20. தொல் தமிழர் வாழ்வியலைக் கண்டடைவது எப்படி?


  1. தொல் தமிழர் வாழ்வியலைக் கண்டடைவது எப்படி?

 

                 (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

 

                   மு.சிவகுருநாதன்

 

இயல்வாகை (2).jpg

 

(“தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் – நம் முன்னோர்களின் இயற்கை, அறிவு சார்ந்த வாழ்வியல், அதன் நன்மைகள், இன்றைய அவசியங்கள் மற்றும் திரும்ப அடையும் வழிகள்” என்ற தீ.கார்த்திக் எழுதி ‘இயல்வாகை’ வெளியிட்ட சூழலியல் நூல் குறித்த அறிமுகப் பதிவு.)

தொல் தமிழர்களின் இயற்கை சார்ந்த வாழ்வியலைக் கண்டறிந்து, அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியின் சிறு வடிவமமே இந்நூல் என முன்னுரை சொல்கிறது. இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

20 தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகிய இன்று இயற்கைக்கு எதிரான வாழ்வியல் நெறிகளைக் கடைபிடித்துக் கொண்டுள்ளோம் என்றும் அதனால் காடுகள் அழிப்பு, ஓசோன் ஓட்டை, புவி வெப்பமடைதல் போன்ற விளைவுகளை எதிர்கொள்கிறோம் என்பது சொல்லப்பட்டு, உலகமயமாக்கலின் சிக்கலும் சொல்லப்படுகின்றன.

இயற்கை சார்ந்த உணவு, மருத்துவம், வேளாண்மை, மொழி, உடற்பயிற்சி முறைகள், நீர் மேலாண்மை, கலைகள், வானியல், அறிவியல் ஆகியவற்றை தொல் தமிழர்கள் சில ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக கடைபிடித்து வந்துள்ளதே இயற்கை வாழ்வியல் என்று நூலில் வரையறை செய்யப்படுகிறது.

உணவின் குணமறிந்து உண்ணல், காலமறிந்து உண்ணல், பசித்துப் புசித்தல், செரிக்கும் அளவறிந்து உண்ணல். நொறுங்கத் தின்றல், சரியான உணவு வகைகள் என இயற்கை சார்ந்த உணவு முறைகள் பட்டியலிடப்படுகின்றன. தொழிற்புரட்சி, அய்ரோப்பியர்கள் வருகை ஆகியவற்றின் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டுத் தோட்டங்களாக மாற்றப்படுதல், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, எந்திரங்கள், மரபணு மாற்றம் போன்ற இயற்கை சாராத வேளாண்முறைகள் இன்று முக்கியத்துவம் பெற்றதும் இதனால் விவசாயம் அடையும் பாதிப்புகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பேசப்படுகிறது.

இயல்வாகை (1).jpg

இயற்கை உணவு வகைகளில் கேழ்வரகு, கம்பு, தினை (திணை அல்ல), சாமை, குதிரை வாலி, நாட்டுச்சோளம், வரகு,. மூங்கிலரிசி போன்ற சிறுதானியங்களின் சிறப்பு சொல்லப்பட்டு, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளை வாங்கியுண்ண பரிந்துரை செய்யப்படுகிறது.

இன்று இயற்கை உணவு என்பதும் உலகமயத்தின் விளைபொருளாகவும் சந்தைப் பொருளாதாரத்தைன் ஓர் கூறாகவும் மாறிவிட்டதைக் கவனிக்கவேண்டும். பெரும் கம்பெனிகள் இன்று இயற்கைப் பொருள்கள் என்று சொல்லி விற்பனை செய்யத் தொடங்கிவிட்டன. உலகமயம் நுகர்வின் அனைத்து நிலைகளையும் கைப்பற்றிகொள்ளும் என்பதற்கு இயற்கை வேளாண்மை, ஹோமியோபதி போன்றவை சிறந்த உதாரணங்களாகும். இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் பேச்சால் பலனில்லை.

பின்தூங்கி முன் எழல், வைகறைத் துயிலெழுதல் போன்றவற்றின் சிறப்புகள் பட்டியலிடப்படுகின்றன. அதிகாலைக் காற்றில் ஓசோன் பரவியிருக்கும், அதை சுவாசிப்பது புத்துணர்வைத் தரும் என்பது எதன் அடிப்படையில் கூறப்படுகிறது என்று தெரியவில்லை. ஓசோன் என்பது என்ன? ஆக்சிஜன் தானே! அதைதானே சுவாசிக்கிறோம்.

