25 அ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி (முதல் பகுதி)


25 அ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி
(முதல் பகுதி)

(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

மு.சிவகுருநாதன்

அய்யன்
(நிர்மால்யா எழுதி ‘தமிழினி’ 2001 இல் வெளியிட்ட ‘கேரளத்தின் முதல் தலித் போராளி – அய்யன் காளி’ என்னும் வரலாற்று நூல் குறித்த பதிவு.)
17 தலைப்புகள் மற்றும் 2 பின்னிணைப்புகள் என 173 பக்கங்கள் நிறைந்த இந்நூலில் தலித் விடுதலைப் போராளி அய்யன் காளியின் வரலாற்றினூடாக இப்போதைய கேரளா மற்றும் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்கள் மற்றும் போராட்டங்களை விவரிக்கிறது. மலையாளத்தில் சி.அபிமன்யு எழுதிய ‘அய்யன் காளி’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டதை முன்னுரையில் நிர்மால்யா குறிக்கிறார். சி.அபிமன்யு அய்யன் காளியின் பேரர் என்பதை ஏனோ குறிப்பிடவில்லை.
திருவிதாங்கூர், கொச்சி, மலபார் ஆகிய பகுதிகளில் 19 ஆம் நூற்றாண்டில் புலையர்கள் பற்றிய தகவல்கள் பின்னிணைப்பாக தரப்பட்டுள்ளது. ‘புலம்’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு வயல், நிலம், நாடு எனப் பல பொருளுண்டு. நிலத்தோடு தொடர்புடையவர்கள் புலையர் எனப்பட்டனர். அசுத்தமானவர்களை புலையர் என்று அழைத்து பின்பு அதுவே நிலைத்துவிட்டதாகவும், பள்ளர் என்ற சொல்லிலிருந்து புலையர் என்ற சொல் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டுப் பள்ளர்களுக்கும் திருவிதாங்கூர் புலையர்களுக்கும் ஒற்றுமை உண்டு என்றும் சொல்கின்றனர்.

அய்யன் 01
கடும் உடலுழைப்பைக் கொண்ட புலையர்களை பிராமணர்கள், சத்திரியர்கள், நாயர்கள், கிருஸ்தவர்கள் ஆகியோர் இணைந்து அடிமைப்படுத்தினர். அடிமைகள் வியாபாரம், வாடகை, கைமாற்று, பரிசு, அடகு வைத்தல் போன்றவற்றை செய்வது உரிமையாளர்கள் விருப்பம். அடிமைகள் கால்நடைகள் போல் ஏரில் பூட்டி நிலத்தை உழுதார்கள். வீட்டை விற்கும்போது அடிமைகளும் சேர்த்து விற்கப்பட்டனர். ஓர் அடிமைக்கு ரூ.6 முதல் ரூ.9 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இவர்களை அடிக்க, சிறை வைக்க, முடமாக்க உரிமையாளருக்கு அதிகாரமிருந்தது. அடிமைகளை விற்கவோ, கொல்லவோ செய்யலாம் என்ற விதியில் ‘கொல்லலாம்’ என்பது பின்னர் நீக்கப்பட்டது. அடிமையின் மூத்தமகன் எஜமானுக்கு உரிமையானவன். அவன் தேவைப்பட்டால் நாலரை ரூபாய் கொடுத்து பெற்றோர் மீட்டுக்கொள்ளலாம். ஜமீன்தார்கள் ஜன்மம், காணம், பாட்டம் ஆகிய மூன்று முறைகளில் கைமாற்றி பணம் சேர்த்தனர். அடிமைகள் காலில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சந்தைகளில் இழுத்துவந்து விலங்குகளைப் போல விற்கப்பட்டனர்.
திருவிதாங்கூர் புலையர்களில் தண்டப் புலையர், காணப் புலையர், மேற்குப் புலையர், கிழக்குப் புலையர், தெற்குப் புலையர், வள்ளுவப் புலையர் என ஆறு வகை உண்டு. பல்வேறு இடங்களில் விரவிக் காணப்படும் இவர்களிடம் மொழி, வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் சிறிய வேற்றுமைகள் காணப்பட்டன. தெற்குப் புலையர்களில் (வலவர்) இனப் புலையர் (இடவர்) என்ற இடங்கை, வலங்கை போன்ற பிரிவும் உண்டு. அய்யன் காளி தெற்குப் புலையர் பிரிவைச் சேர்ந்தவர்.

