30. வரலாறுகள் கதைகளாய்…


30. வரலாறுகள் கதைகளாய்…

(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

மு.சிவகுருநாதன்

(எதிர் வெளியீடாக ஆகஸ்ட் 2014 –ல் வெளியான, த.வெ.பத்மா ஆங்கிலத்தில் எழுதி, ஜே. ஷாஜஹான் தமிழில் மொழிபெயர்த்த ‘கனவினைப் பின் தொடர்ந்து… வரலாற்றின் கதைகள்’ என்ற நூல் குறித்த அறிமுகப்பதிவு இது.)

ஷாஜகான்.jpg

கதைகள் வரலாறுகள் ஆவதற்கும் வரலாறுகள் கதைகளாகச் சொல்லப்படுபடுவதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஊர் சுற்றுவதை அறிவுத்தேடலுக்கு முன் நிபந்தனையாக்கி, தத்துவஞானியாகவும் மார்க்சிய அறிஞராகவும் அறியப்பட்ட ராகுல்ஜி என்கிற ராகுல் சாங்கிருத்தியாயன் வரலாறுகளை கதைகளாக வடித்த முன்னோடி என்று சொல்லலாம். இவரது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்னும் நூலில் இந்தியத் தொல்குடிச் சமூகத்திலிருந்து நவீன காலம் வரை வரலாற்று நிகழ்வுகளை 20 கதைகள் வழியே எழுதியிருப்பார். தாய்வழி வேட்டை சமூகத்திலிருந்து கதைகள் தொடங்கும்.

இந்நூல் கண. முத்தையாவின் அழகான மொழிபெயர்ப்பில் பல பதிப்புக்களைக் கடந்து விற்பனையில் சாதனை படைத்தது. மனித சமுதாயம், ஊர் சுற்றிப் புராணம் ஆகிய இவரது பிற நூற்கள்.

“மனிதர்கள் இன்று எங்கெங்கு பரவியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஆரம்பத்தில் தோன்றினார்கள் என்று கூறமுடியாது. இவ்வளவு மிகுதியாக அவர்கள் பரவும் நிலையை அடைவதற்கு மனித சமுதாயம், மகத்தான போராட்டங்களை கடக்க வேண்டியிருந்தது. மனித சமுதாயத்தின் வளர்ச்சியை சித்தாந்த ரூபமாக எனது ‘மனித சமுதாயம்’ என்னும் நூலிலே விவரித்திருக்கிறேன். அந்த விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளும்படி சரளமான நடையில் எளிய முறையில் கொடுக்கவேண்டுமென்ற ஆசையால் தூண்டப்பட்டே, இந்தக் கதைகளை எழுதினேன்”, என்று ராகுல்ஜி நூல் முன்னுரையில் குறிப்பிடுவார்.

ராகுல்ஜி.jpg

அதைப்போலவே த.வெ. பத்மா ஆங்கிலத்தில் எழுதிய பத்து வரலாற்றுக் கதைகளை ஜே.ஷாஜஹான் மிக இனிமையாக மொழிபெயர்த்து ‘கனவினைப் பின் தொடர்ந்து… வரலாற்றின் கதைகள்’ என்ற நூலை எதிர் வெளியீட்டால் வெளியிடப்பட்டுள்ளது. பி.சரவணனின் கோட்டோவியங்கள், பக்கங்கள் இருபுறமும் வரலாற்றுச் செய்திகள் என அழகான வடிவமைப்பில் இந்நூல் வந்துள்ளது.

வரலாற்றிலும் அறிவியல் பூர்வமான கேள்விகள் எழுப்ப முடியும். புராணங்களையும் கதைகளையும் அப்படியே எற்றுக் கொள்வது வரலாறல்ல. வரலாற்றைச் செழுமைப்படுத்த அறிவியல் ஆய்வுகள் உதவுவதைப் போலவே ஏன்? எதற்கு? எப்படி? என்று வினாக்கள் எழுப்பதன் வாயிலாக வரலாற்றின் நம்பகத்தன்மையை அதிகரிக்க முடியும்.

“சில கேள்விகளுக்கு ஆய்வின்மூலம் விடை காணலாம்; சிலவற்றிற்கு யூகங்களும் கற்பனைகளும் முடிவாக அமையும். இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இந்நூலின் கதைமாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல்பூர்வமான வரலாற்று உண்மைகளோடுதான் விடை காண முயன்றுள்ளேன்”, என்று பத்மா முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இந்தக் கேள்விகளை வரலாற்றுப்பூர்வமாக சிந்திக்கும்போதும் மேலும் ஆய்வுக்குட்படுத்தும்போதும் நம்முன் கிடைக்கும் விவரங்களை குழந்தைகளுக்குக் கொண்டுசெல்ல எளிமையாக கதைகள் பயன்படுகின்றன. குழந்தைகளுக்கு வரலாற்றையும் அதன் போக்குகளையும் எளிமையாக அறிமுகம் செய்யவும் இக்கதைகள் உதவலாம்.

