28. கொள்ளையர்கள் கையில் கல்வி


28. கொள்ளையர்கள் கையில் கல்வி

(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

மு.சிவகுருநாதன்

 

(‘களவு போகும் கல்வி’ என்ற மு. நியாஸ் அகமது  எழுதி ‘இயல்வாகை’ வெளியிட்ட WTO & GATS ஒப்பந்த எதிர்ப்புக் குறுநூல் குறித்த அறிமுகப் பதிவு.)

 

களவு போகும் கல்வி.jpg

1990 களில் உலகமயத்தின் விளைவுகள் குறித்த கரிசனங்களை தமிழில் சிறுபத்தரிக்கை சார்ந்த அரசியல் இதழ்கள் முன்னெடுத்தன. நிகழ், நிறப்பிரிகை போன்ற இதழ்களின் பங்கு பணிகள் குறிப்பிடத்தக்கன. வழக்கம்போல வெகுஜன தமிழ் இதழ்கள் எப்போதும் போல் இவற்றைக் கண்டு கொள்ளவில்லை. பல்வேறு நிலைகளில் உலகமயத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் நாம் கல்வியிலும் இதன் பலனை நேரடியாக அனுபவிக்க இருக்கிறோம். 25 ஆண்டுகளாகியும் சூழல் பெரிதும் மாறி விடவில்லை; மாறாக அப்படியேதான் உள்ளது.

ஆர்தர் டங்கல் வகுத்தளித்த ‘டங்கல் திட்டத்தின்’ அடிப்படையில் ‘காட் ஒப்பந்தம்’ (GATT – General Agreement on Tariffs and Trade) உருவாக்கப்பட்டது. ஆர்தர் டங்கல் ஓர் வழக்கறிஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் நலன்களை முன்னிறுத்திச் செயல்படும் சர்வதேச செலவாணி நிதியம் (IMF) போன்றவற்றைப் போல இயற்கை வளங்கள் மிகுந்த ஏழை நாடுகளைச் சுரண்டிப் பெருக்க 1995 இல் (WTO – World Trade Organization) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இன்று இவ்வமைப்பில் 160 க்கு மேற்பட்ட உறுப்பு நாடுகள் உள்ளன.

அறிவு சார் சொத்துரிமைக்கான TRIPS (Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights) ஒப்பந்தமும் அனைத்து வணிகத்திற்கான GATS (General Agreement on Trade in Services) ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்களிடம் கடன் பெறும் இந்தியா போன்ற இவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை வெட்டப் பரிந்துரைக்கும் இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கோடிக்கணக்கிலான மானியங்கள் குறித்து ஏதும் பேசுவதில்லை.இதிலிருந்து இவர்களது சார்புத்தன்மை வெளிப்படும்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் டிசம்பர் 15 – 18 இல் நடந்த WTO & GATS மாநாட்டில் உயர்கல்வியை வணிகமயமாக்கும் GATS ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றிருக்கும். இவற்றை மிகவும் மந்தனமாகவும் சூழ்ச்சியாகவும் செய்வதன் பின்னணி நாமனைவரும் அறிந்த ஒன்றுதான்.

மு.நியாஸ் அகமது எழுதிய ‘களவு போகும் கல்வி’ என்னும் இக்குறுநூலில் இதன் அபாயங்களை, நாம் கல்வியில் எதிர்கொள்ளப் போகும் பாடுகளை மிக எளிமையாக மூன்று கட்டுரைகள் வழியே சுருக்கமாக விளக்கியுள்ளார். இதன் தீவிரத்தை உணர்த்த அதிர்ச்சியளிக்கக்கூடிய மூன்று தலைப்புக்களை தந்துள்ளார்.

