நீதிபதிகளின் வறட்டு கவுரவமும் தமிழ்நாடு வழக்கறிஞர்களின் புலி வாலைப் பிடித்த நிலையும்


நீதிபதிகளின் வறட்டு கவுரவமும் தமிழ்நாடு வழக்கறிஞர்களின் புலி வாலைப் பிடித்த நிலையும்

வழக்கறிஞர் பொ.இரத்தினம்

அமைப்பாளர்,

பகத்சிங் மக்கள் சங்கம்.

தொடர்புக்கு: 9443458118

தமிழ்நாட்டில் வழக்கறிஞர்களைப் போராட்டத்தில் தள்ளியதே அடாவடித்தனமான விதிமுறைகளை உருவாக்கியதுதான். இப்படி சொல்வதனால் வழக்கறிஞர்கள் மத்தியில் சமூகம் சார்ந்த, அரசியல் சட்டத்தின் மீது பற்றுள்ள சூழல் இருப்பதாகக் கருதமுடியாது. இந்தியச் சூழலில் நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றங்கள் போன்றவற்றில் செயல்படும் பாதிக்கு மேற்பட்டோர் சீரழிந்துவிட்டனர். வெறும் எழுதப்பட்ட சட்டம் செயல்படாது. இந்தச் சீரழிவை இன்னும் விரிவாக்கவும் வேகமாக்கவுமான வேலைதான் நடந்துகொண்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வெளிவருகிறது.

ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு நிறுவனங்களிலும் இருக்கிற பாதிக்குக் குறையாதவர்கள் கிரிமினல்மயமாகி உள்ளார்கள். கைப்புண்ணுக்குக் கண்ணாடிபோட்டுத் தேடவேண்டியதில்லை. இதைச் சரிப்படுத்த யாரும் முன்வராத நிலைதான் காணப்படுகிறது. வழக்கறிஞர்களில் சமூகம் சார்ந்து சிந்திக்கும் ஒருசிலர் கூட இவ்விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளத் தடுமாறுகிறார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு பொறுப்பாளராக இருக்கிற வழக்கறிஞர் திருமலைராஜன் சிறந்த அனுபவம் வாய்ந்தவர். இதற்கு முன்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பிற்கு செயலாளராக இருந்தவர். இடதுசாரித் தத்துவத்தை தனது கொள்கையாகக் கொண்டிருப்பவர். ஆனால் அவருடைய நிலைமையும் புலி வாலைப் பிடித்தப் போராளியைப் போலத்தான் இருக்கிறது.

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் போதுமான அளவு செயல்படத் தயங்கி இதிலிருந்து விலகிக்கொண்டார்கள். அதற்கு மாற்றாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போன்றதொரு ஒருங்கிணைப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. அதில் திருமலைராஜன் பொறுப்பாகவும் ஒரு சிலர் உதவியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

இதன் முதல்கூட்டம் ஈரோட்டில் நடந்தபோது நானும் கலந்துகொண்டேன். அக்கூட்டத்தில் பெருவாரியான வழக்கறிஞர்கள் வெள்ளைச் சட்டையிலும் விதிவிலக்காக ஒருசிலர் மட்டுமே வண்ணச்சட்டையிலும் வந்திருந்தனர். இதில்கூட ஓர் நல்ல அம்சமிருக்கிறது. சமூகத்திற்கு முன்மாதிரியான நடந்து கொள்ளவேண்டும் என்ற உள்ளுணர்வின் வெளிப்பாடாகவே இதை நான் பார்க்கிறேன்.

ஆனால் அன்று உணவு இடைவேளைக்குப் பின்பு, திருமலைராஜன் மேடையில் தீர்மானங்களைப் படிக்க ஆரம்பித்தார். முதல் இரண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவதாக அவர் ஒரு கருத்தை முன்வைத்தார். “நீதிபதிகள் காலை பத்தரை மணிக்கு வந்து இருக்கையில் அமர்கிறார்கள். மதியம் ஒன்றரை மணிவாக்கில் உணவிற்காக எழுந்திருக்கிறார்கள். இடைப்பட்ட மூன்று மணிநேரம் தொடர்ந்து உட்கார்ந்திருப்பது மிகவும் கடினமான பணி என்றும் அதுவும் பெண் நீதிபதிகள் கூடுதலான சிரமத்திற்கு உள்ளாவார்கள்”, என்று சொல்லும்போதே அரங்கிலிருந்த ஒரு சில வழக்கறிஞர்கள். “இதெல்லாம் நமக்கு எதற்கு?”, ஆவேமாக முழக்கமிட, கொஞ்சம் தடுமாறிப்போய் அடுத்தவரை பேச அழைத்துவிட்டு அமர்ந்துவிட்டார்.

