காந்தியின் ரத்த வாரிசுகள்

காந்தியின் ரத்த வாரிசுகள்

 (மகாத்மாவின் கதை தொடரின் பதினேழாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்

                 மகாத்மா காந்தி தேசத்தந்தை என்று புகழப்பட்டிருந்தாலும் அவரது பெயர் பிற்காலத்தில் குழப்பத்திற்கு உள்ளாகிவிட்டது. ஜவகர்லால் நேருவின் மகளான இந்திரா பிரியதர்சினி பார்சி (ஜொராஸ்டரியம்) சமயத்தைச் சார்ந்த பெஃரோஸ் காந்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆண்வழிச் சமூக வழக்கப்படி இந்திரா பிரியதர்சினி இந்திரா காந்தி ஆனார். அவரது இரு மகன்களுக்கு ராஜூவ் காந்தி, சஞ்சய் காந்தி எனப் பெயரிட்டார். நேருவின் மறைவுக்குப் பின் இந்திரா காந்தி பிரதமரானார். இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்பு ராஜூவ் காந்தி பிரதமரானார். சோனியா காந்தி – ராகுல் காந்தி, மேனகா காந்தி – வருண் காந்தி என்ற பெயர் சூட்டல்கள் இவ்வாறு குழப்பம் ஏற்படக் காரணமாயிற்று. ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் ஆகிய இருவரில் நேருவை அரசியல் வாரிசாக காந்தி தெரிவுசெய்த வரலாற்றின் பின்னணியில் இந்தப் பெயர்சூட்டல் தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. மேலும் மகாத்மா காந்தியின் ரத்த வாரிசுகள் தேர்தல் அரசியல் களத்தில் இல்லை. அவரது கொள்கை வாரிசுகள் சிலர் அரசியலில் பங்குபெற்றனர். காந்தியின் குடும்ப வாரிசுகள் ஆலமரத்தின் விழுதுகளாய் எங்கும் பரந்து விரிந்து அவரது பெருமையைப் பறைசாற்றும் விதமாக வாழ்கின்றனர்.

         காந்திக்கு  ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் என நான்கு ஆண் குழந்தைகள். மூத்தமகன் ஹரிலால் 23 ஆகஸ்ட் 1888இல் பிறந்தார். இவர் பிறந்தவுடன் காந்தி பாரிஸ்டர் படிப்பிற்கு இங்கிலாந்து சென்றார். ஆடம்பர வாழ்க்கையை விரும்பிய அவர் மீது எளிய வாழ்வு திணிக்கப்பட்டதை ஏற்க இயலவில்லை. தந்தையைப் போலவே தாமும் பாரிஸ்டராக விரும்பினார். ஆனால் மேற்கத்தியக் கல்விமுறையை எதிர்த்துப் புதிய கல்விமுறையை உருவாக்கிய காந்தி இதற்கு இசையவில்லை. காந்தி தனது சோதனை முயற்சிகளுக்கும் அனைத்துப் பணிகளுக்கும் குடும்பத்தினரை ஈடுபடுத்தத் தயங்காதவர். இதுவே இருவருக்குமிடையே முரண்பாடுகள் தோன்றக் காரணமாக அமைந்தது. காந்தியின் கொள்கைகளைத் தனது செயல்பாடுகள் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். இவர்களுக்கிடையே நடந்த பாசப்போராட்டங்கள் ஒருவகையில் காவியத்தன்மை மிக்கவை.

       காந்தியின் விருப்பமின்றி 1906இல் குலாப் காந்தியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு பெண்கள் மூன்று ஆண்கள் என 5 குழந்தைகள்; இரு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்தனர். ஹரிலால் தந்தைமீது கொண்ட பாசத்தால் மூத்த ஆண் குழந்தைக்கு காந்திலால் எனப்பெயரிட்டார். ரசிக்லால் சாந்திலால் ஆகிய இருவரும் சிறுவயதிலேயே இறந்தனர். ராணி, மனு என இரு பெண்களும் இருந்தனர். காந்திலாலுக்கு சாந்திலால், பிரதீப் என குழந்தைகளும் ராணிக்கு அனுஷ்ரியா, பிரபோத், நீலம், நவ்மாலிகா என நால்வரும் மனுகாந்திக்கு உர்மி என்ற குழந்தையும் பிறந்தனர்.

         1918இல் இன்ஃப்ளுயன்சா தொற்றால் குலாப் காந்தி மரணமடைந்தார். குழந்தை விதவையான குலாப்பின் சகோதரியை குமி அடலாஜாவை இரண்டாம் திருமணம் செய்ய நினைத்தார். அதுவும் நடைபெறவில்லை. அதன்பிறகு குடும்பத்தைவிட்டுப் பிரிந்து மது, மாது என தெருவோர வாழ்க்கையில் ஈடுபட்டார். பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் உண்டு. அது தொடர்பான வழக்கறிஞர் அறிவிக்கையில் 1915 முதல் பிரிந்து வாழ்வதை காந்தி உறுதிப்படுத்தினார்.  ஹரிலால் 1947 வரை அவ்வப்போது காந்தியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அவரை மனந்திருந்தி வாழ காந்தியும் பெருமுயற்சி மேற்கொண்டார். ஆனால் அவையனைத்தும் தோல்வியில் முடிந்தன.  காந்தியின் சொற்களை அவர் துளியும் செவிமெடுக்கவில்லை. காந்தி ஹரிலாலுக்கு எழுதிய கடிதங்களில் குடிப்பழக்கம், மோசமான நடத்தைகளைக் கண்டித்தார். ஹரிலால் காந்தி ஒருகட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார்.

        1936இல் அப்துல்லா காந்தி என்ற பெயருடன் முஸ்லீம் மதத்தைத் தழுவினார். சில ஆண்டுகளில் மீண்டும் இந்துவானார். காந்தி அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்க இயக்கம் நடத்திய நிலையில் இவர் அந்நியப் பொருள்களை விற்பனை செய்தார். விடுதலைப் போராட்டத்தைவிட ஹரிலால் காந்தியைச் சமாளிப்பது கூடுதல் பிரச்சினையாக இருந்ததை காந்தி தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.  ஹரிலாலின் மகள் மனுபென் காந்தி 1943 முதல் காந்தியின் உதவியாளராக இருந்தார். காந்தி என் தாய் (Bapu My Mother) எனும் நூலை எழுதினார். காந்தி படுகொலைக்குப் பின் குஜராத் பவநகரில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி, தனது 40 வயதில் காலமானார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரது நாட்குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டு வெளியானது.

       காந்தியின் இறுதிச் சடங்கில் ஹரிலால் அலங்கோலமான அடையாளத்துடன் கலந்துகொண்டார். அவரை அடையாளம் காணமுடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. அதன்பிறகு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூன் 18, 1948இல் பம்பாயில் உள்ள முனிசிபல் மருத்துவமனையில் 55 வயதில் காசநோயால் இறந்தார். பம்பாய் காமாதிபுராவில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் காந்தியின் மகன் என்று அங்கு யாரிடமும் கூறவில்லை. இறந்தபிறகு அவரது பையில் கிடைத்த ஆதாரங்களில் அடிப்படையில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

       அவரது பேத்தி நீலம் பரீக் Ganghiji’s Lost Jewel: Harilal Gandhi என்ற நூலில் அவரது வாழ்க்கையை எழுதினார். இதனடிப்படையில் எடுக்கப்பட்ட பெரோஸ் அப்பாஸ் கானின் Gandhi, My Father என்ற திரைப்படம் காந்தி – ஹரிலால் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. காவியத்தன்மையுடைய இந்த தந்தை-மகன் உறவைப் பற்றி பல்வேறு படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. இவரது வாழ்வின் முற்பகுதியை ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று கலைச்செல்வி தமிழில் நாவலாக எழுதியுள்ளார். ‘இரண்டு தந்தையர்’ எனும் சுந்தர் சருக்கையின் நாடகத்தை சீனிவாச ராமானுஜம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 

        பிப்ரவரி 10, 1940இல்  பிறந்த ஹரிலால் காந்தியின் பேரன் சாந்திலால் காந்தி ஓர் புகழ்பெற்ற இதய மருத்துவர். 1967இல் அமெரிக்கா சென்று அங்கேயே குடியுரிமை பெற்றுத் தங்கினார். 2012 கான்சாஸ் மாகாணப் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். காந்தியின் வழித்தோன்றல் என்று சொல்லி இவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை. ஒர் இதய மருத்துவர் என்று குறிப்பிடப்படுவதையே  பெரிதும் விரும்பினார். இவர் ஜனவரி 12, 2015இல் காலமானார்.

       இரண்டாவது மகன் மணிலால் காந்தி அக்டோபர் 28, 1982இல் ராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் காந்தி இவரை தென்னாப்பிரிக்காவிற்கு உடன் அழைத்துச் சென்றார். ஃபீனிக்ஸ் குடியிருப்பிலும் டால்ஸ்டாய் பண்ணையிலும் இவரது இளமைப்பருவம் கழிந்தது. 1915இல் காந்தியிடன் இந்தியா திரும்பினாலும் குஜராத்தி மற்றும் ஆங்கில வார இதழான ஒப்பீனியன் பணிகளுக்காக 1917 மீண்டும் தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்டார்.  அவ்விதழின்ஆசிரியராக 1920 முதல் மரணமடையும் வரை (1956) பணியாற்றினார். தண்டி அணிவகுப்பில் சென்ற 78 பேரில் ஒருவர். விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர்.

      1926இல் தென்னாப்பிரிக்காவில் வாழும் பாத்திமா கூல் என்ற இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்தார். அவரை மணம்புரிய தந்தையின் அனுமதியை வேண்டினார். மதமாற்றம் அதர்மம் என்றும் நம்பிக்கைகள் ஆடை போன்று மாற்றிக்கொள்ளக் கூடியதல்ல என்ற காந்தி இதனை ஏற்க மறுத்தார். இந்தச் சிக்கலைத் தீர்க்க சேவாகிராமத்தில் வாழ்ந்த கிஷோர்லால் மஷ்ருவாலாவின் உறவுக்காரப் பெண் சுசீலாவை 1927இல் மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு சீதா (1928), எலா (1940) என்ற மகள்களும் அருண் (1934) என்ற மகனும் பிறந்தனர். இவர்களது வம்சாவளியினர் இன்றும் தென்னாப்பிரிக்காவில் வசிக்கின்றனர். அருண்லால் காந்தியும் எலா காந்தி சமூக, அரசியல் செயல்பாட்டாளர்கள்.