இனி உங்கள் குழந்தைகள் கிராக்கி என்று அழைக்கப்படுவார்கள்…
உங்கள் வீட்டுப் பெண்ணை அரசன் படுக்கைக்கு அழைத்தால் சம்மதமா?
காந்தியும் பகத்சிங்கும் தேசத் துரோகிகள்…

வெறும் அதிர்ச்சி, திடுக்கிடல், கோபம் மட்டுமல்ல; உண்மை நிலையும் இதுதானே! கல்வியைப் பண்டமாகவும் மாணவர்களை நுகர்வோராகவும் மாறினால் வேறன்ன நடக்கும்? இதன் தீவிரத்தை உணர்த்த கடுஞ்சொற்கள் தேவைப்படுகிறது. ஆனால் இவற்றால் நமது தமிழ் மற்றும் இந்திய சமூகத்தை சுரணையுள்ளதாக மாற்ற முடியுமா?; அய்யமே மிஞ்சுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு வந்தபோது ஆளும் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், ஊடகங்கள் என பெரும்பாலானோர் பேசியதும் நாடாளுமன்றம் முடங்கியதும் நடந்தது. இதை ஒப்பிடுகையில் இன்று உயர்கல்வி முற்றாக வணிகமயமாகும்போது எதிர்ப்பு பெரிதாக இல்லை. பெரிய கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கின்றன. சில வெறுமனே ஓர் அறிக்கை மட்டும் விடுக்கின்றன. ஆசிரியர் சங்கங்கள் இருக்குமிடம் தெரியவில்லை. வணிகர்களின் போராட்டக் குணத்தில் துளிகூட இவர்களிடம் இல்லையே ஏன்?

‘காட்ஸ்’ ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆசிரியர்கள், கட்சிகள் எதிர்ப்பு வெகு சொற்பம். ஆசிரியர்கள் சமுதாயம் இன்று மக்களிடம் மிகவும் அந்நியப்பட்டுள்ளது. ‘பூர்ஷ்வா’ வர்க்கமாக மாறிப்போன ஆசிரியர்களையும் அதன் தலைமைகளையும் மீட்டெடுக்க இன்னும் கடின வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டியிருக்கும். இந்நூல் அதற்கான முதல்படிதான். பொதுமக்களுக்கு மட்டுமல்ல; ஆசிரியர்களுக்கும் இதன் தீவிரத்தை உணர்த்த வேண்டியுள்ளது.

‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு முன்னுரையில் சொல்லியது போல், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை அனுமதித்துவிட்டால் ஒட்டுமொத்த உயர்கல்வியும் நம் கைவிட்டுப் போகும். நமக்குத்தான் கல்வி உரிமை. அவர்களுக்கோ கல்வி ஓர் வியாபாரம். எனவேதான் வர்த்தக அமைச்சர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறார்.

இவ்வொப்பந்தத்தின் மூலம் உலகத்தரமான கல்வி கிடைக்கும் என்பது வெறும் மாயை என்பதை விளக்க, “நன்கு அறியப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைகழகங்கள் பின்தங்கிய நாடுகளில் தரமற்ற கிளைகளையே நிறுவியுள்ளதை”, வெளிப்படுத்தும் அய்.நா.வின் ஆய்வறிக்கை போதுமானது. மான்சாண்ட்டோ நிதிநல்கையில் செயல்படும் பல்கலைக் கழக ஆய்வுகள் பொதுமக்களுக்கு எந்தப் பயனுமின்றி அந்நிறுவனங்களைக் கொள்ளை லாபமடிக்க உதவுவதை நேரடி அனுபவத்தில் உணர்ந்துள்ளோம். நாளை அவர்களே பல்கலைக் கழகங்கள் தொடங்கினால் நம் சுயசிந்தனையும் தற்சார்பும் அழியும் என நியாஸ் எச்சரிக்கிறார்.

உள்ளூர் கல்விக் கொள்ளையர்களின் பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்வி கிடைத்துவிட்டதா என்ன? இந்த தரத்திற்கான அளவுகோல் எது? பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைகளை வார்த்தெடுக்கும் வேலையைத்தானே இவைகள் செய்கின்றன. இவற்றில் அரசின் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்து சமாதி கட்டும் வேலையையும் இவர்கள் சேர்த்து செய்வார்கள்.

