45. தடமின்றி மறைக்கப்பட்ட சுந்தரவன தலித் இனப்படுகொலை


45. தடமின்றி மறைக்கப்பட்ட சுந்தரவன தலித் இனப்படுகொலை
(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)

மு.சிவகுருநாதன்

(கருப்புபிரதிகள், தலித் முரசு வெளியீடாக டிசம்பர், 2013 இல் வந்த இனியன் இளங்கோ மொழிபெயர்ப்பில் ‘மரிச்ஜாப்பி: சி.பி.எம். அரசின் தலித் இனப்படுகொலை’ என்ற நூல் குறித்த பதிவு.)
ஒரு முன்குறிப்பு:
‘கருப்புப் பிரதிகள்’ நீலகண்டனால் டிசம்பர் 2013 இல் வெளியிடப்பட்ட இந்நூல் எனது பார்வையில் படாமற்போய்விட்டது. இந்த நூல் எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. விரைவாக விற்றுத் தீர்ந்ததுகூட ஒரு காரணமாக இருக்கலாம். இதுகுறித்த துண்டறிக்கை எழுதச் சொல்லியும், நூல் விற்பனையில் இல்லாத நிலையில் தன்னிடம் கைவசமுள்ள ஒரு பிரதியை எனக்கு அனுப்பி, வாசிக்கத் தூண்டிய மனித உரிமைப்போராளி வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்கு நன்றிகள். இந்தியாவெங்கும் இதைப்போல தலித்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளில் நீதிகேட்டும், இழப்பீடு கேட்டும் நீண்ட போராட்ட இயக்கத்தினை முன்னெடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இந்நூலின் மறுபதிப்பு வெளியாகுமென்று நம்புகிறேன். நன்றி.)

 

marijaappi.jpg
இந்நூலாசிரியர் ராஸ் மாலிக் வளர்ச்சித் திட்ட ஆலோசகர். ‘மேற்கு வங்கத்தின் மேம்பாடுக் கொள்கைகள்’ என்கிற தலைப்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக மேற்கு வங்கத்தில் ஆய்வு செய்தபோது மரிச்ஜாப்பிப் படுகொலை பற்றிய விவரங்கள் வெளிவந்தன.
‘Refugee Resettlement in Forest Reserves: West Bengal Policy Reversal and the Marichihapi Massacre’ என்ற கட்டுரை இனியன் இளங்கோவால் மொழிபெயர்க்கப்பட்டு ‘தலித் முரசில்’ வெளியானது. அதுவே இந்நூலாக உருவாகியுள்ளது.
“‘இரு பிறப்பாளர்’ எனப்படும் பூணூல் அணியும் பார்ப்பன, பனியா ஆளும் வர்க்கச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தலைமையேற்று வழிநடத்துவதால், சூத்திர, பஞ்சம உழைக்கும் மக்களின் வர்க்க நலனை ஒழிக்கும் நடவடிக்கைகளை எளிதாகச் செய்கிறார்கள். இதனாலேயே, பார்ப்பனர்களும். ‘பத்ரலோக்’ எனப்படும் வங்காள இந்து உயர்சாதியினரும் தலைமையேற்று நடத்திய மேற்கு வங்காள மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் வரலாறு காணாத தலித் மக்களின் இனப்படுகொலை மரிச்ஜாப்பி என்ற இடத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது”, (பக். 14) என முன்னுரையில் இனியன் இளங்கோ குறிக்கிறார்.
படுகொலை என்றால் கொஞ்ச நஞ்சமல்ல; சுமார் 17,000 மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 1978 – 79 காலகட்டத்தில் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரிகள் அரசு மேற்கு வங்கத்தில் நடைபெற்றதுதான் விசித்திரம். சுந்தரவன சதுப்பு நிலத்தில் தாங்களாகவே, கடும் உழைப்பால் சீர்திருத்தி வாழிடமைத்து வாழ்ந்த தலித் அகதிகள் கொத்துக் கொத்தாக கொன்று போட்ட நிகழ்வு ஊடக வெளிச்சத்திற்கு வராமல் வரலாறு மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டது.