          சீதா துபேலியாவின் மகள் கீர்த்தி மேனன் ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழக மூத்த இயக்குநர், கல்வியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். அந்நாட்டின் கல்விக் கொள்கை உருவாக்கம், செழுமைப்படுத்துதலில் பங்காற்றியவர். இவரது மகள் சுனிதா மேனன் பத்தரிகையாளராக உள்ளார்.

            1940 ஜூலை 1இல் டர்பனில் பிறந்த எலா காந்தி படிப்பு முடிந்ததும்  மேவா ராம் கோபின் என்பவரை மணந்தார். இவருக்கு ஐந்து குழந்தைகள். இவர் சமூகச் செயல்பாட்டாளராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தார்.  நடால் பெண்கள் அமைப்பில் நிர்வாகக் குழுவில் பங்கேற்றார். நடால் இந்தியக் காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக முன்னணி போன்றவற்றிலும் பங்கேற்றார். நிறவெறிப்போரின் போது ஓன்பது ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1994-2004 காலத்தில் தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். வாடகைத் தாய்களின் உரிமைகள், குடும்ப வன்முறைத் தடுப்பு போன்றவற்றில் இவரது பணிகள் அளப்பரியது. மகாத்மா காந்தி உப்பு யாத்திரைக் குழு, மகாத்மா காந்தி  மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவராகச் செயல்படுகிறார். சர்வதேச அமைதி விருது, பத்ம பூஷன் விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்.    

        அருண் மணிலால் காந்தியுடன் வசிக்க  சேவாகிராமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  1947இல் 13 வயதில்  மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்குப் பெற்றோருடன்  சென்றார். 1987 தனது மனைவி சுனந்தாவுடன் அமெரிக்கா சென்றார். அங்கு காந்தி பெயரில் அகிம்சை நிறுவனம் அமைத்தார். காந்தி மற்றும் அகிம்சை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். 21 பிப்ரவரி 2007இல் இவர் மரணமடைந்தார். இவரது மகன் துஷார் காந்தி எழுத்தாளர் மற்றும்  சமூகச் செயல்பாட்டாளர் ஆவார். இவரது மனைவி சோனல் தேசாய் காந்தி; மகன் ராவல் காந்தி. மகளுக்கு கஸ்தூரிபா நினைவாக கஸ்தூரி காந்தி எனப் பெயரிட்டார். 1998இல் குஜராத் வதோராவில் மகாத்மா காந்தி அறக்கட்டளையைத் தொடங்கி அதன் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளை இன்று மும்பையில் இயங்குகிறது.

        துஷார் காந்தி 2005இல் தண்டி யாத்திரையின் 75வது நிகழ்விற்குத் தலைமையேற்றார். ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக பைலிருனாப் பாசியைப் பயன்படுத்தும் பரப்புரைக்கு நல்லெண்ணத் தூதுவராகச் செயல்பட்டார்.  காந்தியின் இறுதி நாட்கள், காந்திப் படுகொலை, சதி, விசாரணை, கபூர் ஆணையம், இந்து தீவிரவாதம் குறித்து Let’s Kill Gandhi எனும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். 2018இல் பசுப் பாதுகாப்புக் குண்டர்களைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வென்றார். காந்தி அறக்கட்டளை ஆராய்ச்சி ஊழியர்கள் இந்தூர் கஸ்தூரிபா ஆசிரமத்தில் சேதமடைந்திருந்த கஸ்தூரிபாவின் நாட்குறிப்பைக் கண்டுபிடித்தனர். குஜராத்தியில் எழுதப்பட்ட இவற்றைப் பதிப்பித்தார். ‘The Lost Diary of Kastur, My Ba’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவரது பணிகள் இன்றும் தொடர்கின்றன.

       மூன்றாவது மகன் ராம்தாஸ் காந்தி தென்னாப்பிரிக்கா நடால் காலனியில் ஜனவரி 2, 1897இல் பிறந்தார். 14 வயதில் தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். இந்தியாவில் சம்ப்ரான் சத்தியாகிரகத்திலும் கைதானார். 1919இல் நவஜீவன் வார இதழின் ஆசிரியராகப் பணி செய்தார். பட்டேல் நிறுவிய பர்தோலி ஆசிரம நிர்வாகியாகவும் செயல்பட்டார். நிர்மலா காந்தியை மணந்தார். இவருக்கு கனு காந்தி எனும் மகனும் சுமத்ரா காந்தி, உஷா காந்தி என்ற மகள்களும் உண்டு.

          காந்தியின் வாழ்க்கைமுறை மற்றும் கோட்பாடுகள் பிறருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதை உணர்ந்திருந்தார். விடுதலைப் போராட்டத்தில்  நீண்டகாலம் சிறை வாழ்வை அனுபவித்தார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. காந்தியின் விருப்பப்படி காந்தியின் இறுதிச் சடங்கைச் செய்தார். இளைய சகோதரர் தேவதாஸ் காந்தி சடங்கில் உடன் பங்கேற்றார். 1969 ஏப்ரல் 14, தனது 72வது வயதில் காலமானார்.

       காந்தியின் புகைப்படத் தொகுப்புகளில் அவரது கைத்தடியைப் பிடித்து இழுத்துச் செல்லும் சிறுவன் இடம்பெறும் படம் ஒன்று இருக்கும். அச்சிறுவன் காந்தியின் பேரன் கனு காந்தி. 1928இல் பிறந்த இவர் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, நாசா மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்தார். இவருக்குக் குழந்தைகள் இல்லை.  2014இல் இந்தியா திரும்பிய இவர் நவம்பர் 7, 2016இல் தனது 87வது வயதில் சூரத் நகரில் காலமானார்.

          நான்காவது மகன் தேவதாஸ் காந்தி தென்னாப்பிரிக்காவில் மே22, 1900இல் பிறந்தார். விடுதலைப் போராட்டங்களிலும் காந்தியின் ஆசிரமப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராகப் பணியாற்றினார். ராஜாஜியின் மகள் லெட்சுமி மீது காதல்வயப்பட்டார். அப்போது தேவதாசுக்கு வயது 28; லெட்சுமிக்கு வயது 15. ஐந்தாண்டுகள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளக் கூடாது என்று காந்தி இவர்களுக்கு நிபந்தனை விதித்தார்.  நிபந்தனையைப் பூர்த்தி செய்த்தும் இவர்களும் 1933இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ராஜ்மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, ராமச்சந்திர காந்தி ஆகிய மூன்று மகன்களும் தாரா காந்தி என்ற மகளும் பிறந்தனர். 1918இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட தட்சணபாரத் இந்தி பிரச்சார சபாவின் (DHHPS) முதல் பிரச்சாரகர் இவரே. தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதே இதன் நோக்கமாகும். ஆகஸ்ட் 3, 1957இல் இவர் இயற்கை எய்தினார்.

        ராஜ்மோகன் காந்தி 1935 ஆகஸ்ட் 7இல் பிறந்தார்.  எழுத்தாளர், வரலாற்று அறிஞர், ஆய்வாளர், பேராசிரியர், சூழலியர், சமூக ஆர்வலர் எனப் பன்முகங்கள் கொண்டவர். தென்னாசியா மற்றும் மத்தியக் கிழக்கு படிப்பிற்கான ஆய்வுப் பேராசிரியராக இருந்தார். அமெரிக்க இலினாஸ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். உஷா காந்தியை மணந்தார். இவருக்கு சுப்ரியா, தேவதத்தா என இரு மகள்கள்.

        இந்தியாவின் நம்பிக்கைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் போன்றவை பாதுகாக்கவும் ஊழல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் மாற்றத்திற்கான சிந்தனைகளை விதைத்து வருகிறார். பஞ்ச்கனி மலை வாழிடப் பாதுகாப்பு இவரது சூழலியல் பங்களிப்பாகும். ஹிம்மத் வார இதழ் மூலம் நெருக்கடிநிலைக் கொடுமைகளுக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். 1989 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராஜூவ்காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  பின்னர் மாநிலங்களவை உறுப்பினராத்  தேர்வானார். 2014இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கிழக்குத் தில்லித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 

      ராஜாஜி (Rajaji: A Life), பட்டேல் (Patel: A Life) வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவர் எழுதிய Understanding the Muslim Mind எனும் நூல் ‘இந்திய முஸ்லீம் தலைவர்கள் – விடுதலைப் போராட்டமும் அதற்கு அப்பாலும்’ என்றத் தலைப்பில் தமிழில் வெளியாகியுள்ளது. காந்தி ஏன் இன்னும் முக்கியமானவர்? – காந்தியத்தின் இன்றைய மதிப்பீடு, மோகன்தாஸ் – ஒரு மனிதன், மக்கள், பேரரசின் உண்மைக்கதை, பழிவாங்குதலும் நல்லிணக்கமும் – தென்னாசிய வரலாற்றைப் புரிந்துகொள்ளல், நவீன தென்னிந்தியா – 17 ஆம் நூற்றாண்டு முதல் நமது காலம் வரை, பஞ்சாப் – ஔரங்கசீப் முதல் மவுண்ட்பேட்டன் வரையிலான வரலாறு, கான் அப்துல் கஃபார் கான் – பக்தூன்களின் வன்முறையற்ற பாட்ஷா, எட்டு உயிர்கள் – இந்து முஸ்லீம் மோதல் பற்றிய ஆய்வு போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பின் போது புனையப்பட்ட செங்கோல் கதையை விமர்சித்து கட்டுரை எழுதினார். காந்தியத்தின் வழியில் என்றும் உண்மையை உரக்கச் சொல்லும் வரலாற்று ஆசிரியராகத் திகழ்கிறார்.

          காந்தியின் இன்னொரு பேரனான கோபாலகிருஷ்ண காந்தி ஏப்ரல் 22, 1945இல் பிறந்தார். இந்திய ஆட்சிப்பணி அலுவலராக 1968-1985 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பணி செய்தார். அதன்பிறகு இந்தியக் குடியரசுத் துணைத்தலைவரின் செயலாளாராகவும், பின்பு இந்தியக் குடியரசுத் தலைவரின் இணைச் செயலாளராகவும் பணிபுரிந்தார். தென்னாப்பிரிக்கா, நார்வே, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதராகப் பணியாற்றினார். இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார்.

