38. தொன்மங்கள் வழியே எதிர்ப்பைப் பேசும் கவிதைகள்


38. தொன்மங்கள் வழியே எதிர்ப்பைப் பேசும் கவிதைகள்

(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

– மு.சிவகுருநாதன்

 

(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற வெளியீடாக (நவம்பர் 2003) வந்துள்ள கவிஞர் என்.டி.ராஜ்குமாரின் ‘காட்டாளன்’ என்னும் சிறிய கவிதை நூல் குறித்த பதிவு.)

 

காட்டாளன்.jpg

இசைக்கலைஞர், நடிகர், கவிஞர் என பன்முகப் பரிமாணம் கொண்ட என்.டி.ராஜ்குமாரின் நான்காவது கவிதைத்தொகுப்பு ‘காட்டாளன்’. நவம்பர் 2003 இல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற திருவண்ணாமலை கிளையால் வெளியிடப்பட்ட இச்சிறு கவிதை நூலில் 57 தலைப்பில்லாத கவிதைகள் இருக்கின்றன.

 

கவிதைகளுக்கு தலைப்பு இருக்க வேண்டுமா என்ன? தலைப்பு கூட வாசகனின் பரந்த வாசிப்பிற்கும், அர்த்தப்படுத்தல்களுக்கும் தடையாக இருக்கத்தான் செய்யும். ஆகவே தலைப்பில்லாத கவிதைகள் சற்று வசதியானவையே.

 

“இலைதழைகளை உடுத்திக்கொண்டிருந்த முன்னோர்கள்
காவுகளிலெல்லாம் அலைந்து திரிவர் தொல்குடித் தெய்வமாய்”, (பக். 25)

 

தொல்குடி வாழ்வும் தொன்மங்களும் நிறைந்து தளும்புகின்றன இவரது கவிதைகளில். நாட்டார் வாழ்வியல் தெய்வங்கள் இங்குமங்கும் கூவியழைக்க கவிதை என்னும் பாழ்வெளியில் தொல்குடி வாழ்வினூடாக இன்றைய அவலங்களும் பதிவாகின்றன.

என்.டி.ராஜ்குமார்.jpg

“பூணூல் தரித்த சுடலை மாடசாமிகள்”, தொல்குடிக் கலாச்சாரத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை சட்டெனப் போட்டுடைக்க வேண்டிய தேவை எழுகிறதல்லவா!

 

“பனங்கள்ளும் தென்னங்கள்ளும் கலந்தடித்த போதை கிறுக்கில்
கருவாடு சுட்டுத் திண்ணுகிறாள் எனதம்மைகள்
வலம்புரிச் சங்கிலும் கெண்டியிலும்
மாட்டு மூத்திரம் பிடிப்பவர்களே
பசுக்களை நடுக்காட்டிலிட்டு பின்புறம் தடவும்
ரிஷிமார்கள் கதைக்கிறார்கள் நீங்கள்
அஷ்வமேதயாகத்தில் குதிரைகளைப் போட்டு
சுட்டுத் தின்ற கதையை”. (பக். 08)

 

‘காட்டாளனை’ விவரிக்கும் கவிதைகள் நிறைய வருகின்றன. ‘காட்டாளன்’ யார்? இதோ அறிமுகக் கவிதை.

 

“நான் சாத்தானின் குழந்தை
நாயும்
பேயும்
பிசாசும்தான் எனது தெய்வம்
எனது தலைவன் கறுப்பழகன்
சதிகார ராமனை
நேரில் நின்று குத்தி மலத்திய
காட்டாளன்” (பக். 19)

 

காட்டாளன் விரும்பும் படையல் எது? அதை அவனே சொல்லக் கேட்போம்.

 

“ஓ எனது மலங்காட்டம்மே காட்டாளன் வந்துள்ளேன்
நடுகற்களுக்குள் நுழைந்த நம் ஆதி தெய்வங்களுக்கின்று
மாமிசப் படையல் வை”, (பக். 34)

என்.டி.ராஜ்குமார் 01.jpg

பிள்ளையாரைப் பற்றிய புராணக்கதை உங்களுக்கும் தெரியுந்தானே! அதைக் கின்டல் செய்வதைப் பாருங்கள்!