தொலைதொடர்புத் துறையில் ஈடுபடாத நிறுவனங்கள் ஏலத்தில் குறுக்குவழிகளில் அலைக்கற்றைகளைப் பெற்றது நாமறிந்த செய்திதான். கல்வி வணிகத்திலும் மசலா வியாபாரிகளும் இந்தியாவைச் சுரண்டிக் கொழுக்கும் பெருமுதலாளிகளும் கல்விக்கடையை விரிப்பார்கள். கூடவே கார்ப்பரேட் சாமியார்களும் உண்டே. இவர்களுக்கு பாடத்திட்டங்களில் சுதந்திரமளித்தால் என்ன நடக்கும்? காந்தியும் பகத்சிங்கும் தேசத்துரோகியாவது மட்டுமின்றி இன்னும் ஒருபடி மேலேச் செல்வார்கள். கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இப்போதுள்ள பாடத்திட்டங்கள் ஒழுங்கா என்று நீங்கள் வினா எழுப்பலாம். இவற்றில் மாற்றத்தை போராட்டங்கள் மூலம் கொண்டுவரமுடிகிறது. யூனியன் கார்பைடுக்கு எதிரான போராட்டம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடருமென்பது யாருக்குத் தெரியும்?

இன்றைய அரசின் செயல்பாடுகளில் இடஒதுக்கீட்டின் நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை. பொதுப்போட்டி என்பதை உயர்த்தப்பட்ட வகுப்பாருக்கு ஒதுக்கப்பட்டதாக கற்பனை செய்து கொண்டு கணக்கு காட்டுவது இந்திய மற்றும் தமிழக அளவில் பிரசித்தம். (உம்) ஆசிரியர் தகுதித் தேர்வு. மண்டல் குழு பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் ஆன பிற்பாடும் 12% அளவிற்கே பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது என்பது சமீபகால உண்மை. குறைந்து வரும் பணியிடங்களைக் கணக்கிட்டால் இது மேலும் குறைய வாய்ப்புண்டு.

உலகமயத்தின் பின்னணியில் பெருகிவரும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பது இன்னும் கோரிக்கை அளவிலேயே இருக்கிறது. WTO & GATS ஒப்பந்தத்தின் மூலம் உயர்கல்வியிலேயே இடஒதுக்கீடு கேள்விக்குறியாகிறது. உள்ளூர்க் கல்விக் கொள்ளையர்களுக்கு இருக்கிற ஒருசில கட்டுப்பாடுகளைகூட இவ்வொப்பந்தம் தகர்க்கப்போகிறது.

இனி பல்கலைக் கழக மானியக் குழு (UGC) எந்த மானியங்களையும் வழங்காது, அரசுக் கல்லூரிகளில் கட்டணம் உயரும், ‘உங்கள் பணம் .. உங்கள் கையில்’ என சில மாதங்கள் மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, பிறகு மானியமே இல்லை எனச்சொல்ல எவ்வளவு நாள்கள் ஆகும் என வினா எழுப்பப்படுறது.

ஜனநாயகத்தின் அங்கமான் நாடாளுமன்றம், நீதித்துறை என ஒவ்வொன்றாக வீழ்ச்சியுறும் வேளையில் நமது கல்வியை எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கமுக்க ஒப்பந்தங்கள், தகவல் மறைப்பு போன்றவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் கட்சிகளின் மறைமுக செயல்திட்டங்கள் இதன் வழி அம்பலப்பட்டு நிற்கின்றன.

கல்வி வணிகமயமாவதன் ஆபத்தைப் புரிந்துகொள்ள இக்குறுநூல் உதவும். காலம் கடந்த பிறகாவது இதன் பாதிப்பை உணர்ந்து பொதுமக்களும் ஆசிரியர்களும் போராடத் தயாராக வேண்டும். இதுவும் வெறுங்கனவாகப் போய்விடுமா?

களவு போகும் கல்வி

மு. நியாஸ் அகமது

வெளியீடு: இயல்வாகை

நன்கொடை: ரூ. 20

பக்கம்: 30

முதல் பதிப்பு: 2015

தொடர்பு முகவரி:

இயல்வாகை,

குக்கூ குழந்தைகள் நூலகம்,

கயித்தமலை அடிவாரம்,

தாலிகட்டிபாளையம்,

ஊத்துக்குளி – 638751,

திருப்பூர் – மாவட்டம்.

அலைபேசி: 9942118080, 9500125125

மின்னஞ்சல்: kawthihills@gmail.com

குக்கூ குழந்தைகள் வெளி

மின்னஞ்சல்: cuckoochildren@gmail.com

முகநூல்: facebook.com/cuckoochildren

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s