ஆதிகால வேட்டைச் சமூகத்தில் (காலம்: கி.மு. 3500 க்கு முன்) மனிதனுக்கும் நாய்களுக்கும் உள்ள உறவு முக்கியத்துவம் மிகுந்தது. இவ்வுறவு பரஸ்பர ஒத்துழைப்புடன் இன்றும் தொடர்வது. முதல் கதை ‘வேட்டை’ இதைத்தான் பேசுகிறது. ஆடு, மான் போன்றவற்றை தன்னந்தனியே வேட்டையாடும் மனிதனுக்கு கொடிய பன்றியை வேட்டையாட நாயின் உதவி தேவைப்படுகிறது. பன்றி வேட்டையாடுவதன் மூலம் அவனது சமூக அந்தஸ்து உயர்ந்து குழுத்தலைவனாகிறான்.

சிந்துசமவெளி நகர சந்தைக்கு (காலம்: கி.மு. 2300) தந்தையுடன் மாட்டுவண்டியில் தானியங்களைக் கொண்டுவந்து விற்று, அப்பாவுக்கு கருப்பு மேலங்கியும் அம்மாவிற்கு நீலக்கல் பதித்த கழுத்தணியும் வாங்கும் சிறுவனை ‘நகரத்தில் ஒரு கிராமத்தான்’ கதையில் பார்க்கிறோம்.

கிரேக்கர்கள் இந்தியாவுடன் கொண்டிருந்த (காலம்: கி.பி. 129 – 160) கலாச்சார வணிக உறவு, தற்போதைய ஆப்கானிஸ்தான் காந்தகாரில் மையம்கொண்ட காந்தாரக்கலை (இந்திய – காந்தாரச் சிற்பக்கலை இணைவு), இந்திய-கிரேக்க கலப்பின குழந்தைகள் கிண்டலுக்குள்ளாதல் என்பதாக ‘தாய்மண்’ கதை விரிகிறது.

நூலின் தலைப்புக் கதை, (காலம்: கி.பி. 319 – 540) தந்தை – மகனின் வேறுபட்ட விருப்பங்களையும் இறுதியில் மகனது விருப்பத்திற்கு செவிசாய்க்கும் தந்தையை காணமுடிகிறது. தனது மகன் ஆரியப்பட்டா போல் வானியல் வல்லுநராக ஆசைப்படும் தந்தை, ஆனால் மகனோ சுஸ்ருதா, தன்வந்திரி போல் மருத்துவம் படிக்க ஆசை கொள்கிறான். இறுதியில் மகனது ஆசையைப் புரிந்து கொண்டு அவனது விருப்பத்தை நிறைவேற்றுகிறார். இன்றும் கூட குழந்தைகளின் விருப்பங்கள் தற்காலப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் எந்தளவிற்கு ஏற்கப்படுகிறது என்ற கேள்வி இங்கு எழுவது இயற்கையானது.

உலகக் கல்வி மையமாகத் திகழ்ந்த நாளந்தா பல்கலைக் கழகம், சீன மாணவர் லீ, இந்திய மாணவர் சரிபுத்தா, நாளந்தா நுழைவுத்தேர்வு, இரு நாட்டு கலாச்சார வேறுபாடு, தாய் மண் ஏக்கம், ஹர்ஷரின் தானம், சாதிமுறை, தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றை ‘மேலை நாடு நோக்கி’ (காலம்: கி.பி. 600 – 647) கதை பேசுகிறது.

இக்கதையில் புலையரின் நிலைகண்டு லீ கேள்வி கேட்குமிடத்தில், “நான் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஒருவன் என்ன செய்துவிடமுடியும்?”, என்கிறான் சரிபுத்தன். இந்த சதிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த புத்தனின் பெயரை வைக்காமல் வேறு பெயரை வைத்திருக்கலாம். பிறிதோரிடத்தில், “ஒவ்வொரு நதியும் தனது பாதையின் மூலம் ஒரே கடலைச் சென்றடைவதைப் போலத்தான் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரே இலக்கைச் சென்றடைகிறது”, என்றும் சரிபுத்தன் சொல்வது ஆன்மாவை நம்பாத புத்தம் பெயரைக் கொண்டவன் சொல்வது சரியாக இருக்குமென்று தெரியவில்லை.

