என்ன செய்கிறது தமிழ்நாடு?


என்ன செய்கிறது தமிழ்நாடு?

 

மு.சிவகுருநாதன்

கெயில் 03.jpg

 

பான்பராக் விற்பனைக்குத் தடை, பேரரறிவாளன் உள்ளிட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை என எந்தப் பிரச்சினையிலும் தமிழக அரசிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லையென உச்சநீதிமன்றம் முடிவு செய்கிறது. இப்போது கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பது தொடர்பான வழக்கில் “மத்திய அரசின் திட்டங்களில் தமிழ்நாடு மாநில அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை. எரிவாயு கொண்டுசெல்லும் பாதையை மாற்றுவதற்கும் தமிழக அரசுக்கு உரிமையில்லை”, என்று நேற்று (பிப். 02, 2016) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கு மாநில சுயாட்சி பேசும் கட்சிகள் ஆளும் நிலையில் மாநில அரசின் உரிமைகள் என்ன என்று கேள்வி எழுவது இயற்கையானது. இவர்கள் மாநில சுயாட்சியை அடகு வைத்து வெகுகாலமானதை தமிழக மக்களுக்கு யாரேனும் எடுத்துச் சொன்னால் தேவலாம்.

 

தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது. இந்த நிலைக்கு தமிழக அரசுகள்தான் முழுக்காரணமாக இருந்திருக்கின்றன. கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகள், நியூட்ரினோ திட்டம், காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு எவ்வித மறுப்பும் இன்றி அனுமதி வழங்கும் நமது அரசுகளின் இழிந்த நிலையை என்ன சொல்வது?

 

gail.jpg

 

கொச்சியிலிருந்து பெங்களூரு வரை எரிவாயு கொண்டு செல்லும் 871 கி.மீ. தொலைவிலான இத்திட்டத்தில் கேரளா 501 கி.மீ., கர்நாடகா 60 கி.மீ., தமிழ்நாடு 310 கி.மீ என மூன்று மாநிலங்கள் தூரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் இதனால் பாதிப்படைகின்றன.

 

விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டத்தை வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் தேசிய நெடுஞ்சாலை வழியாக மேற்கொள்ளவும் ஏற்கனவே பதிக்கப்பட்ட எரிவாயுக் குழாய்களை அகற்றி, நிலங்களை சமப்படுத்தி விவசாயிகளிடம் ஒப்படைக்கவும் தமிழகச் சட்டமன்றத்தில் மார்ச் 2013 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதை எதிர்த்து கெயில் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், கெயில் நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 2013 இல் கிடைத்தது. இதை எதிர்த்துத் தமிழக அரசும், விவசாய சங்கங்களும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கெயில் நிறுவனத்துக்கு ஆதரவான மேற்கண்ட தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

கெயில் 04.gif

 

இத்தீர்ப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது மத்திய அரசு 2011 -ல் கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் பதிக்கும் (P & MP Act 1962 Amendment) சட்டத் திருத்தத்தம் ஆகும். இத்திருத்தத்தின்படி எரிவாயு குழாய்கள் சேதம் அடைந்தால் அவை பதிக்கப்பட்டு இருக்கும் நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பு. இச்சட்டத்தின்படி மாநில அரசு தலையிட அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சொல்லியிருக்கிறது.

 

உலகமயத்திற்குப் பிறகு இம்மாதிரியான சட்டங்களும் சடடத்திருத்தங்களும் மிகவும் கள்ளத்தனமாக நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்படுகின்றன. ஆளும்கட்சிகள் இதற்கு கவனத் திசை திருப்பல் உத்தியை பின்பற்றுகிறது. நாடாளுமன்றத்தில் வினா எழுப்பவே லஞ்சம் வாங்கும் நமது உறுப்பினர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் துளியும் கவலையில்லை.

 

கெயில் 01.jpg

 

இந்தக் காலகட்டத்தில் தமிழக ஆளும் கட்சிகல் இரண்டும் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தவை. இவை மாநில நலன் சார்ந்து எவ்வித கோரிக்கைகளும் இன்றி முற்றிலும் சுயநலமாகச் செயல்பட்டு தமிழக உரிமைகளை விட்டுகொடுத்துள்ளனர். இதற்கு அய்ந்தாண்டுகளுக்கு ஓர் முறை மக்களின் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. காவிரி, முல்லைப் பெரியாறு, செம்மரக் கொலைகள் என எதை எடுத்துக்கொண்டாலும் தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்துகொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குரியது.