மரிச்ஜாப்பி படுகொலையின் 30 ஆண்டுகள் நிறைவையொட்டி டைம்ஸ் ஆப் இந்தியா ‘மரணத்தீவு’ என்றொரு செய்திக் கட்டுரையை வெளியிட்டது (15.06.2010) அதன் சில பகுதிகள் இந்நூலில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நிலஞ்சனா சாட்டர்ஜி என்பவரின் வெளிவராத முனைவர் பட்ட ஆய்வு, 3,000 அகதிகள் மரிச்ஜாப்பியிலிருந்து தப்பியோடி மேற்குவங்கத்திற்கு வந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது.
“ஜூலை 1970, தண்டகாரண்யா மேம்பாட்டு ஆணையத்தின் பிரதிநிதி 15,000 குடும்பங்கள் தண்டகாரண்யாவிலிருந்து வெளியேறின. ஆனால் 5,000 குடும்பங்கள் (சுமார் 2,0000 பேர்) திரும்ப வரவில்லை என அறிவித்துள்ளதை”, (பக். 82) முன்வைத்து, 20,000 பேரில் 3,000 பேர் தப்பிச் சென்றதாகக் கொண்டால், 17,000 பேர் கொல்லப்பட்டிருக்கவேண்டும். (அதே பக்கம்)
‘சண்டாளர்கள்’ என்னும் இழிச்சொல்லால் வழங்கப்பட்டுவந்த இந்த நாம சூத்திரர்கள் ஹரிசந்த, குருசந்த் ஆகியோர் தலைமையில், கடும் போராட்டங்களுக்குப் பிறகு தங்களது சுயமரியாதையை நிலைநாட்டி வாழ்ந்த சமூகமிது. மேலதிக விவரங்களுக்கு ‘புலம்’ வெளியிட்ட ‘நாம சூத்திரர்கள் இயக்கம்’ என்னும் குறுநூலைக் காண்க.

(இந்நூல் பற்றிய எனது அறிமுகப்பதிவின் இணைப்பைக் கீழே தருகிறேன்.)
http://musivagurunathan.blogspot.in/2015/11/05.html
“இடதுசாரிக் கொள்கை நியாயத்தின்படி நாமசூத்திரர்களின் உழைப்பும். சுய பொருளாதார முனைப்பும், மக்கள் வளர்ச்சித் திட்டங்களும் பெரும் மதிப்பைப் பெற்றிருக்கவேண்டும்”, (பக். 27) என்று அறிமுகவுரையில் குறிப்பிடும் மீனாமயில், “சுந்தர்பான் காடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்த மரிச்ஜாப்பி – மேற்குவங்க அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றும், தலித் அகதிகள் வனச் சட்டத்தை மீறுவதாகவும், வனத்தின் வளங்களுக்குக் கேடு விளைவிப்பதாகவும், உயிரியல் சமன்பாட்டை சிதைப்பதாகவும் திடீர் சுற்றுச்சூழல் ஆர்வலராகிக் குற்றஞ்சாட்டி”, (பக். 27) ஜோதிபாசு தலைமையிலான அரசு தலித் அகதிகளை வேட்டையாடிய கொடுமை கண்களில் ரத்தம் வர வைப்பவை.
“மரிச்ஜாப்பியையும் அங்கு வாழ்ந்த தலித் அகதிகளையும் மொத்தமாக அழித்துவிடும் நோக்கத்தோடு முற்றிலும் பொருளாதாரத் தடையை அறிவித்தது மேற்குவங்க அரசு. இதனால் வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு, மரிச்ஜாப்பியை சிறைக் கூடமாக்கி சுற்றி வளைத்தது காவல்துறை. ஏறக்குறைய முப்பது காவல்படைகள் மாதக்கணக்கில் இருந்து நாமசூத்திரர்களின் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், மீன்பிடித்துறை, உப்பளங்கள் என எல்லாவற்றையும் சிதைத்தன. குடிசைகளைப் பிய்த்தெறிந்து, தண்ணீரும் உணவும் கிடைக்காதவாறு வாழ்வாதாரங்களை நொறுக்கி, தடுத்தவர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி துன்புறுத்தின. தப்பிச்செல்ல முயன்றவர்கள் சற்றும் தாமதிக்காமல் சுட்டுக் கொல்லப்பட்டனர்”, (பக். 27, 28) என்று மீனாமயில் விவரிக்கும்போது அதிர்ச்சியில் உறைந்து போகிறோம்.
