ஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்?


ஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்?

மு.சிவகுருநாதன்

 

முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சாதியை ஒழிக்க விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு இயக்கங்களைத் தவிர பிற ஓர் துரும்பையும் அசைப்பதில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு நீண்ட, நெடிய வரலாற்றுப் பின்புலம் உள்ள தமிழகத்தில் இத்தகைய கொடூரங்கள் மிகப்பெரிய சமூக அவலம்.
தமிழ்ப்பெருமையோடு பெரியார் பிறந்து, வாழ்ந்த மண் என்ற பெருமை பேசுவதோடு முடிந்துவிடுகிறது திராவிட இயக்க அரசியல். சாதிய வன்மத்தை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவற்றிற்குப் பின்னாலும் இவர்கள் இருக்கிறார்கள்.
இம்மாதிரியான கொலைகள் நிகழும்போது ஒப்புக்கு வெறும் கண்டன அறிக்கை வெளியிடுவதோடு நமது தலைவர்களின் வேலை முடிந்துவிடுகிறது. இதைக்கூட சிலர் செய்வதில்லை. எனவே கண்டன அறிக்கை வெளியிட்டால் அதுவே இங்கு பெருந்தன்மையாக இருக்கிறது.

 

வெறும் உதட்டளவிலான இந்த சாதியொழிப்பு நாடகங்கள் எதையும் செய்யப் போவதில்லை. ஈழப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் வாய்ச் சவடால் விடும் இயக்கங்கள் மற்றும் தலைவர்கள் இங்குள்ள அகதிகளின் நிலை, முகாம்களின் சிறைக்கொடுமை குறித்து வாய் திறப்பதில்லை. அகதி முகாமில் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்காக ஒரு வாரங்களுக்கு முன்பு ஒருவர் தற்கொலை செய்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த மரணம் தமிழகத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழர் என்று சொல்லி ஆட்சிக்கட்டிலில் ஏறத்துடிக்கும் எவரது மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. இங்கு எல்லாம் வாய்ச்சவடால்தான்; செயல் ஒன்றுமில்லை.
50 ஆண்டுகால திராவிட இயக்கத்தின் ஆட்சியில் சாதீய வன்மம் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது. பெரியாரது வாரிசுகள் அவரது கொள்கைகளுக்கு மாறாக சாதியவாதிகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளனர். ஊழல், நிர்வாகச் சீர்கேடுகளை மறைக்க சாதியை கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். சாதிய விதைகளைத் தூவியதில் இவர்களது பங்கு அளப்பரியது.
தமிழகத்தில் தொடர்ந்து ஆண்டுவரும் அ.இ.அதி.மு.க., திமு.க. ஆகிய கட்சிகள் இக்கொலைகளுக்கு மவுன சாட்சியாக இருக்கின்றன. இவர்களுக்கும் இன்னபிற அதிகார வர்க்கத்திற்கும் கூலிப்படையாகச் செயல்படும் காவல்துறை ஒடுக்கப்பட்டோர் பாதிப்பைக் கண்டுகொள்வதில்லை. அதை இவர்கள் அனுமதிப்பதேயில்லை.
இடதுசாரிகள் சாதியத்தைத் தற்போதாவது புரிந்துகொண்டு செயலாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்று இதர கட்சிகளில் சாதியத்திற்கு எதிராக அமைப்புகள் இல்லை. கொள்ளை நோயாய் பரவியுள்ள சாதியத்தை ஒழிக்க இடதுசாரிகளின் பலம் போதவில்லை என்றே சொல்லவேண்டும். சில நேரங்களில் அவர்களும் சாதியவாதிகளாக மாறுவதும் உண்டு.
தலித் இயக்கங்களின் கருத்தியல் போதாமைகள் மற்றும் தெளிவின்மைகள் சாதியத்தை ஒழிப்பதற்குப் பதிலாக சாதியை வளர்க்கும் காரணியாக அமைந்துவிடுகிறது. தலித் இயக்கங்களிடையே ஒருங்கிணைப்பின்மை இச்சிக்கலை மேலும் தீவிரமாக்குகிறது.
திராவிட இயக்கத்திற்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தும் கும்பல்களில் இரு பிரிவினர் உண்டு. இன்று இந்து மதவெறி சக்திகள்; மற்றொன்று தமிழ் வெறி சக்திகள். இவர்களது கொள்கைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இவர்கள் அனைவரும் இங்கு சாதியத்திற்கு துணைபோகும் நிலைதான் இங்கு இருக்கிறது.
பெரியார், அம்பேத்கர் வழியில் சாதியொழிப்பை முன்னெடுக்கும் இயக்கங்களே இன்றைய தேவை. சாதியத்தை வளர்க்கும், அதனோடு சமரசம் செய்யும் கட்சிகள், இயக்கங்கள் ஒழித்துக்கட்டப் படவேண்டும். பெரிய கட்சிகளை நம்பிப் பலனில்லை. சமூக அக்கறை உடைய சிறிய இயக்கங்கள் ஒன்றிணைந்து சாதிய வன்மத்திற்கு எதிராகவும் சாதியொழிப்பிற்கு ஆதரவாகவும் போராடவேண்டும்.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s