23. தலித் இயக்கங்களின் திசைவழி


23. தலித் இயக்கங்களின் திசைவழி

(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

மு.சிவகுருநாதன்

ஆனந்த் டெல்டும்ப்டெ  (2).jpg

(அலைகள் வெளியீடாக, 2010 –ல் இரண்டாம் பதிப்பாக வெளியான (முதல் பதிப்பு: 1996) ஆனந்த் டெல்டும்ப்டெ எழுதிய ‘அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்’ – மொழியாக்கம் – மயிலை பாலு, நூல் குறித்த பதிவு இது.)

இந்திய வரலாற்றில் தலித், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் இயக்கங்களில் ஏற்பட்ட உடைவுகளுக்குப் பஞ்சமில்லை என்று தோன்றுகிறது. இவை ஆதிக்க சக்திகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. ஒடுக்கப்பட்டோருக்கான போராட்டத்தில் இது பெரும் பின்னடைவை உண்டாக்குகிறது. இந்நூல் அண்ணல் அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்களின் செயல்பாடுகள், முரண்பாடுகள், கருத்தியல், வரலாற்றில் செய்த தவறுகள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுகிறது.

அய்ந்து தலைப்புகளில் சுருக்கமான, ஆனால் ஆழமான ஆய்வைச் செய்கிறது. வருங்கால தலித் இயக்கத்திற்குத் தேவையான அம்பேத்கரை கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுக்க விவாதப் புள்ளிகளாக இவை அமையலாம். இந்த வகையில் ஆனந்த டெல்டும்டெ யின் எழுத்துகளில் ஒரு தொடர்ச்சியை அவதானிக்கலாம். இவரது ‘ஏகாதிபத்திய – எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்’, என்ற நூல் எஸ்.வி.ஆர். மொழிபெயர்ப்பில் விடியல் பதிப்பகம் & புத்தா வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.

தலித் மக்களின் உலகத்தில் பாபா சாகேப் அம்பேத்கர் மட்டுமே நடுநாயகம், அறிவுத்துறை அறிஞர், போதி சத்துவர், மீட்பர் என அனைத்துமாக இருக்கிறார். இன்னும் ஒருபடி மேலே கடவுளாகவும் அவருக்கு தெய்வத்தன்மையும் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித உள்நோக்கங்கள் இருந்தாலும் அடித்தளம் பலவீனமாக இருப்பினும் இதுதான் உண்மையானது; யதார்த்தமானது என்று கூறும் நூலாசிரியர் நான்கு பகுதிகளாக இயக்கங்கள் பற்றிய ஆய்வை முன்வைக்கிறார்.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கம் பற்றி முதல் பகுதியிலும் இரண்டாம் பகுதியில் அம்பேத்கரிய தத்துவார்த்த வரையரைகள், நிகழ்வுகள், தலைவர்களது செயல்பாடுகள் போன்றவற்றை விவாதிக்கிறது. எதிர்கால தலித் இயக்கங்களுக்கு அம்பேத்கர் எவ்வாறு முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான யோசனைகளை மூன்றாம் பகுதியும் இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியை நடத்த தலித் மக்களின் பங்கு பணிகளை நான்காம் பகுதியும் விளக்குகிறது.

அம்பேத்கர் மறைவிற்குப் பின் அவரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் பல்வேறு போராட்டங்களிலும் முன்னணியில் இருந்ததன் மூலம் மக்களிடம் நன்கு அறிமுகமாயிருந்த பாபாசாகேப் கெய்க்வாட் தலித் இயக்க தலைமைப் பொறுப்பிற்கு வந்தார். தலித்களின் முதன்மைப் பிரச்சினையான நிலப்பகிர்வை இவர் கையிலெடுத்தார். மகாராஷ்டிராவில் கொங்கண் பகுதியில் ‘கோட்டி’ என்ற பெயரில் இருந்த நிலப்பிரத்துவ முறையை ஒழிப்பதற்கான அடையாளப் போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் காலத்தில் சாதி ஒழிப்பிற்காக இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டது. முதன் முறையாக பொருளாதார பிரச்சினையான நிலம் தொடர்பாக எழுச்சி மிகுந்த போராட்டமாக இது அமைந்தது.

பெருந்திரள் தலித் மக்களை இப்போராட்டங்கள் கவர்ந்தது என்றாலும் மற்ற தலித் தலைவர்கள் அம்பேத்கரின் செயல்திட்டத்தில் இல்லாத இப்போராட்டம் கம்யூனிச வயப்பட்டது என நிராகரித்தனர். காந்தியின் எளிய துறவறத்திற்கு மாற்றாகவும் தன்னை நவீனத்துவத்தின் பிரதிநிதியாகக் காட்டவே மேலை நாகரீக உடையை அம்பேத்கர் அணிந்தார். ஆனால் பிற்காலத்தில் அதுவே ஓர் குறியீடாக மாறிப்போனது. இத்தகைய அச்சு வார்ப்பை அப்படியே பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வாறில்லாமல் வேட்டியும் குர்தாவும் அணிந்த நாட்டுபுறத்தான் போலிருந்த கெய்க்வாட்டை ஏற்க இயலவில்லை என்று குறிப்பிடுகிறார்.