இரவில் வாகன ஓட்டுதல், இரவுப்பணிகளை தடை செய்யமுடியுமா? சென்னையில் மட்டும் இரவுப்பணி என்பதே அபத்தம். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் எளிய மனிதர்கள் இரவுப்பணிகள் மேற்கொள்கின்றனர். IPO வில் மட்டுமல்ல, பேருந்து நிலையங்களில் சுண்டல் போன்றவற்றை விற்பனை செய்வோர், உணவகங்களில் பணியாற்றுவோர், நாளிதழ் விநியோகம் செய்வோர் என பலதரப்பட்ட அடித்தட்டு மக்கள் பொருளியல் சார்ந்து இவ்வாறு இயங்க வேண்டிய கட்டாயமிருக்கிறது.

‘அடி முதல் நுனி வரை’ குளியல் முறை, அண்மைக் காலத்தில் இயற்கைக்கு ஊறு ஏற்படுத்திய புதிய மாற்றங்கள், பாட்டி வைத்தியம், உடலை இயக்கும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குணங்கள், உடலின் குறிப்பறியும் முறைகள், சிறு வயது பொழுதுபோக்குகள் ஆகியன கட்டுரைகளில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன.

பழகும் முறைகள், பொய் சொல்லுதலின் உளவியல் தாக்கம், கூட்டுக் குடும்ப வாழ்க்கை, அனைத்தையும் பகிர்ந்து கொள்வதன் இனிமை அனைத்தையும் பழைய நிலையோடு ஒப்பிட்டும் தன் அனுபவங்கள் வழியாகவும் சொல்லிச் செல்கிறார்.

12 வகையான முக்கிய எண்ணங்களின் தொகுத்தளித்து, இவற்றைக் கடைபிடிப்பதன் வாயிலாக மனநலத்தைப் பாதுகாக்க முடியுமென்கிறார் நூலாசிரியர். உணவு, பசி, உண்ணாநிலை பற்றியும் வேகவைத்த, வேகவைக்காத உணவுகள் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. இதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழர்களின் வாழ்வில் மாட்டின் முக்கியத்துவம் அதன் வேறு பெயர்களான கோ, ஆ என்பதிலிருந்து ஆநிரை கவர்ந்தல், சாணமிட்டு மெழுகல், பஞ்ச காவ்யா பற்றி விதந்தோதப்படுகிறது. பசுஞ்சாணம், பசுவின் சிறுநீர், பசும் பால், பசுந்தயிர், பசு நெய் ஆகிய ஐந்துப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பஞ்ச காவ்யா எனப்படுகிறது. இதிலுள்ள நுண்ணுயிரிகள் மனிதனுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை உடலில் பெருக்கமடையச் செய்து, உடல் நலத்தை மேம்படுத்தி, நம்மை நோயிலிருந்து பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது. இது அறிவியல் பூர்வமான உண்மையாகக்கூட இருக்கும் பட்சத்தில், நம்முன் எழும் அய்யம் இதுதான். இயற்கை உணவு, விவசாயம் என்று பேசும் நாம் மாட்டிற்கு இயற்கை சார்ந்த உணவுகள் வழங்கப்படுகிறதா என்பதையும் பார்க்கவேண்டும். பூச்சிக்கொல்லிகளால் பாழ்பட்ட வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள், புற்கள் தானே இவற்றிற்கு உணவாக இருக்கிறது. இதன் பாதிப்பு அவற்றிலிருந்து கிடைக்கும் பொருள்களில் எப்படி இல்லாமற்போகும்?

சரகர், சுஷ்ருதர், வாக்பதர் போன்றோர் எழுதிய பண்டைய மருத்துவ நூற்களில் பஞ்சகாவ்யம் பற்றிய இருந்தபோதிலும் சடங்குகளில் இது தூய்மைப் பொருளாகவும் தீட்டைக் கழிக்கவும் பயன்பட்டது இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது. மேலும் இவற்றை சூத்திரர்களும் பெண்களும் பயன்படுத்த தடை இருந்தது. பசுவின் பின்புறம் தூய்மையாக கருதப்பட்ட அதே சமயத்தில் பசுவின் முன்புறம் (வாய்) தூய்மையற்றது எனவும் வரையறுக்கப்பட்டது. (பசுவின் புனிதம் – டி.என்.ஜா) பஞ்ச காவ்யாவை தமிழர்கள் பயன்படுத்தியது, அம்முறை தமிழர்களை விட்டு நழுவியது போன்றவை நீண்ட ஆய்வுக்குட்பட்டவை.