பெர்ஷியாவிலிருந்து (இன்றைய ஈரான்) ரஷ்டம் என்ற ஜராதுஷ்டுகள் சிறுவனின் குடும்பம் குஜராத் கடற்கரையில் அகதிகளாய் வந்திறங்குவது ‘புயல்’ (காலம்: கி.பி. 697 – 917) கதை மூலம் விளக்கப்படுகிறது. ஜராதுஸ்டிரா வழிவந்த நெருப்புக் கடவுளான அகூர மஸ்தாவை வணங்கும் இவர்களது புனித நூல் ஜென்ட் அவஸ்தா ஆகும். பெர்ஷியா என்பது திரிந்து இன்று இந்தியாவில் இவர்கள் பார்சிகள் என அழைக்கப்படுகின்றனர்.

சூத்திரர்களுக்கு கோயிலில் நுழையத் தடை இருப்பது பற்றிய கதை (காலம்: கி.பி. 700 – 900) நெசவாளிச் சிறுமியின் ஆசையின் வழி பயணிக்கிறது. முதன்முதலில் தறி பழகும் சிறுமி வேனில், அம்மாவிற்கு சேலை நெய்வதா இல்லை அப்பாவிற்கு வேட்டி நெய்வதா என்ற குழப்பத்தில் கடைசியாக அம்மனுக்கு சேலை நெய்கிறாள். பட்டுச் சேலைக்கு அவர்களது பொருளாதாரச் சூழலில் இடமில்லாது போகவே, பருத்திச் சேலை நெய்து முடிக்கிறாள்.

பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோர் மட்டுமே கோயிலில் நுழைய அனுமதி பெற்றவர்கள் என்று அவளது பெற்றோர் கூறக்கேட்டு வருந்தி, எதிர்க்கேள்வி தொடுக்கிறாள் வேனில். ஓர் சன்யாசினி வேனிலை கோயிலுக்கு அழைத்துச் சென்று பார்வதி தேவியை தரிசனம் செய்வதாக கதை முடிகிறது.

12 ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் ஆகியோர்களில் பல சாதியினரும் பெண்களும் இருந்தனர். சாதியும் பெண்ணடிமைத்தனமும் நிலவிய கட்டத்தில் இவர்கள் சமூகத்தில் மதிக்கப்பட்டனர்; வணங்கப்பட்டனர் என்று குறிப்பு சொல்கிறது. இது எந்தளவிற்கு வரலாற்று உண்மையாகிறது?

புனிதவதியார் என்ற இயற்பெயர் கொண்ட காரைக்கால் அம்மையார், நின்ற சீர் நெடுமாற நாயனார் எனப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியார், சடையனார் என்ற நாயனாரின் மனைவியும் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயுமான இசைஞானியார் ஆகிய மூவரும் பெண் நாயன்மார்கள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்பட்ட ஆண்டாள் ஒரே ஒரு பெண் ஆழ்வார் பெரியாழ்வாரின் வளர்ப்புப் பெண். இவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கோயிலுக்குள் நுழைந்த நந்தன் தீவைத்துக் கொல்லப்பட்டார். அவர் நுழைந்த தெற்கு வாயிலில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டது. ஆண்டாளை பெண் என்பதற்கான சில வைணவப் பிரிவினர் ஆழ்வாராக ஏற்றுக்கொள்வதில்லை. “கடவுள் வேறுபாடுகள் பார்ப்பதில்லை. நான் கற்ற வேதப் புத்தகங்களில் இது பற்றில் எழுதப்படவில்லை”, என்று சன்யாசினி வேனிலிடம் சொல்வதாக கதையில் உள்ளது. இது எவ்வளவு பெரிய பொய்? இந்து பிரச்சாரகர்கள் மக்களை ஏமாற்றும் தந்திரமல்லவா இது! சன்யாசினிகளுக்கு இந்து மதத்தில் அளிக்கப்பட்ட இடமென்பது விமர்சனத்திற்குட்பட்டது. சைவம், வைணவத்தைவிட பிக்குணிகளும் துறவிகளும் இருந்த பவுத்த, சமணம் குறித்த கதைகள் இல்லையே ஏன்? அவையும் இந்திய வரலாற்றில் அடங்கும் தானே!

கோயில்கள் பள்ளியாக இருந்தது என்றால் அங்கு யாருக்குக் கல்வி போதிக்கப்பட்டது? களப்பிரர், ஹர்ஷர், கனிஷ்கர் காலங்களில் இருந்த பொதுப்பள்ளியான கோயில் எக்காலத்திலும் இருந்ததாக சொல்லமுடியுமா? சிறப்பு நாட்களில் கோயில் தெய்வங்கள் கிராமங்களைச் சுற்றினாலும் திரும்பவும் கோயிலுக்கு தீட்டு கழிக்கும் சுத்தி சடங்கு செய்யப்பட்டதல்லவா? பக்தி இயக்கம் ஏன் தோன்றியது? “வருண வேற்றுமைகளை நம்பவில்லை, அனைவரும் சமம் என்றனர்” என்பதெல்லாம் இங்கு மறுதலிக்கப்பட்டவை.