‘சாகேப்’ என்பது கவுரவப் பெயராகியது. இவ்வாறு நடை, உடை, மொழி, வாழ்க்கை ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தி, கண்மூடித்தனமான பின்பற்றலையும் அடிமைச் சிந்தனையையும் வளர்த்து அரை ராஜாவாக (இளவரசர்) மாறி குட்டி முதலாளிகளுக்கு உதவி செய்யும் அதிகார அமைப்பானது.

கெய்க்வாட் தலைமையிலான வெகுமக்கள் போராட்டம் ஆளும் வர்க்கத்தை அதிர வைத்தது. மகாரஷ்டிரா முதல்வரும் பின்னாளில் இந்திய துணைப் பிரதமராகவும் இருந்த யஷ்வந்த் ராவ் சவான் கெய்க்வாட்டின் நண்பராக, இந்த நட்பு குடியரசுக் கட்சியை காங்கிரசுடன் கூட்டணி சேர்த்தது. புத்த மதத்தில் இணைந்து வைதீகத் தன்மையை பவுத்தத்திற்கு அளித்தது, புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக்கியது என்பது போன்ற எதிர்ப்பவர்களை தனதாக்கி ஆளும் வர்க்கம் செய்யும் தந்திரம் இங்கும் தொடரவேச் செய்தது.

அம்பேத்கரது மதமாற்றங்கள் தலித் மக்களிடையே பெரும் தாக்கத்தை விளைவித்தது. அம்பேத்கர் போதி சத்துவருக்கு நிகராக்கப்பட்டார். பவுத்த மதத்தில் ஏற்கனவே உள்ள மூன்று சரணங்களுடன் “பீமம் சரணம் கச்சாமி”, நான்காவதாகச் சேர்க்கப்பட்டது. அம்பேத்கர் புத்தரைப் போல ‘பீம் பகவான்’ ஆனார். புத்தர் ஞானம் பெற கடைபிடித்த தியானமுறையே பவுத்தத்தின் சாரம் என்று கூறுமளவிற்கு சென்றனர்.

தலித் மக்களிடம் இருந்த உரிமை வேட்கையும் தொழிலாளி வர்க்க உணர்வும் தடையின்றி வளர்ந்தால் உலகின் எந்தப் பகுதியைவிட இந்தியாவில் புரட்சிக்கான வாய்ப்பு அதிகம் என்ற கருத்து மேலோங்கியிருந்த காலகட்டம் ஒன்று இருந்தது. இந்நிலையை ஆளும் வர்க்கம் அனுமதிக்குமா? அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டதில் காங்கிரஸ், காந்தி, நேருவின் தந்திரங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். (அரசியல் நிர்ணய சபை தலைவர் என்று தவறாக இருமுறை குறிப்பிடப்படுள்ளது. அரசியல் நிர்ணய சபை தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்; அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர்.) அரசியல் நிர்ணய சபையில் நிறைய சொத்துடைமை வர்க்கப் பிரதிநிதிகள் இருக்க, அவர்கள் மூலம் அம்பேத்கரின் கருத்தோட்டங்களைத் தடுப்பதுடன், அரசியல் சட்டத்தை உண்டாக்கியவர் அம்பேத்கர் என்கிற மாயையை ஏற்படுத்திவிட முடியும், என்று ஒரே கல்லில் பல பறவைகள் வீழ்த்தப்பட்டதாகச் சொல்கிறார்.

தேர்தல் அரசியல் சூதாட்டத்தில் குழுக்களும் பிளவுகளும் தவிர்க்க முடியாததானது. இந்த ஒற்றுமையின்மைக்கு ஆளும் வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி, தலித் இயக்கத்தில் ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்குவதில் ஏற்பட்ட குறைபாடு, தலித் தலைவர்களிடையே உருவான குட்டி முதலாளித்துவ உணர்வுகள் ஆகிய மூன்று காரணிகளைப் பட்டியலிடுகிறார் நூலாசிரியர்.

1970 களின் தொடக்கத்தில் தலித் சிறுத்தைகள் அமைப்பின் போர்க்குரல் புதிய அலைகளை உருவாக்கியது. இவ்வமைப்பின் செயல்திட்டங்கள் மூலம் தலித் அரசியலின் பழமை சார்ந்த கொள்கையில் முற்போக்கான மாற்றம் உண்டாக வாய்ப்பிருந்ததையும், ஆசார அம்பேத்கரியர்களால் அம்முயற்சி மூழ்கடிக்கப்பட்டது குறிப்பிடப்படுகிறது.

