தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் எனப் பெயரிடுவோம்! சென்னை உயர்நீதிமன்றம் எனப் பெயரிடும் சதியை முறியடிப்போம்!!


வழக்கறிஞர் பொ.இரத்தினம்

அமைப்பாளர்,
பகத்சிங் மக்கள் சங்கம்.
தொடர்புக்கு: 9443458118

‘அறிவை ஆயுதமாக்குவோம்!”

“நம்மிடம் முழு நியாயமும் வலுவான நேர்மையும் இருக்கும்போது நாம் ஏன் தயங்கவேண்டும்?”,

– மாமனிதர் அம்பேத்கர்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்கிற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்றம் செய்த மத்திய அரசுக்கு மு.கருணாநிதி நன்றியும் பாராட்டும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு சீரழிவுகளுக்கு முன்னோடியாகத் திகழும் மு.கருணாநிதி இதன் மூலம் தனக்கு யாரும் நிகரில்லை என்று மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

ஆங்கிலேயர்கள் வைத்த மெட்ராஸ், கல்கத்தா, பம்பாய் ஆகிய பெயர்களின் இன்றைய பொருத்தப்பாடு கேள்விக்குரியது. தலைமை நீதிமன்றம் (உச்ச நீதிமன்றம்) தில்லியில் இருக்கின்ற காரணத்தால் அதை யாரும் தில்லி தலைமை நீதிமன்றம் என்று அழைப்பதில்லையே!

மெட்ராஸ் சென்னை என்று மாற்றப்படுவதற்கு பல்லாண்டு முன்னதாகவே சென்னை மாநிலம் தமிழ்நாடு மாநிலமாக மாறிவிட்டது கூடவா கருணாநிதிக்கு தெரியாமற் போய்விட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரண்டிற்கும் உரிய நீதிமன்றம் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என்றல்லவா மாற்றியிருக்க வேண்டும். பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு & புதுச்சேரி என்றிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்தக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் மெட்ராஸ் என்ற மாநகர்ப் பெயர்மாற்றத்தோடு ஏன் குழப்பிக் கொள்ளவேண்டும்?

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் என்று இருக்கும்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் பெயரிடுவது ஏன்? ஜம்மு-காஷ்மீர், மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், சிக்கிம், திரிபுரா, உத்தர்காண்ட், மணிப்பூர், மேகாலாயா போன்ற மாநிலங்களில் அம்மாநிலத்தின் பெயரில்தான் உயர்நீதிமன்றம் செயல்படுகிறது. காலனித்துவ அடிமை மனோபாவம் மேற்குவங்காள உயர்நீதிமன்றம், மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என்று மாற்றவிடாமல் தடுக்கிறது.

தமிழகத்திலும் புதுவையிலும் இந்த கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் மத்திய மற்றும் புதுவை அரசுகளுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருந்தார்.

சென்னப்பட்டினம் என்பது மருவிதான் சென்னை என்றானது. இதன் தெலுங்குப் பின்புலம் அனைவரும் அறிந்த ஒன்று. சிலர் மு.கருணாநிதி தெலுங்கர் என்ற விமர்சனம் செய்கின்றனர். இவ்வாதத்தை உண்மையாக்குவதைப் போல சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயர்மாற்றத்திற்கான வரவேற்பை அணுகவேண்டியுள்ளது.

பல தென்னக மாநிலங்களுக்குப் பொறுப்பான ‘மண்டல வானிலை ஆய்வு மையத்தை’ ‘சென்னை வானிலை ஆய்வு மையமாக’ குறுக்கும் வேலையை ஊடகங்கள் செய்து வருகின்றன. அதைப்போல மாநில உயர்நீதிமன்றத்தை உள்ளூர் நீதிமன்றமாக்குவது ஏன்?

தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு சீரழிவு வேலைகளில் இதுவும் ஒன்று. தமிழ் மொழி, இனம் என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தக் கூத்துகளுக்கு அளவில்லை. சிலர் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இது சரியற்ற சிந்தனை என்பது பலருக்குத் தெரிவதில்லை. புதுச்சேரிக்கும் இதுதானே உயர்நீதிமன்றம். அவர்கள் தமிழர்கள் இல்லையா? சங் பரிவாரக் கும்பலில் அகண்ட பாரதக் கனவிற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இந்த தமிழ் தேசியக்கனவு. இன்று ஈழத்தின் அவலத்திற்கு இவர்கள்தான் காரணம்.

