காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டை ஆதரிப்பதுபோல் நடிக்கும் அரசியல் முகமூடிகளும் மார்க்கண்டேய கட்ஜூ போன்ற சட்டம் அறிந்த முட்டாள்களும்


காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டை ஆதரிப்பதுபோல் நடிக்கும் அரசியல் முகமூடிகளும் மார்க்கண்டேய கட்ஜூ போன்ற சட்டம் அறிந்த முட்டாள்களும்

வழக்கறிஞர் பொ.இரத்தினம்
அமைப்பாளர்
பகத்சிங் மக்கள் சங்கம்
தொடர்புக்கு: 94434 58118

 

பகத்சிங்  (3).jpg

ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏதோ அவசரகதியில் வழங்கப்பட்டதல்ல. நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டதுதான் ஜல்லிக்கட்டுத் தடை. இரு காரணங்களை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. ஒன்று ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றன. மற்றொன்று காளைகளை அடக்குவோருக்கும் கடுமையான காயங்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 2010 முதல் 2014 வரை ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,100 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள், வீடியோக்கள் பலவற்றை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றம் இவ்வாறு முடிவெடுக்கிறது.

ஜல்லிக்கட்டிற்கு இன்று ஆதரவாக கிளம்பியுள்ள கும்பல் மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாகக் கொண்டது. மக்களை ஏமாற்றுவதோடு அரசியல் சட்டத்திற்கு துரோகம் செய்யும் வேலையையும் இவர்கள் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களாக வேறு எந்தப் பிரச்சினைகள் பற்றியும் மக்கள் கவனம் திரும்பாமலிருக்க இது அவர்களுக்கு உதவுகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்களை உதாசீனம் செய்வது, ஜனநாயக மாண்புகளைக் குழிதோண்டிப் புதைப்பது ஆகியவற்றைச் செய்ய நேரம் பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டை ஆதரிக்க இன்று இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இருக்கின்றன. தேர்தல் நேரம் என்பது மிக முக்கியமான காரணம். சென்ற ஆண்டில் எதுவும் செய்யாமலிருந்த மத்திய பா.ஜ.க. அரசு இவ்வாண்டு ஜல்லிக்கட்டிற்கான அறிவிக்கை வெளியிட்டதற்கு இதுதான் காரணம். எனவே அனைவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு முகமூடிகளை அணிந்து கொண்டுள்ளனர். இவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக முன்வைக்கும் காரணங்கள் மிகவும் அபத்தமானவை.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பல்லாண்டுகளாக தொடரும் பழக்கம் என்றால் அனைத்தையும் சுமந்து தீரமுடியுமா? சாதி, தீண்டாமை, சதி என்னும் உடன்கட்டையேறுதல், விதவைக் கொடுமைகள், குழந்தைத் திருமணங்கள், தேவதாசி முறை என்று பல்வேறு பாரம்பரியங்களும் வழக்கங்களும் இங்கு இருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் பாரம்பரியம், கலாச்சாரம் என்று ஏற்றுக் கொள்வார்களா?

ஜல்லிக்கட்டுக் காளைகள் மட்டுந்தான் துன்புறுத்தப்படுகிறதா? ஏர் மற்றும் வண்டியில் பூட்டப்படும் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. இம்மாடுகள் கொடூரமான முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படுகின்றன. இதை யாரும் கேள்வி கேட்கவில்லை என்றும் ஓர் வாதம் சொல்லப்படுகிறது. வேளாண் பணிகளுக்கு விலங்குகள் பயன்படுத்துவதையும் காளைகள் கொண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டையும் ஒப்பிடுவதே தவறு. சமூக நலனிற்காகவும் உணவிற்காகவும் விலங்குகள் கொடுமைகளுக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. இயந்திரங்களின் பயன்பாடு இன்னும் அதிகமாகும்போது இவ்வேலைகளுக்கு மாடுகள் பயன்படுத்துவது ஒரு கட்டத்தில் இல்லாமற்போகும். ஆனால் ஜல்லிக்கட்டு?

po.rethinam.JPG

ஜல்லிக்கட்டை தமிழகம் முழுமைக்குமான கலாச்சாரம், விளையாட்டு என்று சொல்வதே ரொம்ப அபத்தம். தமிழகத்தின் 32 மாவட்டங்களில் எத்தனை இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது? ஒட்டுமொத்த தமிழக மக்கள் தொகையில் எவ்வளவு பேர் இதில் பங்கேற்கிறார்கள்? ஆதிக்கச் சாதிகளின் இந்த விளையாட்டில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளின் பங்களிப்புகள் என்ன? சாதி சமத்துவத்தை உண்டாக்குவதற்காக இப்படி கட்சிகள் எப்போதாவது ஒருங்கிணைந்ததுண்டா? மதுவிலக்கு போன்ற மக்கள் பிரச்சினைகளில் இவர்கள் ஒன்றுபட்டு நின்றதில்லை.