அய்யன் 02.jpg
தெற்குப் புலையர்களிடம் பலதார மணம் அரிது. ஒன்றிற்கு மேற்பட்ட கணவர்களைக் கொண்ட பெண்கள் இருந்தனர். பெரும்பாலும் கணவரின் சகோதரர்கள் இவ்வாறு இருப்பதுண்டு. பெண் தனது கைவிடும் உரிமை பெற்றவள். அப்படி செய்யும்போது ஆணுக்கு திருமணச்செலவைத் தரவேண்டும். ஆனால் ஆண் மனைவியைக் கைவிடும்போது அவளுக்கு பணம் அளிப்பதில்லை.
இவர்களது பேச்சுமொழி மலையாளமாக இருந்தபோதும் சரியான உச்சரிப்பின்றி நீட்டி, குறைத்து மலையாளத்தைப் பேசினர். தென் திருவிதாங்கூர் புலையர்களின் மொழியில் தமிழ்க் கலப்பிருந்தது. ஜமீன்தார்களிடம் பேசும்போது தூர நின்று வாயைப் பொத்தியபடி பேசவேண்டும். உயர்த்தப்பட்ட சாதியினர் ‘ஹோய்’ என்று குரல் கொடுத்தபடி பொது இடங்களில் நடந்து செல்வர். அதைக் கேட்ட புலையர் ‘ஞ்சாவோ’ என்று குரல் கொடுத்து ஓடி மறையவேண்டும். தீண்டத்தகாத புலையர்கள் தீண்டிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. இங்கு ‘தீண்டல்’ என்பது தொடுதல் அல்ல; ஓர் குறிப்பிட்ட தூரம் விலகாதிருப்பது ‘தீண்டல்’ என்று இங்கு பொருள்படும். தொடுதலால் உண்டாகும் தீட்டு ‘தொடீல்’ எனப்பட்டது. தெற்குப் பகுதியிலுள்ள புலையர்கள் பிராமணனிடமிருந்து 90 அடியும், நாயர்களிடமிருந்து 64 அடியும் தள்ளி நிற்கவேண்டும்.