இதை எல்லாம் பார்த்த என் போன்றவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவர் கொண்டுவந்த தீர்மானத்தின் உள்ளடக்கம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் அல்லாத அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டக்கூடிய சமூக அக்கறையுள்ள ஓர் முயற்சி. அதை நிறைவேற்றியிருந்தால் எல்லோரும் அங்கீகரித்துப் பாராட்டுவார்கள். அவருடைய அந்த முயற்சி முழுமையாகத் தடுக்கப்பட்டது.

அவர் இப்படி எங்கெல்லாம் அவமானப்படுத்தப் பட்டார் என்று எனக்குத் தெரியாது. இங்கு இன்னொரு நிகழ்வை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். உடல்நலக்குறைவாக இருந்த மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றிருந்த நேரம், திருச்சியில் ஓர் கூட்டம் நடந்தது. அவர் அங்கிருந்து தொலைபேசியில் பேசியது ஒலிவாங்கியில் ஒலிபரப்பப்பட்டது. அப்போது, “நீதிபதிகள் ஓர் குழு அமைத்திருக்கிறார்கள். இதுவே நமது போராட்டத்திற்கு கிடைத்த நல்ல விளைவுதான்”, என்று சொல்லும்போது ‘துரோகி’ என்று திட்டுகிறார்கள். இந்நிலையிலும் அவர் சங்கப் பொறுப்பாளர்களுடன் தலைமை நீதிமன்ற நீதிபதிகளைச் சந்திக்க நேரடியாக தில்லி வந்தார்.

இது மாதிரியான சில நிகழ்வுகளை நாம் அறியும்போது, எப்படிப்பட்ட வகையில் போராட்ட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் என்பது சற்று வேதனைக்குரியதாக இருக்கிறது. என்னைப் போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் அவசர வழக்குகளுக்காக ஆஜராகிறோம். போராட்டத்தை ஆதரிக்கிற நிலையிலும் அவசரநிலையில் அவ்வழக்கை நடத்த நீதிமன்றம் செல்லவேண்டியுள்ளது தவிர்க்கமுடியாதது. இந்தப் பணியிலிருந்து நான் என்றைக்கும் பின்வாங்கிக் கொண்டதில்லை.

நீதிமன்றம் என்பது மக்களுக்கான நிறுவனம். வழக்கறிஞர்கள் என்போர் இடையில் இருக்கிற ஓர் அங்கீகரிக்கப்பட்ட பிரிவினர். நீதிநிறுவனத்தை மக்களுக்கு அப்பாற்பட்டதாகவோ, மக்களை நீதிநிறுவனத்திற்கு அந்நியப்பட்டவர்களாகவோ வைக்கமுடியாது. அப்படி முயற்சித்தால் அது நல்லதுமல்ல.

நீதிநிறுவனமாக அவை செயல்படுகின்றனவா? இல்லவேயில்லை. அவை வெறும் வழக்கு மன்றங்கள்தான். சுமார் அய்ந்தரை ஆண்டுகளுக்கு முன்பே ‘My Lord’ என்ற சொல்லைக் கைவிடச்சொல்லி அகில இந்திய வழக்கறிஞர்கள்

மன்றம் (பார் கவுன்சில் ஆப் இந்தியா) விதியை உருவாக்கியது. ஆனால் வழக்கறிஞர்கள் அதைக் கைவிடத் தயாரில்லை. அது காலனி ஆட்சியின் மிச்ச சொச்சமான ஓர் அவமானச் சொல்லாகும் அது. அதனைப் பயன்படுத்துவது நமது சுயமரியாதைக்கு எதிரானது என்று சொல்லித்தான் இவ்விதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு மாற்றாக Your Honor, Honorable Court என்று தலைமை நீதிமன்ற நீதிபதியையும் உயர்நீதிமன்ற நீதிபதியையும் சொல்லலாம் என்றுதான் விதி உருவாக்கப்பட்டது. இந்தியாவில் 10 பேருக்கு உள்ளாகத்தான் இவ்விதியைப் பயன்படுத்துகின்றனர். இதைக் கைவிடுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. இதில் வழக்கறிஞர்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பது புரியாத புதிராகவே இன்றும் இருக்கிறது.

