தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’


தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’

 

மு.சிவகுருநாதன்

 

 

(இன்று செப்டம்பர் 18, 2016 நாகப்பட்டினம் சாம் கமல் அகாடமியில் நடைபெற்ற முக்கூடல் 134 வது நிகழ்வு குறித்த பதிவு.)

 

img_20160918_113932

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் இரா.முருகவேளின் ‘மிளிர்கல்’, ‘முகிலினி’ ஆகிய இரு நாவல்கள் அறிமுகக் கூட்டத்தை கவிஞர் தெ.வெற்றிச்செல்வன் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அரிமா அருண், நாகை ஜவகர் போன்ற நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இரா.முருகவேளின் ‘மிளிர்கல்’, நக்கீரனின் ‘காடோடி’, குமார செல்வாவின் ‘குன்னிமுத்து’ போன்ற நாவல்கள் வாங்கப்பட்டு வீட்டு அலமாரிகளை நிறைத்திருக்கிறதே தவிர இன்னும் படித்து முடிக்காத குற்ற உணர்ச்சியுடனே இந்நிகழ்வில் கலந்துகொண்டேன்.

 

 

மறைந்த பாடகர் திருவுடையான், தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன், கவிஞர் நா.முத்துகுமார் போன்றோருக்கு பேரா. தெ. வெற்றிச்செல்வன் புகழஞ்சலி செலுத்திய பின்பு கூட்டம் சரியாக 10 மணிக்குத் தொடங்கியது. ‘குற்றவாளி’ என்னும் 27 நிமிடக் குறும்படம் திரையிடப்பட்டது. கொலைக்குற்றவாளியான வீணை வித்வானின் இசையறிவு, சிறைக் காப்பாளரின் தவறான புரிதல் போன்ற உள்மன அலைவுகளை உரையாடலின்றி கருப்பு வெள்ளையில் இப்படம் காட்சிப்படுத்தியது.

 

 

நக்கீரன் இரு நாவல்கள் குறித்த அறிமுகவுரையாற்றியபோது, “கடந்த 5, 6 ஆண்டுகளாக தமிழ் நாவல் போக்குகள் பெருத்த மாற்றங்களைக் கண்டுள்ளது. பின் நவீனத்துவம் பேசி புரியாத மொழியில் எழுதும் நாவல்கள் இங்கு காணாமற் போய்விட்டன. குடும்பக்கதை நாவல்களுக்கும் இங்கு இடமில்லை. மக்கள் சாதியடிப்படையிலும் வட்டார அடிப்படையிலும் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர்”, என்றார்.

 

IMG_20160918_110746.jpg

“வழக்கறிஞராக இருக்கும் ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’, மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்ட இரா.முருகவேளின் ‘மிளிர்கல்’, ‘முகிலினி’, சூழலியல் செயல்பாட்டாளரான நக்கீரனின் ‘காடோடி’, சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ போன்றவை தமிழ் நாவல் உலகில் புதிய திறப்புகளை ஏற்படுத்தியுள்ளது”, என்றும் சொன்னார்.

 

 

“நாங்கள் அனைவரும் கூடிப்பேசி இத்தகைய நாவல்களை உருவாக்கவில்லை. தமிழ்ச்சூழலில் இவை இயல்பாக உருக்கொள்கின்றன”, என்று சொல்லி இந்த நாவல்களுக்கு ‘டாக்கு நாவல்கள்’ என்று பெயரிட்டார். (Docu Novels – டாக்கு நாவல்கள் என்பது   Documentary Novels என்பதன் சுருக்கம். இதை தமிழில் ‘ஆவண நாவல்கள்’ என்று குறிப்பிடலாமா?)

 

 

“சிலப்பதிகாரத்தைப் பற்றி நாவல் எழுதுவது என்றால் அதில் சிலவரிகளைப் படித்துவிட்டு ‘கொற்றவை’ போன்ற நாவல்களை யாரும் எழுதிவிடமுடியும். சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணித்த பாதையில் தாமும் பயணித்து ஆய்வு செய்து ‘மிளிர்கல்’ நாவலை உருவாக்கியுள்ளார் முருகவேள்”, என்றார்.

