண்டாம் என்று ஏன் பரப்புரை நடைபெறவேயில்லை? ‘ஆர்கானிக் பார்ம்’ என்கிற போர்வையில் ‘ஆம்வே’ செய்த மோசடிகள் அதன் செயல் அதிகாரி கைது செய்யப்பட்ட பிறகும் அம்பலமாகவில்லையே? இது ஏன்?

டங்கல் திட்டம், ‘காட்’ (GATT) ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகியவற்றின் பின்னணியில் செயல்படும் தாராளமய, தனியார்மய, உலகமய புதிய பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பல்லாண்டாகிறது. இந்நிலையில் சுதேசி அல்லது உள் நாட்டு தயாரிப்பு என்று பேசுவதில் பொருளில்லை. இதே சீனக் கம்பெனி இங்கு வந்து பட்டாசு மற்றும் பொருள்களைத் தயாரித்துக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்கள்தானே! மோடியின் ‘மேக் இன் இன்டியா’ இதற்குத்தான் பன்னாட்டு மூலதனத்திற்கு அழைப்பு விடுக்கிறது. இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து கம்பெனி செல்போன் பேட்டரியும் சீனத்தயாரிப்புத்தான். சீனப்பொருள்களுக்கு எதிரான பரப்புரையை சமூக வலைத்தளங்களில் ஈடுபடும் முன் உங்கள் செல்போன் பேட்டரியை கழற்றி தூர வைத்துவிடுங்கள்!

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in மயிலையார் and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s