39. பவுத்தத்தை விழுங்கி அழித்தொழித்த இந்துத்துவம்


39. பவுத்தத்தை விழுங்கி அழித்தொழித்த இந்துத்துவம்

(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

மு.சிவகுருநாதன்

புத்தர்.jpg

(பவுத்த சமூக செயல்பாட்டுப் பாசறை வெளியீடாக 06, டிசம்பர், 2007 இல் வந்த டாக்டர் சுரேந்திர அஜ்நாத் எழுதி, வழக்கறிஞர் சு.சத்தியச் சந்திரன் மொழிபெயர்த்த ‘புத்தர் ஓர் இந்துவா?’ என்ற குறுநூல் குறித்த பதிவு.)

பொதுவாகக் குறுநூல்களுக்கென்று பலமும் பலவீனமும் உண்டு. விலை குறைவு, சிறியது போன்ற காரணங்களால் கனத்த நூல்களைவிட மிகப்பரவலான வாசிப்பை இவை பெறுகின்றன. நீண்டகாலங்களுக்குப் பிறகு இவை மறுபதிப்புள்ளாகி மீண்டும் வாசிக்கக் கிடைப்பதில் தடங்கல் இருக்கிறது. இருப்பினும் குறுநூல்களின் வீச்சைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

அக்டோபர் 14, 2006 இல் நாக்பூர் ‘தீட்ஷா பூமி’க்கு பொன்விழா நிகழ்விற்குச் சென்று திரும்பிபோது நண்பர்கள் விவாதத்தில் உருவான ‘பவுத்த சமூகச் செயல்பாட்டுப் பேரவை’ பற்றி அதன் அமைப்பாளர் பெ.தமிழினியன் மதிப்புரையில் குறிப்பிடுகிறார்.

‘Was Buddha A Hindu?’ என்ற டாக்டர் சுரேந்திர அஜ்நாத் ஆங்கிலத்தில் எழுதிய குறுநூலை சு.சத்தியச் சந்திரன் தமிழில் மொழிபெயர்த்துள்ள இந்நூல் 2007 டிசம்பரில் வெளியானது.

இந்து மதப் பார்ப்பனீயம் தனக்கு எதிராக வளர்ந்த பவுத்த, சமண மதங்களை அழிக்கப் புதிய வழிமுறையைக் கையாண்டது. “புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று கூறிப் பவுத்த மதத்தை ‘இந்து மதத்தில்’ சேர்த்துக்கொண்டு பின்னர், காலப்போக்கில் அந்த மதத்தை அழித்துவிட்டதுபோல, சமண மதத்தையும் ‘இந்து’ மதத்தில் இணைத்துக்கொள்ள ‘இந்துக்கள்’ பண்டைக் காலத்தில் முயன்றனர். இதன் பொருட்டு, திருமால் சமண மதத்தைப் போதித்ததாகக் கதை கற்பித்துக் கொண்டனர்”, என்று மயிலை சீனி வேங்கடசாமி ‘சமணமும் தமிழும் நூலில் குறிப்பிடுவார்.

அவைதீக மதங்களை இந்து மதம் என்று விழுங்கியதும், அவற்றில் இந்து மதக்கருத்துகளை ஏற்றியதும் நடந்தது. (உ.ம்) மகாயானம். பவுத்த, சமண, ஆசீவக மதங்களிலிருந்து கடன் பெற்ற கருத்துகளை தமதாக சொந்தம் கொண்டாடியது ஒருபுறமிருக்க, அவற்றின் உள்ளே ஊடாடி அவற்றைக் கொன்று போட்டது வைதீக இந்துமதம்.

புத்தரின் போதனைகள், பவுத்தக் கருத்தியல் கொண்டு புத்தர் ஓர் இந்து என்று முடிவு செய்கிற டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் தவறான வாதங்களை இந்நூலாசிரியர் டாக்டர் சுரேந்திர அஜ்நாத் ஆதாரத்துடன் மறுக்கிறார்.

‘இந்து ‘ என்ற பாரசீகச் சொல்லுக்கு திருடன், கொள்ளையன், வழிப்பறிக் கொள்ளையன் என்பதே பொருள். 19 ஆம் நூற்றாண்டில் ஆரிய சமாஜிகள் கூட இச்சொல்லை பயன்படுத்த விரும்பவில்லை. இந்து மதம், இந்துக்கள் குறித்து சமஸ்கிருதப் பிரதிகள், நவீன இந்துத் தலைவர்கள் அளிக்கும் வரையறைகள் குழப்பங்களும், முரண்பாடுகளும் நிரம்பியதாக இருப்பது இங்கு பட்டியலிட்டுக் காட்டப்படுகிறது. (பக். 12-14)

“வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் பசுக்கள் ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்துதல், ஒருவரின் சாதியக் கடைமைகளை நிறைவேற்றுதல், மறுபிறப்பில் நம்பிக்கை, ஆரியரல்லாதோரின் கொள்கைகளைப் பாவமெனக் கொள்ளுதல், ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றுதல், கடவுள் மற்றும் கடவுளரின் உருவங்களையும் அவதாரங்களையும் வழிபடுதல் என்பது இந்துக் கலாச்சாரத்தின் அடைப்படையாகும்”, (பக். 15) என்பதைச் சுட்டி புத்தரை எப்படி ஓர் இந்துவாகக் கொள்ளமுடியாது என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறார்.