         தத்துவ அறிஞரான  ராமச்சந்திர காந்தி ஜூன் 9, 1937இல் பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பஞ்சாப், பெங்களூரு, விஸ்வபாரதி போன்ற பல்கலைக் கழகங்களில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறையை உருவாக்கினார். காந்தியையும் ரமணரையும் தத்துவ நோக்கில் அணுகும் நூலை எழுதினார். சீதாவின் சமையலறை – நம்பிக்கை மற்றும் விசாரணை எனும் நூல் குறிப்பிடத்தக்கது. மேலும் சில நூல்களை எழுதியுள்ளார். இந்துத்துவ சக்திகள் பாபர் மசூதி இடிக்க வேண்டும் என்று பரப்புரை செய்தபோது இந்து மதத் தத்துவங்கள் அடிப்படையில் மறுப்பை வெளியிட்டார். 2002இல் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையைக் கண்டித்தார். காந்தியின் வாரிசுகள் உண்மையின் பக்கம் நின்றதை இது எடுத்துக்காட்டுகிறது. இவரது மகள் லீலா காந்தி பின் காலனியக் கோட்பாட்டாளர் ஆவார்.

        ராமச்சந்திர காந்தியின் மகள் லீலா காந்தி (1966) கவிஞர், கல்வியாளர், கோட்பாட்டாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். சிகாகோ, தில்லிப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக இருந்தார். பின் காலனியம் தொடர்பான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கவர். Post-Colonial Studies என்ற ஆய்விதழின் இணையாசிரியாகவும்   Post-Colonial Text  என்ற மின்னணு இதழின் ஆசிரியராகவும் உள்ளார். Measures of  Home இவரது கவிதை நூலாகும்.

      பின் காலனிய நெறிமுறைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் – ஒரு விமர்சன அறிமுகம் என்னும் நூல், இக்கோட்பாடுகளை அறிமுகம் செய்வதோடு பின் காலனியம், பின் நவீனத்துவம், பின் அமைப்பியல், மார்க்சியம், பெண்ணியம் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் விளக்குகிறது. மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் சைவ உணவுக் கோட்பாடுகள் பிற நாடுகளில் ஏற்படுத்திய தாக்கங்களை ஆய்வு செய்துள்ளார். பின் காலனிய நாடுகளின் மொழி, பண்பாடு போன்றவற்றையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். இவரது ஆய்வுகளும் எழுத்துகளும் கல்விப்புலத்தை செழுமைப் படுத்துகின்றன.

      காந்தியின் ரத்த வாரிசுகளின் சில குறிப்பிடத்தக்க பணிகள் மட்டும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இன்றைய இந்திய அறிவுச்சூழலில் காந்தியின் கோட்பாடுகளையும் அவற்றைத் தாண்டியும் காந்தியின் வாரிசுகள் காந்தியத்தின் சாரம் மற்றும் மக்கள் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வேறு எந்த ஆளுமைக்கும் கிடைக்காத பெருமையும் சிறப்புமாகும். அந்த வகையில் காந்தி கொடுத்து வைத்தவர் என்றே சொல்லலாம்.

 (தொடரும்…)

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் மே 2024

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு

மு.சிவகுருநாதன்

தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பவளவிழா நிறைவு நிகழ்ச்சி தஞ்சை பெசண்ட் அரங்கில் சிம்ளி, முக்கூடல், சிலிக்குயில் ஆகிய அமைப்புகளும் நண்பர்களும் இணைந்த 28/04/2024 முழுநாள் நிகழ்வாக நடந்தேறியது.

பேரா. அ.மார்க்ஸ், பேரா.இரா.காமராசு, பேரா. தெ.வெற்றிச்செல்வன், பேரா. இலக்குமி குமாரன் ஞானதிரவியம், பசு.கவுதமன், கடவூர் மணிமாறன், கவிஞர் நா.விச்வநாதன், களப்பிரன் போன்றோர் காலை அமர்வில் பொதியின் பணிகளையும் அவருடனான நட்பையும் எடுத்துரைத்தனர்.

மதிய அமர்வில் ஜமாலன், கண.குறிஞ்சி, பேரா. இரா.கந்தசாமி, பேரா. ந. முருகேச பாண்டியன், பேரா. கண்ணம்மாள் மனோகரன், புலியூர் முருகேசன், இரா.விஜயன் ஆகியோர் பொதியின் நூல்கள் குறித்த ஆய்வுரையை நிகழ்த்தினர்.

தோழர் ஸ்டாலின் சரவணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொதி வழக்கம் போல பாடலுடன் சுருக்கமாக நன்றி கூறி நிறைவு செய்தார்.

நிகழ்வில் போதியின் நூல்கள் 20% கழிவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 

எழுத்தாளர் சி.எம்.முத்து, சு.அழகேஸ்வரன் , பாரதி புத்தகாலயம் சிராஜூதீன், கருப்பு பிரதிகள் நீலகண்டன், யூமா வாசுகி, கோமகன், குடந்தை ஆடலரசன், திருநல்லம் அமானுஷ்யன், செ.சண்முகசுந்தரம் , இரா.செழியன், நடராஜன் சிவகுரு, மங்கையர்க்கரசி பிரகாஷ், சௌந்தர வதனா சுகன் போன்ற பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

முதுபெரும் தோழரை வாழ்த்த விழா எடுத்ததும் அதில் பலர் திரண்டதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமைந்தது.

எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை

எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை

மு.சிவகுருநாதன்

            சமகாலத் தமிழ் அறிவுச்சூழலை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற கோட்பாடுகளுடனும் அவற்றைத் தாண்டியும் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், பொருளாதாரம், மனித உரிமை சார்ந்த படைப்புவெளியில் மட்டுமல்லாது, களப் போராளியாகவும் இயங்கிவருகிறார்.

        நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன் என்கிற வரிசையில் தமிழ் அறிவுச்சூழலுக்குப் பாரிய பங்களிப்பை நல்கியவர் எஸ்.வி.ராஜதுரை. தமிழ் அறிவுலகுக்கு மக்கள் சார்ந்த கருத்தியல், அரசியல் தெளிவை தமது எழுத்துகளில் அவர் வழங்கியுள்ளனர். மேற்கண்டவர்களது எழுத்துகள், பார்வைக் கோணங்களில் வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படைகள் ஒன்றாக அமைந்தன. இந்த அறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

        சிறுகதை எழுதும் ஆர்வத்தில் இலக்கிய உலகில் நுழைந்த அவரை அரசியல் ஆட்கொண்டது. அவர் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கத்தின் இலக்கியப் படைப்பு குறித்த மிகக் கறாரான அணுகுமுறை அவரை கட்டுரை, மொழிபெயர்ப்புகளை நோக்கித் திருப்பிவிட்டது என்கிறார். ஒருவகையில் இது தமிழ் அறிவுலகத்திற்கு கிடைத்த கொடை எனலாம். 

       அரசியல், கருத்தியல் முரண்பாடுகளையும் தாண்டி ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றோருடன் நட்பைப் பேணியவர் எஸ்.வி.ஆர். ழான் பால் சார்த்தர், புரட்சியின் இலக்கணமாகத் திகழ்ந்த அந்தோனியா கிராம்ஷி, போர்ச்சுகீசிய நாவலாசிரியர் ஹொஸே ஸரமாகோ போன்ற ஆளுமைகளைத் தமிழ்ச்சூழலில் விரிவாக அறிமுகம் செய்தவர் எஸ்.வி.ஆர்.

           மார்க்சியத் தத்துவம் சார்ந்து எழுதினாலும் அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாகவும் விரிவாகவும் உரிய சான்றாதாரங்களையும் கொண்டு எழுதும் பாணியைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

         இந்தத் துன்பகரமான காலத்தில்தான் யானிஸ் வருஃபாகிஸின் பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம், இரத்தம் கொதிக்கும் போது ஆகிய மொழியாக்கங்களும்  ஸரமாகோ – நாவல்களின் பயணம்,  ரஷியப் புரட்சி – இலக்கிய சாட்சியம் – மறுபதிப்பு      போன்றவையும்  விரைவில் வெளியாகும் உச்சிவெயில்  தொகுப்பும் உருவாகியுள்ளன. இது ஒருபுறம் மனநிறைவளித்தாலும் இதன் பின்னணியில் அவர் பட்ட துயரங்கள் அளவில்லாதவை. இடதுகண் பார்வையிழப்பு, முகநரம்பு வலியோடும் மார்க்ஸ், கிராம்ஷி, காந்தி, அம்பேத்கர், பெரியார் அனுபவிக்காத உடல் உபாதைகளையும் கொடுமைகளையுமா நான் அனுபவித்துவிட்டேன் என்ற கேள்வியுடன் புதிய உத்வேகத்திலும் கடின உழைப்பிலும் இவை பிறந்திருக்கின்றன. அவரது வாழ்வில் நெடுங்காலமாக வலிகளுக்கு மருந்தாகப் படைப்பிலக்கியம் பயன்படுவதையும் குறிப்பிடுகிறார்.

        1848இல் 23 பக்கங்களில் வெளியான மார்க்ஸ் எங்கல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்து அனைவருக்கும் புரியும் வண்ணம் அறிமுகம், விளக்கக் குறிப்புகள் என விளக்கமான நூலை எழுதினார். அந்நியமாதல், இருத்தலியமும் மார்க்ஸியமும்  என்ற இருநூல்களும்  அந்நியமாதல் குறித்து எழுதியவை. அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் – சோசலிசப் பெண்ணியலாளர் ஷீலா ரௌபாத்தம் எழுதிய கடித மொழிபெயர்ப்பு நூல்,  ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் போன்றவை வ.கீதா இணைந்து உருவாக்கியவை.    

       வ.கீதாவுடன் இணைந்து  பெரியார்: சுயமரியாதை சமதர்மம் என்ற விரிவான ஆய்வுநூல் இவரது கொடைகளுள் ஒன்று. அதன் தொடர்ச்சியாக பெரியார்: ஆகஸ்ட் 15 என்ற நூல் எஸ்.வி.ஆரால் எழுதப்பட்டு வெளிவந்தது. இவற்றின் துணைநூலாக பெரியார் மரபும் திரிபும், பெரியார், அண்ணா, கேசரி ஆகியோர் கட்டுரைகளை ‘ஆகஸ்ட் 15 துக்கநாள் – இன்பநாள்’ பதிப்பும் வெளிவந்தன. 2007-08இல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியாரியல் உயராய்வு மையத் தலைவராகப் பணியாற்றினார். உடல்நலனைப் பொருட்படுத்தாது தனது ஆய்விற்கும் எழுத்துப் பணிகளுக்கும் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்.  பெரியார், சுயமரியாதை இயக்க ஆய்வுக்கான கடின உழைப்பில் இடதுகண் பார்வையை இழந்தார்.