நீதிபதி கிருஷ்ணய்யர் அவர்கள் தலைமை நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, சென்னையில் மூன்று நாள்கள் தங்கியிருந்தார். சட்ட உதவிகள் ஏற்பாடுகள் செய்யப்படாத சூழலில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கைலாசம் (ப.சிதம்பரத்தின் மாமனார்.) பதவியில் இருந்தார். தமிழ்நாடு சட்ட உதவி ஆலோசனைக்கழகம் ஒன்றை அமைத்துச் செயல்படலாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் தலைமை நீதிபதி கைலாசம் ‘இது வீண் வேலை’ என எதிர்ப்பு தெரிவித்தார்.

அன்றைய தமிழ்நாடு ஆளுநர் நீதிபதி கிருஷ்ணய்யரின் முயற்சியைக் கேள்விப்பட்டு, அவராகவே தொடர்புகொண்டு, தான் ஒத்துழைப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில், அந்த அமைப்பு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டது. இவ்வமைப்பு இந்தியாவில் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக என்னைப் போன்ற வழக்கறிஞர்கள் ஆயுள் உறுப்பினராக அதில் சேர்ந்தோம். ஏழைகளுக்கு நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறுகிற சூழ்நிலையை, நல்வாய்ப்பை இந்த அமைப்பு வழங்கியது. எங்களைப் போன்றவர்களுக்கு அதில் மிகுந்த திருப்தி இருந்தது.

அப்போது திரு ராஜா என்பவர் செயலாளராகச் செயல்பட்டார். அவர் உயர்நீதிமன்ற துணைப் பதிவாளராக இருந்தவர். அவரை கற்றறிவு, அனுபவ அறிவு, மக்கள் மீதான அக்கறை ஆகியன ஒருங்கே பெற்ற ஓர் போராளி என்றே சொல்லலாம். அப்போது இதன் மூலம் நிறைய பணிகளை மேற்கொண்டோம். இன்று அதெல்லாம் முடக்கபட்டுவிட்டது.

இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது சென்னையிலுள்ள் ஏழு நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு அரசு அளித்த ஒருகோடி ரூபாயை, அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் செயல்படுகிற சட்ட உதவிப் பொறுப்பாளராக பதவியில் இருக்கிற நீதிபதிகளையும் அது சார்ந்தவர்களையும் அழைத்து ஒரே நாளில் செலவிட்டார். இப்படி பழங்கால அரசர்களைப் போல அடாவடித்தனமாக செயல்படும் போக்கு மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்கவோ, விமர்சிக்கவோ போதுமான வரமுடியாத இறுக்கமான சூழல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் நீதிபதிகளின் வறட்டு கவுரவப் போக்கு தமிழ்நாட்டை கலக்கிக்கொண்டிருக்கிறது.

நீதிபதிகளில் 50 விழுக்காட்டிற்குக் குறையாமல் ஊழல்வாதிகளாகவும் சாதியக்காரர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் விளங்குகிற சூழலும் அம்பலப்படுகிறது. நாங்கள் 17 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட வேண்டுகோள் கடிதம் ஒன்றை தலைமை நீதிமன்றத்திற்கு அனுப்பினோம். அதில் ஒரு நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு, உயர்நீதிமன்றப் பெண் பணியாளர்கள் ஆறுபேர் அளித்த பாலியல் அத்துமீறல் குறித்த புகார் நிலுவையில் இருப்பதாக என்னிடம் நான்கு நீதிபதிகள் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தோம்.

