07. காடுகளுக்காக மரணத்தை எதிர்கொண்ட போராளி


07. காடுகளுக்காக மரணத்தை எதிர்கொண்ட போராளி
(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

– மு.சிவகுருநாதன்

(எதிர் வெளியீடாக டிச. 2014 –ல் வெளியான, பேரா.ச.வின்சென்ட் மொழிபெயர்த்த ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ – சிக்கோ மென்டிஸ் நூல் குறித்த பதிவு இது.)

“இந்தக் காடு முழுவதையும் பாதுகாப்பது தான் எனது கனவு. ஏனென்றால் அது அதில் வசிக்கின்ற மக்களின் வருங்காலத்திற்கு உத்திரவாதம் தருகிறது. அது மட்டுமில்லை. அமேசான் பொருளாதாரத்தின் வளமான ஒரு பகுதி நமக்கு மட்டும் இல்லை; நாட்டுக்கே மனித இனத்துக்கே ஆகும் என்று நம்புகிறேன்… என்னுடைய இறுதிச் சடங்கிற்குப் பூக்கள் வேண்டாம். ஏனென்றால் அவற்றைக் காட்டிலிருந்து எடுத்து வந்திருப்பார்கள். என்னுடைய படுகொலையினால் எனக்கு எதிராக ஆயுதம் எடுத்தவர்களின் எதிர்ப்புணர்வு ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்…”

(பக். 19, 1988 டிச. 22 இல் சிக்கோ மென்டிஸ் படுகொலை செய்யப்படுவதற்கு முன் எழுதிய கடிதத்தின் ஓர் பகுதி.)

‘அமேசான் காந்தி’ என்றழைக்கப்பட்ட சிக்கோ மென்டிஸ் பிரேசில் நாட்டு ஏக்கர் மாநில சாபுரி ரப்பர் தோட்டம் ஒன்றில் 1944 டிசம்பர் 15 அன்று பிறந்தவர். ரப்பர் தோட்டங்கள் மலேயா, இலங்கை ஆகிய நாடுகளில் உருவான பிறகு, இவற்றிலிருந்து எடுக்கப்பட்ட ரப்பர் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. எனவே அமேசான் காட்டு ரப்பருக்கு கிராக்கி குறைந்தது. இரண்டாம் உலகப்போரின்போது மலேயா நட்பு நாடுகளின் கையிலிருந்து அச்சு நாட்டின் கைக்குப் (ஜப்பான்) போனது. அமெரிக்காவின் புத்துயிர்ப்புத் திட்டத்தால் பிரேசின் வடகிழக்கு ஏழை மக்கள் ரப்பர் தோட்டத்தி பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் ரப்பர் வீரர்கள் (Rubber Soldier) என்றழைக்கப்பட்டனர். சிக்கோ மென்டிஸின் தந்தையும் ரப்பர் வீரராக இருந்தவர்.

ரப்பர் பால் வடிப்போரின் வீடு ‘கொலோக்கோவா’ எனப்பட்டது. குழந்தைகளும் ரப்பர் மரத்திலிருந்து பால் வடிக்கும் முறையைக் கற்றனர். இதற்கு ‘செரிங்குவரோ’ என்று பெயர். ரப்பர் காடுகளில் வாழ்ந்ததால் சிக்கோ மென்டிஸுக்கு இது வாய்த்தது. கல்வி கற்க வழியில்லை. கல்வி கற்றால் இவர்களை சுரண்டமுடியாது என்பதால் அதிகார வர்க்கம் கல்வியை இவர்களிடமிருந்து பறித்துக் கொண்டது. அதனால் சிக்கோ மென்டிஸ் 20 வயதுக்கு மேல்தான் எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள முடிந்தது.

காட்டினுள் இருக்கும் அடுத்தடுத்த வீடுகளைக் கடக்க 15 நிமிடங்கள் ஆகும். இரண்டு, மூன்று பாதைகள் ரப்பர் மரங்களுக்குள் இருக்கும். ஒரு பாதையில் சென்று மரத்தை வெட்டி, பாலைப் பிடிக்கக் கோப்பைகள் வைப்பர். இரண்டாவது பாதையில் சென்று ஏற்கனவே வைத்த கோப்பைகளைச் சேகரிப்பர். மாலயில் ரப்பர் பாலை மரப்புகையின் மேல் ஊற்றி அல்லது அசிட்டிக் அமிலம் சேர்த்துக் கட்டியாக்கப்படும். இந்தப் பாதைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறும். இந்த வேலையை ஆண்கள் செய்வர். வீட்டில் ஆள் இல்லை என்றால் வேலைக்கு இளைஞர் அமர்த்தப்படுவார். ஆண் இல்லாத வீடுகளில் பெண்களும் இத்தொழிலில் ஈடுபடுவதுண்டு. (பக். 29, 30)

1970 களில் இவர் சாபுரி ஊரகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார். ரப்பர் பால் இறக்குவோரின் தேசியக் குழு உறுப்பினர், பிரேசில் டிரேட் யூனியன் காங்கிரஸ் (CUT) உறுப்பினர், உழைப்பாளர் கட்சியின் (PT) உறுப்பினர், உலக வங்கி மற்றும் பன்னாட்டி அமெரிக்க வளர்ச்சி வங்கி ஆகியவற்றுக்கான அமேசான் வளர்ச்சித் திட்ட ஆலோசகர் என்று பல பதவிகளை ரப்பர் தோட்டத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த அமேசான் காட்டைப் பாதுகாக்கும் போராட்டங்களின் வழி அடைந்தவர்.