பாலியல் வல்லுறவுக்குள்ளான ஆயிரக்கணக்கான பெண்கள், குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காமல் நாவறண்டு, சுருண்டு விழுந்து மரண்மடைந்த எண்ணற்ற குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என காரணமின்றி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று ஆற்றில் வீசப்பட்ட அவலமும் நடந்தேறியது. இந்த கொடிய வன்செயலை மண்ணோடு மண்ணாகப் புதைத்துவிட்டு, எழுதிய ஒன்றிரண்டு ஊடகங்களையும் சி.அய்.ஏ.சதி என்ற வழக்கமான எதிர்கொள்ளல் அரங்கேறியது.
“ஜாலியன் வாலாபாக் படுகொலை ஹண்டர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டது. ஆனால் மரிச்ஜாப்பி படுகொலை தீண்டத்தகாத மக்கள் தவிர அனைவராலும் மறக்கப்பட்டுவிட்டது”, (பக். 53) என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இன்று புலிகள் புகலிடமாக இருக்கும் மரிச்ஜாப்பி பகுதியைப் பற்றி ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “சுற்றுலா பயணிகளின் மனமகிழ்வுக்காக, அந்த இயற்கையான சூழ்நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கு கொடுக்கப்பட்ட விலையை – சுற்றுலாப் பயணிகள் ஊகித்திருக்க முடியாது. மனிதக் குடியிருப்புகள் குறைந்துவரும் இயற்கைச் சரணாலயங்களில், இத்தகைய உயிர்த்தியாகம் தேவையா என்பதை சுற்றுப்புறச் சூழல்வாதிகள் சிந்திக்கவேண்டும்”, (பக். 34).
இப்படுகொலைக்குக் காரணம் “பல நூற்றாண்டுகளுக்கு மேலாக வேர்கொண்டிருந்த வகுப்பு மற்றும் வர்க்க மோதல்களின் வழித்தடத்தை வெளிப்படுத்தின”, என்று கூறும் ராஸ் மாலிக், “பெரும்பாலான வங்காள முஸ்லீம்கள் தங்கள் வங்கப் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டு, இஸ்லாத்தின் சமத்துவக் கொள்கைக்கு மாறிய தீண்டத்தகாத மற்றும் கீழ்சாதி (தாழ்த்தப்பட்ட சாதி) மக்களாவர். (கீழ்சாதி என்ற சொல்லாக்கத்தைத் தவிர்த்திருக்கலாம்.) எனவே, முஸ்லீம் மற்றும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையேயிருந்த இடைவெளி, தீண்டத்தகாத மக்களுக்கும் மேல்சாதி நிலச்சுவான்தார்களுக்கும் இடையே இருந்த பெரிய இடைவெளியைப்போல் இருக்கவில்லை. காலனிய ஆதிக்க காலத்தில், இந்து நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் செலுத்திய வங்காள காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தீண்டத்தகாத மக்களும் முஸ்லீகளும் ஓர் அரசியல் அணியில் திரண்டனர்”, (பக். 35) என்கிற வரலாற்றுப் பின்புலம் விளக்கப்படுகிறது.
தேச விடுதலைக்குப் பிறகு, பாரம்பரிய மேல்சாதி (உயர்த்தப்பட்ட சாதி) ஆளும்வர்க்கத்தினரே முதன்முதலாக கிழக்கு வங்காளத்திலிருந்து அகதிகளாக வந்தனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்துக் கொண்டதை கம்யூனிஸ்ட்களும் காங்கிரசும் ஏற்றுக்கொண்டன. ஆனால், பின்னாளில் தீண்டத்தகாத தலித் மக்கள், கடலிலிருந்து வெளியே வந்த மண்மேடான 125 சதுர மைல் பரப்புளவு கொண்ட மரிச்ஜாப்பி பகுதியில் குடியேறியதை இவர்களால் சகிக்கமுடியவில்லை.