 

 

“ சிலப்பதிகாரம் தமிழர்களின் திணையியல் வாழ்வை வெளிப்படுத்தும் அருமையான இலக்கியம். அது காட்டும் நாநில வருணனைகள் அக்காலச் செழிப்பை நமக்கு உணர்த்துபவை. நெய்தல் நிலமான புகாரில் (பூம்புகார்) தொடங்கி மருதம், முல்லை என பயணித்து இறுதியாக குறிஞ்சி நிலத்தில் கதை நிறைவுறுகிறது. குறிஞ்சி, முல்லை ஆகியன தம் இயல்பில் திரிவது பாலை என்னும் பழங்கதை, இன்று நாநிலத்திற்கும் பொருந்துவதாக மாறிவிட்டது. இந்நாவல் வழி புதிய சித்தரிப்பைத் துய்க்கமுடியும்”, என்றும் கூறினார்.

 

 

“காவிரிப் பிரச்சினை இன்றல்ல; அய்ரோப்பியர்கள் குடகுமலையில் தேயிலை, காப்பி பயிரிடப்பட்டபோதே, நீலகிரியில் யூகலிப்டஸ் மரங்கள் நட்டபோதே தொடங்கிவிட்டது. அப்போது இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. மலைக்காடுகளில் உள்ள புல்வெளிகள் ‘ஸ்பாஞ்ச்’ போன்றவை. மழைநீரை உறிஞ்சி வைத்துக்கொண்டு பல மாதங்களுக்கு நமக்குத் தரும். அய்ரோப்பிய சிந்தனையில் இவை தேவையற்றது எனத்தோன்ற அவைகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்களாகவும் தைல மரத்தோட்டங்களாகவும் மாற்றப்பட்டபோது நம்மால் வேடிக்கை பார்க்கவே முடிந்தது. அதற்குப் பலனாக இப்போது குடிக்க, விவசாயத்திற்குத் தண்ணீரின்றி தவிக்கிறோம்”, என்றார்.

 

 

“இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது பருத்திப் பற்றாக்குறையைப் போக்க இங்கு செயற்கை இழைகள் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன. அன்றைய நிலையில் இதற்கான நியாயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படி வந்தது பவானி விஸ்கோஸ். இங்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டபோது பவானி காலியானது. பவானியைக் காக்க ஏற்பட்ட விஸ்கோஸ் ஆலைப் போராட்டமே ‘முகிலினி’ நாவல். என்னைப் போலவே முருகவேளுக்கு பவானி என்ற தமிழல்லாத சொல் பிடிக்கவில்லை. எனவே முகிலினி என்று தமிழ்ப் படுத்தியுள்ளார்”, என்றும் விவரித்தார்.

IMG_20160918_113810.jpg

 

அவர் மேலும் பேசும்போது, “தமிழில் சுழலியல் சார்ந்து இயங்கும் எழுத்தாளர்கள் ஒன்றுகூடும் நிகழ்வை ஆறு மாதங்களாக கனவுத்திட்டமாக இருந்தது அண்மையில் சுமார் 30 பேர் டாப்சிலீப்பில் சந்தித்தோம். அதில் இரா.முருகவேளும் பங்குபெற்றார். யாரிடமும் நன்கொடை பெறாமல் சொந்தக் காசை செலவு செய்து இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினோம்”, என்றும் சொன்னார்.

 

 

இறுதியாக பேசவந்த நாவலாசிரியர் இரா.முருகவேள், “நாவலை எழுதிய நானே இதைப்பற்றிப் பேசுவது நன்றாக இருக்காது. மேலும் நக்கீரன் போன்ற இன்னொரு எழுத்தாளரும் படைப்பைப் பற்றிப் பேசும்வதும் சிரமம். ஆனால் அவர் மிகவும் லாவகமாக நாவலைப்பற்றியும் அதன் அரசியல் பின்புலத்தையும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டிவிட்டார்”, என்று குறிப்பிட்டார்.

