27. சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரம்


27. சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரம்
(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

மு.சிவகுருநாதன்
(பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான ‘Books for Children’ வெளியிட்டுள்ள. ச.மாடசாமியின் ‘என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா’ என்னும் கல்வியியல் நூல் அறிமுகம்)

தி இந்து, செம்மலர், சமத்துவக் கல்வி போன்ற இதழ்களில் எழுதிய கல்வியாளர் ச.மாடசாமியின் சமீபத்திய 10 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னட்டை சொல்லும் குறிப்பைப் போல தனது நீண்ட கல்வியியல் அனுபவங்களை மிகவும் எளிமையாகச் சொல்லிப்போவது சிறப்பு.
துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து பிறக்கும் அதிகாரத்தைப் போல சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரத்தை தலைப்புக் கட்டுரையான ‘என் சிவப்பு பால்பாயிண்ட பேனா’ மிக அழகாகக் கட்டுடைக்கிறது. தேர்வுகள் உருவாக்கும் இந்த அதிகாரம் நிரந்தரமானதல்ல; உதிரக்கூடியது. ஆசிரியர்கள் மட்டுமல்ல; எல்லா சர்வாதிகாரிகளும் பயந்தாங்கொள்ளிகளே! அதிகாரம் பயத்தையும் உபரியாக உற்பத்தி செய்கிறது. அதனால்தான் “அதிகாரமற்று இருப்பதைப் போன்ற மகிழ்ச்சி வேறு எதில் இருக்கிறது”, என்று சொல்கிறார். கல்வி வழங்கிய இந்த அதிகாரத்திலிருந்து விடுபட்ட நிகழ்வை, எண்பதின் தொடக்கத்தில் வெறொரு சிவப்பு மை என் பேனாவுக்குள் நிரம்பியது. என் சிந்தனைப் போக்கையே மாற்றிய மை அது”, என கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.
குழந்தைகளுக்குப் பள்ளிகளில் நடக்கு அவமதிப்புகள் ஒவ்வொன்றும் மரணமே என்கிறது அடுத்த கட்டுரை. பெற்றோர் சூட்டிய பெயர்களுக்காக, சொல்லிக் கொடுத்தபடி நடன அசைவை வெளிப்படுத்தாதற்காக, சொன்னபடி ஓவியத்தை வரையாததற்காக, காது கேளாமை, டிஸ்லெக்சியா போன்ற பிரச்சினைகளுக்காக என குழந்தைகள் மரணம் ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. இந்தக் குழந்தைகளின் வலி – வேதனை – உயிருடன் மரணம் நாம் மாறவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றன.
வகுப்பறையில் ஆசிரியரின் அதிகாரம் மட்டுமல்ல; ஏகபோகமும் துடைத்தெறியப் படவேண்டிய ஒன்றே. வகுப்பறை ஆக்ரமிப்புகளிலிருந்து ஆசிரியர்கள் வெளியேற ஆசிரியர்கள் அல்லாத பிறரை கற்றல்- கற்பித்தலுக்குப் பயன்படுத்துவது என்ற உத்தியை விவாத வடிவில் மிக இலகுவாக அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறார். ஓவியர்கள், கதை சொல்லிகள் என பிறர் பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம் ஆக்ரமிப்பை அகற்றி வகுப்பறை உயிர்ப்புள்ளதாக மாற்றலாம். நாம் வழக்கமாக செய்கின்ற பேச்சாளிகளையும் பிரசங்கிகளையும் இதில் தவிர்த்து விடுவது நலம். இவர்களது ஆக்ரமிப்பு மிகக் கொடுமையானது.
வடிவமைத்தல், மதிப்பிடுதல், வடிகட்டுதல் போன்ற நுட்பமான அதிகாரங்கள் நிறைந்த பள்ளி அதிகாரங்களை எளிதில் உடைக்க முடியுமா? அதிலிருந்து தப்பித்து வெளியேறுவதுதான மாணவர்களுக்குள்ள ஒரே வழி. எனவேதான் தப்பித்த குரங்குகள் சிறப்பானவை. தலையிட்டுத் தலையிட்டு வடிவமைக்காத திறமைகள், கூண்டுக்குள் சிக்காத குரங்குகள் நிறைந்த சுதந்திர வெளியான அரசுப்பள்ளிகள் பாழ்வெளியாக மாறும் கவலையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தனியார் பள்ளி வணிகத்தை முற்றாக ஒழித்து, அருகாமைப் பள்ளிக்கான முதல்படியை அரசும் ஆசிரியர்களுமே எடுக்கவேண்டும். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீட்டுக் குழந்தைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்கவேண்டும் உள்ளிட்ட மாற்றங்கள் அவசியத் தேவையாகும்.