தலித் சிறுத்தைகள் அமைப்பு முரண்பட்ட இரண்டு அம்பேத்கர்களை அடையாளம் காட்டியது. ஒன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்குப் பாடுபட்ட, எந்த சித்தாந்தங்களுக்கும் ஆட்படாத முற்போக்கு அம்பேத்கர். மற்றொன்று வன்முறைகளைத் தவிர்தது, அரசியல் சட்டப்படி நடந்துகொள்ள வலியுறுத்திய, தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளரும் புத்தமத ஆதரவாளருமான அம்பேத்கர். இவரது முற்போக்கு விளைச்சலுக்குதவாத களர் நிலத்தில் விதைக்கப்பட்டது. அம்பேத்கரின் முற்போக்கு அம்சங்களை பரப்புரை செய்ய கம்யூனிஸ்களும் தலித்களும் முன்வரவில்லை.

கன்ஷிராமின் இயக்கம் தலித்கள் மட்டுமின்றி பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், மதச்சிறுபான்மையினர் ஆகியோரை உள்ளடக்கிய ‘பகுஜன்’ என்ற வித்தியாசமான அணுகுமுறையைப் பின்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதன் மூலம் தலித் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியும் என்று நம்பினார். அதிகாரத்தைக் கைப்பற்றுதலை மட்டுமே நோக்காகக் கொண்டு அம்பேத்கரது அடிப்படைக் கோட்பாடுகளில் சமரசம் கண்டார். தலித் இயக்கத்துக்கு முதலாளித்துவமும் பிராமணியமும் இரட்டை எதிரிகள் என்பது அம்பேத்கர் கொள்கை. ஆனால் மனச்சாட்சி உறுத்தலின்றி கன்ஷிராம் இரண்டு எதிரிகளையும் அரவணைத்துக் கொண்டார் என்று சாடுகிறார்.

நாகபுரியில் உள்ள தீட்சா பூமி, மும்பையில் உள்ள சைதன்ய பூமி போன்று தலித் மக்கள் கூடும் இடங்களில் பொது விருந்துகள் நடைபெறுகின்றன. ‘போராடு’ என்ற அம்பேத்கரது கோட்பாடு மனுக்கள் அளிப்பது, அதிக பட்சமாக ரிட் மனு போடுவது என்கிற அளவில் சுருக்கப்பட்ட நிலையில், அம்பேத்கர் வெறும் சிலையாக சுருங்கிவிட்டார். இதனால்தான் அம்பேத்கரியம் பிறந்த பூமியான மகாராஷ்டிராவில் பாபாசாகேப் அம்பேத்கருக்கும் சிவாஜிக்குமான பிறந்ததின நிகழ்ச்சிகளை சிவசேனாவுடன் சேர்ந்து தலித்கள் கொண்டாடுவதை எடுத்துக்காட்டுகிறார்.

அம்பேத்கரைப் பற்றிய பல்வேறு சித்தரிப்புகளில் முதலாளித்துவ தாராள ஜனநாயகவாதி என்ற சித்திரமே தலித் இயக்கங்களில் செல்வாக்கு பெற்றதாக உள்ளது. தீண்டத்தகாத மனிதராக, கல்வியில் சிறந்தவராக, பிரிட்டிஷ் வைஸ்ராயின் நிர்வாக சபை உறுப்பினராக, அரசியல் சட்ட வரைவுக்குழுத் தலைவராக, நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக, புத்த மதத்தில் தன்னை இணைத்துகொண்ட ஆன்மீகவாதியாக என இருந்த அம்பேத்கரில் எவற்றை நினைவுகூர்வது என பேரா. உபேந்திரா பக்சி எழுதியதை குறிப்பிடுகிறார். நாம் இதோடு சேர்த்து பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா, சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அட்டவணை சாதியினர் கூட்டமைப்பு, குடியரசுக் கட்சி ஆகிய வேறுசில அம்பேத்கர்களையும் இணைத்துப் பார்க்கலாம்.

பிராமணியத்தை எதிர்த்தாலும் சாதி அடிப்படையில் பிராமணர்களுக்கு எதிரான விரோதத்தை உருவாக்கவில்லை. தனது பஹிஷ்கரித் ஹிதகரிணி சபாவின் நிர்வாக அமைப்பில் பெரும்பாலோர் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். தீண்டத்தாகாதோர் உள்ளிட்ட அனைத்து சாதியும் பிராமணியம் இருப்பதையும் இதுவே சாதி முறையின் சாரம்சம் என்று அவர் கருதியிருப்பதற்கான சான்றுகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

தொழிலாளர்களில் சமகாலப் பிரச்சினைகளை ஃபேபியன் (Fabian) சோசலிச முறையில் அணுகினாலும் முதலாளித்துவத்திற்கு எதிராக அவர் நின்றதை மறுக்கமுடியாது என்று கூறும் நூலாசிரியர், முதலாளித்துவத்தை எதிர்க்க வலுவான கொள்கை அடிப்படையை அவரால் உருவாக்க இயலவில்லை என்கிறார்.