     ஆனந்த் டெல்தும்டேவின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், அம்பேத்கரியர்கள் – நெருக்கடியும் சவால்களும்  ஆகிய நூல்களை மொழிபெயர்த்தார். இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையின் மொழியாக்கம் குறுநூலாக வெளியானது. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தொடர்பான திரிபுகளுக்கு மறுப்பாக எழுதியவை ஆயிரம் பக்கங்களைத் தாண்டும்.    

     இந்து இந்தி இந்தியா, இந்து இந்தியா – அக்ரனியிலிருந்து அத்வானி வரை,  பதி பசு பாகிஸ்தான்  போன்ற நூல்கள் இந்திய அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகளைக் கூர்மையாக விமர்சிப்பவை; மதவாத வெறுப்பரசியலை எதிர்த்து எழுதியவை.

         சாட்சி சொல்ல ஒரு மரம், சொல்லில் நனையும் காலம், தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம், பார்வையிழத்தலும் பார்த்தலும்,  கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின…  என கவித்துவமான தலைப்புகளில் கலை, இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கவிதை, நாவல், இசை ஆகியவற்றை விரும்பி ரசிக்கிறார். அவற்றை அவரது அரசியல் வழி பிறருக்கு அறிமுகப்படுத்துகிறார். உலகக் கவிதைகளை மொழிபெயர்த்து அறிமுகப்படுத்துவதில்  தணியாத ஆர்வமும் அவற்றை தனது கட்டுரைகளில் தகுந்த இடங்களில் குறிப்பிடும் லாவகமும் அவரது எழுத்தெங்கும் நிறைந்துள்ளது. சமகால அரசியலை குறியீட்டுத் தன்மையுடன் அணுகும் ஸரமாகோவின் நாவல்கள் குறித்து ஸரமாகோ – நாவல்களின் பயணம்   நூல் விவரிக்கிறது.  

       மரணதண்டனை எதிர்ப்பு, தடா, பொடா சட்ட எதிர்ப்பு, தலித்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக களப்போராளியாக களம் கண்டார். பலரது மரண தண்டனையிலிருந்து விடுபடவும் பல்லாண்டுகளாக சிறையில் வாடியோர் விடுதலை பெறவும் காரணமாக இருந்தார்.  

       பரிமாணம், இனி ஆகிய இதழ்களின் வழி தமிழ் இதழியலுக்குப் புதிய பாதை சமைத்தார். ஷோபியன்: காஷ்மீரின் கண்ணீர்க்கதை, அயர்லாந்தின் போராட்டம்  தேசியமும் சோசலிசமும், மனிதாபிமான ஏகாதிபத்தியம் –  தேசிய விடுதலை  போன்ற நூல்கள் தேசிய இனப்பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டவை. மார்க்ஸ் 200 கட்டுரைகளைத் தொகுத்துள்ளார்.

         ஏப்ரல் 10 அன்று தனது 85வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்த எஸ்.வி.ராஜதுரை எழுத்துப் பணிகளிலிருந்து விடை பெறும் முடிவை அறிவித்துள்ளார். கடந்த நான்காண்டுகளாக முகநரம்பு வலியால் அவதியுற்று வரும் நிலையில் சில மாதங்களில் வாதை பலமடங்கு அதிகரித்துள்ளதால் எழுத்துப் பணியிலிருந்து ‘விடை பெறுதல்’ தலைப்பிலான அவரது கட்டுரை வெளியாகியுள்ளது.

         “ஒரு மனிதன் தனது தொழிற்பாட்டில் நிகழ்த்தும் கடைசிச் செயல்  (Swan song). இதனால் சமுதாயத்திற்கோ எழுத்துலகிற்கோ எந்த இழப்பும் இல்லை”, என இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்தார் எஸ்.வி.ஆர். இது அவருக்கான சுமை இறக்கமாக இருந்தாலும்  தமிழ் அறிவுலகத்திற்கும் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகவே அமையும். இனி இலக்கிய வெளியைப் பொறுத்தவரையில் வாசிப்பு மட்டுமே ஒரே உறவு, எப்போதேனும்  பிடித்த கவிதைகளை உடல்நிலை அனுமதிக்கும் அளவிற்கு மொழிபெயர்க்கலாம் என்று சொல்லியிருப்பது  சற்று ஆறுதலைத் தருகிறது.

(கட்டுரையின் முழு வடிவம்)

நன்றி: இந்து தமிழ் திசை – கருத்துப்பேழை – ஏப்ரல் 13, 2024

மணல் வீடு 50

மணல் வீடு 50

மு.சிவகுருநாதன்

           மணல் வீடு 50 வது இதழ் (ஜனவரி – மார்ச் 2024) நமது கைகளில். 160 பக்கங்களில் படைப்புகளின் பெட்டகமாக வெளிவந்துள்ளது. அட்டைகளில் Michel V. Meulenert இன் வண்ண ஓவியங்கள் அணி செய்கின்றன. இந்த இதழின் சிறப்பாக ஒன்றிரண்டை மட்டும் இங்கு எடுத்துக்காட்டலாம்.

        ‘தொ.ப.வின் பிரதியாக்கம்: ஓர் பண்பாட்டுப் பொருள்வாத அணுகுமூறை’ என்ற தோழர் ஜமாலனின் கட்டுரை ஆய்வறிஞர் தொ.பரமசிவனை திராவிடப் பண்பாட்டு ஆய்வாளர் என்ற பொதுப்புத்தி சார்ந்த பார்வையை விட்டு விலகி அவரை கோட்பாட்டுச் சட்டகத்தில் வைத்து அணுக முயற்சிக்கிறது.

      அஞ்சலி: ‘மகாத்மா ஸ்டுடியோ’ கிரஹாம்பெல் (1953-2006) என்ற எஸ்.செந்தில்குமாரின் சிறுகதை சிறப்பாக வந்துள்ளது.

       கார்லோஸ் ஃபுயண்ட்டஸின் சிறுகதை ஒன்றை (சக்-மூல்) பிரம்மராஜன் மொழிபெயர்த்துள்ளார். மேலும் பிரேசிலியக் கவிஞர் ஜோ கப்ராஜி மெலோ நெட்டோ கவிதைகள்  சிலவற்றையும் மொழிபெயர்த்து அவரைப் பற்றி அறிமுகத்தையும் தருகிறார் பிரம்மராஜன்.

      கியூப ஓவியர் மிகசெல்லின் வண்ண ஓவியங்களுடன் அவரைப் பற்றிய குறிப்பும் இடம்பெறுகிறது.

    கவிதையில் நிகழும் பாலின உருமாற்றத்தை பக்தி காலம் தொட்டு நவீன கவிதை வரை பெரு. விஷ்ணுகுமாரின் கட்டுரை ஆய்வு செய்கிறது.

     ‘அரக்கரும் குரக்கினமும்’ என்ற நாஞ்சில் நாடனின் சிறுகதை, சு.வேணுகோபாலின் ‘பனங்காய் மயிலை’ நெடுங்கதை மட்டுமின்றி  பலரது கவிதைகள் கிராம முன்னேற்றம் குறித்த பாலசுப்பிரமணியம் முத்துசாமி கட்டுரை, சா.தேவதாஸ் மொழிபெயர்ப்புகள் என இதழின் கனம் கூடியிருக்கிறது.

   சிற்றிதழ் விவரங்கள்:

மணல் வீடு இதழ் 50 (ஜனவரி – மார்ச் 2024)

பக்கங்கள்: 160   விலை: ₹ 200 

ஆண்டு சந்தா ₹ 800 

ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்

வெளியீடு:

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்,

மணல்வீடு,

ஏர்வாடி,குட்டப்பட்டி – அஞ்சல், 636453,

மேட்டூர் – வட்டம், சேலம் – மாவட்டம்.

பேசி: 9894605371

மின்னஞ்சல்: manalveedu@gmail.com

இணையம்: http://www.manalveedu.org

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்?

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்?

மு.சிவகுருநாதன்

         தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாயிற்று. ஜூன் 4இல் இந்தியாவின் எதிர்காலம் தெரிந்துவிடும். அதில்தான் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. சுதந்திர இந்தியாவுடன் உருவான பாகிஸ்தானை விட சிறந்த ஜனநாயக நாடாகத் திகழ்வதற்கு நம்முடைய அரசியல் சாசனம், ஜனநாயகத்தின் தூண்கள், மதச்சார்பின்மை கொள்கைகள், அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள், தன்னலமற்ற தலைவர்கள், மக்களின் சகிப்புத்தன்மைமிக்க வாழ்வு  போன்றவை அடித்தளமாக அமைந்தவை. அவற்றில் சிற்சில குறைபாடுகள் இருக்கலாம். எனினும் தகர்த்தெறிய வேண்டிய அளவிற்கானவை அல்ல. 

         1976 இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போது இந்திய ஜனநாயகம் கேள்விக்குள்ளானது. அதற்கான விலையை காங்கிரஸ் கொடுத்தது; மக்கள் தேர்தலில் உரிய பாடம் புகட்டினர். அதன் பின்னர் அமைந்த காங்கிரசுக்கு மாற்றான அரசுகள் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்ய இயலவில்லை. தேசியக் கட்சிகள் பலமிழந்த நிலையில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்தது. அப்போது நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இந்துத்துவக் கொள்கைகளை கல்வி, வெளியுறவு போன்ற துறைகளிலும் அரசு நிர்வாக எந்திரத்திலும் நுழைக்கத் தொடங்கினர். இருப்பினும் அவை குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தினடிப்படையில் இயங்கின.

