15. கால்டுவெல் பார்வையில் இந்து மத வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள்


15. கால்டுவெல் பார்வையில் இந்து மத வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள்

(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

மு.சிவகுருநாதன்

கால்டுவெல்

சமயப்பணியாற்ற தமிழகம் வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் 53 ஆண்டுகள் மக்களோடு மக்களாக வாழ்ந்து, சமயப்பணியோடு, தமிழ் மட்டுமல்லாது பிற திராவிடமொழிகளையும் கற்றுத் தேர்ந்து தமிழுக்கும் திராவிட மொழிகளுக்கும் அரும்பணியாற்றியவர்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of Dravidian or South Indian Languages), திருநெல்வேலி வரலாறு (History of Tinnevelly), Sanars of Tamilnadu ஆகியவை இவர் எழுதிய சில ஆங்கில நூற்கள். நற்கருணைத் தியானமாலை (1853), தாமரைத் தடாகம் (1871) போன்ற தமிழ் நூல்களையும் இவர் எழுதியுள்ளார். அந்த வகையில் இவர் எழுதிய மற்றொரு தமிழ் நூலான பரதகண்ட புராதனம் (வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்) அறிஞர் பொ.வேல்சாமி அவர்களால் தேடி எடுத்து பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மே 2012 இல் வெளியிட்டது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் 1856 இல் வெளியானது. பரதகண்ட புராதனம் 1893 இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவற்றில் எது முதலில் எழுதப்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இந்நூலில் உள்ள பல செய்திகள் ஒப்பிலக்கண நூல் முன்னுரையில் பேசப்படுவதாக பொ.வேல்சாமி குறிப்பிடுகிறார்.
சதுர்வேதம், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் என நான்கு பாகங்களாக கால்டுவெல் இந்நூலை ஆக்கியுள்ளார். முதல் பகுதியான வேதங்களில் தீ வேள்விக்கு மேற்கோளாக ரிக் வேதத்திலிருந்து (நூலில் இருக்கு வேதம்) மூன்று பாடல்களை மொழிபெயர்த்துள்ளார். (கால்டுவேல் மொழியில் திருப்பி இருக்கிறார்.) அலைகள் வெளியீட்டகம் வெளியிட்ட ஜம்புநாதன் மொழிபெயர்ப்பை விட தெளிவாகவும் அழகாகவும் இது உள்ளது என வேல்சாமி பாராட்டுகிறார். அவர் மேலும் குறிப்பிடுவதுபோல 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை போக்கை இந்நூல் வழியே உணரலாம். கால்டுவெல்லின் தமிழ் நடை கூட படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.
வேதம் ஆதியும் அந்தமும் இல்லாமல் அநாதி என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இதை பவுத்தம் ஏற்கவில்லை. வேதங்கள் சொல்வது வேறு பொருளில் என்று பூர்வ மீமாம்சத்தை கட்டிய ஜைமினி சமாளிக்கிறார்.
வேதங்களைச் சோதித்துப் பார்க்கும்போது தேசம், பட்டனம், நதி, மிருகம், ராசா, புதுப்பாட்டு, பழைய பாட்டு என பல சொற்கள் காணப்படுவதால், “வேதத்துக்குத் துவக்கமும் முடிவுண்டென்றும் அதிலுள்ள பாட்டுக்கள் கிரமங்கிரமமாகக் கட்டப்பட்டதேயன்றி அது அநாதியல்ல”, என்பதை கால்டுவெல் உறுதிப்படுத்துகிறார். (பக். 3,4)
“பசுமாடுகளை அக்கால ரிஷி முதலாய்ப் பலியிட்டும், புசித்தும் வந்தார்கள்” ரிக் வேதத்திலுள்ள பல சூக்தத்திலும் கூறப்பட்டதைப் போல, “இருக்கு வேத காலத்திலுள்ள ஜனங்கள் மாட்டைப் போஜனத்துக்காக அறுத்தது வழக்கமென்றும் ரிஷிகளும் அந்த வழக்கத்தை வெறுக்காமல் ஒப்புக்கொண்டார்களென்றும் விளங்குகிறது”. (பக். 20)

