ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்!


ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்!

(மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இங்கு பதிவிடப்படுகிறது.)

வழக்கறிஞர் பொ.இரத்தினம்

அமைப்பாளர்,

பகத்சிங் மக்கள் சங்கம்.

தொடர்புக்கு: 9443458118

‘அறிவை ஆயுதமாக்குவோம்!”

“நம்மிடம் முழு நியாயமும் வலுவான நேர்மையும் இருக்கும்போது நாம் ஏன் தயங்கவேண்டும்?”,

– மாமனிதர் அம்பேத்கர்

பகத்சிங்  (1)

1979 இல் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் மேற்கு வங்க அரசின் காவல்துறை மரிச்சாபி என்ற தீவில் கடும் உழைப்பால் வளப்படுத்தி வாழ்ந்த தலித் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து வேட்டையாடியதில் சுமார் 14 ஆயிரம் தலித் மக்கள் அழிக்கப்பட்டனர். இக் கொடூர நிகழ்வைப் பற்றி செய்திகள் வராமல் மத்திய, மாநில அரசுகள் இருட்டடிப்பு செய்தது. மரிச்சாபி கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் பங்களாதேஷை ஒட்டிய சுந்தரவனக்காட்டுப்பகுதி ஆகும்.

நாம சூத்திரர்கள் (தலித்) என்ற பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் ராஸ் மாலிக் (Raas Malick) இரண்டாண்டுகள் அப்பகுதிகளில் கள ஆய்வு செய்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட (Ph.D) ஆய்வை மேற்கொண்டார். இதன் மூலம் இக்கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.

‘தலித் முரசில்’ வெளிவந்த இது தொடர்பான கட்டுரைகளை ‘கருப்புப்பிரதிகள்’ நீலகண்டன் தொகுத்து வெளியிட்டார். இதை மக்களிடம் கொண்டு செல்லும் தேவை இருக்கிறது. அதை பகத்சிங் மக்கள் சங்கம் செய்ய இருக்கிறது. அரசியல்வாதிகளின் அக்கிரமங்களையும் போலி கம்யூனிஸ்ட்களையும் நாம் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

இக்கொடிய நிகழ்விற்கு இவ்வாண்டு ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடங்கள் அஞ்சலி செலுத்த அனைத்து தரப்பிற்கும் பகத்சிங் மக்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

இது தொடர்பாக குடியரசுத்தலைவர், பிரதமர், உச்சநீதி மன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதங்கள் எழுதப்பட உள்ளது.

இக்கொடுமை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள பகத்சிங் மக்கள் சங்கம் விரும்புகிறது. ஆனால் அதற்கான உதவிகள் கிடைப்பது இங்கு அரிதாக இருக்கிறது.

po.rethinam

உலகம் உருண்டை என்ற சொன்னதற்காக விஞ்ஞானி கலிலியோவை சிறையில் அடைத்துக் கொன்றதற்கு கத்தோலிக்க கிருத்தவ மதத்தலைவர் போப் 400 ஆண்டுகளுக்குப் பிறகு உலக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிமக்களை அழித்தொழித்த கொடுஞ்செயலுக்கு அந்நாட்டின் பிரதமர் மன்னிப்பு கோரினார். மேற்குவங்கத்தில் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கு அம்மாநில முன்னால் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மன்னிப்பு கேட்ட (20.12.2013) நிகழ்வும் நடந்தது.

ஆனால் மரிச்சாபி கொடுமை நடந்து 37 ஆண்டுகள் ஆனபிறகும் மறைப்பு வேலைகள் தொடர்கின்றன. இதற்கு அனைத்து இயக்கங்கள், கட்சிகள் உறுதுணையாக இருப்பது வேதனைக்குரியது. எனவே இதற்கு அழுத்தம் கொடுத்து ஓர் இயக்கமாக முன்னெடுப்போம். இதை தோழமை சக்திகள் பலரை இணைத்துச் செயல்படுத்துவோம்.

சி.என். அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது கீழத்தஞ்சை (நாகப்பட்டினம்) கீழவெண்மணியில் (25.12.1968) குழந்தைகள் உள்பட 44 தலித்கள் ஓர் குடிசையில் வைத்து உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். இதற்குக் காரணம் வெறும் கூலி உயர்வு மட்டுமல்ல; தலித்கள் செங்கொடி இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் சங்கமாக அணிதிரள்வதை பொறுக்காத ஆதிக்கசாதி வெறியர்கள் கோபாலகிருஷ்ண நாயுடும் அவனது கூட்டாளிகளும் இக்கொடூரத்தை நடத்தினர்.

rethinam

இங்கு பெரியாரும் காந்தியாரைப்போலவே 44 தலித் மக்களின் உயிர்கள் பலியிடப்பட்டதை வெறும் கூலிப்போராட்டமாகப் பார்த்தார்.

காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகளை விடுதலை செய்ததன் மூலம் உயர்நீதிமன்றமும் நீதிபதிகளும் சாதியத்தை நிறுவி தலைகுப்புற கவிழ்ந்தன.