 

பொதுநலன் சார்ந்த இவ்வழக்குகளில் அரசு மற்றும் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இவ்வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் பல நேரங்களில் நீதிமன்றங்களில் ஆஜராவதில்லை. சட்ட நுணுக்கங்களை உரிய முறையில் எடுத்துக்காட்டி வாதிடுவதில்லை. 2 ஜி அலைக்கற்றை வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு ஆகியவற்றில் காட்டிய சிரத்தையில் ஒரு சிறு துளியைக் கூட இவற்றில் காட்டுவதில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 2 ஜி வழக்கில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டார். பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக முன்னாள் நீதிபதிகள் அடங்கிய பெரும் வழக்கறிஞர் படையே அல்லும் பகலும் பணி செய்தது.

 

ரூ. 3000 கோடி மதிப்பிலான இந்த்திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை அரசும் நீதிமன்றங்களும் சொல்கின்றன. வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் இதே கதைதான் சொல்லப்பட்டு வருகிறது.

 

ஆந்திராவின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லப் பதித்த குழாய்களில் கசிவு ஏற்பட்டு வெடித்ததால் 16 பேர் மரணமடைந்தனர். இதன் பின்னர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சூழலே வேறு. இந்த 7 மாவட்ட விவசாயிகள் போராடுகிறார்கள். அனுமதியளித்த அரசுகள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பாசாங்கு செய்கின்றன. ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷனுடன் மீத்தேன் எரிவாயு எடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர்கள் அத்திட்ட எதிர்ப்பிற்கு ஆதரவாக இருந்த கதை நமக்குத் தெரியுமல்லவா! இப்போது மீத்தேன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. வேறு வடிவில் செயல்படுத்தப் போகிறது. இவர்கள் மீண்டும் கைகட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.

 

காவிரிப்படுகையில் அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செய்யும் அத்துமீறல்கள் தமிழகத்தில் யாராலும் கவனிக்கப்படாதவை. இவற்றிற்கு எதிராக சிறிய அமைப்புகள் மட்டுமே போராடுகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கீழப்படுகை, தியானபுரம் ஆகிய இடங்களில் நடந்த எரிவாயுக் குழாய் கசிவு விபத்துகளில் இதுவரையில் பலர் இறந்துள்ளனர். அடியக்கமங்கலம் பகுதியில் விளைநிலங்கள் பலமுறை பெட்ரோலியக் கசிவால் பாழடைந்துள்ளன. முறையான பாதுகாப்பற்ற எண்ணெய் எடுக்குமிடங்களில் சிக்கி பள்ளி மாணவர் விபத்திற்குள்ளான நிகழ்வும் நடந்தது. இதுபற்றி தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளும் அரசும் இதுவரையில் கண்டுகொண்டதில்லை. மீத்தேன் திட்டம் மீண்டும் வரப்போவது பற்றி இவர்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.

 

இதே கெயில் நிறுவனம் கொச்சி – மங்களூரு எரிவாயு திட்டம், மஹிம் – தாசிர் எரிவாயுத் திட்டம் (மகாராஷ்டிரா) ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக அமைக்கும்போது தமிழகத்தில் மட்டும் என்ன சிக்கல்? தமிழகத்தின் அரசியலில் உள்ள வெற்றிடமே காரணம். மேலும் தனியார் நிறுவனமான அதானி கேஸ் நிறுவனமும் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் வட இந்தியாவில் பல இடங்களில் நெடுஞ்சாலைகள் வழியாகவே எரிவாயுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமே விதிவிலக்கு!

 

தமிழகம் உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்து விவசாயிகளையும் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும். வைகோ போன்ற ஒரு சில சிறிய அரசியல் கட்சித் தலைவர்கள் இது குறித்து உடனடியாக எதிர்வினையாற்றி இருப்பது பாராட்டிற்குரியது. மோடியின் கோவை பயணம் நமது ஊடகங்களுக்கு இத்தீர்ப்பைக் கண்டுகொள்ளாமல் இருக்கப் பயன்பட்டது.

 

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றம் சென்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அரசு இனியாவது ஒழுங்காக செயல்படவேண்டும். இதெல்லாம் வெறும் தேர்தல் வாக்குறுதியாகப் போய்விடக்கூடாது.

 

திருவாரூர் விளமல் – தியானபுரம் எரிவாயுக் குழாய் விபத்து குறித்த எனது பதிவொன்றின் இணைப்பைக் கீழே தருகிறேன்.

 

ONGC -யின் அலட்சியப்போக்கால் காவிரிப்படுகையில் தொடரும்

படுகொலைகள்!

 

http://musivagurunathan.blogspot.in/2011/08/ongc.html

இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்

திருவாரூர்

https://www.facebook.com/mu.sivagurunathan

http://musivagurunathan.blogspot.in/

பன்மை

https://panmai2010.wordpress.com/

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

வாட்ஸ் அப்: 9842802010

செல்: 9842402010

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in அரசியல் விமர்சனம், சுற்றுச்சுழல், செய்திகள், செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s