அடையாள அரசியல் ஒழிக்கப்படவேண்டும்


 

அடையாள அரசியல் ஒழிக்கப்படவேண்டும்

 

மு.சிவகுருநாதன்

 

(‘கூலிப்படை’ குறித்த விமர்சனத்திற்கான எனது எதிர்வினை.)

 

அன்பு நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு, வணக்கம். நான் பொதுவாக வாட்ஸ் அப் ஆடியோ, வீடியோக்களில் கவனம் செலுத்துவதில்லை. நண்பர் சொல்லியதன் பேரில் உங்கள் ஆடியோவைக் கேட்டேன். நன்றி.

 

பொதுவெளியில் இதற்கு மேல் விவாதம் வேண்டாம் என்று நீங்களாகவே முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாலும் என் பதிலைச் சொல்லவேண்டியதும், விளக்க வேண்டியதும் இங்கு அவசியமாகிறது. நீங்கள் இந்து மதப் பெருமை பற்றிய பதிவுகள் இடும்போது எனது கருத்துகளைத் தெரிவித்துள்ளேன்.

 

இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணமாக இருப்பது அடையாள அரசியலே. இதனை நான் வெறுக்கிறேன். சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பல்வேறு அடையாளங்கள் அடிப்படையில் இங்கு கட்டமைக்கப்படுகிற அரசியல் வெறுப்பை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது. அரசு ஊழியன், ஆசிரியன், போலீஸ் என்பதெல்லாம் அடையாள அரசியலின் ஓர் நீட்சிதான்.

 

நான் ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களைக் கடுமையாக விமர்சனம் செய்தே பல பதிவுகளை இட்டுள்ளேன். மாணவிகளுடன் தவறாக நடந்துகொண்ட, பாலியல் வன்கொடுமைகள் செய்த ஆசிரியர்களை ஆதாரித்தோ, நியாயப்படுத்தியோ நான் எவ்வித பதிவை இட்டதில்லை.

 

ஆசிரியன் என்பதால் எந்தக்கருத்தையும் சொல்லக்கூடாது என்பதில்லை. யார் செய்தாலும் தவற்றைக் கண்டிக்கவே செய்வேன். ஆசிரியர்களைப் பற்றிய பல கண்டனப்பதிவுகளைச் செய்திருக்கிறேன். நீங்கள் சொல்லியபடி வருங்கால சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் இம்மாதிரியானக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆசிரியர்கள், காவல்துறையினர் ஆகியோர் மனித, குழந்தை உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; தண்டனை அளிக்கவேண்டிய குற்றங்கள்.
எனக்கு உங்களது ஒப்பீடுகளில் விருப்பமில்லை. இருப்பினும் உங்களுக்காக ஓர் ஒப்பீடு. தவறு செய்த ஆசிரியர்கள் தப்பியதில்லை. ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட என்கவுண்டரை கொலை வழக்காகப் பதிவு செய்து இ.த.ச. 302 இன்படி வழக்கு தொடருவதில்லை. நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே இது சில வழக்குகளில் நடக்கிறது.

 

விவசாயி பாலனின் டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டது என்று கூறியுள்ளீர்கள். அதற்கான நீதிமன்ற உத்தரவு இருக்கிறதா? இருந்தால் டிராக்டரை உடன் திரும்ப ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன? கோட்டக் மஹிந்திரா வங்கியின் கடன் வசூல் கூலிப்படையுடன் தமிழக போலிஸார் இணைந்து செயல்படவேண்டிய தேவை என்ன? நீதிமன்ற உத்தரவுப்படி என்று வைத்துக்கொண்டாலும் வன்முறையைப் பிரயோகிக்க சட்டத்தில் இடமில்லை.

 

சென்ற வாரம் கண்ணகி நகர் 17 வயது சிறுவன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை யாரல் நடத்தப்பட்டது? தொலைக்காடசி விவாதத்தில் சித்தண்ணன் என்ற முன்னாள் போலிஸ் அதிகாரி அச்சிறுவனை இளைஞன் என்கிறார். மேலும் அவரது அண்ணன் மீது திருட்டு வழக்கு உள்ளது என்கிறார். அண்ணன் மீது வழக்கு இருந்தால் தம்பியை உயிர் போகுமளவிற்கு தாக்கி காதை செவிடாக்கிய காவல்துறையினருக்கு என்ன பெயர் வைப்பது?

 

இதுவரையில் ஆயிரக்கணக்கான லாக்கப் சாவுகள், சட்டவிரோதக் காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கிறதே. இவற்றிற்கு யார் பொறுப்பு? சில ஆண்டுகளுக்கு திருத்துறைப்பூண்டி, நாகூரில் கூட லாக்கப் மரணம் நிகழ்ந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்துச் சுட்ட நிகழ்வுகளை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

 

காவல் நிலையங்களில் போலீஸாரால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் எவ்வளவு நடந்திருக்கின்றன? காவல்துறையின் கண்களுக்கு சிறுவர்களும் பெண்களும் தீவிரவாதிகளாகத் தெரிவதேன்?