சாதிப்படிநிலைக்குத் தக்கவாறு தூரம் குறையும். ஒரு பிராமணன் புலையனிடம் ஏதேச்சையாக சென்றுவிட்டால், உடன் அவன் பூணுலை அறுத்துவிடுவான். பிறகு ‘சுத்திச்சடங்கு’ செய்துதான் மறுபடி பூணுல் அணியவேண்டும். தீண்டல், தொடீல் என்பன மோசமான தீண்டாமைக் கொடுமைகளாகும்.
சிறிய தவறுகளுக்கு கூட கடுமையான தண்டனைகளை ஜமீன்தார்கள் வழங்கினர். சாட்டையடி, முக்காலியில் கட்டிவைத்து அடித்தல், பழுக்க வைத்த கம்பியால் உடம்பில் சூடு வைத்தல், கண்ணில் சுண்ணாம்பு வைத்தல், பல்லை உடைத்தல் போன்ற தண்டனைகளும் கொடிய சித்ரவதைகளும் வழக்கில் இருந்தன.
கொச்சிப் பகுதி புலையர் ‘செறுமர்’ எனப்பட்டனர். இவர்களில் கணக்கச் செறுமன், புலச் செறுமன், இராளன் (இறச் செறுமன்), ரோளன், கொங்கச் செறுமன், கூடான் என்கிற உட்பிரிவுகளும் உண்டு. மலபாரின் வடபகுதியில் ‘புலையர்’ என்றும் தெற்குப் பகுதியில் ‘புலச் செறுமர்’ என்றும் அழைக்கின்றனர். எல்லாப் பகுதிகளிலும் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. புலையர்கள் சாத்தான், காளி, அழகன், தேவன், மைலன், குறும்பன், கிளியன், தெய்வத்தான், சடையன், சோதி என்ற ஆண்பெயர்களையும் அழகி, மாலை, கரம்பி, வெளும்பி, பூம, தளிரி ஆகிய பெண்பெயர்களையும் சூட்டியுள்ளனர்.
இந்தியாவில் நால் வருண அமைப்பின் தோற்றம், அதற்கான புராணங்கள், கட்டுக்கதைகள் நாமறிந்தது தானே. புரோகிதம், யாக கர்மங்கள் செய்த பிராமணர்கள், ஆயுதம் கொண்டு போர் செய்த சத்திரியர்கள், வேளாண்மையிலும் வணிகத்திலும் ஈடுபட்ட வைசியர்கள், அடிமைவேலை செய்யும் ‘தஸ்யூக்கள்’ மற்றும் ‘தாசர்களான’ சூத்திரர்கள் என்ற வருணப் பாகுபாடு தோன்றியது. இந்த நாண்கில் உட்படாதவர்கள் பஞ்சமராயினர். முதல் மூன்று வருணத்திடமிருந்து சூத்திரர்கள் இழிவு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டனர். ‘அக்னி புராணம்’ வருண தர்மங்களை விவரிக்கிறது.
பிராமண, சத்திரிய, வைசியர்கள் ‘மூவருணம்’ என அழைக்கப்பட்டனர். இவர்களே ஸ்வர்ணர்; அதாவது உயர்த்தப்பட்ட சாதியினர். கேரளாவில் வைசிய சாதி இல்லை. பிராமணர், சத்திரியர், சூத்திரர்கள் (நாயர்) ஆகியோர் ஸ்வர்ணர் தகுதியடையவர்கள். பிராமணக் கலப்பால் கேரள சூத்திரர்களான நாயர்கள் ஸ்வர்ண தகுதியை அடைந்தனர். ஈழவர், அரையர், ஆசாரி, தட்டார், கொல்லர் முதல் பறையர், புலையர் போன்றவர்கள் அவர்ணர் எனப்பட்டனர். அவர்ணர்களை கண்ணில் படக்கூடாதவர்கள், நெருங்கக் கூடாதவர்கள், தொடக்கூடாதவர்கள் எனப் பாகுபாடு செய்யப்பட்டது.
அவர்ணர்களைக் காரணமாகக் கொண்டு ஸ்வர்ணப் பெண்களைக் கொடுமைக்குள்ளாக்கும் புலையப் பயம், பறையப் பயம், வண்ணான் பயம் என்கிற கொடுமைகள் கி.பி. 1696 தை மாதம் 25 ஆம் நாள் வேணாடு அரசர் உண்ணி கேரள வர்மாவால் தடை செய்யப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தோவாளை, கல்குளம், அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரை ஆகிய பகுதிகளிலுள்ள சாணார்கள் (நாடார்கள்) பெருவாரியாக கிருஸ்தவ மதத்திற்கு மாறினர். இவர்கள் மார்பை மறைக்க ஜாக்கெட் அணியத் தொடங்கினர். கி.பி. 1813 இல் திவான் இட்ட உத்தரவு, கிருஸ்தவப் பெண்கள் மேல்சட்டை அணிந்து மார்பை மறைத்துகொள்ளலாம், அதை யாரும் தடுக்கக் கூடாது, ஆனால் நாயர் பெண்கள் பாணியில் மார்பை மறைக்கக் கூடாது என்று அறுவுறுத்தியது.
