56. காட்சியூடக அடிமைகளா குழந்தைகள்?


56. காட்சியூடக அடிமைகளா குழந்தைகள்?

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)


(புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள ‘ஆயிஷா’ இரா. நடராசனின் புனைவு ‘டோரா வரை… கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு’ என்ற சிறார் நூல் குறித்த பதிவு.)

அட்டைகள்_0004.jpg

முந்தைய தலைமுறைகளில் காமிக்ஸ், சித்திரக்கதைகள் பிடித்திருந்த இடத்தை இன்று கார்ட்டூன்கள் ஆக்ரமித்துள்ளன. ஒரு வித்தியாசம் என்னவென்றால் அச்சு வடிவிலான அவை குறிப்பிட்ட சிறு பகுதியினரை மட்டும் சென்றடைந்தது. ஆனால் இன்று அடிப்படை வசதிகளற்ற எளிய குக்கிராமத்தையும் பெப்சி, கோக்கைப் போல தொலைக்காட்சி மூலம் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் சென்றடைந்துள்ளனர். ‘சக்திமான்’ படுகொலைகள் சிறு கிராமங்களிலும் நடந்ததே இதை நமக்கு உணர்த்தும். (இதைத் ‘தற்கொலை’ என்று சொல்வதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்!)

இதனுடைய வீச்சு முன்பைவிட அதிகமானது. வாசிப்பு கொஞ்சம் விவரமறிந்த குழந்தைகளுக்கானதாக இருந்தது. ஆனால் இன்று எழுதப்படிக்கத் தெரியாத சிறு குழந்தையும் தொலைக்காட்சியைக் கண்டுகளிக்க எந்தத் தடையுமில்லை. எனவே குழந்தைகள் காட்சியூடக அடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.

கீழ்க்கண்ட 25 கார்ட்டூன் நாயகர்களை குழந்தைகள் நேர்காணல் செய்வதாக இந்நூல் புனையப்பட்டுள்ளது.

 1. பென் டெனிசன்
 2. பப்பாய்
 3. ஸ்பைடர் மேன்
 4. டாம் & ஜெர்ரி
 5. ரிச்சி – ரிச்
 6. ஸ்கூபி டூ
 7. சோட்டா பீம்
 8. ஆஸ்டிரிக்ஸ் அண்டு ஆப்லிக்ஸ்
 9. ஹெய்டி
 10. டின் டின்
 11. பவர் பஃப் கேர்ல்ஸ்
 12. டெனிஸ்
 13. காட்ஸிலா
 14. பிலின்ஸ்டோன்
 15. கிருஷ்ணா அண்டு பலராம்
 16. ஹீ – மேன்
 17. பார்பி
 18. மிக்கி மவுஸ்
 19. லூனிட்டூன்
 20. சூப்பர் மேன்
 21. தி சிம்சன்ஸ்
 22. போக்கி மான்
 23. பேட் மேன்
 24. ஆஸ்வால்டு
 25. டோரா

ஆகிய கார்ட்டூன் நாயகர்களுடன் குழந்தைகள் நடத்தும் நேர்காணல் புனைவே இந்நூல். அந்தக் கதாபாத்திரங்களின் உருவாக்கம், இயக்குநர், உருவான பின்னணி போன்றவை இந்த கற்பனை நேர்காணல்கள் மூலம் விளக்கப்படுகின்றன. 1928 –ல் வால்ட் டிஸ்னியும் அவரது மனைவி லில்லியனும் ரயிலில் வரும்போது கூத்தடித்த எலியின் கற்பனை உருவாக்கமே மிக்கி என்பது சொல்லப்படுகிறது (பக். 70).

“பாதகம் செய்பவரைக் கண்டாம் நாம் பயம்

கொள்ளல் ஆகாது பாப்பா

மோதி மிதித்து விடு பாப்பா – அவர் முகத்தில்

உமிழ்ந்துவிடு பாப்பா “, என்று பாரதியார் பாடியதைத்தான் நீங்கள் மின் வைக்கிறீர்கள். உங்கள் வெற்றி தொடரட்டும்”, (பக். 32) என்று சோட்டாபீமை வாழ்த்துவதாக உள்ளது.