வேதங்கள் உள்பட தவறற்றவை ஒன்றும் இல்லை. எந்த ஒரு பொருளும் ஆய்விற்கும் மறு ஆய்விற்கும் உட்படுத்தப் படவேண்டும் என்று புத்தர் போதித்தார். பவுத்த அறிஞர் தர்மகீர்த்தி வேதங்கள் தவறற்றவை என்பது ஐந்து மடமைகளுள் ஒன்று எனக் குறிப்பிட்டார்.

புத்தர் மாட்டிறைச்சி உண்ணுவதைத் தவறாகக் கருதவில்லை. உணவிற்காக விலங்குகள் கொல்லப்படுவதை புத்தர் தடை செய்யவில்லை. யாகங்கள் மற்றும் சடங்குகளில் கொல்வது என்கிற ஒரே நோக்கத்திற்காக பலியிடுவதை அவர் எதிர்த்தார்; தடை செய்தார். பசுவிற்கு பவுத்த மதத்தில் தனி அந்தஸ்து இல்லை.

மனிதப் பிறப்பு பிரம்மாவால் நிகழவில்லை என்பதை, “பிராமணர்களின் மனைவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டதாகவும், அவர்கள் கருவுற்றதாகவும், பிள்ளைகள் பெற்றுக் கொண்டதாகவும், பாலூட்டியதாகவும் அறியப்படுகிறது. மற்ற எவரைப்போலவும் பிராமணர்களும் பெண்ணிடமிருந்து பிறந்தவர்களாக இருக்கும்போது அவர்கள் தாங்கள் பிரம்மாவிடமிருந்து பிறந்ததாக எப்படிக் கூறமுடியும்?”, (பக். 18) என்று வினா எழுப்பியவர் புத்தர்.

நான்கு சாதிகளும் சமமானவையே என்று அறுதியிட்ட புத்தர் தனது சங்கத்தில் சுனிதா, நந்தா, குமாரி கசப்ப, சுமங்கல மாதா, சுபா, உபாலி என்று அனைத்து சாதியினரையும் உட்படுத்தினார்.

ஆன்மா என்று ஒன்று இல்லை. அது இடம்பெயர்தல் என்பது முற்றான மூடநம்பிக்கை. இதை இரக்கத்திற்கிடமின்றி நிராகரிக்கவேண்டும், என்றார்.

“கடவுள் நல்லவரென்றால் மனிதர்கள் கொலைகாரகளாகவும், திருடர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், வஞ்சக மனத்தினராகவும், தீய எண்ணமுடையவர்களாகவும், பிறழ்ந்த மனப் போக்கினராகவும் ஏன் உள்ளனர்”, (பக். 24) என்று கேள்வி எழுப்பி, “உலகைத் தவறுகளின் கூடாரமாக ஆக்கியுள்ள உங்கள் பிரம்மாவை நான் மிகவும் நியாயமற்றவர்களில் ஒருவனாகவே கருதுகிறேன்”, (பக். 25) என்று புத்தர் கறாராக சொல்வது இங்கு பதிவு செய்யப்படுகிறது.

சிலை வழிபாட்டிற்கு பவுத்தத்தில் இடமில்லை. மேலும் பவுத்தத்தில் வழிபடுவதற்குரியவர் என்றோ, பிரார்த்தனை செய்து கொள்ளத்தக்கவர் என்றோ ஒருவரும் இல்லை. ஆனால் இந்து மதத்தில் 30 கோடி தேவர்களும் தேவதைகளும் வழிபடப்படுவதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

அவதாரம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘கடவுளின் வாரிசு’ என்று பொருள். இதன் அர்த்தம் கடவுள் பிறப்பெடுக்கிறார் என்பதே. கிருஷ்ணன் தானே கடவுள் என்றும் கீதையை தனது வார்த்தை என்று கூறிக்கொள்கிறார். புத்தரோ தன்னை, கடவுள், கடவுளின் வாரிசு, அவதாரம், இறைத்தூதர், வழிகாட்டி, போதகர் என்று எந்த அடையாளங்களையும் சூடிக்கொள்ளவில்லை.

புத்தர் வேதங்களை ஏற்க மறுக்கும் ஒரு நாத்திகவாதி என்பதால், திருடனுக்கு வழங்கப்படுவதைப் போன்ற தண்டனை வழங்கத்தக்கவர் என்று வால்மீகி ராமாயணம் கூறுவதும், பவுத்தர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும், பவுத்தரை ஒருவர் தொட நேர்ந்துவிட்டால் அவர் துணிகளை அணிந்தபடியே குளிக்க வேண்டும் என்று இந்து தர்ம சாத்திரங்கள் சொல்வதும் (பக். 30) எடுத்துக்காட்டப்படுகிறது.

“உனக்கு நீயே விளக்கு‘ என்று சொன்ன புத்தர், தன்னை ததாகதர் (வழிப்போக்கர்) என்றே சொல்கிறார். இவ்வழியே வந்து இப்படியே போனவர்; அவ்வளவே. இவரை இந்துவாக்குவது கொடிய பாசிசம் அன்றி வேறில்லை.

புத்தர் ஓர் இந்துவா?
டாக்டர் சுரேந்திர அஜ்நாத்
தமிழில்: சு.சத்தியச்சந்திரன்

பக்கங்கள்: 32
விலை: ரூ. 15

முதல் பதிப்பு: 06, டிசம்பர், 2007

வெளியீடு:

பவுத்த சமூக செயல்பாட்டுப் பாசறை,
300/183, 2 –ஆம் தளம்,
தம்புச்செட்டித்தெரு,
சென்னை – 600001.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s