வாழ்வின் சக பயணிகள்


வாழ்வின் சக பயணிகள்

மு.சிவகுருநாதன்

(இன்று பிப்ரவரி 28, 2016 இல் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2006 – 2009 காலகட்டத்தில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றை மாணவர்கள் நடத்தினர். இதில் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். ஆசிரியத் தோழர்கள் ச.ஜெயராமன், சீ.முருகானந்தம், மா.அருள்பாபு, ஜெ.சுரேஷ்ராஜ் ஆகியோர் பங்குபெற்றனர். இந்நிகழ்விற்கு தயாரிக்கப்பட்ட உரை இங்கு வெளியிடப்படுகிறது.)

ஓர் குறிப்பிட்ட காலகட்டத்தில் (2006 – 2009) இங்கு பயின்ற மாணவர்கள் கலந்துரையாட முடிவு செய்திருப்பது மகிழ்வான நிகழ்வு. பொதுவாக இத்தகைய நிகழ்வுகளை பல்லாண்டுகள் கழிந்த ஓய்வு பெற்ற காலத்தில் செய்வதுண்டு. நீங்கள் இளைஞர்களாக இருக்கும் நேரத்தில் இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருப்பது மிக முக்கியமானது. இதை ஒருங்கிணைத்த நண்பர் சாமிநாதன் மற்றும் அவரது தோழர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

மிகவும் மகிழ்வான இந்தத் தருணத்தில் நாம் அனைவருக்கும் பத்தாண்டுகளுக்கு முன்னதான நிகழ்வுகள் காட்சிகளாக விரிகின்றன. கல்வி, ஆசிரியர்கள் பற்றிய சிந்தனைப் போக்குகள் மாறவேண்டும்; இன்னும் விசாலமடைய வேண்டும் விரும்புகிறேன். இன்னும் குருகுலக்கல்வி மதிப்பீட்டில் இருக்க வேண்டியதில்லை.

புத்தரின் சிந்தனைகள் மூலம் ஆசிரியர் பற்றிய வரையறை செய்யலாம் என்று நினைக்கிறேன். புத்தர் தன்னை வழிகாட்டியாகக் கூட சொல்லிக்கொள்ளவில்லை. “உனக்கு நீயே விளக்கு”, என்றார். பவுத்தம் மதமா? இல்லை என்கிறார். தம்மம் வேதமா? இல்லை. இது ஓர் வாழ்வியல் நெறி அவ்வளவே. இறைத்தூதர், அவதாரம், கடவுள் ஆகிய ஒருவரா புத்தர்? இல்லவே இல்லை. பிறகு புத்தர் யார்? ததாகதர். இவ்வழியே வந்தவர். இப்படியே போனவர். அதைப்போலவே உங்கள் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் சகபயணியாக இருந்தவர்கள் ஆசிரியர்கள். அதைபோலவே எங்களது வாழ்விலும் நீங்களும் சக பயணிகளாகவே இருந்திருக்கிறீர்கள். நாம் இரு தரப்பும் இணைந்து ஓர் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒன்றாக பயணித்திருக்கிறோம்.

ஆசிரியர்களுக்கு இவற்றைத் தவிர வேறிடம் அளிப்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. சக பயணிகளை நினைவில் வைத்திருப்பதற்காக உங்களை கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும். இன்றைய கல்விமுறையின் நன்மை – தீமைகளை, அலங்கோலங்களை அகற்ற உங்களால் எதுவும் செய்ய முடியுமானால் அது வருங்கால சந்ததிகளுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் வளமுடையதாக இருக்கும்.

