44. குழந்தைகளின் அக மன உலக வெளிப்பாட்டு வடிவம்


44. குழந்தைகளின் அக மன உலக வெளிப்பாட்டு வடிவம்

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)

 

(புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள நண்பர் வேலு சரவணனின் ‘தொடக்கக் கல்வியில் நாடகியம்’ என்ற நாடகம் குறித்த ஆய்வேட்டு நூல் பற்றிய அறிமுகப்பதிவு.)

வேலு சரவணன்.jpg

நண்பர், ‘வேலு மாமா’ என்று குழந்தைகளின் அன்புக்குப் பாத்திரமான புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் வேலு சரவணன் 2001 இல் உருவாக்கிய குழந்தைகள் நாடகம் பற்றிய ஆய்வேடு தற்போது நூலாக்கம் பெற்றுள்ளது.

குழந்தைகளின் அகமன உலகம் புதிரானது; மிகவும் எளிமையானது. ஆனால் அவற்றை சிக்கலான ஒன்றாக கற்பனை செய்துகொண்டு, நாம் அவற்றை இழந்துவருகிறோம். அதை உணர நாமும் குழந்தைகளாக மாறுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. வயதாக, வயதாக நாம் குழந்தமையை முற்றாக இழந்துவிடுகிறது. அப்போது குழந்தைகளின் உலகம் நமக்கு மிகவும் அந்நியப்பட்டு விடுகிறது. குழந்தமையை தக்கவைக்க முடிந்த கோமாளி மனங்களால் இதை மீட்டெடுக்க முடிகிறது.

ஏழு தலைப்புகள் மற்றும் முடிவுரையுடன் இந்த ஆய்வேடு நிறைவடைகிறது. குழந்தைப்பருவ 5 வயது முதல் 14 வயது வரையிலான தொடக்கக் கல்வியை ‘உடல் மன மொழியோடு இணைந்த சுய அனுபவக் கல்வி’யாக காணவும், ‘கலை வழிக்கல்வி’ என்னும் கோட்பாட்டின்படி, நாடகக்கலையின் கூறுகளோடு ஒருங்கிணைத்து ‘தொடக்கக் கல்வியில் நாடகியம்’ என்னும் கோட்பாடு உருவாக்கப் படுவது முன்னுரையில் குறிக்கப்படுகிறது.

“மானிட அறிவியலில் ஆற்றல் வாய்ந்த நாடகக் கலையின் செயல்பாடு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட அறிவியலாக அமைய வேண்டும் என்றும் நிகழ்த்துவோரும், பார்வையாளரும் தன்மயக்க நிலையிலும் (ஒன்றிப்போதல்) விழித்தெழவேண்டும்”, என்றும் ஜெர்மானிய நாடக அறிஞர் பெர்ட்டோல்ட் பிரெக்ட் கருதினார். உறக்க நிலையில் இருக்கும் மனிதனை விழிப்புநிலைக்கு இட்டுச்செல்வது இவரது காவிய பாணி (Epic Theatre) நாடகத்தில் குறிக்கோளாகும் (பக். 09).

பெரியோர் நாடக அரங்கியலும் சிறார் நாடக அரங்கியலும் முற்றிலும் வேறுபடுவது விளக்கப்படுகிறது (பக். 19). பயிற்சி பெறாத யார் வேண்டுமானாலும் வேடமேற்று, திட்டமிடப்படாமல் வகுப்பறைகள், விளையாட்டிடம் என எங்கும் சிறார்களைப் பார்வையாளர்களாகக் கொண்டது சிறார் அரங்கியல் என்று வரையறுக்கப்படுகிறது. நாடக இலக்கண மரபுகளை பாராது, அறிதல் வேட்கையின் உணர்ச்சிமிகு அனுபவங்களாகவும், அதீத கற்பனைக்கும் தீரச்செயல், விளையாட்டு போன்றவற்றிற்கும் இடமளிப்பது, வாழக்கை அனுபவங்களைக் கற்றல் அனுபவமாக நிகழ்த்துவது சிறார் அரங்கியல் பண்பு என உணர்த்தப்படுகிறது.

“சிறார் நாடகப் பிரதியாக்கம் என்பது இயல்பிலேயே குழந்தை மனதுடன் செயல்படும் படைப்பாளியின் தத்துவ அனுபவத்தோடு இணைந்த ஒன்று. இங்கு தத்துவம் என்பது கற்றலின் மூலங்களை அழகியல் வகைப்படுத்தும் நுண்ணறிவின் வெளிப்பாடு”, (பக். 16) என்று விளக்கப்படுகிறது.

%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be

“உலகைக் கற்பதில் அதிசயமான ஈடுபாடும் குதூகலமான செயல்பாடும் நிறைந்த ‘கல்வி’ வேளையில் இதமான கலைமனம் சிறார்களின் இயல்பாகிறது. இவ்வியல்பே தொடக்கக் கல்வியில் நாடகக் கலையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகக்”, குறிப்பிடப்படுகிறது (பக். 30).

மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நிலவும் நாடகப் பாங்கு எடுத்துக்காட்டப்படுகிறது. கற்க முற்படும் ஒன்றில் காணப்படும் அதிசயமே (wonderful) கற்பதற்கான கவனத்தையும் கட்டாயத்தையும் உருவாக்குகிறது. இதனால் கல்விமுறையில் நாடகப் பாங்கு இரண்டற கலந்துள்ளது.

ஒரு நிகழ்த்துக் கலைஞனுக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியனுக்கும் கீழ்க்கண்ட பல ஒத்த தன்மைகள் இருக்கின்றன.

கற்பனைமிகு சூழல்களை நிறுவுதல்.
சூழல்களுக்குள் பங்குகொள்ளச் செய்தல்.
புதியனவற்றையும், விவாதங்களையும் முன்வைத்தல்.
நிகழ்வின் இடைவிடாத உறவுநிலையைத் தற்காத்தல். (பக். 44)
சிறார்களின் எண்ண ஓட்டத்தில் பங்கேற்று அவர்களுடன் உறவு ஏற்படுத்துக் கொள்ளுதல்.
சிறார்களின் அறிதல் வேட்கையின் ஊடாகப் பாடப்பகுதியைக் கற்பித்தலில் நாடகக்கலை உத்திகள்.
சிறார்களின் மனவேகத்திற்கும், கற்பனைக்கும் ஒத்தியங்குகிற சூழல்கள் – செயல்கள் மூலம் பாடத்தைக் கற்பித்தல், ஆகிய நாடகம் கற்பித்தலின் மூன்று படிநிலைகள் சொல்லப்படுகின்றன. (பக். 45)

சுவாசப் பயிற்சி
உடலியக்கப் பயிற்சி
குரல் பயிற்சி
மனவினைப் பயிற்சி (சங்கிலிப் பயிற்சி, நம்பிக்கைப் பயிற்சி)
சூழலுடன் உறவாடும் பயிற்சி
பயன்படு பொருளுடன் பயிற்சி ஆகியனவும்

இதன் அடுத்த நிலைகளான

கதை சொல்லல் (Story Telling)
கதையாடல் (Story Enactment) போன்றவைகளும் விளக்கப்படுகின்றன. (பக். 57)

ஒவ்வொரு பாடத்திற்கும் நாடகப் பிரதியாக்கம், அரங்கியல் நிகழ் வடிவாக்கம் துல்லியமாக எடுத்துக்காட்டப்படுகிறது. இங்கு தொடக்கக்கல்வி ஆசிரியர் ஓர் இயக்குநராகவே செயல்படுகிறார்.

பள்ளியின் செயல்திட்டங்கள், பாடங்களின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப கீழ்க்கண்ட மூன்று நாடக வழிமுறை வலியுறுத்தப்படுகிறது.

அரங்கியல் வழிப் பாடமுறை.
அரங்கியல் இணைவழிப் பாடமுறை.
தொடக்கக்கல்வியின் விழா வடிவக் கல்விமுறை. (பக். 84)

இறுதியாக, நமது பள்ளிகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதைப் பார்த்தால் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இங்கு விழாக்கள், நிகழ்வுகள் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

உரை, பேச்சு, சொற்பொழிவு என்பதாகவே இன்று கல்விக்கூட சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அகமன உணர்வுகளையும் கற்பனைத்திறனுக்கும் மீட்டெடுக்கும் நாடகத்திற்காக வாய்ப்பு முற்றாக இல்லாத சூழல்தான் இருக்கிறது.

இங்கு ‘நாடகம்’ என்ற ஒரு போலியான வடிவம், அதாவது ஒருபக்கம் புராணக் குப்பைகள், ஒன்னொரு புறம் குழந்தைகள் பங்கேற்கும் பெரியோர் நாடகங்கள் நிகழ்த்தப்படுவதையும் சுட்ட முடியும். மேலும் கலை என்பதற்கான புரிதல்கள் கல்விக்கூடங்களில் பெருமளவில், நமது கல்வியமைப்பிலும் பாடத்திட்டங்களிலும் இல்லை. இந்த இடைவெளி குழந்தைகளுக்கு எதிரானவற்றால் பதிலீடு செய்யப்படுகின்றன.

வேலு சரவணன் போன்ற ஒருசிலரது தனிப்பட்ட முயற்சிகள், இம்மாதிரியான நூல்கள் இந்நிலையை ஓரளவிற்கு மாற்ற உதவக்கூடும். கால் நூற்றாண்டாக தமிழ்ச்சூழலில் பேசப்படும் குழந்தைகள் நாடகம், சினிமா போன்றவை இன்றைய தாக்கம் வெகு குறைவே. பள்ளிக்கல்வியில் இதை ஓர் இயக்கமாக நடத்தவேண்டிய தேவையுள்ளது.

தொடக்கக் கல்வியில் நாடகியம்

பேரா. வேலு சரவணன்

வெளியீடு:

புக் ஃபார் சில்ரன்

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..

முதல்பதிப்பு: செப்டம்பர் 2015

பக்கம்: 112

விலை: ரூ. 70

தொடர்பு முகவரி:

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: http://www.thamizhbooks.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s