இந்திய மக்களைச் சுரண்டும் கிராமப்புற நிலப்பிரபுத்துவம், நகர்ப்புற முதலாளித்துவம் ஆகிய இரண்டு வர்க்கங்களின் பிரதிநிதியாக அவர் காங்கிரசைக் கருதினார். விடுதலைப் போராட்டம் உண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பா என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்திருந்தது.

பெண்கள் உரிமைகள், பெண்கல்வி போன்றவற்றை வலியுறுத்திய அம்பேத்கர், பிள்ளைகளுக்கு ஓர் சிறந்த தாயாகவும், கணவனுக்கு நல்ல மனைவியாகவும், சமூகத்திற்கு கலாச்சாரங்களைக் கொண்டு செல்வோராக இருக்கவேண்டுமென விரும்பினார். இது குறித்து இவரது கவனம் வரம்புக்குட்பட்டதாகவே இருந்தது.

அம்பேத்கர் புரட்சியை எதிராக இருந்தமை வன்முறை, ரத்தம் சிந்துதல் போன்றவற்றில் உடன்பாடில்லாத நிலையை எடுத்துக்காட்டுவது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உள்ளிட்ட எந்தவகையான சர்வாதிகாரத்தையும் அவர் ஏற்க தயாராக இல்லை. அம்பேத்கர் தனது லட்சியங்களை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கையில் கண்டார். இவை பிரஞ்சுப் புரட்சியிலிருந்து இக்கொள்கைகள் பெறப்பட்டதை மறுத்து புத்தரின் போதனைகளிலிருந்து பெற்றதாகக் கூறுகிறார்.

அரசியலமைப்பிற்கு உள்பட்ட ‘அரசின்’ மூலம் தான் எண்ணிய சோசலிசத்தை செயல்படுத்த நினைத்தார். அரசு பற்றிய அவரது கருத்து பெரும் கற்பனையானது. ஜனநாயகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

தனி நபர், சமூகம் என அனைத்திலும் மறைந்து கிடக்கும் சுரண்டல் எண்ணங்களை ஒடுக்கி, வாழக்கையை நெறிப்படுத்தும் தத்துவக்கருவியாக, ஒழுக்கக் குறியீடாக, வாழ்நெறியாக அவர் பவுத்தத்தை அணுகினார். அம்பேத்கருக்கும் மார்க்சுக்கும் பல அம்சங்களில் பொதுக்கருத்து இருந்தது. சுரண்டல் தவிர பல பிரச்சினைகளில் ஒத்தகருத்தும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இருவரும் அக்கறையும் கொண்டிருந்தனர். இந்த இணக்கச்சூழல் வளர்த்தெடுக்கப்படாமல் பகைமை மட்டும் முதன்மைப் படுத்தப்பட்டுவிட்டது என்று விளக்குகிறார்.

படித்த தலித்கள் தனது வாழ்க்கைப் பணித்திட்டத்தில் போர் வீரர்களாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை பொய்த்துபோனதால் தனது இறுதிகாலத்தில் விரக்தியின் விளிம்பில் நின்றார். தனது மக்களுக்கு ஏதும் செய்ய முடியாமை குறித்து வருந்தினார். இறுதி நாட்களில் அவரது ஆன்மிக ஈடுபாடு விரக்தியின் வெளிப்பாடாக கருதலாம் என்கிறார். அவரது சிந்தனைகள் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டால் புரட்சிகர அம்பேத்கரும் தலித் மக்களின் புரட்சிகரப் போராட்டமும் கிடைக்கும் என்றும் சொல்கிறார்.

இந்நூல் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த பின்பும் இவற்றை மீள்வாசிப்பு செய்வது, அம்பேத்கரை அணுகுவது, தலித் இயக்கங்கள் கட்டமைப்புகள் தங்களை மீட்டெடுப்பது போன்றவற்றிற்கு புதிய வெளிச்சம் உண்டாகக்கூடும்.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்

ஆனந்த் டெல்டும்ப்டெ

மொழியாக்கம்: மயிலை பாலு

முதல் பதிப்பு: 1996

இரண்டாம் பதிப்பு: 2010 (அலைகள்)

பக்கம்: 96

விலை: ரூ. 50

வெளியீடு:

அலைகள் வெளியீட்டகம்,

4/9, 4 –வது முதன்மைச் சாலை,

யுனைடெட் இந்தியா காலனி,

கோடம்பாக்கம்,

சென்னை – 600024.

பேசி: 044 24815474

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s