அந்த நீதிபதி வயதில் மூத்தவர். அவருடன் அமர்ந்திருந்த இளைய நீதிபதி மீதும் ஏராளமான ஊழல் புகார்களை சி.பி.அய். அதிகாரிகள் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தும் நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வழக்கறிஞர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கிறார்கள். இது நீதித்துறையை இழிவுபடுத்துவதாக உள்ளது என தலைமை நீதிபதியிடம் சுட்டிக்காட்டினோம். ஒரே ஒரு காரியம் நடந்தது. அடுத்தவாரமே அவ்வழக்கு தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இப்படி ஏராளமான முன்னுப்பின் முரணான போக்குகளைப் பட்டியலிடலாம்.

சமீபத்தில்கூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் வரமுடியாத சூழலில் மனுதாரர் நீதிபதியிடம் வழக்கை எடுத்துக்கூறியபோது, “மனுதாரர் தமிழில் பேசுவது தவறு. ஆங்கிலமே நீதிமன்ற மொழி”, எனச்சொல்லி அதைத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இது ஒரு கொடூரமான செயலாகும்.

நீதிபதிகள் என்பவர்கள் சமூகப் பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர்கள் என்பதோடு அவர்கள் இரண்டு முறை ‘அரசியல் சட்டத்தைக் காப்போம். என சத்தியம் செய்தவர்கள். ஒன்று வழக்கறிஞராக பதிவு செய்யும்போது; இரண்டு நீதிபதியாக பதவியேற்கும்போது. அந்த சத்தியத்தை அப்போதே கைவிட்டு விடுகிறார்கள். சத்தியமாவது, மண்ணாங்கட்டியாவது? என்ற மனநிலையில் பாதிக்குக் குறையாதவர்கள் அடாவடிகளாகச் செயல்படுகிறார்கள். அதோடு இன்னொரு கேவலமான சூழல், தலித் நீதிபதிகள்கூட தலித் மக்களின் நியாயம் சார்ந்த வழக்குகளைக் காலி செய்கிறார்கள்.

நீதித்துறையில் சாதியம் தலைவிரித்து ஆடுகிறது. இந்நிலைமையைப் போராட்டங்கள், அதன் விளைவுகள் சரிசெய்யும் என்று எதிர்பார்க்க வாய்ப்பில்லை. இதன்மூலம் நிலைமை இன்னும் மோசமாகும். ஏனென்றால் பொறுப்பில் இருக்கும் மனிதர்கள் நேர்மையை இழந்துவிட்ட ஓர் சூழலில் எப்படி அவர்கள் சமூகம் சார்ந்து பணியாற்றுவார்கள்? இதுதான் இன்றைய கசப்பான பின்னணி. மக்கள் மீது அக்கறையுள்ள அரசியல் சட்டத்தில் நம்பிக்கையுள்ள இயக்கங்கள் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே இச்சூழலை மாற்றியமைக்க முடியும். அதற்கு இன்னும் கசப்பான அனுபவங்கள் தொடர்ந்து வருவதன் மூலம் புதிய விடியலுக்கான விளைவு தாமதப்படும்.

நேற்று (24.07.2016) இந்திய பார் கவுன்சில் முடிவுப்படி போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்துள்ளார்கள். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மன்றங்கள், சங்கங்கள், நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவை சீரழிவின் வெளிப்பாடாக இருப்பது அம்பலமாகி வருகிறது. இந்திய பார் கவுன்சில் பதவிக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக எல்லாவிதமான பித்தலாட்ட வேலைகளையும் அநாகரீகங்களையும் செய்து அப்பதவிகளைக் கைப்பற்றுகிறார்கள்.

அவர்களால் நேர்மையாக, சட்டரீதியாக, சமூக அக்கறையோடு சிந்திக்க முடியாது. அதன் வெளிப்பாடாகத்தான் போராடும் வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்கிற தரங்கெட்ட செயலைப் பார்க்க முடிகிறது.

மாமனிதர் அம்பேத்கர் தெளிவாகச் சொன்னார். போராடுகிறவர்களிடம் நேர்மையும் வலுவான நியாயங்களும் இருந்துவிட்டால் அப்போராட்டத்திற்குச் சரியான பலன் இருக்கும் என்றுதான் அவர் வாழ்ந்து காட்டினார்.

நன்றி: வழக்கறிஞர் பொ.இரத்தினம்

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in அரசியல் விமர்சனம், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s