இந்திய அரசியலின் உண்மை முகம்!


இந்திய அரசியலின் உண்மை முகம்!

மு.சிவகுருநாதன்

 

கடந்த இரண்டு நாளாக இரு மாநில முதலமைச்சர்கள் பற்றிய செய்திகள் இதழ்களில் வெளியானது. ஒன்று தெலங்கனா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் (ஜனவரி 21, 2016) பற்றியது; மற்றொன்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாயுடையது (ஜனவரி 22, 2016). முதலாமவர் தனக்கு 100 செட் கதர் சட்டை, பேன்ட்களை ரூ. 3 லட்சம் மதிப்பிலும் பின்னவர் தனது மனைவிக்கு ரூ. 1.09 லட்சத்திற்கு ‘வாட்டர் புரூப்’ பட்டுப்புடவையும் வாங்கினார். இது வெறுமனே கடந்துபோகும் செய்தியாக இருப்பது நியாயமில்லை.

சட்டை.jpg

ஜனநாயகம் இங்கு புதிய மன்னர்களையும் இளவரசர்களையும் உருவாக்குகிறது. அக்கால மன்னர்களையும் விட இன்றைய ஜனநாயக மன்னர்கள் மிக இழிவானவர்கள்; கொள்ளைக்காரர்கள். இந்த பூர்ஷ்வா வர்க்கத்தின் ‘லூட்டி’களுக்கு அளவில்லை. அதில் ஒன்றுதான் இது. தமிழக முன்னாள், இந்நாள் முதல்வர்களின் ஆடம்பரங்கள், சொத்துக் குவிப்புகள் நாடறிந்தவை. அருகிலுள்ள மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்றுகிறதோ என்ற எண்ணத்தையும் இது வெளிப்படுத்துகிறது.

நரேந்திர மோடியின் பல லட்சங்கள் மதிப்பிலான ஆடைகள் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. மாற்றுக் கட்சிகளான காங்கிரஸ், தெலங்கனா ராஷ்டிரிய சமீதி ஆகிய கட்சி முதல்வர்களின் இந்த செயல்பாடு நமது அரசியல்வாதிகள் அனைவரும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதைத் தெளிவாக்குகிறது. சாமான்ய மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத இவ்வர்க்கத்தினர் கொண்டாடப்படும் அக்கிரமம் என்று ஒழியுமோ!

ஒரு மனிதனுக்கு கதராடையாக இருப்பினும் 100 செட் என்பது அநாகரீகம். மாற்றுத்துணிகளுக்கு மக்கள் அவதியுறும் இந்நாட்டில் இம்மாதிரித் தலைவர்கள் பேரவலம். பட்டுக் கூட்டுறவுத்துறையை ஊக்குவிக்க ‘வாட்டர் புரூப்’ பட்டுப் புடவை வாங்கியதாகச் சொல்லும் அபத்தத்தைவிட வேறு இருக்கமுடியாது. வாரிசு அரசியல், ஊழல், சொத்துக் குவிப்பு ஆகியவற்றின் மூலம் அக்கால அரசர்களையும் இவர்கள் விஞ்சிவிடுவதுதான் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவது.

ரூ. 100 லிருந்து ரூ. 3 லட்சம் வரையிலாக புடவைகள் இருக்க ரூ. 1.09 லட்சம் மதிப்புடைய ஓர் புடவையை வாங்குவது ஊக்குவிக்கும் செயலாக இருக்க முடியாது. இவரது இந்தக் ‘கொள்முதலால்’ 500 புடவைகளுக்கான முன்பதிவு ஆகியுள்ளதாம்! சில ஆயிரங்கள் விலை உள்ள புடவையை வாங்கியிருந்தால் அந்தப் புடைவைகள் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகுமே. அது தானே உண்மையான ஊக்குவிக்கும் முயற்சியாக இருக்கமுடியும்.

பொது வாழ்வில் எளிமை, நேர்மை என்பதற்கான நீண்ட பாரம்பரியம் இங்குண்டு. இதே தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டு மக்களைப் பார்த்துத்தான் மகாத்மா வேட்டி –துண்டு என்னும் அரையாடைக்கு மாறினார். தோழர் ஜீவானந்தம், தந்தை பெரியார், பெருந்தலைவர் கே.காமராஜ், அமைச்சர் கக்கன் போன்று எளிமை, சிக்கனத்தை வாழ்நெறியாகக் கொண்ட பல தலைவர்கள் வாழ்ந்த நாடிது.