      2004இல் “இந்தியா ஒளிர்கிறது” என்ற போலியான முழக்கத்தை வைத்துத் தேர்தலை சந்தித்தனர். தேர்தல் வலதுசாரி பா.ஜ.க. கூட்டணிக்குச் சாதகமாக அமையவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004 மற்றும் 2009இலும் வெற்றிபெற்று டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் கூட்டணி அரசை திறமையாக வழிநடத்தியது. ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் ஊடுருவிய இந்துத்துவ ஆட்கள் மூலம் காங்கிரஸ் கூட்டணி அரசை வீழ்த்த செயல்திட்டம் வகுக்கப்பட்டது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தணிக்கை அறிக்கையில் கூறியதையெடுத்து 2ஜி ஊழல் குறித்த பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. அனைத்து ஊடகங்கள், அன்னா ஹசாரே போன்று திட்டமிட்டுக் களமிறக்கப்பட்ட முகவர்கள் எனப் பெரும்படையணியே காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான பெரும் பரப்புரையில் ஈடுபட்டது. இதற்குப் பலனாக பல பதவிகளும் பொறுப்புகளும் பத்மபூஷன் விருதும் வினோத் ராயைத் தேடி வந்தது.

       ராஜூவ்காந்தி ஆட்சியை வீழ்த்த போஃபர்ஸ் ஊழல் முக்கிய அம்சமாக இருந்த வரலாற்றை ஒட்டி இந்த ஊழல் பிரச்சினையைத் திட்டமிட்டுக் கையிலெடுத்து பா.ஜ.க. கூட்டணி 2014இல் வெற்றி கண்டது. அப்போதும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனினும் 2019இல் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்றது. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பது அவர்களால் தாங்கமுடியாத உண்மையாக இருந்தது. பல்வேறு மாநில அரசுகளை தகர்த்தும் குதிரைபேரம் நடத்தியும் தங்களது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். இதற்கு புலனாய்வு அமைப்புகள் சட்டவிரோதமாக ஒன்றிய அரசுக்கு உதவுகின்றன.

       ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் சமத்துவத்திற்கும் முதன்மையளிக்காத ஒருகட்சி எப்படி மக்களைப் பற்றிக் கவலைப்படும்? கொரானா காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் சோகங்களும் எழுத்தில் வடிக்க முடியாதவை. பணமதிப்பிழப்பு சாமான்ய பொதுமக்களை நடுத்தெருவில் நிற்கவைத்து நூற்றுக்காணக்கான உயிர்களைப் பறித்தது. கடந்த பத்தாண்டுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு, அதிகமான சரக்கு மற்றும் சேவைவரி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மக்களை  அல்லாட வைத்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு பாமர, நடுத்தட்டு மக்களின் பெரும்சுமையான மாறியுள்ளது. தேர்தலுக்காக சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைச் சற்றுக் குறைத்து தங்களது பாசிசக் கருத்துக்கு வலுவூட்டுகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை செவிமெடுக்க இந்த அரசு விரும்பவில்லை. சிறு, குறு தொழில்களை முற்றாக முடக்கி கார்ப்பரேட்களை வளர்க்கிறது.

           மோடி அரசு ராமர் கோயிலை  பணிமுடியும் முன்பே அவரமாகத் திறந்து மத உணர்வுகளை வாக்குகளாக மாற்றத் திட்டமிட்டுச் செயலாற்றியது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வெற்றி கிடைக்கவில்லை. வெறுப்பரசியலின் வெவ்வேறு வடிவங்களைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். 400 தொகுதிகள் இன்று பெருமை பேசியவர்கள் 370 தொகுதிகள் என்று மாற்றிப் பேசத் தொடங்கினர். 370வது பிரிவு நீக்கத்தையும் இதனுடன் இணைத்தனர். ராமர் கோயில் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே தாக்கம் செலுத்தும் என்பதால் வேறு உத்திகளைப் பின்பற்ற முனைகின்றனர். 

        ஜார்க்கண்ட மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி அளித்து பதவி விலகச் செய்தனர். தில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த மதுபான முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  மறுபுறம்  பல ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் இணைந்தவுடன் பரிசுத்தர்களாக மாறிவிடும் மாயாஜாலம் நடக்கிறது. ஊழலை, கருப்புப் பணத்தை வெளுக்கும் கருவியாக பா.ஜ.க. மாறிவிட்டது. தேர்தலுக்காகவே இத்தகைய கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்னதான் 400 சீட் என்று பேசினாலும் தோல்விபயம் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

         370வது பிரிவு நீக்கபட்டது மட்டுமின்றி காஷ்மீர் மாநிலமே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரையும் தமிழர்களையும் எப்போதும் கொதிநிலையில் வைத்திருக்க இந்த வலதுசாரி அரசு விரும்புகிறது. தேர்தல் அறிவிப்புக்கு சில நாள்களுக்கு முன்னதாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை  அமலாக்கியுள்ளது. இதன்மூலம் தங்களுக்கு தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது.

         தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி பெற்ற ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளில் அரசின் தலையீடு அவற்றையும் ஜனநாயகத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிச் சட்டத்திருத்தம்  கொண்டுவந்து தேர்தல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளனர். விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் என்பவரை தேர்தல் ஆணையராக நியமித்தது. மூன்றாவது ஆணையர் நியமிக்கப்படாத நிலையில்  அருண் கோயல் திடீரென்று பதவி விலகினார். மீண்டும் ஒருநபர் ஆணையமாக மாற்றும் சர்வாதிகார முயற்சியாகப் பார்க்கப்பட்டது. வேறு வழியின்றி எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்பையும் மீறி இரு ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். இத்தகைய போக்கு இந்தியாவின் சுதந்திரமான தேர்தல் குறித்த அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

       “ஒரே நாடு” என்கிற இவர்களது பாரிசக் கொள்கைகளை கடந்த பத்தாண்டுகளில் அனைத்து களங்களிலும் திணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நமது ஒற்றுமை, இறையாண்மை, பன்முகத்தன்மை, கலாச்சாரங்கள் அனைத்தும் சிதைக்கப்படுகிறது. நாடு பெரும் பேரழிவை எதிர்கொண்டு வருகிறது. இவர்கள் வளர்க்கும் வெறுப்பரசியல் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு வழிவகுக்கும்ளொரு மாநிலத்திற்கே 7 கட்டங்களில் பொதுத்தேர்தல் நடத்தும் நிலையில் “ஓரே நாடு; ஒரே தேர்தல்” என்று பெயருக்கு ஒரு குழு அமைத்து சாதகமானப் பரிந்துரையைப் பெற்றுள்ளனர்.

        எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைக் குறிவைத்து ஜனநாயக விரோதச் சட்டத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். பஞ்சாப், கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநில ஆளுநர்களையும் தில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களையும் கொண்டு மக்களாட்சிக்கு எதிராக அரசியல் சட்ட மீறல்களில் ஈடுபடுகின்றன. இவர்கள் ஒவ்வொருவராக உச்சநீதிமன்ற கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் இன்னும் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்தை உருக்குலைக்கும் செயலாகும்.   

       பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆளுநர் இருப்பதே செய்திகளில்கூட தெரிவதில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் அவர்களது அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதற்கு மிகச்சரியான பதிலடி ஆளுநர் தமிழிசைக்கு தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவிடம் கிடைத்தது. தற்போது அங்கு காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. எப்போதோ பதவி விலகியிருக்க வேண்டியவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் பதவி விலகியுள்ளார். தமிழ்நாட்டு ஆளுநர் ரவி இன்னும் பதவி விலக மறுத்து அரசியலமைப்பிற்கு தொடர்ந்து அவமதிக்கிறார்.

       மாநில கட்சிகளை முடிந்தால் கூட்டணி சேர்ந்து குழிபறிப்பது, கட்சிகளில் பிளவை ஏற்படுத்துதல், கட்சி மாற குதிரைபேரம் நடத்துதல், அரசதிகார அமைப்புகளைக் கொண்டு மிரட்டி வழிக்குக் கொண்டு வருதல், பணம் பறித்தல் என்கிற உத்திகளை “மோடி சர்க்கார்”
 பயன்படுத்தி வருகிறது.  உத்தவ் தாக்கரே, சந்திரசேகர ராவ் என பா.ஜ.க.வின் அரசியல் மோசடிகள் தொடர்கின்றன. இன்னும் எஞ்சியிருப்பது ஒடிசாவின் நவீன் பட்நாயக் மட்டுமே.  

        அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி பெருமளவிலான அதிகார மீறல்கள் செய்வது தொடர்ந்து அமபலமாகி வருகிறது. ரெய்டு நடத்தி ஆளும்கட்சிக்கு ஆட்கள் பிடிப்பதும் அவர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக நன்கொடைகள் திரட்டுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே திரட்டப்பட்ட சட்டவிரோத ஊழல் பணத்தையும் உச்சநீதிமன்றம் முடக்கி அரசுக்கணக்கில் சேர்த்திருக்க வேண்டும். அவற்றை வெளியிடுமாறு கேட்ட உச்சநீதிமன்றத்தை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்ட இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இன்று மதிப்பிழந்து நிற்கிறது. இதைப்போலவே பா.ஜ.க.வின் ஊதுகுழலாகச் செயல்படும் அனைத்து அமைப்புகளும் இயங்குகின்றன. அரசமைப்பு நிறுவனங்களைச் உருக்குலைக்கும் “புல்டோசர் அரசாக” மோடி அரசு செயல்படுகிறது. இந்த கொள்ளைப் பணத்தை முடக்குவதற்குப் பதிலாக அற்பக் காரணங்களுக்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

            முந்தைய அரசுகளைவிட பலமடங்கு அதிகமான ஊழல்கள் மற்றும் அதிகார முறைகேடுகளில் சிக்கியுள்ள பா.ஜ.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து ஊடகங்கள் உள்ளிட்ட எவரும் வாய்திறக்க மறுக்கின்றனர். தேர்தல் பத்திரங்கள், பி.எம். கேர் பண்ட், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டிய ரூ.7.5 லட்சம் கோடியிலான பல்வேறு முறைகேடுகள் இவர்களது ஆட்சியின் தரத்தையும் ஊழலையும் வெளிப்படுத்துபவை. இவை பெரிய ஊழலில் அதிநவீன வடிவமாகவும் திட்டமிடப்பட்டவை ஆகும். மேலும் இவற்றை சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழல் எனலாம். ஊடகங்கள், கார்ப்பரேட், வலதுசாரி அரசு ஆகியன ஒருங்கிணைந்தும் அறமற்ற வகையில்  கூட்டணியாகச் செயலாற்றுகின்றன.