யோக முறையை தமிழர் கண்டுபிடிப்பாக வரையறுப்பதும் விமர்சனத்திற்குரியது. பதஞ்சலி உள்ளிட்ட பதிணென் சித்தர்கள், முதலில் சித்தர்களா என்றும் பின்பு தமிழர்களா என்றும் விவாதிக்க வேண்டியுள்ளது. யோகம் என்ற சொல் யஜூர் (ஒன்றாதல்) என்ற வேர்ச்சொல்லிலிருந்து கிளைத்ததாகச் சொல்லப்படுகிரது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாக இணைவதைக் குறிக்கிறது. இத்தகைய தத்துவங்கள் தமிழர்களுடையதா என்றும் வினாவும் எழுகிறது.

நரம்பு மண்டலத்தைச் செயலிழக்கச் செய்யும், தனக்குத்தானே உடல்வாதை செய்துகொள்ளும் யோகப் பயிற்சிகள் பன்னெடுங்காலமாக நிலவி வந்தவை. அவற்றைத் தொகுத்து உரை (பாஷ்யம்) எழுதியதே பதஞ்சலியின் வேலையாக வரலாற்றில் கணிக்கப்படுகிறது. அலோபதி மருத்துவ முறையைப் போன்று ஓர் மருந்தை அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாகப் பயன்படுத்துவதைப்போல இன்று யோகாவை பரிந்துரைப்பது மிகவும் ஆபத்தானது. இன்று இதுவும் முற்றிலும் கார்ப்பரேட் வணிகமாக மாறிப்போன ஒன்று.

இயற்கை சார்ந்த வானியல் தமிழர் நாள்காட்டி குறித்து ஓர் கட்டுரையில் விளக்கப்படுகிறது. 12 ராசிகள், 27 நட்சத்திரங்களில் பெயர்கள் ஏன் தமிழில் இல்லை? பிரதமை தொடங்கி பவுர்ணமி முடிய உள்ள 15 வளர்பிறைத் தேதிகளில் முதல் பதினான்கு சமஸ்கிருத எண்களைக் குறிப்பவை. இதைப் போல கார்த்திகை மாதத் திங்களை மட்டும் ‘சோமவாரம்’ எனச்சொல்லும் வழக்கமுண்டு. ஆனால் உண்மையில் திங்கள் கிழமை என்பதன் சம்ஸ்கிருத வடிவமே ‘சோம்வார்’ என்பது. தேதி (நாள்) திதி என மாறியதும் 1, 8, 9 ஆகிய சில நாள்கள் (பிரதமை அல்லது பாட்டிமுகம், அஷ்டமி, நவமி) இழிவனதாக எந்தப் பணியும் மேற்கொள்ளாத நாளாகவும் மாற்றப்பட்டதையும் நாம் கவனிக்க வேண்டும். இதற்கு தமிழர் வாழ்வியல் சொல்லும் விளக்கம் என்னவாக இருக்கும்?

நூலின் அட்டைப்படம் கூட நமக்கு நிறைய செய்திகளைச் சொல்கிறது. இயற்கை வாழ்க்கை முறை என்று பழங்குடி வாழவியலை உயர்த்திப்பிடிக்கும் போக்கு ஒரு புறம், அவர்களை வாழிடத்திலிருந்து அப்புறப்படுத்துதல், நவீன வாழ்வின் கொடுமைகளுக்கு ஆட்படுத்துதல் (IMFL மதுவகைகள்) ஆகியவற்றின் ஊடாகவும் விவாதிக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

எல்லாவற்றையும் தமிழர் கண்டுபிடிப்பாகவும் தமிழர் அடையாளமாகவும் இனம் காணுவது பல்வேறு சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு இதுவோர் நல்ல உதாரணமாகும்.

இந்நூலின் அடைப்படை குறித்த கருத்தொற்றுமையுடன், குக்கூ குழந்தைகள் வெளியின் செயல்பாட்டையும் இயல்வாகை நூலாக்கத்திற்கும் பாரட்டுகளைத் தெரிவிப்போம்.

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்

( நம் முன்னோர்களின் இயற்கை, அறிவு சார்ந்த வாழ்வியல், அதன் நன்மைகள், இன்றைய அவசியங்கள் மற்றும் திரும்ப அடையும் வழிகள்.)

தீ.கார்த்திக்

வெளியீடு: இயல்வாகை

நன்கொடை: ரூ. 100

மூன்றாம் பதிப்பு: ஜனவரி 2015

தொடர்பு முகவரி:

இயல்வாகை பதிப்பகம்,

கதித்தமலை அடிவாரம்,

தாலிகட்டிபாளையம்,

ஊத்துக்குளி – 638751.

அலைபேசி: 9942118080, 8056205053

மின்னஞ்சல்: kawthihills@gmail.com

குக்கூ குழந்தைகள் வெளி

மின்னஞ்சல்: cuckoochildren@gmail.com

முகநூல்: facebook.com/cuckoochildren

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s