51. மயிலிறகால் வருடும் வாசிப்பனுபவம்


51. மயிலிறகால் வருடும் வாசிப்பனுபவம்

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)

(புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள பேரா. ச.மாடசாமி அவர்களின் ‘போய்ட்டு வாங்க சார்…!’ (Goodbye Mr. Chips) நூல் அறிமுகமும் வாசிப்பு அனுபவமும் என்ற நூல் குறித்த பதிவு.)

கிப்ஸ்.jpg

ஜேம்ஸ் கில்டன் 1933 –ல் பிரிட்டிஷ் வீக்லி என்னும் இதழில் நாவலாக எழுதி, 1934 –ல் நூலாகி, பின்பு திரைப்படமாகவும் மாறிய ஒரு கற்பனைக் கதை. இந்த நாவலின் வாசிப்பனுவம் இந்நூலில் விரிகிறது. இது மொழிபெயர்ப்பு நூலல்ல; வாசிப்பு அனுபவம் மட்டுமே என்ற குறிப்புடன் தொடங்குகிறது.

“ஆயிரந்தடவை காட்டினாலும் அன்பு தெவிட்டுவதில்லை. அதிலும் விளக்கு வெளிச்சத்திலும் கொட்டுச் சத்தத்திலும் தன்னை வெளிப்படுத்தாமல் கூசி ஒதுங்குகிற அன்பு ரொம்ப ருசியானது. சிப்ஸின் கதை வெகு இயல்பாய் இருக்கிறது – சுவாசத்தைப்போல. நீண்ட பெருமூச்சோ, ஓடிக் களைத்த பதற்றமோ சுவாசத்தில் இல்லை. சீரான சுவாசம்”, (பக். 07) என்று முத்தாய்ப்பு வைக்கிறது.

சிப்ஸின் கதை மட்டுமல்ல; இந்த வாசிப்பனுபவமும் நம்மை எங்கே இழுத்துச் செல்கிறது. அன்பு, இனிமை, மென்மை, சீரான சுவாசம் ஆகியவற்றின் கலவையில் எங்கோ ஒரு புள்ளியில் இணைவதாகத் தோன்றுகிறது. (நாமும்தான் நூல் அறிமுகம் செய்கிறோம்! அதில் இவற்றையெல்லாம் கலந்து, பிசைந்து தரமுடியவில்லையே! “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?” என்பது கிராமத்துச் சொலவடை.)

இன்று கூட ஆசிரியர் ஒரு நாவலில், சினிமாவில் கதாநாயகனாக இருப்பது இயலாத காரியம். 80 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட கிப்ஸ் பாத்திரம் இன்னுமெப்படி நம்மை ஆக்ரமிக்கிறது? இவ்வளவிற்கும் அவர் ஒன்றும் ரோல்மாடல் அல்ல. அன்பால் இளம் உள்ளங்களைக் கொள்ளையடித்த ஒரு சராசரி ஆசிரியன்.

“தொடர்ந்து வாசிக்கிறவர்தான் ஆசிரியர் என்கிறார்கள். இது ஒருவிதத்தில் சரியாக இருக்கிறது. அதேநேரம் இலக்கணம்போல கனமாக இருக்கிறது. எல்லோரும் தூக்க முடியாத கனம்! தொடர்ந்து மாணவர்களிடம் உறவு வைத்திருக்கிறவர்தான் ஆசிரியர் என்பது சிப்ஸ் முன்வைக்கும் வாதம். இந்த வழிகாட்டுதல் கனமற்று லகுவாக இருக்கிறது. யாவர்க்கும் கைகூடக்கூடிய வித்தையாகவும் இருக்கிறது”, (பக். 61) என்று சொல்கிறார். புத்தகங்களைப் படிப்பதைவிட மாணவர்களைப் படிப்பது எளிதானதுதானே! ஆனால் அதுவும் சிலருக்கு வரவில்லையென்றால் சிப்ஸை படியுங்கள். கண்டிப்பாக வரும். இப்போதே தேநீர் போட கற்றுக்கொண்டு உங்கள் மாணவருக்காக காத்திருங்கள்!

சிப்பிங் சிப்ஸ் ஆனது எப்படி? அது ஒரு இனிய காதலின், அன்பின் கதை. சிப்பிங்கின் 48 வயதில் முகிழ்த்த காதல். 25 வயது கேதரின் மலையிலிருந்து தனது தோழிக்குச் சைகை காட்ட, பாவனையைத் தவறாகப் புரிந்துகொண்ட சிப்பிங், அவளைக் காப்பாற்ற முயல கால் உடைந்ததுதான் மிச்சம். பிறகு கேதரினால் உண்மையில் காப்பாற்றப்படும் சிப்பிங் குணமடையும் வரை நாள்தோறும் கவனித்துக் கொள்ளப்படுகிறார்.

பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமென்ற புரட்சிகர சிந்தனையோடும் சோசலிச கருத்துகளுடன் விவாதிக்கும் கேதரினுக்கு, பழங்கால சிந்தனைகளில் ஊறிப்போன, பழமைவாதியான சிப்பிங்கை எப்படியோ பிடித்துப் போனது. அவளது செல்ல அழைப்பே ‘சிப்ஸ்’; கடைசி குட் பை ‘குட்பை மிஸ்டர் சிப்ஸ்’. இப்பெயரே சாகும் வரை அவருக்கு நிலைத்துப் போனது.

ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுடன் புரூக்பீல்டு மாணவர்களைக் கால்ப்பந்து விளையாட வைக்கும், அவளது முயற்சி வெற்றி பெறுகிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை ஓராண்டில் கேதரின் மரணத்தால் தோற்றுப்போகிறதே!

மனைவியை குழந்தையை பறிகொடுத்த அன்று வழக்கமான பணிசெய்து மனப்பாரத்தை இறக்கி வைக்க வகுப்பறைக்குத்தான் அவரால் செல்லமுடிகிறது. வேறு இடம் அவருக்கு ஏது? இந்த ஓராண்டு அவரது திருமண வாழ்வு எல்லாருக்கும் மறந்துதான் போகிறது. “பைத்தியக்காரத்தனம்! எல்லாம் ஒருநாள் மறந்துதான் போகிறது!” (பக். 59) ஆனால் சிப்ஸுக்கு மறக்குமா என்ன?

சிப்ஸ் மரணப்படுக்கையில் இந்தச் சொற்களைத்தான் முனக முடிகிறது. “ நானா பாவம்? எனக்கா குழந்தைகள் இல்லை? எனக்கு ஆயிரக்கணக்கில் பிள்ளைகள். ஆயிரக்கணக்கில்… எல்லாம் ஆம்பளப் பசங்க…”. (பக். 59) அவர் பணி செய்தது ஆண்கள் பள்ளி. உண்மையில் அவருக்கும் குழந்தைகள் இருந்திருந்தால் நிலைமை வெறொரு மாதிரியாக இருந்திருக்குமோ என்னவோ! யார் கண்டது? இங்கு அப்படித்தானே நடக்கிறது?

கேதரினோடு ஓராண்டு வாழ்ந்ததுபோக 85 வயதுவரை மீதிவாழ்க்கை தனிமை வாசமே. ஆனால் அவர் தனிமையை உணரவில்லை; சபலத்திற்கு ஆளாகாத (பக். 48) சாதுவான மிருகம் சிப்ஸ் (பக். 31). ஓய்வுக்குப் பின் மீண்டும் பணி. “பாடங்களும் பழைய பாடங்கள், ஜோக்குகளும் பழைய ஜோக்குகள். ஆனால் மாணவர்கள் புதியவர்கள் ஆயிற்றே! ஜோக்குகளுக்குச் சிரித்தார்கள். இப்படித்தானே ஆசிரியர் பிழைப்பு ஓடுகிறது! (பக். 41). உண்மையை எப்படி லாவகமாக, எள்ளலாகச் சொல்ல முடிகிறது, மிஸ்டர் மாடசாமி?

முதல் உலகப்போர் நேரம். பள்ளிக்கு அருகே குண்டு மழை. “சிப்ஸ் வகுப்பெடுப்பதை நிறுத்தவில்லை. சத்தத்தை மட்டும் சற்றுக் கூட்டினார். போருக்கு அவர் தரும் அவமரியாதை இது. (பக். 44). அவரிடம் படித்த மாணவர்கள் பலர் போரில் இறக்க நேரிடும்போதெல்லாம் அழுது தீர்த்தவராயிற்றே! சிப்ஸால் வேறு என்ன செய்யமுடியும்?

இந்த சிப்ஸுக்கு பள்ளி, பாடம், மாணவர்கள் ஆகியவற்றைத் தவிர வேறு ஒரு உலகம் இருந்தததில்லை. “எப்போது யார் வந்தாலும் டீயும் கேக்கும்ரெடி. மாணவர்களின் வருகையைப் போல மகிழ்ச்சி தரக்கூடிய வெறொரு விஷயம் சிப்ஸுக்குக் கிடையாது”. (பக். 50)

ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் நம்முன் இவ்வளவு அதிர்வுகளை உண்டாக்க முடியும் என்பது வியப்பாகவே இருக்கிறது. அதுவும் மிக எளிமையான, ஒரு சராசரி ஆசிரியனின் ஆளுமை இதற்குக் காரணமாக அமைவது கூடுதல் வியப்பு. நாவாலோடு இணைந்து வாசிப்பு அனுபவம் மூலம் நம்மை இன்னும் சற்றுக் கூடுதலாக மீட்டியிருக்கிறார் ச. மாடசாமி. பணி ஓய்வு என்பது முற்றுப்புள்ளியல்ல. போய்ட்டு (மீண்டும்) வாங்க சார்…!

போய்ட்டு வாங்க சார்…! (Goodbye Mr. Chips)

ச. மாடசாமி

வெளியீடு:

புக் ஃபார் சில்ரன்

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..

முதல்பதிப்பு: ஜூன் 2013

மூன்றாம் பதிப்பு: ஜூன் 2015

மூன்றாம் பதிப்பு: பிப்ரவரி 2016

பக்கம்: 64

விலை: ரூ. 40

தொடர்பு முகவரி:

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s