பாதகம் என்பதற்கு பீமின் அளவுகோல்கள் என்ன? டோராவில் வரும் குள்ளநரி மட்டும் ஏன் திருடுகிறது? 1974 –ல் நமது நாட்டில் அறிமுகமான கார்ட்டூன் உலகம் ஏன் புராணக் குப்பைக்குள் சிக்கிக் கொண்டது? இவை இல்லாமல் குழந்தைகளின் மாயஉலகைக் கட்டமைக்க முடியாதா என்ன? என்பது போன்ற கேள்விகள் வெறும் கேள்விகள் அல்ல. இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய கரிசனமே நம்முன் நிற்கிறது.

ஆனால் இந்த கற்பனை உலகம் குழந்தைகளின் உலகிலும் அவர்களுடைய அக உலகிலும் ஏற்படுத்தும் பாதிப்புகளை சிறிதுகூட கோடிட்டுக் காட்டவில்லையே என்ற வருத்தமே மிஞ்சுகிறது. இவற்றை அணுகும் முறை குறித்தப் புரிதல்கள் நம்மிடம் இருகிறதா? குழந்தைகளை அதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவா? என்று வினா எழுப்பினால் என்ன விடை கிடைக்கும்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள் மூலம் கட்டமைக்கப்படும் உலகை , பியர் பூர்தியு வெளிப்படும் முறையைப் பாருங்கள். இதுவே இப்படியென்றால் கார்ட்டூன், புராணங்கள் எவ்வளவு பாதிப்பைத் தரும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!

தொலைக்காட்சி_0002.jpg

“தொலைக்காட்சியை அன்றாடம் பார்ப்பதில் பொதிந்து கிடக்கும் அரசியல் ரீதியிலான அபாயங்கள் எதனால் ஏற்படுகின்றன என்றால், திரையில் தோன்றும் காட்சிக்கு இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடும் யதார்த்தத் தன்மையை உண்டு பண்ணும் விசேஷத் திறன் உண்டு என்பதால்தான். ஒன்றைப் பார்க்கச் செய்து, தான் பார்க்கச் செய்ததை நம்பவைக்கும் தன்மை. மனக்கண்முன் நிறுத்தும் இந்தச் சக்திக்கு அணிதிரட்டும் ஆற்றல்கள் உண்டு. கருத்துகள், அவற்றின் வடிவாக்கங்கள் தவிர, சில குழுக்களையும் இருத்தல் பெறச்செய்ய இந்தச் சக்தியினால் முடியும். இனவெறி, வேற்று நாட்டவரை வெறுப்பது, வெளி தேசத்தவரிடம் பயம் – வெறுப்பு போன்ற, பெரும்பாலும் எதிர்மறையான தீவிர உணர்ச்சிகளை உசுப்பிவிடுவதற்குச் சாதகமான, தார்மீக, அரசியல் உள் அர்த்தங்கள் சாதாரணத் துணுக்குச் செய்திகளிலும், அன்றாட நிகழ்வுகளிலும், விபத்துகளிலும் செறிந்திருக்க வாய்ப்பு உண்டு”, (பக். 36, 37, தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம், பியர் பூர்தியு, பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில்: வெ.ஶ்ரீராம், க்ரியா வெளியீடு: ஜனவரி 2004, விலை: ரூ.100)

வால்ட் டிஸ்னி உருவாக்கிய ‘டிஸ்னிலேண்ட்’ மாயாஜால கனவுலகக் குறியீடு. இதைப் பற்றியும் இதர காட்சியூடகங்களையும் விமர்சனப் பூர்வமாக அணுகும் பிரஞ்சு நாட்டு பின் நவீனத்துவ சிந்தனையாளர் ழீன் பூதிலார் (Jean Baudrillard) பின்வருமாறு கூறுகிறார்.