         ரஃபேல் ஊழல் பெரிதாக கவனிக்கப்படாமல் போயிருக்கிறது. இதில் ஊடகங்களின் பங்கு மிக அதிகம். காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை ஊடகங்கள் தடுத்து, மடைமாற்றம் செய்கின்றன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்பட்ட ஊடகங்களும்  கார்ப்பரேட்கள் வசமாகிப் போனதால் ஜனநாயகம் வலுவிழந்து வருகிறது. மக்களின் வரிப்பணம் கார்ப்பரேட்களுக்கு வாராக்கடன் தள்ளுபடியாக வாரி இறைக்கப்படுகிறது. ஏழைகளின் வயிற்றடித்து சில நூறு பணக்காரர்களின் செல்வம் மேலும் பெருக வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழைகள், நடுத்தர மக்கள், சிறுபான்மையினர், தலித்கள், பழங்குடியினர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பாசிசக் கருத்தியல் பெண்களைப் பற்றிய நோய்மையான எண்ணங்களைக் கொண்டது. எனவே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளன.

             நவதாராளவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் போன்றவர்களால் கூட இவர்களுடன் இணைந்துப் பணியாற்ற இயலவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பைக் காலிசெய்ய சக்தி காந்த தாஸ் ஆளுநராக்கப்பட்டார். நரேந்திர மோடி, நிர்மலா சீத்தாராமன்,  சக்தி காந்த தாஸ் அடங்கிய கூட்டணி இந்தியப் பொருளாதாரச் சீரழிவைத் துரிதப்படுத்தியுள்ளது. வரிச்சுமையைக் கூட்டிச் சேர்க்கப்பட்ட நாட்டின் செல்வம்  கார்ப்பரேட்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை  உயர்த்தியதால் வீட்டுக்கடன் வட்டி பெருமளவு உயர்வதால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். 

        வட இந்திய மக்களை முன்னேற்றவிடாமல் தடுத்தது மட்டுமின்றி  தமிழக வரிப்பணத்தைத் திருப்பிவிடும் ஒன்றிய அரசின் வரிப்பகிர்வுக் கொள்கைகள் தமிழ்நாட்டுக்கு எதிராக உள்ளது. தேசியக் கல்விக் கொள்கை நவீன குருகுலக்கொள்கையாகவும் இந்தித் திணித்து நமது பன்முகத்தன்மையை சிதைப்பதாகவும் உள்ளது. இந்திய ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் காவிகளால் குலைந்துள்ளது. ‘அக்னிபாத்’ போன்ற திட்டங்கள் குடிமக்களை ராணுவமயமாக்கும் பாசிச உள்நோக்கம் கொண்டவை. இதன் மூலம் நாட்டின் அமைதியும் சமாதானச் சகவாழ்வும் கானல் நீராகும்.

       மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகள், தலித்கள், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நாடெங்கும் அதிகரித்துள்ளன. அறிஞர்கள் டாக்டர் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, பத்தரிக்கையாளர் கௌரி லங்கேஷ் போன்றோர் காவித் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகளுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. பழங்குடியினருக்காக குரல் கொடுத்த ஸ்டேன்சாமி சிறையிலேயே மரணமடைந்தார். கருத்துரிமை பறிக்கப்பட்டு கவிஞர் வரவரராவ், அறிஞர் ஆனந்த் தெல்தும்டே, பேரா.சாய்ராம் போன்றோர் ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தியது. 

          காங்கிரசின் ஆதரவுத் தளம்  சில மாநிலங்களில் மட்டும் சுருங்கியுள்ள நிலையில் மாநிலக் கட்சிகளை நம்பியே செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புடன் உருவான இந்தியா கூட்டணி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது போன்ற வலுவான கூட்டணியை பல மாநிலங்களில் அமைக்க முடியவில்லை. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் காங்கிரசும் விட்டுக் கொடுத்து தொகுதிப் பங்கீட்டை செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டைப் போல அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குள்ள கட்சிகள் தலைமையில் வலுவானக் கூட்டணியும் பங்கீடும் இல்லாமற்போய்விட்டது.

          கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இன்றுள்ள அரசியல் சூழலில் அதையும் தாண்டி கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைவு அவசியமாக உள்ளது. தேசிய அளவில் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம், ஒருங்கிணைந்த தேர்தல் அறிக்கை போன்றவை முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். வட்டார மற்றும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த பரப்புரை உத்திகளும் சில இடங்களில் பொது வேட்பாளர்களும் இருப்பது நல்லது. கேரளம் போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவையில்  கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலுவான நிலையிலிருக்கும் நிலையில் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் மட்டும் உடன்பாடு காணப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் நேரடி மோதலில் ஈடுபடும் சூழல் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

      2002 குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான கலவரம் பற்றிக் கேட்டபோது, காரில் செல்கையில் நாய் அடிபட்டால் வருத்தம் ஏற்படாமல் இருக்குமா? என்று இளக்காரமாகப் பதிலளித்த மோடி தேர்தலுக்காக கோயம்புத்தூர் குண்டுவெடிப்புத் தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார். குஜராத், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஒடிசா போன்ற பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்களில் பலியான சிறுபன்மையினருக்கு அஞ்சலி செல்லுத்துவாரா? நாடாளுமன்றமே முடங்கியபோதும் மோடி மணிப்பூர் செல்லவில்லை; அது குறித்துப் பேசவும் விரும்பவில்லை.

      ஆடிட்டர் ரமேஷூக்காக கண்ணீர் வடிக்கும் மோடி ஜம்மு காஷ்மீரில் கோயிலில் சிதைத்துக் கொல்லப்பட்ட சிறுமி ஆஷிபா, உன்னாவில் பாலியல் வன்கொடுமை  செய்து கொலையுண்ட தலித் பெண், மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான எண்ணற்ற இந்தியப் பெண்களுக்காகவும் கண்ணீர் சிந்தியது உண்டா? குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து கொண்டாடியது யாரென்பதை நாடறியும். மோடியின் இந்தியக் குடும்பத்தில் யாரெல்லாம் உறுப்பினர்கள் என்பது அவரது செயல்களின் வழி தெரியவருகிறது. இவைகளிலிருந்து மோடி யாருக்கான பிரதமர், மோடி மீண்டும் யாருக்கு வேண்டும் என்பதும் விளங்கும்.  இந்தியாவை மட்டுமல்ல ஜனநாயகத்தையும் ஒருசேரப் பாதுகாக்க வேண்டிய நேரமிது. எனவே மோசியின் பாசிச அரசு வீழ்த்தப்பட்டு காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணி அரசு அமைய வேண்டும். தென்னிந்தியாவைப் போன்று வட இந்தியாவும் விழித்துக் கொண்டால் இந்திய ஜனநாயகம் நூற்றாண்டைக் கடந்து சாதனை புரியும். இல்லாவிட்டால் இந்தியாவும் ஜனநாயகமும் ஒருசேர வீழும் அபாயம் உண்டாகும்.

நன்றி: பேசும் புதியசக்தி – ஏப்ரல் 2024

கொலைச் சதியின் பாதை

கொலைச் சதியின் பாதை

 (மகாத்மாவின் கதை தொடரின் பதினாறாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்

           காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியை அகில இந்திய வானொலி அறிவித்தது. இதன் பொருட்டு மதக்கலவரங்கள் தொடங்கி விடும் என்கிற அச்சம் உண்டானது. மக்களை அமைதிப்படுத்தும் பணியில் தலைவர்கள் இறங்கினர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே தான் கொலைகாரன் என பிரிட்டிஷ் வானொலி முதலில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியும் இச்செய்தியை ஒலிபரப்பி மதமோதல்கள் நடக்காமல் தடுத்தன. இந்தியர்களின் வாழ்வின் ஒளி போய்விட்டது. எங்கு பார்த்தாலும் இருள்தான். நம் அன்புக்குரிய தலைவர், பாபு என்று நாம் நேசத்துடன் அழைத்து வந்த தேசத்தந்தை மறைந்துவிட்டார், என்று வானொலியில் பிரதமர் நேரு அஞ்சலி உரையாற்றினார்.

        நாடே துக்கத்தில் மூழ்கியது. மகாத்மாவைக் காண மக்கள் பிர்லா மாளிகையில் குவிந்தனர். காந்தி சுடப்பட்டு வீழ்ந்த இடத்தின் மண்ணை அள்ளிச் சென்றனர். மறுநாள் 1948 ஜனவரி 31 அவரது இறுதிப் பயணத்தில் பத்து லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மகாத்மாவில் சாம்பல் அவரது விருப்பப்படி இந்திய நதிகளில் கரைப்பதற்காக இருபது கலன்களில் சேகரிக்கப்பட்டு இந்தியாவெங்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு யுகத்தின் முடிவு வரலாற்றில் பதிவாகியது.

          பம்பாய் புலனாய்வுக் கிளையின் பொறுப்பாளராக இருந்த துணை ஆணையர் ஜாம்ஷெட் தோரவ் நகர்வாலா  என்பவர் புலன் விசாரணை அதிகாரியாக இருந்தனர். காந்தியைக் கொலை செய்யும் சதி ஏதும் இல்லை என்ற கோணத்திலேயே தொடக்கத்தில் தவறான பாதையில் விசாரணை மேற்கொண்டவர். ஜனவரி 20இல் நடந்த தோல்வியுற்ற கொலைமுயற்சியை காந்தியை கடத்தும் முயற்சி என்றும் தவறாக முடிவு செய்தார். இருப்பினும் காந்தியின் கொலைக்குப் பிறகு விசாரணைகள் தீவிரமடைந்து சதிவலைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன.

           காந்தியைக் கொலை செய்த நாதுராம் விநாயக் கோட்சே கைது செய்யப்பட்டு துக்ளக் ரோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அடுத்து கைதான திகம்பர் பாட்கே அரசுத் தரப்புச் சாட்சியாக மாறுகிறான்.  தொடர் விசாரணையில் பூனாவில் கோபால் கோட்சே, பம்பாயில் நாராயண தத்தாத்ரேய ஆப்தே, விஷ்ணு கர்க்கடே, தத்தரய்யா பார்ச்சூர், சங்கர் கிஷ்டய்யா ஆகியோர் கைதாயினர்.

