16. கவிஞனாய் இருப்பதும் குழந்தையாய் இருப்பதும் வேறுவேறல்ல.


16. கவிஞனாய் இருப்பதும் குழந்தையாய் இருப்பதும் வேறுவேறல்ல.

(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

மு.சிவகுருநாதன் 

(குதிரை வீரன் பயணம், டிசம்பர் 2012 இல் வெளியிட்ட யூமா.வாசுகி கவிதைகள், மணிவண்ணன் ஓவியங்கள் இணைந்த ‘சாத்தானும் சிறுமியும்’ (கவிதை-ஓவிய நூல்) நூல் குறித்த பார்வை.)

 

யூமா

கவிஞர், ஓவியர், சிறுபத்தரிக்கையாளர், சிறுகதை – நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட யூமா.வாசுகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கவிதைகள் ஓவியர் மணிவண்ணன் ஓவியங்களூடாக ‘சாத்தானும் சிறுமியும்’ என்ற அழகான நூலொன்று பிறந்துள்ளது. நான்கு பக்கங்கள் யூமாவின் ‘மஞ்சள் வெயில்’ நாவலில் இருந்து சில பகுதிகள் இடம்பெறுகின்றன.

கவிமனநிலையைத் தக்க வைத்தல், குழந்தைகளுக்காக எழுதுவது பற்றி கவின்மலர் முன்னுரையில் சிலாகித்துள்ளார். ஒருவகையில் தர்க்கத்திற்கு எதிரானதுதான் கவிதை. தர்க்கத்தின் வெம்மையிலிருந்து தப்பிக்க முயல்வது கவிதை. வாழ்வின் புறச்சூழலிருந்து ஒருவர் தப்பித்தோட அவர் குழந்தையாக இருக்கவேண்டும் அல்லது கவிஞராக இருக்க வேண்டும். கவிதை என்பது குழந்தையைப் போல, கவிஞர் தன்னுடைய குழந்தமையை மீட்டெடுப்பது கவிதை வாயிலாகவே சாத்தியமாகும். எனவே கவிதை எழுதுவதும் குழந்தையாக இருப்பதும் வேறுவேறல்ல; இரண்டும் ஒன்றுதான்.

மாரிமுத்து என்னும் இயற்பெயர் கொண்ட யூமா.வாசுகி கும்பகோணம் நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர். சிறந்த ஓவியரான இவர் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை. ‘உனக்கும் உங்களுக்கும்’ இவரது சிறிய முதல் கவிதைத் தொகுப்பு. ‘ரத்த உறவு’ (தமிழினி வெளியீடு, 2000) நாவல் மூலம் சிறப்பான கவனிப்பிற்கு உள்ளானார். 2007 இல் ‘மஞ்சள் வெயில்’ (அகல் வெளியீடு, 2007) வெளியானது. தோழமை இருள், இரவுகளின் நிழற்படம், என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர் ஆகிய கவிதைத் தொகுப்புக்களுக்குச் சொந்தக்காரர். ‘உயிர்த்திருத்தல்’ இவரது சிறுகதைத் தொகுதி. நண்பர்களுடன் இணைந்து ‘குதிரைவீரன் பயணம்’ என்னும் சிறுபத்தரிகையை நடத்தியவர்.

யூமா வாசுகி 01

கவிதை, நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கிய வகைமைகளை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, மற்றொரு படைப்புத்தளமான மொழிபெயர்ப்பில் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஓர் வகையில் படைப்பிலக்கியத்திற்கு இழப்பு என்று சொல்லலாம். ஆனால் இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளைச் செய்ய படைப்பு மனநிலை கொண்டவர்கள் பெரும்பாலும் இல்லாத குறையை யூமாவின் வருகை போக்கியிருப்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இவர்களுடைய மொழிபெயர்ப்புத் தேர்வுகள் சிறப்பானவை. நிறைய குழந்தை இலக்கிய நூற்களை மொழிபெயர்ப்பு செய்து பெரும்பங்காற்றியுள்ளார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் வழியே ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. சில உதாரணங்கள் மட்டும் இங்கே. நிகிதாவின் இளமைப்பருவம் – அலெக்ஸி டால்ஸ்டாய், என்கதை – சார்லி சாப்ளின், ஒரு ரூபாய் டீச்சர் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம் – சோவியத் சிறார் கதைகள், மாத்தன் மண்புழுவின் வழக்கு – சிறார் நாவல் (பாரதி புத்தகாலயம்), பினாச்சியோ (பாவை பப்ளிகேஷன்ஸ்), தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் (சந்தியா பதிப்பகம்)

யூமா.வாசுகி

இத்தொகுப்பில் குழந்தைகளுக்காக யூமா எழுதிய சில கவிதைகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன. மணிவண்ணனது ஓவியங்களும் இக்கவிதைகளுக்கு புதிய பரிமாணத்தைத் தருகின்றன.