ராணி கௌரி பார்வதிபாய் ஆட்சிகாலத்தில் கி.பி. 1822 இல் கல்குளத்தில் தோள்சீலைப் போராட்டம் (சாணார் கலகம்) உருவானது. நாயர்கள் சாணார் பெண்கள் சந்தைக்கு சென்றபோது அவர்களின் ஜாக்கெட்டை கிழித்து மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்டனர். வழக்கு பத்மநாமபுரம் நீதிமன்றம் செல்ல, கிருஸ்தவ மதத்தில் இணைந்த பிறகு அவர்கள் சாணார்கள் அல்ல. அவர்கள் ஜாக்கெட் அணிவது தவறல்ல என்று தீர்ப்பு சொல்லப்பட்டது. எனவே கிருஸ்தவப் பெண்கள் மார்பை மறைக்கத் தொடங்கினர். 1828 இல் மீண்டும் நாயர்கள் ஜாக்கெட்டுகளை கிழித்து அவமானப்படுத்தும் இழிசெயலில் இறங்கினர். கிருஸ்தவர்கள், சாணார்கள் மீது கொடிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
1829 இல் ராணி கௌரி பார்வதிபாய் அளித்த உத்தரவில், “சாணார் பெண்கள் மேலாடை அணிவது நியாயமில்லை. இனி மேலாடை அணியக்கூடாது. கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்த சாணார் பெண்களும் மேலாடை அணியாமல் ஜாக்கெட் மட்டும் அணிந்துகொள்ளலாம்”, எனக் கூறப்பட்டது.
18568 –ல் பிரிட்டிஷ் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையில், மதம் சார்ந்த பழக்கவழக்கஙக்ளில் தலையிடக்கூடாது, என்று சொல்லப்பட்டது ஸ்வர்ணர்களுக்கு சாதகமாக அமைந்தது. தோள்சீலைப் போராட்டத்தில் இரண்டாம் கட்டம் மார்த்தாண்ட வர்மா ஆட்சிக்காலத்தில் 1859 இல் நடந்தது. மறுபடியும் நாயர்களின் ஜாக்கெட் கிழிப்பு அவமான இழிச்செயல் தொடர்ந்தது. கிருஸ்தவ மிஷினரிகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள் தீயிடப்பட்டன. சாணார்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இவர்களும் சில இடங்களில் எதிர்வினை புரிந்தனர்.
1859 ஜூலை 26 இல் மார்த்தாண்ட வர்மா வெளியிட்ட ஆணைப்படி, சாணார் பெண்கள் தங்கள் இன உணர்வுக்குத் தகுந்தவாறு தங்கள் நிர்வாணத்தை மறைக்கலாம். ஆனால் உயர்சாதியினரைப் பின்பற்றக்கூடாது, என்று சொல்லியதை கவர்னர் ஏற்காததால் இந்த நிபந்தனை விலக்கப்பட்டது. தோள்சீலை அணியும் உரிமையை பல்வேறு போராட்டங்களுக்கிடையே நிலைநாட்டினர்.
(இதுவே அய்யன் காளி பிறப்பிற்கு முந்தைய சமூக நிலை. அய்யன் காளியின் போராட்டங்களை அடுத்த பகுதியில் காண்போம்.)
இரண்டாம் பகுதியில் …. தொடரும்…

 

கேரளத்தின் முதல் தலித் போராளி – அய்யன் காளி (வரலாறு)
நிர்மால்யா

முதல் பதிப்பு: அக்டோபர் 2001
இரண்டாம் பதிப்பு: மே 2007
பக்கம்: 173
விலை: ரூ. 85

தொடர்புக்கு:

தமிழினி,
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை – 600014.
பேசி: 98844196552
மின்னஞ்சல்: tamizhininool@gmail.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s