சோசலிஸ்ட் தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜார்ஜ் பெர்ணான்டஸ் போன்றவர்களின் எளிமை என்பது வெறும் வேடமல்ல; அதுவே சாமான்ய இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது. ஜார்ஜ் பெர்ணான்டஸ் தனது கதர் ஜிப்பாக்களை ‘அயர்ன்’ செய்வதைத் தவிர்த்து தலையணைக்கு அடியில் வைத்திருந்து மறுநாள் பயன்படுத்தக் கூடியவர். ஆனால் இவர் இந்துத்துவத்திடம் சரணடைந்ததது வேறு கதை!

புடவை.jpg

புடவை சல்வார் அல்லது சுடிதாரானதும் வேட்டி பைஜாமாவானதும் ஆடம்பரமல்ல; மாறாக அணிபவரின் இடைஞ்சல்கள், வசதிகள் சார்ந்தது. எட்டு முழ வேட்டியைக் கொண்டு பைஜாமா உருவாகுவது ஆடம்பரம் என்று நினைத்த காந்தியர்களும் உண்டு. எனவேதான் ஜே.சி.குமரப்பா நான்கு முழ வேட்டியைக் கொண்டு ‘தோத்திஜாமா’வை உருவாக்கினார். இன்றைய சூழல் மிகவும் விபரீதமாக ஆகிக்கொண்டுள்ளது.

கே.காமராஜ், நிருபன் சக்கரவர்த்தி, ஜோதிபாசு, மாணிக் சர்க்கார் போன்ற பல எளிமையான முதல்வர்களை நாம் கண்டிருக்கிறோம். மகாத்மா காந்தி அரசதிகாரத்தை வெறுத்தவர்; துறந்தவர். எனவே கே.காமராஜை விட்டால் எளிமைக்கு காங்கிரசில் ஆளில்லை. காங்கிரசில் எளிமை என்று சொல்லப்பட்டது யதார்த்தத்தில் போலியானது. கோடீஸ்வரர்கள், நிலப்பிரபுக்கள் கதராடை உடுத்துவதன் வாயிலாக எளிமையடைந்து விடுவதில்லை. இதற்கு தெளிவான, தீர்க்கமான கொள்கைகள், கோட்பாடுகள் வேண்டும். எனவேதான் உண்மையான எளிமையை இன்னும் இடதுசாரிகளிடம் மட்டுமே இங்கு காணமுடிகிறது. இதிலும் சில சிக்கல்கள் இருப்பினும் இவை ஒப்பீட்டளவில் மிகக் குறைவானவை.

மக்கள் நல அரசு (welfare state) என்ற கருத்தாக்கத்துடன் கூடவே மக்கள் நல அரசியல் என்கிற நல்ல பண்பும் இங்கு சாகடிக்கட்டுவிட்டது. இன்று ஊழலுக்கு எதிராகக் கட்டமைக்கப்படும் ‘கார்ப்பரேட் நடவடிக்கைகள்’ மிகவும் ஆபத்தானவை. இவை மக்கள் நலன் சார்ந்ததல்ல. இவை கார்ப்பரேட் நல நோக்கிலானவை.

வெண்மை தூய்மையின் அடையாளமாகச் சொல்லப்பட்ட காலம் ஒன்றுண்டு. இன்று அரசியல்வாதிகளின் வெண்மை தூய்மையின் அடையாளமல்ல. மாறாக ஊழல் சேறு, சகதி படிந்த அதிகாரத்தின் நீட்சியாகவே இந்த வெண்மை இருக்கிறது. இவற்றையெல்லாம் அய்ந்தாண்டுகளுக்கு ஓர் முறை நடக்கும் போலி ஜனநாயகத் தேர்தல்களால் மாற்றலாம் என்று நம்புவதற்கில்லை.

அன்னா ஹசாரே, அர்விந்த கெஜ்ரிவால் போன்றோரின் போராட்டங்கள், தேர்தல் வெற்றிகளைக் கணக்கில் கொண்டு தமிழகத்தில் அய்.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை முன்னிறுத்தும் பித்தலாட்ட முகமுடி அரசியல் ஒன்று கிளப்பியுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் பின்னணியாக கார்ப்பரேட்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGO), மத்தியதர வர்க்கம் ஆகியவை இருக்கின்றன. இவற்றின் வர்க்க நலன்கள் வேறுமாதிரியானவை. இவைகளைக் கொண்டு கட்டமைக்கப்படும் புரட்சி எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. நமது மக்கள் தொகையில் பெரும்பங்காக இருக்கும் அடித்தட்டு மக்கள், பெண்கள் ஆகியோரின் பங்கேற்பின்றி எதுவும் சாத்தியமில்லை.

இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்

திருவாரூர்

https://www.facebook.com/mu.sivagurunathan

http://musivagurunathan.blogspot.in/

பன்மை

https://panmai2010.wordpress.com/

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

வாட்ஸ் அப்: 9842802010

செல்: 9842402010

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s