caldwell 01
வேதங்களைச் சோதித்துப் பார்க்கும்போது நான்கு வேதங்களும் இந்துமத அடிப்படை என்று சொல்வதை ஏற்க இயலவில்லை என்றும் மேலும், இது அஸ்திவாரம் இல்லாமல் மணல்மேல் கட்டிய வீடு என்று கால்டுவெல் கணிக்கிறார். இந்த மணல்வீட்டை மணல் மேல் கட்டிய பாலத்தைக் (ஆதம் / ராமர் பாலம்) கொண்டு (நன்றி: சு.கி.ஜெயகரன், மணல் மேல் கட்டிய பாலம்) இன்று பாதுகாக்க நினைப்பது வேடிக்கைதான்!
“இந்த விஷயத்தில் பிராமணர்கள் மேல் அதிகக் குற்றமுண்டு. அவர்கள் அந்தரங்கத்தில் செய்கிற சடங்குகள் வேறு; வெளியரங்கமாகச் செய்கிற சடங்குகள் வேறு”, என்று கால்டுவெல் குற்றஞ்சாட்டுகிறார் பக்.26).
இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் கதைச் சுருக்கங்களைச் சொல்லிவிட்டு, கவனிக்க வேண்டிய விசேஷங்களை கால்டுவெல் இறுதியில் தொகுத்தளிக்கிறார்.
“இராமனைப் பற்றிய உண்மையான சரித்திரம் எல்லாருக்கும் மறதியாகி அந்தச் சரித்திரத்தின் பேரில் முதல்முதல் பாட்டுக் கட்டினவன் காலம் சென்றதின்பின் இராமனை தேவனாகப் பாராட்டும்படி துவக்கியிருக்க வேண்டும். விவேகமுள்ளவர்கள் இராமாயணத்தைக் கூர்மையாகச் சோதித்துப் பார்த்தால் பிற்காலத்தில் கட்டப்பட்ட சங்கதிகளைக் கண்டுபிடிக்கலாம். ஆரம்பத்தில் சொல்லிய கதையைப் பார்த்தால் இராமன் ஒரு வீரனேயில்லாமல் வேறல்ல”, என்று இராமனின் கடவுள் தன்மையை கேள்விக்குட்படுத்துகிறார்.
இராமாயணத்தைத் தமிழில் திருப்பிய கம்பன் “கிருஸ்து பிறந்த 785 ஆம் வருஷத்துக்குச் சரியான சகாப்தம் எண்ணூற்றேழில் அரங்கேற்றியதாக அதன் பாயிரத்தில் சொல்லியிருப்பது யதார்த்தமல்ல”, என்று சொல்லி சோழ அரசர்களின் காலத்தின்படி கிருஸ்து பிறந்து 1000 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்றப்பட்டது என்பதை அறுதியிடுகிறார்.
பாரதக் கதைகளை பல்வேறு காலகட்டங்களில் திரட்டித் தொகுத்திருப்பதைக் குறிப்பிடும் கால்டுவெல், இக்கதைகள் பாட்டுக்களாக கட்டப்பட்ட காலமும் பல கட்டங்கள் என்று சொல்கிறார். பகவத் கீதை இறுதியாக எழுதப்பட்டது என்கிறார்.
பகவத்கீதையிலுள்ள பாட்டுக்கள் அலங்காரமிக்கவைதான் (அழகு), ஆனால் அதில் போதித்திருக்கிற உபதேசம் இதயத்தைக் கடினப்படுத்தி இரக்கம், அன்பையும் வேறு நல்ல குணங்களையும் கெடுக்கிறது. அது நஞ்சில் தேனைக் கலந்து கொடுக்கிறது. கிருஷ்ணன் போதித்த கொடுமையான ஞானத்தைவிட அர்ஜூனனிடத்தில் காணப்பட்ட மனிதாயம் நல்லது, என்று கால்டுவெல் எழுதுகிறார்.
“மகாபாரதத்தில் கண்டிருக்கிற மதக் கொள்கையைப் பார்த்தால் அதற்கும் வேதங்களில் கண்டிருக்கும் மதக் கொள்கைக்கும் அதிக வித்தியாசம் தோன்றும். பாரத காலத்தில் வேத தேவர்கள் சிறுத்து வீரரோ பலத்துப் போனார்கள்”, என்றும், “வேத காலத்துக்குரிய ஆசாரம் யாகமே. இராமாயண காலத்துக்குரிய ஆசாரம் தவம். பாரத காலத்துக்குரிய ஆசாரம் தீர்த்த யாத்திரையே. புராண காலத்துக்குரிய ஆசாரம் கோயில் புஜையே”, என்று வேறுபடும் புள்ளிகளைச் சுட்டுகிறார்.
பல பெயர்களுக்கான தமிழ்ப் பொருளை பல இடங்களில் சுட்டுகிறார். அவற்றையும் பார்ப்போம்.

 • வால்மீகி – கறையான் புற்று
  கிருஷ்ணன் – கருப்பன்
  கோவிந்தன் – பசுக்களை சம்பாதிக்கிறவன்
  பாண்டு/அர்ஜூனன் – வெள்ளையன்
  சூரன் – வீரன்
  யுதிஷ்டிரன் – யுத்தத்தில் ஸ்திரமுள்ளவன்
  வேத வியாசன் – வேதங்களைத் திரட்டியவன்
  கவுரவர்கள் – குருகுல வேந்தர்கள்
  குசன்-லவன் / குசலவர் – சூதர் / அரண்மனைக் கவிராயர்
  புராணம் – பூர்வீகம்
  இராமாயணம் – இராமன் சஞ்சாரம்
  மகாபாரதம் – பாரத வேந்தருக்குள்ளே நடந்த மா யுத்தம்

பதினெட்டாக சொல்லப்படும் புராணங்களின் வகைப்பாட்டில் விகற்பம் உண்டு என்று சொல்லும் கால்டுவெல், அவற்றைப் பட்டியலிடுகிறார்.