       மதன்லால் பெஹ்வா ஜனவரி 20இல் வெடிகுண்டு வீசிக் கைதாகியிருந்தான். அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று போலீசிடம் சொல்லியிருந்தான். சங்கர் கிஷ்டய்யா திகம்பர் பாட்கேயின் பணியாள். இன்னும் சொல்லப்போனால் கொத்தடிமைபோல் நடத்தப்பட்டவன். காந்தி யாரென்றே தெரியாது கொலைச் சதியில் ஈடுபட்ட ஒருவன். பாட்கே அப்ரூவராக மாறியதால் கிடைத்த சலுகை சங்கருக்குக் கிடைக்கவில்லை. ஜனவரி 20 கொலை முயற்சி தோல்வியில் முடிவடைந்ததும் மதன்லால் பிடிபட்டான். சதிக்கும்பல் சப்தமின்றி அங்கிருந்து வெளியேறியது. ஆனால் காந்தி பிப்ரவரி 2 அன்று தில்லியைவிட்டு கிளம்பும் முன்பு காரியத்தை முடிக்க விரைவாகச் செயல்பட்டனர்.

        கோட்சேவும் ஆப்தேவும் ஜனவரி 27 குவாலியர் தத்தரய்யா பார்ச்சூரே வீட்டிற்குச் சென்றனர். கோட்சேவும் அவரும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள். காந்தியைக் கொல்ல ஒரு நல்ல கைத்துப்பாக்கியை வாங்கவே அவர்கள் வந்திருந்தனர். அதற்கு உறுதியளித்து அவர்களை வீட்டில் தங்கவைத்தார். மறுநாள் தன் மகன் நீல்கண்ட், பணியாளர் ரூபா மெஹ்ரம் ஆகியோரை அனுப்பி நெருக்கமான, நம்பிக்கைக்குரிய ஆயுத வியாபாரி காங்காதர் தண்டவதே என்பவரை வரவழைத்தார். அவன் கொண்டுவந்த கைத்துப்பாக்கியும் சோதனையில் தகுதி பெறவில்லை. அன்று மாலைக்கு வேறு நல்ல துப்பாக்கி ஏற்பாடு செய்வதாக தண்டவதே கூறினான். பல்வேறு துப்பாக்கிகளைச் சோதித்தபிறகு இறுதியாக ஜகதீஷ் பிரசாத் கோயல் என்ற இந்து ராஷ்டிர சேனைப் பொறுப்பாளரிடமிருந்து தண்டவதே கொண்டுவந்த 1934 இத்தாலித் தயாரிப்பான பெரெட்டா CAL 99 எண்: 719791 ஐ  கோட்சேவும் ஆப்தேயும் சரிபார்த்துப் பெற்றுக் கொண்டு ரூ. 300 அளித்து மீதிப்பணத்தை அனுப்பி வைப்பதாகக் கூறினர். 

      மருத்துவரான பார்ச்சூரே வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை குவாலியரின் கல்வி அமைச்சராக இருந்தவர். போலி மருத்துவச் சான்றிதழ் தயாரித்த குற்றத்திற்காக பணிநீக்கத்திற்கு ஆளானவர். வி.டி. சாவர்க்கர் இந்து மகா சபையில் தலைவராகப் பதவியேற்றபிறகு குவாலியரில் அதன் கிளையைத் தொடங்கினார். 1940இல் இந்து ராஷ்டிர சேனை என்கிற அமைப்பை நிறுவினார்.  சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் இளைஞர்களைத் திரட்டினார். கோட்சேவை சந்தித்து அவர்களது அமைப்புகளை இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  ஒரு கட்டத்தில் இந்து மகா சபையின் குவாலியர் தலைவரானார். 1947 ஆகஸ்ட் 8இல் தில்லியில் நடந்த இந்து மகா சபை செயற்குழுக் கூட்டத்தில் வி.டி.சவார்க்கர், கோட்சே, ஆப்தே, பார்ச்சூரே ஆகியோர் சந்தித்தனர். அமையப்போகும் குவாலியர் அரசில் உயர்பதவிக்காகக் காத்திருந்தார். ஆனால் அங்கும் காங்கிரஸ் அரசு அமைத்ததால் வெகுண்டு கடுஞ்சினத்தில் இருந்தார்.

       ஆப்தே தனது காதலி மனோரமா மூலம் பரபரப்பான செய்தி வெளியானவுடன் இந்து மகாசபைக்கு பொய்த்தந்தி அளிக்கச் சொல்கிறான். நாதுராம் கோட்சே ஆப்தே பூனா வீடு, பூனா அலுவலகம், கர்க்கரே அகமதுநகர் வீட்டு முகவரிகளுக்கு மூன்று கடிதங்கள் எழுதினான். அவற்றில் தனது புகைப்படத்தையும் இணைத்திருந்தான். காந்தி கொலையில் தான் மட்டுமே ஈடுபட்டதாகவும் ஆப்தே, கர்க்கரே போன்றோருக்கு தொடர்பில்லை என்ற போலியான தடயங்களை உருவாக்க நினைத்து இவ்வாறு செய்கிறான். நீதிமன்ற வாக்குமூலங்களிலும் சாவர்க்கரின் பங்கை மறுத்து தான் மட்டுமே இந்த கொலைச்சதியில் ஈடுபட்டதாக சாதித்தான்.

         ஆப்தே, கர்க்கரே இருவரும் தப்பியோடினர். ஆப்தேவின் காதலி மனோரமா மூலம் அவர்களை காவல்துறை சுற்றிவளைத்தது. பம்பாய், பூனா, தானே என்று அலைந்துகொண்டிருந்தவர்களை மனோரமாவுக்கு ஆப்தே பேசிய தகவலைக் கொண்டு தங்குமிடத்தை அறிந்து இருவரையும் கைது செய்தது. 15 நாட்களுக்குள் கொலைச்சதியில் ஈடுபட்டோர் காவல் வளையத்திற்குள் வந்துவிட்டனர். இறுதியாக கைது செய்யப்பட்ட ஒருவர் பலரால் திட்டமிட்டுத் தப்பிக்க வைக்கப்பட்டார்; அவர்தான் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.

         சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த நாதுராம் கோட்சே சாவர்க்கரை குருவாக ஏற்றுக் கொண்டவன். அவரது நெருங்கிய சகாவாகவும் உதவியாளராகவும் இருந்தான். குருவின் கரிசனத்தால் இந்து மகா சபையின் உறுப்பினனாகி விரைவாக உயர் பொறுப்புகளைப் பெற்றான். ‘டைனிக் அக்ரானி’ (1944) என்னும் இதழை ஆசிரியராக இருந்து நடத்தினான். இதற்கு சாவர்க்கர் பெருமளவில் நிதிஉதவிகள் ஏற்பாடு செய்தார். இதன் பெயர் இந்து ராஷ்டிரா’ எனப் பெயர் மாற்றம் பெற்றது.  ஆப்தே இதன் மேலாளராக இருந்தான். வன்முறையையும் வெறுப்பைத் தூண்டும் வகையில் இதன் கட்டுரைகள் இருந்ததால் அரசின் தண்டனைக்குள்ளான இதழாகும்.

       சாவர்க்கர், கோட்சே, ஆப்தே மூவரும் 1947 ஆகஸ்ட் 8இல் பம்பாயிலிருந்து தில்லி பயணித்தனர். இந்து மகா சபை செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தப் பயணம். இந்து மகா சபை நிறுவனரான சாவர்க்கர் அவரது இரு நம்பிக்கைக்குரிய தளபதிகளான கோட்சே, ஆப்தே ஆகிய இருவருக்கும் உள்ள நெருக்கத்தை இது எடுத்துக் காட்டும். அடுத்த சில மாதங்களில் நடந்த காந்தியின் படுகொலையில் தொடர்பில்லை என்றால் யார் நம்புவது? இவர்களுடைய கொள்கை, அரசியல், கருத்தியல், செயல்பாடுகள் அனைத்தும் பொய்மையால் கட்டப்பட்டவை. காந்தியின் வாய்மை இந்தப் பொய்மைகளுக்கு எதிரியாக அமைந்ததில் வியப்பில்லை. எனவே தேசத்தந்தை மகாத்மா கொலையுண்டார்.

          நாதுராம் விநாயக் கோட்சே, நாராயண தத்தாத்ரேய ஆப்தே, விஷ்ணு கர்க்கடே, மதன்லால் பஹ்வா, கோபால் கோட்சே, திகம்பர் பாட்கே, சங்கர் கிஷ்டய்யா, விநாயக் தாமோதர் சவார்க்கர், தத்தரய்யா பார்ச்சூர், சவார்க்கர், கங்காதர் தந்தவதே, கங்காதர் யாதவ், சூரியதேவ் சர்மா ஆகியோர் குற்றப்பத்தரிக்கையில் இடம்பெற்றனர்.

          இன்றுள்ள நவீன வசதிகள் ஏதுமற்ற நிலையில் ஒப்பீட்டளவில் காவல்துறை சிறப்பாகவே புலனாய்வை மேற்கொண்டது. திகம்பர் பாட்கே அரசுத் தரப்புச் சாட்சியாக மாறினான். நாதுராம் கோட்சே இந்த கொலைச்சதியில் யாருக்கும் பங்கில்லை; நான் மட்டுமே இதில் ஈடுபட்டேன் என்று ஒரே கதையை கீறல் விழுந்த ரெக்கார்டு போல் ஒப்பித்தான். அவனால் போலியாக ஏமாற்றுவதற்காக எழுதப்பட்ட மடல்களையும் தந்திகளையும் புலனாய்வுக் குழுவினரும் நீதிமன்றமும்  நம்பத் தயாராக இல்லை. 

       தில்லி மகாசபை பவனில் சங்கர் கிஷ்டய்யா பயன்படுத்தாத குண்டுகளையும் வெடிப்பொருள்களையும் புதைத்த இடம் அடையாளம் காணப்பட்டது. கோட்சே துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்த மரம், பெரெட்டா துப்பாக்கியைச் சுட்டுப் பார்த்த கதவு எல்லாம் நீதிமன்றத்தின் காட்சிப்பொருளாயின. புலன் விசாரணை அதிகாரி நகர்வாலாவுக்கு கொலைச்சதியின் மூளை வி.டி.சவார்க்கார் தான் என்பதை உறுதியாக நம்பினார். அதை நிருபிக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டார். அன்றிருந்த அரசியல் சூழல் அவை தோல்வியில் முடிய காரணமாயிற்று.  