“டிஸ்னிலேண்ட் மூன்றாம் வரிசை நகலியத்தை மூடி மறைக்க உதவுகிறது. டிஸ்னிலேண்ட் ஒரு கனவுலகமாகும். இந்த டிஸ்னிலேண்ட் தான் நிஜமான அமெரிக்கா. இந்த உண்மையை மறைத்துக் கொண்டு நிற்கிறது. டிஸ்னிலேண்ட் கற்பனை உலகம் என்று சொல்வதால், டிஸ்னிலேண்ட் தவிர மீதியனைத்தும் உண்மை என்று நம்பவைக்கப்படுகிறது. நிஜத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள அமெரிக்கா இனியும் உண்மையானதாக இல்லை; அவை நகலிய வரிசைமுறைக்குள் நுழைந்துவிட்டன. அவை ‘மிகையதார்த்தம்’ சார்ந்துள்ளன. இது யதார்த்தத்தின் தவறான சித்தரிப்பு (மார்க்ஸ் வார்த்தையில் கருத்துருவம்) பற்றிய கேள்வியன்று. மாறாக யதார்த்தம் இனியும் யதார்த்தம் அல்ல என்ற உண்மையை மறைப்பது; அதன்மூலம் மீண்டும் யதார்த்தக் கொள்கையைக் காப்பாற்ற முடிகிறது.” (பக். 139, உடலே திரையாக… தகவல் தொடர்பு ஊடகங்கள், சிவக்குமார், காவ்யா வெளியீடு: டிசம்பர் 1995, விலை: ரூ. 30)

தொலைக்காட்சி_0001.jpg

அவர் மேலும் “டிஸ்னிலேண்ட் கற்பனை உலகு” – இது உண்மையானதும் அல்ல; பொய்யானது அல்ல. அது பின்வாங்கும் எந்திரம் (a deterrence machine). யதார்த்தத்தின் புனைவை மீண்டும் தலைகீழாகப் புதுப்பிப்பதற்கான பின்வாங்கும் எந்திரம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சுற்றி டிஸ்னிலேண்டும் இன்னும் அதைப்போன்ற பல்வும் (மேஜிக் மவுண்டன், மெரின் வோர்ல்டு) உள்ளன. லாஸ் எஞ்சல்ஸ் இப்படி கற்பனை உலகங்களால் உட்செலுத்துகின்றன. இந்த நகரம் குழந்தமை சமிக்ஞைகளால் ஆன பழைய கற்பனையை நாடி நிற்கிறது”, (பக். 140, மேலே குறிப்பிட்ட நூல்.)

தோற்ற வரிசைகளாக (Orders of Appearance) கள்ளவுரு (counterfeit), உற்பத்தி (Production), நகலியம் (Simulation) ஆகிய மூன்றைச் சுட்டும் ழீன் பூதிலார் புராணீகப் புனைவுகள் இணைக்கப்படுவதையும் கூறுகிறார்.

“ஒவ்வொரு கட்டமாக முன்னேற முன்னேற யதார்த்தம்/உண்மை மறைகின்றது. கடைசியில் நிஜம்/பொய்; பொருள்/குறி; யதார்த்தம்/சித்தரிப்பு என்பதெல்லாம் மறைந்து ‘நகலியம்’ (Simulation) பரவுகின்றது. யதார்த்தம் இனியும் இல்லை எனும்போது பழமைப் பற்றார்வம் (Nostalgia) முழு அர்த்தம் பெறுகின்றது. யதார்த்ததின் தோற்றம், குறிகள் பற்றிய புராணீகப் புனைவுகள் (Myths) அதிகமாகின்றன என்கிறார் பூதிலார்”, (பக். 138, மேலே குறிப்பிட்ட நூல்.)

புராணப் புனைவுகள் மிக அதிகளவில் குழந்தைகள் மனத்தை சிதைக்கவும் வெறுப்பை உண்டாக்கவும் பயன்படுகிறது. கார்ட்டூன் நாயகர்கள் ஏற்கனவே குழந்தைகளுக்கு நல்ல அறிமுகம் உள்ள நிலையில் இந்நூலின் தேவை கேள்விக்குறியே! அவற்றிற்கு அடிமையாகாமல் தப்பவும், அந்தக் கனவுலக மாயையிலிருந்து விடுபடவும், அதே சமயம் இந்தக் கனவுலகத்தை படைப்பூக்கத்தடன் அணுகவும் யோசித்தால் அதுவே இன்றைய நிலையில் போதுமானதும், அவசியமானதுமாகும்.

டோரா வரை… கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு

புனைவு: ‘ஆயிஷா’ இரா. நடராசன்

வெளியீடு:

புக் ஃபார் சில்ரன்

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..

முதல்பதிப்பு: ஜூலை 2016

பக்கம்: 96

விலை: ரூ. 70

தொடர்பு முகவரி:

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in இந்நூல் என் வாசிப்பில், கல்வியியல், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s