இம்மக்களுக்காகப் போராடிய ‘உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி’ அகதிகளை சுந்தர்பான் பகுதியில் மீள்குடியமர்த்த முடிவு செய்து வெளியிட்ட அறிக்கையில், “100 ஆண்டு பழமையான கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் மக்கள், கடல் அலைகள் அய்ந்து அடிக்குமேல் உயர்வதில்லை என்று கூறினர். நாங்கள் கடல் உப்புநீரைத் தடுக்க 5 அடி உயரத்திற்கு தடுப்பணைகளைக் கட்டி 100 ஆண்டுகள் வாழ்ந்திருக்கும்போது நீங்களும் ஏன் அவ்வாறு வாழக்கூடாது? இங்கு மீன் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது”, அப்ப்குதி மக்கள் சொன்ன கருத்து பதிவு செய்யப்படுகிறது.
சிறிய பல கட்சிகளின் கூட்டணி அரசாக இருந்தபோதிலும் சி.பி.எம்மின் ஆதிக்கம் வேலை செய்தது. தலித்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க, ஆதரவாகச் செயல்பட யாருமில்லை என்கிற நிலை உருவானது, ஆதிக்க வெறியர்களுக்குச் சாதகமாகப் போய்விட்டது. அன்று கன்ஷிராம் வழிநடத்திய ‘பாம்செப்’ பிற்காலத்திய பகுஜன் சமாஜ் கட்சி போன்ற பலமான அமைப்பாக இல்லை. தேசிய எஸ்.சி./எச்.டி. ஆணையம் இப்பிரச்சினையில் தலையிடவேயில்லை.
சுந்தர்பான் பகுதிகளில் அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த, இடது முன்னணியில் அங்கம் வகித்த புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP) தலித் அகதிகளை வெளியேற்றும் சி.பி.எம்மின் முடிவை எதிர்த்தது. இதனால் அக்கட்சிக்கு அமைச்சரவையில் இடமளிக்க மறுக்கப்பட்டது. இக்கொலைகளில் வங்காள அறிவுஜீவிகளின் மவுனம் மிகக் கொடூரமானது.
“பாலியல் வன்முறைகளிலும் மக்களைத் துன்புறுத்திக் கொலை செய்வதிலும் காவல்துறை ஈடுபடும் என்பது தெரிந்திருப்பினும், தங்களால் காப்பாற்றிக் கொள்ள முடியாத மக்களை கொன்றிருப்பதன் மூலம், இடதுசாரி அரசு 6 ஆயிரம் அரசியல் படுகொலைகளை செய்திருப்பதாக கணிக்க முடிகிறது”, (பக். 56) என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் சொல்கிறது.
மரிச்ஜாப்பி அகதிகளுடன் நர்மதா அணையால் இடம்பெயர்ந்த மக்களையும் ஒப்பீடு செய்து, இருவரும் சுற்றுச்சூழலைப் பாதித்தவர்கள் எனினும் அவர்களை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைத்த வெளியாட்கள் சுற்றுச்சூழல் உணர்வுள்ளவர்களாகச் சித்தரித்து, ஆதரவைத் திரட்ட முடிந்ததும், மரிச்ஜாப்பி மக்களின் கடும் உழைப்பும், வளர்ச்சிப்பணிகளும் இந்திய மேற்கத்தியக் கண்ணோட்டம், நலன்கள் ஆகியவற்றுடன் ஒத்துப்போக வழியின்றி மரணித்ததை இந்நூல் பதிவு செய்கிறது.
“மனித உரிமை மீறல்கள், கல்வி ஆய்வுகளுக்குத் தொடர்பில்லாததாக இருக்கலாம். இம்மனித உரிமை மீறல்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றால், கல்வி ரீதியான ஆய்வு சாத்தியப்படாது. நீதிமன்றங்கள் பெருமளவில் செயலிழந்துவிட்ட நிலையில், அநீதிகளை கல்வி சார்ந்த வகையில் வெளிப்படுத்துவது”, பற்றி ராஸ் மாலிக் பேசுகிறார். (பக். 72).
“அரசும் சமூகமும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு மனித உரிமைகளையும் வாழ்வதற்கான வாய்ப்புகளையும் வழங்காவிட்டால், ஜாதி ரீதியான சமத்துவம் வெற்றிகரமாக அமையாது. இதை நோக்கிய முதல்படியாக மரிச்ஜாப்பி தீண்டத்தகாத மக்களின் இனப்படுகொலைகளை விசாரித்து, இந்த இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்களை – உச்சநீதிமன்றத்தின் முன்போ, சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் முன்போ நிறுத்தவேண்டும்”, என்றும் கோருகிறார். (பக். 75).
‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ ஏப்ரல் 23, 2005 இதழில் வெளியான ‘புலிகளை நேசிக்கும் வங்காள ஆதிக்க சாதியினர்’ என்னும் அன்னு ஜலைஸ் – கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (மொ.- கோபால்.) கிழக்கு வங்காளத்தில் தோன்றிய நாமசூத்திரர் இயக்கம் இந்தியாவில் உருவான தலித் இயக்கங்களில் மிகவும் வலிமையானது. இதன் வீழ்ச்சி சுந்தர்பான் படுகொலையில் முடிகிறது. ஆதிக்கவெறியர்கள் திட்டமிட்டு இக்காரியத்தை முடித்திருப்பது தெரிகிறது.
“சுந்தர்பான் தீவு மக்களை மனிதர்களாகவே மதிக்காத, புலிகளை அவர்களைவிட அதிகம் மதித்த ‘பத்ரலோக்’ எனப்படும் ஆதிக்க சாதியினரின் ஆதரவு பெற்ற அரசு என்பதால் கொடிய அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பது கிராம மக்களின் கருத்தாக உள்ளது (பக். 101). இங்கு “இயற்கை வளங்கள் மோசமான முறையில் பங்கீடு செய்யப்படுவதை”, யும் எடுத்துக் காட்டுகிறார். (பக். 109).
மார்ச் 22, 1979 மரிச்ஜாப்பிக்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட விசாரணை ஆணையத்திடம் தீண்டத்தகாத அகதிகள் சார்பில் ‘உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி’ பொதுச்செயலாளர் ராய்கரன் பரோய் அளித்த அறிக்கையும் இறுதியாக உள்ளது. இதிலுள்ள அவர்களுடைய மறுப்பு ஆதிக்கவாதிகளின் காதில் இறுதிவரை விழவேயில்லை.
“நாங்கள் மரிச்ஜாப்பியில் எந்தவொரு இணை அரசையும் நடத்தவில்லை. இந்த உலகில் வாழ்வதற்கு எந்தவொரு இடமும் அற்ற, எவருடைய ஆதரவுமில்லாத ஏழைகள் நாங்கள். எங்கள் நிலையை தொடக்கத்திலிருந்து கவனித்துவரும், எந்தவொரு அரசுப் பிரதிநிதியுடனும் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் இந்தியக் குடிமக்கள். இந்திய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்” (பக். 88).
“நாங்கள் ஒருபோதும் ‘தாய்நாடு’ கோரிக்கையை வைக்கவில்லை. தாய்நாடு என்பதற்கான அர்த்தம்கூட எங்களுக்குத் தெரியாது. தாய்நாடு தொடர்பாக நாங்கள், பேசியதோ, எழுதியதோ கிடையாது. வங்காளதேசத்திலிருந்து ஒருவரையும் நாங்கள் அழைத்து வரவில்லை” (பக். 89).
உலகமெங்கும் இனப்படுகொலைகள் தொடர்கின்றன. மதம், மொழி, சாதி, இனம், நிறம், தேசம் என்று பல காரணிகள் இதை உந்தித் தள்ளுகிறது. இந்திய மண்ணில் சமண, பவுத்ததை உள்நுழைந்து கெடுத்த இந்திய ஆதிக்க சாதிகள், பொதுவுடைமைக் கருத்தியலையும் கைப்பற்றி, அடித்தட்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதற்கு எப்போது விடிவு கிடைக்கும் என்கிற ஏக்கமே மிஞ்சுகிறது.
மரிச்ஜாப்பி: சி.பி.எம். அரசின் தலித் இனப்படுகொலை
ராஸ் மாலிக்
தமிழில்: இனியன் இளங்கோ
பக்கங்கள்: 118
விலை: ரூ. 90
முதல் பதிப்பு: டிசம்பர், 2013
வெளியீடு:

கருப்புப்பிரதிகள்,
பி 55 பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை,
சென்னை – 600005.
பேச: 9444272500
மின்னஞ்சல்: karuppupradhigal@gmail.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s