 • மச்சிய புராணம்
  கூர்ம புராணம்
  வராக புராணம்
  வாமன புராணம்
  பிரம புராணம்
  விஷ்ணு புராணம்
  பாகவத புராணம்
  சிவ புராணம்
  இலிங்க புராணம்
  பவிஷிய புராணம் (பெளடியம்)
  நாரத புராணம்
  கருட புராணம்
  பிரமவைவர்த்த புராணம்
  ஸ்கந்த புராணம்
  மார்க்கண்ட புராணம்
  அக்கினி புராணம்
  பிரமாண்ட புராணம்
  பதும புராணம்

இவற்றை ஆறு ஆறாக சாத்விக, ராட்சத, தாம்ச ஆகிய முக்குணங்களுக்குரியதாக மூன்றாக பகுக்கப்படுகிறது. சிவ, ஸ்கந்த, இலிங்க, கூர்ம, வாமன, வராக, பவிஷிய, மச்சிய, மார்க்கண்ட, பிரமாண்ட ஆகிய பத்தை சைவ புராணங்களாகவும் நாரத, கருட, பாகவத, விஷ்ணு ஆகிய நான்கையும் வைணவ புராணங்களாகவும் பிரம, பதும ஆகிய இரண்டையும் பிரம புராணமாகவும், மேலும் பிரமவைவர்த்த புராணத்தை சூரிய புராணமாகவும் அக்கினியை ஆக்கிநேய புராணமாகவும் சொல்வது வழக்கமாகும்.
இதில் சில தவறுகள் உண்டு என்று கூறும் கால்டுவெல், அவற்றையும் விளக்குகிறார். வராக புராணம் சைவ புராணமல்ல; அது வைணவ புராணமே. பிரம, பதும புராணங்கள் பிரம்மாவை முதன்மைப்படுத்துவதல்ல. மாறாக பாலகிருஷ்ணனாகிய கோபாலனையும் அவனது கள்ளநாயகி இராதாவைப் புகழும் புராணமாகும். அக்கினி புராணமும் சைவ புராணமேயாகும். எனவே சைவ புராணங்கள் பத்து, வைணவ புராணங்கள் எட்டு என்று வகைப்படுத்துவதே சரி என்கிறார் கால்டுவெல்.
உப புராணங்களும் 18 என்கிறார்கள். மத்திய புராணத்தில் நான்கு உபபுராணமே சொல்லப்படுகிறது. அவற்றில் சிவ புராணமும் காளி புராணமும் முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார்.
“இந்து மதத்திற்கு வேதங்களும் பெருங்காப்பியயங்களும் ஆதாரமல்ல; புராணங்கள் அதற்கு ஆதாரமாவென்று கேட்டால் அப்படியும் சொல்லக்கூடாது. நூதனமாய் ஏற்படுத்தப்பட்ட மதாசாரங்களை உறுதிப்படுத்தவும் திருஷ்டாந்தப்படுத்தவும் பிரபலியப்படுத்தவும் அந்தப் புராணங்கள் எழுதப்பட்டன. புராணங்களிலிருந்து அந்த மதம் உற்பத்தியாயிற்று என்று சொல்லிகிறதற்கு ஏதுமில்லை. புராணங்களுக்குத் தற்கால இந்து மதம் ஆதாரமேயல்லாமல் தற்கால இந்து மதத்திறகுப் புராணங்கள் ஆதாரமல்ல”, என்று புராணங்கள் பற்றிய தனது கருத்தைத் தெரிவிக்கிறார்.
மொத்தத்தில் இந்நூல் ஓர் சிறந்த வாசிப்பனுபவத்தை தருவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பரதகண்ட புராதனம் – வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்

(டாக்டர் கார்டுவெல் எழுதிய தமிழ் நூல்)

ஆசிரியர்: டாக்டர் கால்டுவெல்
பதிப்பாசிரியர்: பொ.வேல்சாமி

முதல் பதிப்பு: மே 2012 (NCBH)
விலை: ரூ. 95
பக்கம்:. 150

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600014.

044-26258410, 26251968, 26359906
மின்னஞ்சல்: ncbhbooks@yahoo.co.in

அச்சிட்டோர்:

பாவை பப்ளிகேஷன்ஸ்,
16 ஜானி கான் கான் சாலை. ராயப்பேட்டை,
சென்னை 600014.
பேச: 044-28482441, 28482973
மின்னஞ்சல்: pavai123@yahoo.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s