பிற்காலச் சோழப்பேரரசின் காலத்தைக் (காலம்: கி.பி. 907 – 1044) குறிக்கும் ‘படகுப்பாடல்’ கதையில் படகோட்டும் ஏழைச் சிறுவன் ஆதித்தன் கப்பல் வடிவமைக்கும் கனவு, அவனது ஏழ்மைச்சூழல், மாறுவேடத்தில் வந்த சோழப் பேரரசன், ஆதித்தன் கனவை நிறைவேற்ற பெருந்தொகை தர ஒப்புதல் அளிக்கும் பேரரசன் என்பதாக நீள்கிறது. மாறுவேடத்தில் வந்தவன் கரிகால் வளவன் என்று கதை முடிகிறது. பிற்காலச் சோழர்களில் கரிகால்வளவன் இல்லையே! முதலாம் ராஜராஜனா அல்லது முதலாம் ராஜேந்திரனா? வரலாற்றுக் கதையில் காலக்குழப்பம் வரலாமா?

அக்பரின் மகள் மும்தாஜ் (இந்தப் பெயரில் அக்பருக்கு மகள் இல்லை.) ஷாகன் விளையாட்டில் (இன்றைய போலோ விளையாட்டு) காட்டும் ஆர்வம், அக்பரின் அனுமதி, ஆணுக்கு நிகராக வேட்டை மட்டும் விளையாட்டில் ஈடுபடும் அரசகுலப்பெண்கள் பற்றி ‘ஆணென்ன பெண்ணென்ன?’ (காலம்: கி.பி. 1560 – 1605) கதையில் பேசப்படுகிறது. புலிவேட்டையாடும் முகலாயப் பேரரசி நூர்ஜஹான் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவி. அக்பருக்கு பேகம் என்று முடியும் பெயர்களை உடைய பல மகள்கள் உண்டு. இந்தப் பெயர்க் குழப்பத்தையும் தவிர்த்திருக்கலாம். அக்பர் ஓர் இந்துப்பெண்ணை மணந்துகொண்டார் என்பதும் தவறே. அவர் ஒன்றிற்கு மேற்பட்ட இந்துப்பெண்களை மணந்து கொண்டதுதான் வரலாறு.

இறுதிக்கதை சுதந்திரத்தாகம் (காலம்: கி.பி. 1940) விடுதலைப் போராட்டம் குறித்த கதையாகும். ‘வீரபாண்டியன் கட்டபொம்மன்’ திரைப்படத்தில் அம்மை நோயைச் சொல்லி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளிடமிருந்து கட்டபொம்மனைப் பாதுகாக்கும் காட்சி ஒன்று வருமல்லவா? சரன்ஜித் என்ற ‘வானரப்படைச்’ சிறுவன் விடுதலைப் போராட்ட வீரரை பிளேக் நோயாளி என்று சொல்லி தப்பிக்க வைக்கும் காட்சி கதையாக வருகிறது.

சினிமாத்தனமாக இல்லாமல் வேறுமாதிரி கற்பனை செய்திருக்கலாம். நிறைய கதைகளில் கற்பனை வறட்சியை உணரமுடிகிறது. 1853 –ல் முதல் ரயில் போரிபந்தர் முதல் தானே வரை ஓடியதாகக் குறிப்பு சொல்கிறது. இந்த போரிபந்தர் மும்பையில் உள்ள ரயில் நிலையமாகும். குஜராத் போர்பந்தர் என்று குழப்பமடையாமலிருக்க மும்பையை அடைப்புக்குறிக்குள் குறிக்கலாம்.

வரலாற்றை அணுகுவதில் உள்ள குறைபாடுகள் இக்கதைகளிலும் எதிரொளிக்கிறது. வரலாற்றை உரிய முறையில் மீள் வாசிப்புச் செய்யும்போது இன்னும் விசாலமான கதைகள் கிடைக்க வாய்ப்புண்டாகும். கற்பனையும் இன்னும் விரிவடைவதும், குழந்தைகள் மனநிலையை மேலும் புரிந்துகொள்வதும் இம்மாதிரி கதைகளை செழுமைப்படுத்தும். இதற்கு நான் முதலில் குறிப்பிட்ட ராகுலிஜியின் நூலை முன்னுதாரணமாகக் கொள்வதில் தவறில்லை.

கனவினைப் பின் தொடர்ந்து… வரலாற்றின் கதைகள்

நூலாசிரியர்: த.வெ.பத்மா

தமிழில்: ஜே. ஷாஜஹான்

ஓவியங்கள்: பி.சரவணன்

முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2014

பக்கம்: 82

விலை: ரூ. 100

வெளியீடு:

எதிர் வெளியீடு,

96, நீயூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி – 642002.

பேச: 04259 226012

9865005084

மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

இணையம்: ethirveliyedu.in

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s