48. பொதுக்கல்வியை ஒழிக்க விரும்பும் காவிக்கும்பல்


48. பொதுக்கல்வியை ஒழிக்க விரும்பும் காவிக்கும்பல்

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)

(பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஆகஸ்ட் 2016 இல் வெளியிட்ட ‘திறனாய்வாளர் நோக்கில் தேசிய கல்விக்கொள்கை 2016 உருவாக்கம்’ என்ற மொழிபெயர்ப்பு, விமர்சன நூல் பற்றிய அறிமுகப்பதிவு.)

கல்வி 2016.jpg

‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பு ‘புதிய கல்விக்கொள்கை உருவாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வரங்கத்தை நடத்தியதோடு, மாவட்டந்தோறும் கூட்டங்களை நடத்தி புதிய கல்விக்கொள்கை 2016 க்கு எதிராக தீவிர பரப்புரை இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ‘தேசிய கல்விக்கொள்கை 2016 சில உள்ளீடுகள்’ ஆவணத்தை மொழிபெயர்த்தும் சில கல்வியாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்தும் பேரா. பி. இரத்தினசபாபதியும் ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’யும் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.

இந்நூலின் இரண்டாம் பகுதியில் “முதன்முதலில் இந்தியாவில் முகிழ்த்த கல்விமுறை வேதக்கல்வி முறை” என்று முகப்புரையில் பொய்யுரைத்து, இந்தியாவை படுகுழியில் தள்ள நினைக்கும் காவிக்கும்பலின் அறிக்கை உள்ளீடுகளை முழுமையாக படிக்க இந்த மொழிபெயர்ப்பின் மூலம் வாய்ப்பு கிட்டியுள்ளது. முகப்புரை, கல்வித்துறையின் முதன்மை அறைகூவல்கள், தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் – செயலாக்கம் – இலக்குகள் – குறிக்கோள்கள், கொள்கைக் கட்டமைப்பு, நடைமுறைப்படுத்தலும் நெறிப்படுத்தலும் என அய்ந்து இயல்களின் மொழிபெயர்ப்பு சுமார் 80 பக்கங்களில் விரிகிறது. கொள்கைக் கட்டமைப்பு 21 உள்தலைப்புகளில் சொல்லப்படுகிறது.

இந்துத்துவ சங் பரிவார் காவிக்கும்பல்கள் தங்களது செயல்திட்டத்தை என்றைக்கும் வெளிப்படையாக முன்வைத்தது கிடையாது. இவற்றை மறைமுகமாகவோ, வெறொரு மேல்பூச்சுடன் அவர்களது நஞ்சைக் கக்குவது வாடிக்கையான ஒன்றுதான். இதுதான் புதிய கல்விக்கொள்கையிலும் நடந்துள்ளது.

இந்நூலின் முதல் பகுதியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் ‘முரசொலி’ கடிதம் உள்ளது. கல்வி மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டப் பினபு மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன என்று கூறுவது உண்மையாக இருக்கலாம். பல்லாண்டுகாலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்த, இருக்கும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு கல்வி பற்றிய தெளிவாக கொள்கை ஏதும் உண்டா என்று கேட்கவேண்டியது அவசியம். இடஒதுக்கீடு, சமூகநீதி என்று வாய்கிழியப் பேசும் இவர்கள் வாய்ப்பு வரும்போதெல்லாம் அவற்றை முறியடிப்பதை முன்நின்று செய்கின்றனர். சமச்சீர் கல்வியின் ஓரங்கமான சமச்சீர்ப் பாடநூல்களை 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் போது தி.மு.க. கொண்டுவந்தது. இதை ஒழித்துக்கட்ட அ.இ.அ.தி.மு.க. விற்கு அடுத்த வாய்ப்பு வந்தது.

மழலையர் கல்வி முதல் உயர்கல்வி ஈறாக முற்றிலும் வணிகமயமானதும் WTO ன் GATS ஒப்பந்தம் குறித்தெல்லாம் இவர்களது பார்வை என்ன? அது மக்கள் நலன் சார்ந்ததா அல்லது இவர்களது வணிக நலன் சார்ந்ததா என்பதை இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போதுதான் நாம் அறிந்துகொள்ளமுடியும். காவிரிப்படுகையில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்ட கதைதான் இதற்கும் நடக்கும்.

புதிய கல்விக் கொல்கையை வடிவமைத்த 5 பேரில் ஒருவர் கல்வியாளர் என்பதும் மேலோட்டமான பார்வைதானே! அவர் RSS கல்வியாளர் என்பதுதானே உண்மை. இங்குகூட சமச்சீர்க் கல்வியை மதிப்பிட தமிழக அரசால் கல்வியாளர் குழு (?!) ஒன்று அமைக்கப்பட்டதல்லவா! அதைப்போலத்தான் இதுவும். அப்போது இதையும் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.