 

“அம்மையைப் போலொரு பெண் வேண்டுமாம்
முலையளவு
இடையளவு
தொடையளவு
குறியளவு எல்லாம் பொருந்திய
அம்மையைப் போலொருத்தி வேண்டுமாம்
குளத்தங்கறையிலிருந்துகொண்டொரு
தெம்மாடி உற்று நோக்குகிறான்”, (பக். 43)
நமது பள்ளி நடைமுறைகளையும் பரிசுகளையும் திருத்த, மாற்ற முடியுமா என்ன? பிறகென்ன செய்வது? இப்படித்தான் செய்ய முடியும்.

 

“பாட்டுப்போட்டிக்குச் சென்ற மகனுக்கு
பள்ளிக்கூடத்திலிருந்து கொடுக்கப்பட்டது
முதல்பரிசாக
ராமாயணப் புத்தகம்
வீட்டுக்குக் கொண்டு வந்த மகன்
படித்துப்படித்துக் கிழித்துவிட்டான்
அக்குவேறு ஆணிவேராக
வாத்தியான் கேட்டான்
ராமாயணத்தை ஏண்டா நாசப்படுத்தினாய்
எனக்கது பிடிக்கவில்லையென்றவன் சொன்னான்
ஒவ்வொரு பக்கங்களையும் எடுத்தெடுத்தப்பன்
பீ துடைத்தெறிகிறான்”, (பக். 48)

 

மாட்டுக்கறி திங்கக்கூடாது என்று சொல்வோருக்கு, புராணங்களிலிருந்து ஒரு பக்கத்தைத் திறந்து காட்டுகிறது.

என்.டி.ராஜ்குமார் 02.gif

“மந்தையிலிருந்து தப்பிய மானொன்று
புலிக்குப் பயந்து ஓடுகையில்
மறைந்திருந்து அம்பெய்து கொன்றறுத்துத் தின்ற
இறைச்சியின் ருசி தாளாமல் அறுத்த மானின்
ரண வாடை வீசும் பச்சைத் தோலுடுத்திய ராமனுக்கு
மாமிசத் துண்டுகளை மறுநாள் மறுநாள் எடுத்துத்திண்ண சீதை
உணங்க வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து
கரைந்து கொண்டிருந்ததிந்த காக்கை அரக்கன்” (பக். 25)

 

பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதையாயினும் இன்றைய சூழல்கூட பெரிதும் மாறிவிடவில்லை. மதவெறி இன்னும் தீவிரமடைந்துள்ளதை உணர்த்தும் ஓர் கவிதை.

 

“பாதாளம் நோக்கிச் செல்கிறது
அகழ்வாராய்ச்சி
சுற்றுப்புறங்களில் வளைந்தோடும்
கங்கை நீரில் மட்டும்
பிணங்களின் ருசி மிதந்தோட
கங்காதேவி தன் பிள்ளைகளுக்கு
சுன்னத் செய்யப்பட்ட குறிகளை
சுட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்”, (பக். 49)

 

சங்கராச்சாரி பெண்களைப் பற்றி மிக இழிவாக உதிர்த்த கருத்துகளுக்கு இந்த சாமக் கோடாங்கி அளிக்கும் தண்டனை இது.

 

“வேலைக்குப் போகும் பெண்கள் பத்தினிகளல்ல
பெரும் கோவிலுக்குள் என்னை நுழையாதேயென்றவனை
மரக்கிளையில் சுளுக்கேறி காய்கனிகள் விறைத்துதிர
பூமி துளைக்கும் மாசிப் பனிபோல் வந்திடுமென்
தேவிக்கு மூத்தவளே மூதேவியே
பேயாடும் நடு இரவில் அதிரும் குரலோடு
நானலறிப் பாடுகிறேன்
வந்திந்த சங்கரனின் உதிரம் குடி”. (பக். 29)

 

உணவாகவும் மருந்தாகவும் இருக்கும் தொல்குடி தெய்வங்களின் படையல் இருப்பதை பின்வரும் கவிதை விவரிக்கிறது.

 

“மூலவியாதி போக்கும் பன்னி நெய்
புண்களை குணப்படுத்த
வெப்பநோய் தீர்க்கும் கட்டக்காலி சூப்பை
அரக்கிகொண்டுதந்தென்னை
அட்டகாசப்படுத்துவாள்
மருந்தாகவும் உணவாகவும்
படைத்துத் திண்ணுமெங்கள் பக்கங்களில்
விதவிதமாய் மக்களெல்லாம் குதூகலித்துக் கொண்டிருக்க
மீன் முள்ளுகள் சிதறிக் கிடக்கும்
ஞாயிற்றுக்கிழமை வீடுகளும்
பீப் இறைச்சியால் கொண்டாடப்படுகிறது.” (பக். 36,37)