விலங்குகளை உணவுக்காக கொல்லுதல், பால் கறத்தல் போன்றவை இருக்கும்போது ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்வது ஏன்? என்ற வாதமும் சிறுபிள்ளைத்தனமானது. இந்துமதப் போலிச் சடங்குகளில் உயிர்ப்பலியிடுதலை எதிர்த்த புத்தர் கூட விலங்கு உணவுகளை எதிர்க்கவில்லை. மாமிசம், பால் போன்றவை தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் பயன்பாட்டில் உள்ளவை. ஒருசில இடங்களில் குறிப்பிட்ட சில ஆதிக்க சாதியினரின் பழக்கத்தை தமிழகம் முழுவதுமுள்ள அனைவரும் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. மாட்டுக் கறியை உண்டு வந்த பிராமணர்கள் அதை நிறுத்திவிட்டார்கள் என்பதற்காக பிறரும் அவ்வாறு செய்யவேண்டும் என்றெண்ணுவது எவ்வளவு பாசிச குணமோ அதைப்போலத்தான் இதுவும்.

“அனைவருக்கும் கல்வி, மருத்துவ செவை போன்றவற்றைத் தனியார் துறை மூலம் அளிக்க இந்தியா மட்டுமே முயல்கிறது. ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, வியத்நாம், கியூபா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வலதுசாரிகள் ஆண்டாலும் இடதுசாரிகள் ஆண்டாலும் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் அரசிடம்தான் முழுக்க முழுக்க இருக்கின்றன. அவ்விரு சேவைகளும் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன”, நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமர்த்யா சென் குறிப்பிடுகிறார். (தி இந்து,ஜனவரி 12, 2016)

ஜல்லிக்கட்டு பற்றி இவர்கள் பேசிய காலகட்டத்தில்தான் உலக வர்த்தக அமைப்பு (WTO) உயர்கல்வியை முற்றிலும் வணிகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கூடிய விரைவில் ‘காட்ஸ்’ (GATS) ஒப்பந்தம் இறுதியாகும்போது உயர்கல்வி நமக்கு எட்டாக்கனியாகும். நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் பல முக்கிய மசோதாக்கள் சட்டமாக்கப்படுகின்றன. தங்களது ஊதியத்தை பலமடங்காக உயர்த்திக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் நிதிக்குறைப்பு குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்புச் சட்டங்கள், துணை ராணுவங்கள் உதவியுடன் நாட்டு மக்களை இந்திய அரசு பிணைக்கைதிகளாக வைத்துள்ளது. இதைப்பற்றியெல்லாம் அரசோ, கட்சிகளோ கவலைப் படுவதில்லை.

அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லிவிட்டு பிறகு மன்னிப்புக் கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ள தலைமை நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, ஒருமுறை காந்தி, நேதாஜி போன்றவர்கள் ‘பிரிட்டிஷாரின் ஏஜென்ட்கள்’ என்று சொல்லப்போக, இது குறித்து நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து கட்ஜூ தலைமை நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். உங்களுக்கு இருக்கும் கருத்துரிமை நாடாளுமன்றத்திற்கும் உண்டு என்று சொல்லி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது கட்ஜூ தமிழக அரசின் அறிவிக்கப்படாத சட்ட ஆலோசகராக நினைத்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டுக்கும் இவ்வாறு விலையில்லா சட்டஉதவி வழங்கமாட்டார் என்று நம்புவோம்.

அவசரச் சட்டம் இயற்ற மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்றும் தமிழக அரசே இதற்கான அவசர சட்டத்தை இயற்றலாம் என்றும் சொல்லி, அரசியல் சட்டத்தின் 7 வது அட்டவணையிலுள்ள விளையாட்டு, கேளிக்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றின் கீழ் இது வரும் என்றும் சொல்லியுள்ளார். அவசர சட்டம் வெளியிடும்போது காளைகளுக்கு அபாயம் ஏற்படக்கூடாது என்ற வாசகத்தை மட்டும் இணைத்தால் போதும் என்று சொல்லியுள்ள அவர், திடீரென்று அந்தர் பல்டியடித்து ஜல்லிக்கட்டுத்தானே தடை, எனவே பெயரை மாற்றி ‘பொங்கல் விளையாட்டு’ என்று நடத்தவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தியச் சட்டங்களை அறிந்த முன்னாள் நீதிபதி இவ்வாறு சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. பாமர மக்கள் நீதிமன்றங்கள் மீது வைத்திருக்கும் சிறிய நம்பிக்கையும் தகர்கிறது. நமது அரசியல் சட்டத்தையும் நாடாளுமன்ற ஜனநாயக மாண்புகளையும் பெரிய மனிதர்கள் இழிவுபடுத்தக்கூடாது. சட்டம் அறிந்தவர்கள் வெளியிடும் இவ்வாறான கருத்துகள் அவர்களது அறிவு பற்றி அய்யம் கொள்ள வைக்கிறது.

(பகத்சிங் மக்கள் சங்கத்தின் அமைப்பாளர் மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி வெளியிட்ட அறிக்கை)

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s