கல்வியை செல்வம் என்று சொன்னதில்தான் இன்றைய கல்விச் சிக்கல்கள் அனைத்தும் அடங்கியிருப்பதாக கருதுகிறேன். பல்வேறுபட்ட செல்வங்கள் இருப்பினும் பணம் மட்டுமே இங்கு செல்வமாக மதிக்கப்படும் சூழலில் பணம் கொடுத்துப் பெறுவதே, பணம் ஈட்ட முயல்வதே கல்வி என்ற விபரீதம் ஏற்பட்டுவிட்டது. எனவே கல்வியை செல்வமல்ல என்று சொல்வதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

கல்வி, அறிவு போன்றவற்றை கோணிப்பைகளில் பணத்தைக் கொடுத்து, அதே பைகளில் அள்ளிவரும் பொருளாக சமூகம் இன்று பொருள் கொள்கிறது. அறிவு என்பது வெறும் பாடநூல்களைப் படிப்பதால் மட்டும் உருவாவதல்ல. பாடங்களைத் தாண்டியும் அறிவு வெளியே இருப்பதை நீங்கள் நேரடியாக உணர்ந்திருப்பீர்கள். அத்தகைய அனுவங்களின் திரட்சியே கல்வியாக இருக்க முடியும்.

பாடத்திட்டம், பாடநூற்கள், தேர்வுகள் என்று நாங்கள் கடிவாளம் பூட்டப்பட்ட குதிரைகள் போல் இயல்பில் மூளைச்சலவை செய்யப்பட்ட நாங்கள் உங்களையும் மூளைச்சலவை செய்ய முனைந்திருக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை என்று தப்பித்துக் கொள்வதில் எவ்வித அறமுமில்லை. இன்றைய கல்விச் சீரழிவிற்கும் குளறுபடிகளுக்கு நாங்களும் காரணமாக இருப்பது வருந்தத்தக்கது. எதோ ஒரு வகையில் நாங்கள் அதிகாரத்தின் குறியீடுகளாக மாற்றப்பட்டு விட்டோம்.

கல்வியில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றுச் சிந்தனைகளும் அழுத்தங்களும் அளிக்கப்படவேண்டும். நாளை உங்கள் குழந்தைக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்கிற சமூகப் பொறுப்பு உங்களுக்கும் உள்ளது. பொதி சுமக்கும் குழந்தைகளாக மாற்றுவதா, சுய சிந்தனையுள்ள, குழந்தைகளின் விருப்பத்தேர்வுகளை முதன்மைப் படுத்தும் கல்விமுறை தேவையா என்று முடிவு செய்யுங்கள்.

பொதுத்தேர்வு முறையின் கொடுமை மிக மோசமானது. தேர்வு நேரங்களில் இது பலரை காவு கொள்கிறது. இதையும் மாற்றத்தான் வேண்டும். இப்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முடிய உள்ள பருவமுறை 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் விரிவு படுத்தப்படவேண்டும். இவற்றைப் பற்றியும் யோசிங்கள். இந்தக் கொடுமைகளிலிருந்து நாளை உங்கள் குழந்தைகள் காப்பாற்றப் படவேண்டும்.

கல்வி உரிமை என்பது அனைவருக்கும் கல்வி என்பதோடு நில்லாமல், யாருக்கான கல்வி, எதற்கான கல்வி என்று வினாக்கள் மூலம் மேலும் செழுமையடைய வேண்டியது அவசியம். கல்வி திணிப்பதாக அல்லாது இயல்பாக விருப்பமுடன் செய்யும் செயலாக மாற்றம் பெறவேண்டும். SSA, RMSA போன்ற கல்வித் திட்டங்கள் ஒரு வரம்பிற்குள் நின்று விடுகின்றன. இது போதாது. இந்தப் போதாமைகளை இட்டு நிரப்பவும் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும் உங்களைப் போன்ற இளைஞர்கள் இவற்றை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

“சிறகிலிருந்து பிரிந்த

இறகொன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஓர் பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது”,

என்ற பிரமிளின் கவிதை வரிகளுடன் நிறைவு செய்கிறேன்.

நன்றி. வணக்கம்…

மு.சிவகுருநாதன்

திருவாரூர்

https://www.facebook.com/mu.sivagurunathan

https://twitter.com/msivagurunathan

http://musivagurunathan.blogspot.in/

பன்மை

https://panmai2010.wordpress.com/

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

வாட்ஸ் அப்: 9842802010

செல்: 9842402010

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in அனுபவம், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s