குழந்தைகளின் இன்றைய நிலைமையை அவர்களின் பாதிப்புகளை, அத்துடன் கூடவே ஓர் சாமான்யனின் இயலாமையை ஒருசேர வெளிப்படுத்தும் கவிதை வரிகள் இவ்வாறு எழுதப்படுகிறது.

“இதை எழுதும்போது எவ்வளவு சுலபமாக

எவ்வளவு இசைவாக எவ்வளவு அழகாக

இதயத்திலிருந்து ரத்தத்தைத் தாள் மீது

மசியாக விட்டுக்கொடுக்கிறது பேனா முனை…” (பக்.11)

குழந்தமையை மீட்க என்ன செய்யலாம்? எப்படி குழந்தையாக மாறுவது? இது நமக்கு மிகவும் சவாலாக பணியாகவே இருக்கிறது. குழந்தைகளை இவ்வாறு உற்றுநோக்கி, அதன் வழியாக இழந்துபோன நம் குழந்தமையை ஓரளவு மீட்டெடுக்க முடியலாம்.

“குடிசையுள் இருளிலிருந்து

வெளித் திண்ணைக்கு ஓடிவந்த சிறுமி

மழை விட்டுவிட்டதா என

கைநீட்டி மேலே பார்த்தாள்.

என்னதான் சொன்னதோ வானம்.

உள்ளே ஓடிச் செல்கிறாள்

புன்னகையுடன்.” (பக்.25)

“குழந்தைகள்

குழந்தைகளாகவே

இருக்கிறார்கள்”, (கிரக யுத்தம் – தொகுப்பு) என்று கவிஞர் விக்ரமாதித்யன் ஓர் கவிதை எழுதியிருப்பார். குழந்தைகள் பெரியவர்கள் போல் நடப்பதும் பெரியவர்கள் குழந்தைகளாக மாறுவதும் நல்லதுதானே.

“அவள் சிறுமி மாதிரி

என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்

நான் ஓவியன் மாதிரி

வரைந்துகொண்டிருக்கிறேன்.” (பக்.15)

‘ஈரம்’ என்ற தலைப்பிலான ஓர் கவிதை கிள்ளமுடியாத பிஞ்சுக்கரங்களின் தோல்வி, உடன் அதை பற்களால் பதிலீடு செய்த குழந்தமையை எண்ணி பற்களின் வலி சிரிப்பாய் மாறி மனம் ஈரத்தால் பிரவாகம் கொள்கிறது.

“பற்கள் பதியப்பதிய வலி மீதுற மீதுற

பெருங் குரலெடுத்துச் சிரிக்கிறேன்.

சிலிர்த்தடங்குகிறது உடல்-மனம்

ஈரம் பட்டுக் கிளைக்கிறது.” (பக்.31)

“இந்தக் குழந்தைக்கு நான்

சுவைக்கத் தருகிற மிட்டாய்

அனைத்துக் குழந்தைகளின் காலத்திலும்

இனிக்க வேண்டும்.” (பக்.37) என்று இவரது கவிமனம் ஏங்குகிறது. யுகம் யுகமாய் குழந்தைகளை ‘நோவா பேழை’ யில் வைத்து பாதுக்காக்க நினைக்கும் நெஞ்சம் வெளிப்படுகிறது.

வீடு எப்போது உயிப்புடன் இருக்கிறது? சுவர்க் கிறுக்கல்கள், உடையாத கண்ணாடிகள், உடையாத பொம்மைகள் ஆகியவற்றால் வீடு உயிர் பெறுமா? குழந்தைகளின் வருகையால் ஜடப்பொருளான வீடு உயிர்பெற்று மீண்டெழுகிறது. அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது வீடு வெட்டவெளியாகி விடுகிறது. இது வெறும் சொல் விளையாட்டல்ல.

“வீடு என்ற சொல்லே விளையாட்டை முடித்தது.

என் வீட்டின் பகுதிகள் பிரிந்து பிரிந்து ஆயாசமாய்

அதனதன் வீட்டுக்குப் போயின – நான்

கதவித் தாழிட்டுக் கொண்டு

வெட்டவெளியில் அமர்ந்தேன்.” (பக்.39)

வாழ்வின் அவஸ்தைகளிலிருந்து தப்பிக்கவும் அவற்றைக் கொண்டாடவும் நம்முள் புதைந்துபோன குழந்தமையை மீட்டெடுப்போம். எனவே கவிதைகளையும் கொண்டாடுவோம்.

சாத்தானும் சிறுமியும்

(கவிதை, ஓவிய நூல்)

கவிதைகள்: யூமா.வாசுகி

ஓவியங்கள்: மணிவண்ணன்

முதல் பதிப்பு: டிசம்பர் 2012

விலை: ரூ. 75

பக்கம்:. 48

வெளியீடு:

குதிரை வீரன் பயணம்,

33, திருவள்ளுவர் நகர்,

முகப்பேர்,

சென்னை – 600037.

பேச: 9840306118

மின்னஞ்சல்: marimuthu242@gmail.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s