 

“ஒரு செம்பு சாராயத்தையும் மடமடண்ணு குடிச்சுட்டு
கவம்கவமா காறி செரட்டையில துப்புவாரு
அது நெறஞ்ச ஒடனேயெடுத்து பிலாமூட்டுல தட்டிகிட்டு
அப்பாகிட்ட கொண்டு வைப்பேன்
கொஞ்சம் கவம் வெளியில போனபெறவுதான்
அப்பாவுக்கு ஆசுவாசம் வரும்
மூச்சுதெணரலு நிக்கும்”. (பக். 64)

 

பிசாசு – பிசாசினி, மூப்பன் – மூப்பத்தி உறவுகள் எப்படியிருக்கிறது என பின்வரும் கவிதை சுட்டுகிறது.

 

“பேய்கிட்ட பேசிக்கிட்டுருக்கச்சில
ஆரும் அங்கப் போவப்பிடாது
அதைப்பத்தி மிண்டவும் பிடாதுண்ணு
எல்லாரும் சொல்லுவாங்க
ஆருமில்லாத்த சமயத்துல மூப்பன் பிசாசினிய கூப்பிட்டுவச்சு
தொடய தடவிக்கிட்டிருக்கும்
மூப்பத்திகிட்டப் போய் சொன்னப்போ
இப்படி ஒண்டானதுதான் நாம எல்லாருமுண்ணு சொல்லிச்சுது
பின்ன ஒருக்க
தாழம்பூ பறிக்க மின்னல் காட்டுக்குள்ள போனப்போ
பிசாசும் பிசாசினியும்
கெட்டிப் பிடிச்சுகிட்டு கெடந்தாங்க
என்னப்பாத்ததும் சீலத்துணிகளையெல்லாம்
தூக்கிப் பறக்கிக்கிட்டு திடுதிப்புண்ணு எந்திரிச்ச பிசாசினி
ஆருட்டையும் இதப்பத்தி மிண்டப்பிடாதுண்ணும்
அப்படியே மிண்டுனா மாடு முட்டுமுண்ணும் சொல்லிச்சுது
இதப்பத்தி ஆருட்டையும் மிண்டலையே
பின்ன எதுக்கிந்த கருமத்தமாடு என்ன
இடிச்சுத் தள்ளிகிட்டு போவுது கனவுல”. (பக். 59)

 

*மிண்டுதல் – பேசுதல்

 

குறி சொல்லும் கணியாத்திகள் எப்படி குறி சொல்கிறார்கள் பாருங்கள்.

 

“மணமறிந்து பறந்துவரும்
சிவப்பொழுகும் பெண்டுகளின் தலையழுக்கை
எடுதெடுத்து குழுவி கூடுகட்டி
மீண்டும் தூமை தேடி அலையும்
குறிப்பறிந்து பதில் சொல்லும் கணியாத்திகள்
நீண்டிருந்தால் கடுவன் என்பார்கள்
பூவரச இலை வடிவில் பரந்திருந்தால்
பூவென்பார்கள்”. (பக். 60)

 

நவீன தமிழ்க் கவிதைகளில் புதிய தடத்தில் பயணிக்கும் இந்த மாந்தீரிக கவிதைகள் தனித்துவம் மிக்கதாக இருக்கின்றன. இவரது கவிதைக்குள் மூழ்கி திளைக்கலாம்.

 

குமரித்தமிழ் கூட ஒன்றல்ல பல என்கிற கருத்துண்டு. குமாரசெல்வாவின் நூல்களில் விளவங்கோடு வட்டார வழக்குச் சொற்கள் பின்னிணைப்பாகக் கொடுக்கப்படுகின்றன. அதைப்போல இங்கும் சில சொற்களுக்கு வழங்கியிருந்தால் நன்றாக இருக்கும்.

 

காட்டாளன்
கவிதைத் தொகுப்பு
என்.டி.ராஜ்குமார்
வெளியீடு: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விலை: ரூ. 25
பக்கம்: 68
முதல்பதிப்பு: நவம்பர் 2003

 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
1, திருநாவுக்கரசு தெரு,
திருவண்ணாமலை – 606601.

 

இங்கும் தொடரலாம்

:

மு.சிவகுருநாதன்
திருவாரூர்

 

https://www.facebook.com/mu.sivagurunathan
http://musivagurunathan.blogspot.in/

பன்மை

https://panmai2010.wordpress.com/

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

வாட்ஸ் அப்: 9842802010
செல்: 9842402010

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s