மு.கருணாநிதியின் சீரழிவு வேலைகளைப் பட்டியலிட்டு மாளாது. உதாரணத்திற்கு ஒருசில மட்டும்.

பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஶ்ரீ, பாரத ரத்னா போன்ற விருதுகளையும் பட்டங்களையும் பெயருடன் சேர்த்து விளம்பரப்படுத்திக் கொள்ளகூடாது என சட்டமிருக்க டாக்டர் கலைஞர் என பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் கலாச்சாரத்தைத் தொடங்கியவர். அந்த வகையில் புரட்சித் தலைவி அம்மாவிற்கு முன்னோடி இவரே.

இந்த டாக்டர் பட்டமும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமாரின் பிணத்தின் மீது வாங்கப்பட்டது. உதயகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களைக் கொண்டே இது எங்களது பையன் அல்ல என்று மிரட்டி சொல்லவைத்தவர். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அப்போது சென்னைக் கிருத்தவக் கல்லூரி மாணவர்; எஸ்.எஃப்.அய். இன் பொறுப்பாளராக இருந்தார். இதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. சி.பி.அய். மாணவர் அமைப்பும் இணைந்து போராடியது. இறுதியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் இரண்டாமாண்டு பி.எஸ்.சி. படிக்கும் உதயகுமார் என்பதை உறுதி செய்தது. இவ்வழக்கில் எஸ்.எஃப்.அய். சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழை வெறும் பிழைப்புவாதக் கருவியாக இவர் பயன்படுத்துவது நாடறியும். ஓர் நேரடி அனுபவம். 1974 இல் சென்னை சட்டக்கல்லூரியில் தமிழில் வகுப்பெடுக்க போராட்டம் நடந்தது. நானும் ராஜகோபால் போன்றவர்களும் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தோம். தன்னெழுச்சியாக மாணவ – மாணவிகள் திரளாக பங்குபெற்றனர். தி.மு.க., அ.தி.மு.க. மாணவர்கள் சான்றிதழில் தமிழ்வழி என்று போட விரும்பவில்லை.

இப்போதைய சேலம் தனியார் சட்டக்கல்லூரி தாளாளராக இருக்கும் தனபாலன் அவர்கள், “கலைஞர் எனக்கு வேண்டியவர். அவரிடம் பேசி இரு வாரத்தில் உத்தரவு பெற்று வருகிறேன்”, என்று உறுதியளித்தார். நாங்கள் ஒரு மாதம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றோம். அவர் இதற்காக முயற்சி செய்து “உனக்கு வேறு வேலை இல்லையா?, இதையெல்லாம் இங்க கொண்டு வர்ற”, என்று விரட்டப்பட்டார். அவர் எங்களிடம், “தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தும் கலைஞரின் முகத்திரையை கிழியுங்கள்”, என்று மனம் வருந்திக் கூறினார்.

இனி தமிழில் வகுப்பும் ஆங்கிலத்தில் தேர்வும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு தமிழிலும் தேர்வு எழுத ஆணை வெளியானது.

பொதுமக்களின் ஊழியர்களான நீதிபதிகளை நீதியரசர் என்று அழைக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கையைத் தொடங்கியவர். “Judges are public servant. People are master”, என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் விழா ஒன்றில் பேசியது, கொச்சி ‘இந்து’ பதிப்பில் விரிவான செய்தியாக வந்தது. அதைப் பார்த்து கிருஷ்ணய்யர் பாராட்டினார். நீதிபதிகள் மக்கள் ஊழியர்களே. நியாயம் வழங்குவதற்காக இவர்களுக்கு அதிகாரமும் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. மக்களாட்சியில் மன்னர்களுக்கு இடமில்லை. கருணாநிதி போன்ற பிழைப்புவாதிகளுக்கு வேண்டுமானால் இவர்கள் அரசர்களாகத் தெரியலாம்.