 

 

“தமிழ் இலக்கியப் பரப்பிலும் அரசியலிலும் பின் நவீனத்துவம் பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணிவிட்டது. மக்களைப் பிரித்து, பாகுபடுத்தி அதிகார மையங்களுக்கு சாதகங்களை ஏற்படுத்திவிட்டது. கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், பிளாச்சிமடா போன்ற எந்தப் பிரச்சினைகளிலும் மக்களை தனித்தனியே கூறுபோட்டு ஒன்றிணையாமல் தடுத்துவிட்டது. ஒட்டு மொத்தமாக மக்கள் திரள, போராட வாய்ப்பின்றி போயுள்ளது”, என்றும் குறிப்பிட்டார்.

 

 

“உங்கள் பகுதிக்கு நீண்ட பாரம்பரியம் உள்ளது. எங்கள் பகுதிக்கு அது இல்லை. மேற்கின் (கோயம்புத்தூர்) பார்வையிலிருந்தே உங்களை அணுகுகிறேன். கண்ணகி, திருவள்ளுவர் போன்ற பிம்பங்களைத் தோண்டித்தோண்டி வெளிக்கொணர்வதுதான் இடது சாரிகளின் பணி. சிலர் உள்ளபடியே ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்”, என்றும் கூறினார்.

 

 

“பின் நவீனத்துவத்தை முற்றிலும் எதிரிடையாக அணுகவேண்டியதில்லை. தமிழில் நவீனத்துவம் மிகவும் சிக்கலானது. அவற்றில் பின் நவீனத்துவம் சில உடைவுகளை உண்டாக்காவிட்டால் தமிழ்ச்சூழலில் இம்மாதிரியான நாவல்கள் உருவாக வாய்ப்பில்லாமல் போயிருக்கக்கூடும்”, என்று நான் கருத்துரைத்தேன்.

 

 

மேலும், “சூழலியல் இன்று கார்ப்பரேட்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் கையில் சிக்கியிருக்கிறது. இவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. எளிய மருத்துவ முறையான ஹோமியோபதி இன்று கார்ப்பரேட் கைகளில் சிக்கி முற்றிலும் வணிகமயமாகியுள்ளது. அதைப்போலவே சுழலியல் அவர்கள் கையில். நக்கீரனோ, நானோ இதிலிருந்து அப்புறப்படுத்தவோ, ஒழிக்கப்படவோ செய்யலாம்”, என்றும் சொன்னேன்.

 

 

பின்னர் நக்கீரன் பேசியபோது, “கார்ப்பரேட்கள் மற்றும் காவிகள் கைகளில் சூழலியல் சிக்கியிருப்பது உண்மைதான். இவர்களை வெளியேற்ற நாங்கள் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம். நாங்கள் ஏற்பாடு செய்த சூழலியல் எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்விலும் பார்த்துப் பார்த்து வலதுசாரி அல்லாதவர்களைத் தேர்வு செய்தோம். இருப்பினும் தேர்வு செய்யப்பட்டவர்களில் அத்தகைய குரல்கள் ஒலிக்கவே செய்தன”, என்பதையும் பதிவு செய்தார்.

 

 

எழுத்தாளர் இரா.முருகவேள், “பின் நவீனத்துவத்தை நிராகரிக்கவில்லை. இலக்கின்றி எழுதும் படைப்புகளை உற்பத்தி செய்தது அதன் பெருங்குறையாகப் பார்க்கப்படுகிறது. மக்களைப் பிளவுபடுத்தும் வேலையை இந்த கோட்பாடு செய்துள்ளது”, என்று விளக்கமளித்தார்.

 

பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கும் நாவலாசிரியர் இரா.முருகவேளும், நக்கீரனும் பதிலளித்தனர். சுனாமியின்போது சுமார் 80 குழந்தைகளை பலியான கீச்சாங்குப்பம், ஒன்றிய நடுநிலைப்பள்ளியை அதிநவீன வசதிகளுடன் மாதிரிப் பள்ளியாக மாற்றிக்காட்டி, இவ்வாண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பாலு பாராட்டப்பட்டார். அவருக்கு அரிமா அருணும் வெற்றிச்செல்வனும் நூல்கள் பரிசளித்துப் பாராட்டினர்.

 

இறுதியாக நம்மாழ்வாரின் ‘பூமி எதைக் கேட்கிறது’ என்னும் விளக்கப்படம் திரையிடப்பட்டு, அரங்கு கலைந்தது.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in சுற்றுச்சுழல், பதிவுகள், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s