 

வடகிழக்கும் மாநிலங்களில் ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தில் மூலம் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் எவ்வளவு என்று தெரியுமா? இந்திய ராணுவமும் துணை ராணுவப் படைகளும் செய்த, இன்னும் செய்கின்ற அட்டூழியங்களை எழுத்தில் வடிக்க முடியுமா? மணிப்பூரில் பெண் கவிஞர் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் அல்லவா? மணிப்பூரில் இர்ரோன் ஷர்மிளா ஏன் இன்னும் உண்ணாவிரதம் இருக்கிறார்?

 

“INDAIAN ARMY RAPE US” என்கிற பதாகைகளுடன் ராணுவ முகாம் முன்பு பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் அனைவர் கண்ணிலும் ரத்தத்தை வரவைக்கும். ஆப்பிரிக்க நாடான் காங்கோவிற்கு சென்ற அய்.நா. அமைதிப்படையைச் சேர்ந்த இந்திய வீரர்களின் அட்டூழியங்கள் உலகப் பிரசித்தம்.

 

மாவோயிஸ்ட்கள் என்று சொல்லி பழங்குடி மக்களை வனத்திலிருந்து விரட்டியடித்து டாடா, வேதாந்தா, அம்பானி, ஸ்டெர்லைட் என்ற பலருக்கு தாரை வார்க்கும் கூலிப்படை வேலை துணை ராணுவப்படைகளும் அம்மாநில காவல்துறையும் செய்து வருவது ஒன்றும் நான் சொல்லும் புதிய விஷயமல்ல. பல்வேறு ஊடகங்கள் பல்லாண்டுகளாக எழுதிவரும் செய்திகள்தான் இவை.

 

மத்திய அரசு ராணுவத்தையும் மாநில அரசு காவல்துறையும் மட்டும் வைத்துக்கொண்டு, எஞ்சியவற்றை தனியாரிடம் விடுவதுதானே 1990 களுக்குப் பிறகு அரசின் கொள்கை. இவர்கள் யாருக்கு சேவகம் செய்கிறார்கள் என்பது வெளிப்படையானது.

 

காவல்துறையில் நல்லவர்கள் இருக்கலாம். அதனாலே மேலே சொல்லப்பட்டவை குற்றங்கள் இல்லை என்றாகிவிடுமா? சகாயத்திற்கு அரசு வழங்கிய மதிப்பெண் உங்களுக்குத் தெரியுந்தானே! இதுதான் நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் கிடைக்கும். ஒரிருவர் சரியாக இருந்து அமைப்பைத் திருத்த இயலாது.

 

ஆசிரியர், காவல் அதிகாரி யாராக இருந்தாலும் தவறு நடந்தால் அது சமூகக் குற்றம்; சமூக அவலம். இது ஒட்டுமொத்தமாக அனைவரையும் பாதிக்கவே செய்யும்?

 

தமிழக முதல்வராக முழு அரசு மரியாதைகளுடன் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் சென்று கைதாகி சிறைக்குச் சென்ற ஜெ.ஜெயலலிதாவுடன் தமிழகமே சிறைக்குச் சென்றதாகவே நான் பொருள் கொள்கிறேன். இதற்கு தமிழ்நாடே வெட்கி தலைகுனியவேண்டும். மூன்று நாட்கள் இங்கு முடங்கிப்போன அரசமைப்பு மற்றொரு அவலம். முதல்வர் பதவியிலிருந்து விலகி வழக்கை எதிர்கொண்டால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது. எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் போலிஸ், ஆசிரியர் என யார் குற்றமிழைக்கும் போதும் இந்த சமூகமே தலைக்குனிவிற்கு உள்ளாகிறது. பிரதமரோ, குடியரசுத் தலைவரோ காஞ்சி சங்கராச்சாரி காலில் விழுவது, இந்தியாவே விழுவதாகத்தான் அர்த்தம்.

 

அரசு எந்திரம் இவ்வாறு கூலிப்படையாக மாறுவது ஜனநாயகத்தை அழிக்கும். மனித உரிமைகளை சிதைக்கும். நான் மிகவும் நேசிக்கும் இடதுசாரிகளின் காவல்துறை மேற்கு வங்காளம் நந்திகிராம் மற்றும் சிங்கூரில் டாடா போன்ற பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கூலிப்படையாகவே செயல்பட்டது என்பதையும் இங்கு கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அரசு, அரசு எந்திரம் மக்களுக்காகவே செயல்படவேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதனை ஒட்டிய எனது பதிவுகள், கருத்துகள் இருக்கின்றன.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in எதிர்வினை, Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s