கண்ணதாசன் தனது சுயசரிதையான ‘வனவாசத்தில்’ சொல்லியிருப்பதை இங்கு எழுதினால் நாகரீகமாக இருக்காது. அண்ணா கருணாநிதிக்கு கணையாழி அணிவித்த கதை 12.07.2016 குமுதம் ரிப்போர்ட்டரில் ‘கருணாநிதி வழியில் கலைவாணன்’ என்ற செய்தியில் பதிவாகியுள்ளது. ஓர் சின்ன திருத்தம். கண்ணாதாசன் அண்ணா வீட்டிற்குச் சென்று கேட்கவில்லை. சென்னை சீரணி அரங்கில் கூட்டம் முடிந்து உடன் கேட்கப்பட்டது; இதன்மூலம் கருணாநிதியின் சீரழிவும் அம்பலமானது.

தி.மு.க. வில் அண்ணாதுரைக்குப் பிறகு இருந்த அடுத்தகட்ட தலைவர்களை ஓரங்கட்டி, சதி செய்து, குறுக்கு வழியில் தலைமைப்பதவியை அடைந்த பெருமை இவரையேச் சாரும்.

அவரே அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி ரயிலில் டிக்கெட் எடுக்கக் கையில் காசின்றி டிக்கெட் இல்லாப் பயணம் செய்து சென்னை வந்த கருணாநிதியின் குடும்பம், இன்று ஆசியாவிலேயே பெரும் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக மாறியது என்பது சீரழிவுப் பாதையை நமக்கு எடுத்துக்காட்டும்.

மெரினாக் கடற்கரையில் கண்ணகி சிலை வைப்பதும் அதை பெயர்தெடுப்பதும் அதை மீண்டும் அங்கே நிறுவுவதும் இத்தகைய சீரழிவு வேலையின் உச்சம் என்பதை விளக்க வேண்டியதில்லை.

மஞ்சள் துண்டும் தமிழ்நாட்டுச் சீரழிவின் அடையாளமாக இன்று மாறிவிட்டிருக்கிறது. இம்மாதிரி சீரழிவு சக்திகளை அம்பலப்படுத்த “அம்மா பன்றி பாராட்டுத் திட்டம்” என்ற ஓர் பணியை பகத்சிங் மக்கள் சங்கம் இயக்கமாக முன்னெடுக்கவிருக்கிறது. இதில் முதல் பாராட்டு மு.கருணாநிதிக்குத்தான் வழங்கவிருக்கிறோம்.

நல்லவர்கள் மத்தியிலும் நியாயமாக சமூகம் சார்ந்து சிந்திக்கும் போக்கு குறுகிக்கொண்டே வருகிறது. இத்தகைய குறுகிய எண்ணம் கொண்டோர் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயரை மாற்ற விரும்புகிறார்கள். இந்தியத் தலைமை நீதிமன்றத்தின் கிளை ஒன்றை தென்னிந்தியாவில் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பலபேர் சென்னையில் வைக்கலாம் என்றனர். நான்கு மாநிலத்திற்கும் போக்குவரத்து வசதிமிக்க பெங்களூரு மையமாக இருக்கும் என்று நாம் சொல்கிறோம். அம்முயற்சி கிடப்பில் இருக்கிறது. அதற்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

பெயரினால் மட்டும் நீதிதேடுபவர்களுக்கு விடிவு கிடைத்துவிடாது. உயர்நீதிமன்றத்தை நீதி சார்ந்த நிறுவனமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியிருக்கிறது. பெருவாரியான நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் சாதியை கட்டிக்கொண்டு அழுகிறார்கள். அரசியல் சட்டம் செயலுக்கு வந்த 10 ஆண்டுகளில் நல்லது நடக்குமென அரசியல் சட்டம் எழுதியவர்கள் நினைத்தார்கள். பின்னோக்கிச் சென்று காட்டுமிராண்டித்தனத்தை கைக்கொண்டு அலைகிறார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் இது. இப்படி விவாதம் வைக்கும் அளவிற்கு சீரழிவு சிந்தனை பெருகியுள்ளது.

இது வெறும் பெயரிடும் பிரச்சினையோ அல்லது வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் சார்ந்த பிரச்சனையோ மட்டுமல்ல. எனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என்று பெயரிடும் கோரிக்கையை ஓர் மக்கள் இயக்கமாக முன்னெடுப்போம்.

நன்றி: வழக்கறிஞர் பொ.இரத்தினம்

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in அரசியல் விமர்சனம், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s