சில ஆசிரியர்களின் வகுப்பறைச் சோதனை முயற்சிகள் கவனிக்காமல் படாமற்போகும் ஆதங்கம் குறித்துப் பேசும்போது, அவற்றிற்கான எளிய தீர்வுகளை முன்வைக்கிறார். பகிர்வது, வாசிப்பது ஆகிய இரண்டுமே அது. ‘டோட்டோசான்’ என்னும் நூல் எழுதிய டெட்சுகோ குரோயாநாகி, ‘பகல் கனவை’ எழுதிய கிஜூபாய் ஆகிய இரு உதாரணங்களைத் தருகிறார்.
டெட்சுகோ குரோயாநாகியின் குழந்தைப் பருவ அனுபவங்களே இந்நூலில் விரிகின்றன. டோட்டோசான் போன்ற விரட்டப்பட்ட குரங்குகளுக்காக ஜப்பானியக் கல்வியாளர் கோபயாட்சி நடத்தும் ரயில்பெட்டிப் பள்ளி விளையாட்டு முறையில் பாடங்களைக் கற்க செய்கிறது. இரண்டாம் உலகப்போர் குண்டு வீச்சில் சாம்பலானது இப்பள்ளி. விளம்பர வெளிச்சம் படாத இப்பள்ளி பிறகு மீண்டெழவேயில்லை என்கிற வருத்தமும் பதிவு செய்யப்படுகிறது. வழக்குரைஞரான கிஜூபாய் அரசுப்பள்ளி ஒன்றில் தமது பரிசோதனைகளை மேற்கொண்டவர். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தன்னுடைய ‘பகல் கனவை’ நனவாக்கியவர்.
“யாருக்குப் பேய் பிடிச்சுருக்கு?”, விளையாட்டு வகுப்பறையைக் கலகலப்பாக்குகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் இருவேறு உலகங்கள், பண்பாடுகள் என்பதை உணர்த்துகின்ற நிகழ்வு இது. ஆசிரியர் – மாணவர் உறவு இரு அதிகாரங்களாகச் செயல்படுவது எப்போதும் சிக்கல்தான். எனவே இரு பண்பாடாகத் தொடர்வது நலமென்கிறார்.
மருத்துவ விடுப்பெடுக்க, வருங்கால வைப்பு நிதியில் பொய் சொல்லக் கூசாத ஆசிரியச் சமூகம், மாணவர்களின் பொய்களை பூதாகரமாக்குவது தேவையா என்று வினா எழுப்புகிறார். வகுப்பறையில் பொய்களுக்கும் இடம் வேண்டும். வகுப்பறைப் பொய்யை வைத்து மாணவரது நேர்மையை அளவிடமுடியாது. பல பொய்கள் சிரித்துக் கழிக்கவேண்டியவை, என்றும் சொல்கிறார். அதிர்ச்சியாக இருக்கிறதா? பிறகெப்படி வகுப்பும் மனசும் விசாலமாகும்?
1990 களில் புதிய அலையாய் வந்த அறிவொளி இயக்கம் ‘பட்டா, படி’ என கற்றல் – கற்பித்தலில் புதிய வெளிச்சமும், அதுவரையில் கல்வியில் ஆதிக்கம் செய்த மொழியும் மத்தியதர வர்க்க சிந்தனையும் உடைந்தது. முறைசார் கல்வியில் ஏற்பட்ட இம்மாற்றம் பள்ளிக்கல்வியில் முழுதாக எதிரொலிக்க இயலாமற்போனதேன்? இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட உத்திகளும் திட்டங்களும் (SSA, RMSA) அதிகாரங்களையே கட்டமைத்தன. கல்வி உரிமைச் சட்டத்திற்கு இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்தோம். இனியும் எவ்வளவு ஆண்டுகள் கடக்கவேண்டும் நாம்?
பள்ளிகள் வெளிப்புறத்தில் மாற்றங்கள் பல கண்டாலும் அதன் அடிப்படை மாற்றமடையாமல் இருக்கிறது. அதை சரிசெய்ய சீனாவில் மாவோ செய்த கலாச்சார புரட்சி போன்ற ஒன்றால்தான் முடியும். கல்வி ஒழுங்குப்படுத்துதல் என்கிற பேயரில் அதிகார மையமாக, பிறிதொரு மதமாக பள்ளி உருவாகியுள்ளது. சமத்துவம் என்பது பள்ளி, கல்விச்சூழலில் இல்லை. மாறாக பாகுபாட்டை விதைக்குமிடமாக பள்ளி அமைவது விநோதம்.
கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழும் வரலாறும் இளக்காரமான, தலித் மாணவர்களுக்கு கிடைத்த படிப்பு என்கிறார். இது முற்றிலும் உண்மைதான். மேனிலை வகுப்புகளில் செய்யப்படும் 450 மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குத்தான் கணிதம், அறிவியல் பிரிவு என்ற வடிக்கட்டல்தானே இதற்குக் காரணம். அரசுப்பள்ளிகளிலும் இதே நிலைதான். 450 வேண்டுமானல் 400 ஆகலாம். இங்கு இடஒதுக்கீட்டை அமல் செய்ய யாரும் விரும்பபில்லையே. அது ஏன்?
ஆசிரியராவது மாவோவின் கனவுகளுல் ஒன்று. “மாட்டின் மேல் வளர்ந்துள்ள முரட்டு மயிர் போல பாடத்திட்டம் கடுமையாக இருப்பதை”, உணர்ந்தவர் அவர் எனவே கலாச்சாரப் புரட்சியின் போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த அதிரடி மாற்றங்களினால் எதிவிளைவுகள் உண்டானாலும் சீனாவில் எழுத்தறிவின்மை கணிசமாகக் குறைந்ததைச் சுட்டுகிறார்.
பட்டம் பெற்றாலோ, பயிற்சிகள் பெற்றாலோ நமக்கு தேவையற்ற கொம்புகள் முளைத்துவிடுகின்றன. எனவே சீனாவில் வீடு அல்லது பணியிடங்களில் தேடி வந்து மருத்துவம் செய்யும் (Bare Foot Doctors) மருத்துவர்களைப் போல ‘மிண்பன்’ என்னும் பயிற்சி பெறாத ஆசிரியர்களை நியமித்தனர். அதிகாரத்தை உடைக்க இதுவும் ஓர் வழிமுறைதான். முரட்டுத்தனமாக பழைய பாடங்களை நீக்கிவிட்டு கனமான கம்யூனிசப் பாடங்களை சுமத்தியதும் தவறு என்கிறார். புரட்சிக்குப் பின்னும் இவற்றை மாற்ற முடியவில்லை; பள்ளிகளில் சுபாவத்தை மாற்றுவது கடினம் என்று ரெய்மரை மேற்கோள் காட்டுகிறார்.
ஆசிரியர்களுக்கு இன்றுள்ள கல்விச்சூழல் கோபத்தை விதைக்கிறது. இது மாணவர்களை மிகவும் துன்புறுத்துவதாக அமைகிறது. இவற்றைக் கடக்க ஜென் மனநிலையைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்கள் பெற்றுகொள்ள விரும்பாத திட்டுக்கள், வசைகள் மீண்டும் திட்டியவரை வந்தடைதல், உண்மைகளை நம்பிக்கையாக மாற்றுதல், நிரம்பிக் கிடக்கும் கோப்பையைக் காலி செய்தல் என ஜென் கதைகள் நம்மை வேறு தளத்தில் பயணிக்க வைக்கின்றன. ஆசிரியர்கள் மூளை நிரம்பி வழிந்துகிடக்காமல், கற்றுக்கொள்வதற்கு திறந்த மனத்துடன் கோப்பைகளைக் காலியாக வத்திருக்க வேண்டுமே. கோப்பைகளைக் காலி செய்ய நீண்டகாலம் ஆகுமென்று ஐயுறவேண்டுயுள்ளது.
பேரா.மாடசாமி அவர்களின் சுய எள்ளல், தெளிவான நடை, தொனி ரசிக்கும்படி உள்ளது. இந்நூல் கல்வியில் ஓர் கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்த உதவிபுரியட்டும்.

என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா
ச.மாடசாமி
வெளியீடு:
Books for Children (பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்)
முதல் பதிப்பு: செப்டம்பர் 2015
விலை: ரூ. 50
பக்கம்: 80

பாரதி புத்தகாலயம்,
7 இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: thamizhbooks.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

One Response to 27. சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரம்

  1. அருண்மொழிவர்மன் சொல்கிறார்:

    வணக்கம்,

    உங்கள் பதிவுகளை குறிப்பாக அண்மைக்காலமாக நீங்கள் எழுதிவருகின்ற “இந்நூல் என் வாசிப்பில்” தொடரை வாசித்துவருகின்றேன். இது போன்ற முக்கியமான புத்தகங்களை அறிமுகம் செய்வது ஆக்கபூர்வமானது. நன்றிகள்.

    அருண்மொழிவர்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s