எங்கும் துரோகம். இக்கொலைக்குற்றவாளி கோபாலகிருஷ்ண நாயுடுவை 12 ஆண்டுகளுக்குப் பிறகு 14.12.1980 இல் நக்சல்பாரித் தோழர்கள் வெட்டிக்கொன்று பழி தீர்த்தனர். சி.பி.எம். ஏதும் செய்ய இயலாமல் கையைப் பிசைந்து நின்றது. இப்போது சாதியுணர்வு வளர்ந்து போலிக் கம்யூனிஸ்ட் கும்பலாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கும் வாரிசுகளுக்கும் அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் திராவிட, கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் தலித்களுக்கு எதிரான ஆதிக்க சாதி கட்சிகளாக மாறிவிட்டன.

பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அரசியல் சட்டப்படியான நிவாரணம் அளிக்கவேண்டியது கடமையாகிறது. 31.10.1984 இல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ்காரர்களால் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்காணோர் பாதிக்கப்பட்டனர். அப்போது குடியரசுத் தலைவரான கியானி ஜெயில்சிங்கால் இதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. உடனடியாக ஜெயில் சிங்கால் பிரதமராக்கப்பட்ட ராஜூவ் காந்தி பின்னாளில், “ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது சிறு செடி, கொடிகள் அழியத்தான் செய்யும்”, என்று திமிர்த்தனம் பேசினார். தற்போது மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச அரசு இந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால் மோடியால் திட்டமிடப்பட்ட இஸ்லாமியருக்கு எதிரான குஜராத் வன்முறை?

இந்த நரேந்திர மோடி 2002 இல் குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடிய வன்கொடுமைகளில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்க்கான முஸ்லீம்கள் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்துத்துவ வெறியர்கள் நீதிமன்றம், மக்கள் மன்றம் எதுவாலும் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இம்மக்களுக்கு உரிய நிவாரணம் இன்னும் கிடைத்தபாடில்லை.

1991 இல் காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்காரப்பா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடத்திய ‘பந்த்’ –ல் கர்நாடகத் தமிழர்களுக்கு எதிராக மிகக்கொடிய வன்முறை வெறியாட்டம் நடந்தது. 1.5 லட்சம் தமிழர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். கோடிக்கணக்கில் சொத்துகளும் உடைமைகளும் சூறையாடப்பட்டன. பின்னாளில் பா.ஜ.க. வில் சேர்ந்த இந்த பங்காரப்பாவை இந்தக் கலவரங்களில் நரேந்திர மோடியின் முன்னோடி என்றுகூட சொல்லலாம்.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரால் உருவாக்கப்பட்ட இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய மனித உரிமைகள் விசாரணை நடுவம் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விரிவான விசாரணை நடத்தி அறிக்கையளித்தது. “மத்திய அரசு செயல்படாத அரசாக முடங்கிப் போயிருந்தது. இதே நிலை நீடித்தால், மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள தாங்களாகவே வழிமுறைகளை உருவாக்கிக் கொள்வார்கள்”, என்று இந்நடுவம் சுட்டிக்காட்டியது. இதன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு இழப்பீடு ஏதுமில்லை. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி இழப்பீட்டு ஆணையம் சிலருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கி உத்தரவிட்டது.

இதைப்போல் எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. போபால் யூனியன் கார்பைடு நச்சு வாயுக்கசிவு, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ராணுவமும் அரசும் நிகழ்த்திய வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், பச்சை வேட்டை என்ற பெயரில் பழங்குடியினர் மீதான போர், நாடெங்கும் அன்றாடம் நிகழ்த்தப்படும் தலித், பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகள் ஆகிய எவற்றிற்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை; எவரும் மன்னிப்பு கோரவில்லை.

இத்துடன் இன்னொன்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். பக்த்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்களுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டபோது காந்தியார் மிகப் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார். காந்தி முயற்சித்திருந்தால் ஆங்கிலேயர்களிடம் வேண்டுகோள் விடுத்து இவர்களது மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றி உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். இவ்விஷயத்தில் காந்தியார் ஒரே அடியாக கைவிரித்து விட்டார்.

இவ்விவகாரத்தில் காந்தியாரின் பொறுப்பற்ற தன்மையையும், பகத்சிங்கை மத அடையாளத்துடன் சித்தரிக்கும் புரட்டையும் வெளிப்படுத்த பகத்சிங் மக்கள் சங்கம் முன்முயற்சி எடுக்கிறது.

பகத்சிங்கின் உண்மை வரலாற்றை அறிந்துகொள்ளவும் ஆய்வு செய்யவும் பகத்சிங் மக்கள் சங்கத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுடன் இரு வழக்கறிஞர்கள் இம்மாத இறுதியில் பஞ்சாப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 14 இல் இந்தியா முழுவதும் இதில் அக்கறை காட்டும் அனைவரையும் ஒருங்கிணைத்து அஞ்சலி செலுத்துவோம்.

நாம் தொடர்ந்து இப்பாதையில் இயங்குவோம்;

தோழமை சக்திகளை ஒருங்கிணைப்போம்.

நன்றி: வழக்கறிஞர் பொ.இரத்தினம்

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in அறிக்கை, Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s