கொள்கை அணுகுமுறையில் முரண்பாடு, பன்முகத் தன்மை உடைய பண்பாட்டினைக் கருதாமை, முதன்மையுடைய இடஒதுக்கீட்டினைக் கருதாமை, இந்திய இறையாண்மைக்கு இடையூறு, குடியாட்சிக் கொள்கையினைக் கொள்ளாமை, எழுச்சியுறும் சமுதாயத்தின் மேன்மையை சிதைத்தல், ஆசிரியர்களுக்கு மன அழுத்தம், கூட்டாட்சிக் கொள்கைக்குப் புறம்பான போக்கு, மொழிச்சிறுபான்மையினரின் கல்விநிலையப் பாதுகாப்பு, (மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு?) கல்வி உதவித் தொகை பெறும் வாய்ப்பு, மாணவர்களின் உரிமையை முறையிடல் போன்ற அச்சுறுத்தல்களை நிறைந்த ஆவணமாக ‘புதிய கல்விக்கொள்கை 2016: சில உள்ளீடுகள்’ களை பேரா. பி. இரத்தினசபாபதியின் கட்டுரை இனம் காண்கிறது.

பேரா. ஆர். ராமானுஜம் அவர்களது ஆங்கிலக் கட்டுரை செ.நடேசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தரம் பற்றிய ஒற்றைப் பரிமாணப் பார்வை, கல்வியின் மதிப்பீடுகள் பற்றிய குறுகிய பார்வை, ஆசிரியரை நிர்வகிக்க வேண்டிய ஒருவராக அணுகுதல், முக்கிய சமூகப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பத் தீர்வுகள் அளிப்பது, உயர்கல்வி ஒழுங்க்காற்றலை ஒட்டுமொத்தத் தீர்வாக முன்வைப்பது, மையப்படுத்தப்பட்ட அதிகாரமும், மாநிலங்களைக் குறைத்து மதிப்பிடுவதும் என கவலைக்குரிய சில அம்சங்களை இக்கட்டுரையில் அடையாளப்படுத்தப் படுகின்றன.

வேலைவாய்ப்புப் பெறுதலுக்குத் தரப்படும் அழுத்தம், திறன்மிக்கத் தலைமுறை என்ற கருத்துடன் பிணைக்கப்பட்ட தொழிற்கல்வி, கலைத்திட்ட, கற்பித்தல் முறைகள் புறக்கணிப்பு, சிந்தனையற்ற தேர்வு சீர்சிருத்தங்கள், பகுத்தறிவு சார்ந்த அறிவியல் சிந்தனை இலக்குகளாக இல்லாமை, மேல்தட்டு மனப்பான்மை ஊடுருவல், சமஸ்கிருதம் கற்றல் – வேத – புராண மரபுகளுக்குப் பின்னுள்ள நோக்கங்கள் என இந்த ஆவனம் கல்விக் கொள்கைக்கு தவறான வழிகாட்டியுள்ளதை எடுத்துக்காட்டுகிறார்.

உயர்கல்வி வணிகமயமாவதையும் தனியார் / கார்ப்பரேட் மயமாவதையும் ஊக்குவிப்பதைக் குறிப்பிடும் அ.கருணானந்தன் அவர்களின் கட்டுரை, பகுத்தறிவிற்குப் பொருந்தாத பழம்பெருமிதத்தில் மிதப்பதையும் சமஸ்கிருதம் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கூற்றையும் நிராகரிக்கிறது. இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தில் சமஸ்கிருதத்தைவிட பிராகிருதம் மிகவும் தொன்மையானது என்றும் மேலும் வேதக்கல்வியில் அல்ல; பவுத்தக் கல்வியிதான் தேசியப் பெருமிதம் இருக்கிறது என்பதைச் சுட்டுகிறார்.

பேரா. அனில் சத்கோபால், பேரா. மது பிரசாத் ஆகியோரது ஆங்கிலக் கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றையும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கலாம். ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ வெளியிட்ட துண்டறிக்கை, கருத்தரங்கத் தீர்மானம் ஆகியவை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் முன்னெடுக்கவேண்டிய இந்த கருத்துப் பரப்புரை வழிமுறைகளை எவ்விதப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத இயக்கங்களும் அமைப்புகளும் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க உரிய வேலைகளைச் செய்வது அனைவரின் கடமையும் பொறுப்புமாகும்.

திறனாய்வாளர் நோக்கில் தேசிய கல்விக்கொள்கை 2016 உருவாக்கம்

பதிப்பாசிரியர்:

பேரா. பி.இரத்தினசபாபதி

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை

வெளியீடு:

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம்

முதல்பதிப்பு: ஆகஸ்ட் 2016

பக்கம்: 160

விலை: ரூ. 100

தொடர்பு முகவரி:

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம்,

48, வட்டச்சாலை,

கோடம்பாக்கம்,

சென்னை – 600024.

அலைபேசி: 9444251395

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s