கொத்தடிமை முறை, தோட்ட உரிமையாளர்கள், இவர்களது உழைப்பைச் சுரண்டிய உள்ளூர் வியாபாரிகள், வங்கி உரிமையாளர்கள், பன்னாட்டு மூலதனம் என பலவிதமான நெருக்கடிகளை இவர்கள் சந்திக்க நேர்ந்தது. காட்டை அழித்து மேய்ச்சல் நிலமாக்கும் நிலவுடைமையாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மரங்களை வெட்டிக் காட்டை அழிப்பதால் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொள்ள இலைகள் இருக்காது. இவைகள் எரிக்கப்படுவதால் கார்பன் டை ஆக்சைடு இன்னும் அதிகமாகும். காட்டை அழித்து மேய்யச்சல் நிலமாக்கி கால்நடைகளை அதிகம் பெருக்குவதால் மீத்தேன் வளிமண்டத்தில் அதிகரிக்கும். இத்தகைய செயல்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாகிறது.

நிலவுடைமையாளர்கள் 1980 ஜூனில் வில்சன் பின்னஹரோவையும் சிக்கோ மென்டீசையும் கொன்று தொழிற்சங்க இயக்கத்தை முற்றாக அழிக்க வெளிப்படையாக திட்டமிட்டனர். 1980 ஜூலை 21 அன்று வில்சன் பின்னஹரோ கொல்லப்பட்டார். சிக்கோ மென்டீசுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது குறித்து ஏக்கர் ஆளுநர், காவல்துறை அதிகாரிகள், சாபுரி நீதிபதி ஆகியோருக்கு புகாரளித்தும் பலனில்லை. மாறாக கொலையாளிக் கும்பல்களுக்கு துப்பாக்கி உரிமத்தை காவல்துறை வழங்கியது. 1988 டிசம்பர் 22 அன்று தனது 44 வது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரமே ஆனநிலையில் சிக்கோ மென்டிஸ் படுகொலை செய்யப்பட்டார்.

அமேசான் காடுகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் நிலை சிக்கோ மென்டிசின் வாழ்வாக நூலில் விரிகிறது. ரப்பர் தோட்ட வரலாற்றுடன் இவரது வாழ்க்கையையும் பிரித்துவிட முடியாது. கல்வி கற்றல், தொழிற்சங்க கட்டமைப்பு, போராட்டம், உயிருக்கு அச்சுறுத்தல் ஆகியன மிக இயல்பாகச் சொல்லப்படுகிறது. தான் கொல்லப்படுவோம் என்று தெரிந்திருந்தும் போராட்டத்தின் விளைவாய் சாவையும் எதிர்கொண்டார். இதுவரை போராட்டக் களத்தில் பெற்ற படிப்பினைகள், செய்த தவறுகள், வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த சுய மதிப்பீடு மற்றும் தொலைநோக்குப் பார்வை இவரிடமிருந்தது.

ரப்பர் பாலிறக்குவோர், சிவப்பு இந்தியர்கள், பிற சங்கங்கள், தொழிலாளர்கள் என ஒடுக்கப்படும் அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து புதிய கூட்டணி உருவாக்கி போராடிய முறை இங்கு குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது. ரப்பர் தொழிலாளர்களும் சிவப்பு இந்தியர்களும் பல நூற்றாண்டுகளாக அதிகார வர்க்கம் எதிரிகளாகக் கட்டமைத்து வந்துள்ளதை உடைத்து, இந்த வர்க்கங்களிடையே இணக்கத்தையும் நேசத்தையும் சாத்தியப்படுத்தியவர். இவற்றிலிருந்து அனைத்து வகையான விடுதலைப் போராட்டங்களும் பாடம் கற்றுகொள்ள வேண்டும்.

நூலில் நிறைய படங்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது சிறப்பம்சம். நூலில் ஒன்றிரண்டு பிழைகள் உள்ளன. வரும் பதிப்புகளில் அது களையப்பட வேண்டும். “பால் வடிக்கும் வேலையைப் பெரும்பாலும் பெண்கள்தான் செய்வார்கள்”, என்றிருக்கிறது. (பக். 30) இது ஆண்கள் என்றிருக்கவேண்டும். 1988 ஜனவரியில் நினைவஞ்சலி நடந்ததாக (பக். 19) முன்னுரையில் உள்ளது. சிக்கோ மென்டிஸ் படுகொலை செய்யப்பட்டது 1988 டிசமபர் 22. எனவே அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது 1989 ஜனவரியாக இருக்கக்கூடும்.

காடுகளுக்காக ஒரு போராட்டம்
– சிக்கோ மென்டிஸ்
தமிழில்: பேரா.ச.வின்சென்ட்
முதல் பதிப்பு: டிச. 2014
பக்கம்: 128
விலை: ரூ. 120

வெளியீடு:
எதிர் வெளியீடு,
96, நீயூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642002.

பேச: 04259 226012 9865005084
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com
இணையம்: ethirveliyedu.in

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in நூல் விமர்சனம், Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s