        சிறப்பு நீதிமன்றம் தில்லி செங்கோட்டையில் இயங்கியது. அங்கு படைவீரர்கள் தங்குமிடத்தில் குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டனர். கொலை, சதி செய்தல், வெடிபொருள் சட்டங்களை மீறுதல் போன்ற குற்றங்களுக்காக எட்டு பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கர்க்கடே, மதன்லால் பஹ்வா, கோபால் கோட்சே, திகம்பர் பாட்கே, தத்தரய்யா பார்ச்சூர், சங்கர் கிஷ்டய்யா, விநாயக் தாமோதர் சவார்க்கர் ஆகியோர்.    நீதிபதி ஆத்ம சரண் முன்னிலையில் 1948 ஜூன் 22இல் விசாரணை தொடங்கியது. விசாரணைகள் பத்தரிக்கையாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. நாதுராம் கோட்சே நாடக பாணியில் இந்து தர்மம், பகவத்கீதை, தேசபக்தி என்று அனைவரின் காதிலும் பூசுற்றி காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தினான். கூடவே வி.டி.சவார்க்கர் உள்ளிட்ட தனது நண்பர்கள் குழாமை பாதுகாக்கவும் விடுதலையடையவும் பெருமுயற்சி செய்தான். அதில் அவனுக்கு சிறிய அளவிலான வெற்றியே கிடைத்தது.

      1949 பிப்ரவரி 10 அன்று நீதிபதி ஆத்ம சரண் தீர்ப்பளித்தார்.   நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவார்க்கர் மட்டும் விடுவிக்கப்பட்டார். பிறருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக் கைதிகள் அம்பாலா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் சார்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிறர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நாதுராம் கோட்சே தன்னோடு பிறரை கொலைச்சதியில் சேர்த்ததற்கு எதிராக தனது முறையீட்டைச் செய்தான்.

       மேல்முறையீட்டை பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.டி.கோஸ்லா, ஏ.என்.பண்டாரி,  விசாரித்தார். தான் ஏழையென்பதால் தனக்கு வழக்கறிஞர் வேண்டாம் என்று மறுத்த நாதுராம் கோட்சே தானே வாதாட அனுமதிக்க வேண்டினான். அவனது மனு ஏற்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. வாதிடல் என்ற போர்வையில் கோட்சே ஒரு நீண்ட சொற்பொழிவாற்றினான்.  பகவத் கீதை, இந்து தர்மங்கள், வேதங்கள், தாய்நாட்டிற்காக உயிர்நீத்தல் என்று உணர்வுகளைத் தூண்டியும் மதவெறியூட்டுவதாகவும் அவனது உரை அமைந்தது. மேல்முறையீட்டு வழக்கில் இத்தகைய வாதங்கள் பொருத்தமற்றவை என்று நீதிபதி கண்டித்தார். எனினும் பார்வையாளர்கள் இந்த மிகையுணர்ச்சி கொண்ட நாடகத்தை நெகிழ்ந்தும் கண்ணீர் விட்டும் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வசியம் செய்யப்பட்டதுபோல் கோட்சேவின் பேச்சால் கட்டுண்டுருந்தனர். அவர்களை நடுவர்களாக நியமித்து மேல்முறையீட்டைத் தீர்மானிக்கச் சொன்னால் அவனைக் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்திருப்பார்கள் என்று நீதிபதி கோஸ்லா தனது நூலில் குறிப்பிடுகிறார். கோட்சே தானே தயாரித்ததாக சொல்லப்பட்ட இந்த நீண்ட உரைகள் வேறு ஒருவர் தயாரித்து அளித்திருக்கக்கூடிய  வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.

       பார்வையாளர்கள் போல் சட்டமும் நீதிபதியும் நெகிழ்ந்து போகவில்லை. பார்ச்சூர், சங்கர் கிஷ்டய்யா ஆகிய இருவருக்கும் சந்தேகத்தின் பலன் அளிக்கப்பட்டு விடுதலையாயினர். பிறரது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. 1948 நவம்பர் 15 தூக்கிற்கு நாள் குறிக்கப்பட்டது. கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. தண்டனைக்கு முதல்நாள் நெருங்கிய உறவினர்கள் அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மறுநாள் அவர்கள் இருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. காந்தி கொலைச் சதிவழக்கு இவ்வாறாக முடிவுக்கு வந்தது.

          ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 14 ஆண்டுகள் கழித்து 1964 அக்டோபர் 12இல் விடுதலை அடைந்தனர். நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே, விஷ்ணு கர்க்கரே விடுதலைக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட ஜி.வி.கேட்கர் கொலைச் சதித் திட்டம் பலவாரங்களுக்கு முன்பே தனக்குத் தெரியும் என்று பேசி மீண்டும் தீயைப் பற்றவைத்தார். 1964 நவம்பர் 14 இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்காணலிலும் இச்செய்தி வெளியானது. ‘சதி’ என்பதை அவர்களது ‘நோக்கம்’ என்று பிறகு மாற்றிக் கொண்டார். இவ்வாறு மாற்றிமாற்றிப் பேசுவதே இவர்களின் வேலையாக உள்ளது. ஜி.வி.கேட்கர் வேறு யாருமல்ல; காங்கிரஸ் தலைவர் பாலகங்காதர திலகரின் பேரன். இவர் கேசரியின் முன்னாள் ஆசிரியர்; தருண் பாரத் இதழின் ஆசிரியர். இந்து மகா சபையின் பின்னணியிலிருந்த ஜி.வி.கேட்கரும் கோபால் கோட்சேவும் கைது செய்யப்பட்டனர். மறுபுறம் சாவர்க்கரை தப்பவைத்த அரசியல் காரணங்கள் குறித்த எதிர்ப்பும் கிளம்பியது.

        இத்தகைய சர்ச்சை காரணமாக 1965 மார்ச்22 இல் கோபால் ஸ்வரூப் பதக் தலைமையில் விசாரணை ஆணையம் பெயருக்கு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை அரசியல் காரணங்களால் முழுமையடையவில்லை. மத்தியில் ஆதிக்கம் பெற்றிருந்த இந்துத்துவச் சக்திகள் இதனை விரும்பவில்லை. 1966இல் பதக் மத்திய அமைச்சரானதால் விசாரணையும் நின்றுபோனது. இதனால் நாடெங்கும் எதிர்ப்புக்குரல் எழுந்ததையொட்டி 1966இல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜீவன்லால் கபூர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணைகள் தொடர்ந்தன.

       காந்தி கொலைச்சதி முன்பே தெரியும் என்று ஜி.வி.கேட்கர் சொன்னது உண்மை. ஆனால் அதை அவர் அரசுக்குத் தெரிவிக்கவில்லை. பம்பாய் காங்கிரசாருக்கு வேறு வழிகளில் காந்தியின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி வந்துள்ளது. அந்த காலகட்டத்தில் அரசுக்குக் கிடைத்த தகவல்கள் முழுமையற்றதாகவோ குழப்பமானதாகவோ இருந்ததால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பம்பாய் அரசு அதிகாரப்பூர்வமான எந்தத் தகவலையும்  மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலில் அரசுடன் விவாதித்துள்ளார். வெடிகுண்டு வீசிய மதன்லால் கைது செய்யப்பட்டபிறகு அவர்  சொன்ன தகவல்கள் சரியானபடி கையாளப்படவில்லை. காந்தி போன்ற பெரிய தலைவரின் உயிரைக் காப்பாற்றும் பொறுப்புடன் தில்லி போலிஸ் செயல்படவில்லை. மதன்லால் விசாரணை குறித்த தகவல்களை புனே சி.ஐ.டி. அதிகாரிகளும் சரிவரக் கவனிக்கவில்லை. கோட்சே, ஆப்தே இருவரும் ஓட்டல்களில் போலிப்பெயர்களில் தங்கியுள்ளனர். இதற்கான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும், என்றெல்லாம் கபூர் ஆணையம் பதிவு செய்தது. இச்சதியில் சாவர்க்கரின் தொடர்பை சரியாக விசாரணை செய்யவில்லை, அவரை விடுவித்தது தவறு என்றது. ஆனால் இவை காலம் கடந்தவை மட்டுமல்ல; அரசுகள் இவற்றிலிருந்து உரிய பாடம் கற்கத் தவறிவிட்டன என்றே சொல்ல வேண்டும்.

         இந்தியாவில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் வாயிலாக இந்து கலாச்சாரப் பெருமைகளும் கீழைத்தேயமும் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து பிரம்ம ஞான சபையும் இந்துப் புனித நூல்கள் மற்றும் சமஸ்கிருத மேன்மையும் விதந்தோதப்பட்டன.  சமஸ்கிருத நூற்தொகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் வாயிலாக இந்து மதப் பெருமைகள் உச்சத்தைத் தொட்டன. ஹென்றி ஆல்காட், அன்னிபெசன்ட் போன்றோரின் பங்களிப்புகள் இவற்றிற்கு உதவின.

           இந்து மதத்தை ஆதரிக்கும் நேசிக்கும் பல தலைவர்கள் காந்திக்கு முன்பும் பின்பும் காங்கிரசில் இடம் பெற்றிருந்தனர். 1906இல் முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் தங்களது நலனுக்காக இக்கட்சியை தனியே தொடங்கினர். ஆனால் காங்கிரசில் இருந்த இந்து ஆதரவாளர்கள் 1915இல் பண்டிட் மதன்மோகன் மாளவியா, லாலா லஜபதி ராய் தலைமையில் இந்து மகா சபை தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக 1920இல் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பொறுப்பேற்றார். இவர்களை காங்கிரசிலிருந்தே 1937 வரை செயல்பட அனுமதித்ததுக் கொடுமையானது.

        பாலகங்காதர திலகர் காங்கிரசில் இருந்த தீவிர இந்துத்துவ ஆதரவாளர் ஆவார். விடுதலைப் போராட்டங்களின் விநாயகரை நுழைத்து அடையாள அரசியலுக்குப் பெரிய அடித்தளத்தை  உருவாக்கியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் நுழைவும் அவரது அணுகுமுறையும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் உத்திகளும் இந்து மதம் குறித்த பார்வைகளும் வலதுசாரி இந்துத்துவக் கருத்தியலிடமிருந்து விலகி அமைந்தது. எனவே இந்துத்துவம் காந்தியை எதிரியாகக் கட்டமைத்து அதில் வெற்றியும் பெற்றது.

                 வி.டி. சாவர்க்கர் எனப்பட்ட விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1883இல் மகாராஷ்டிராவில் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர்.  வீரசிவாஜி என்பதைப்போல வீர் என்று பெயருடன் இணைத்துக் கொண்டனர். திலகரை தமது அரசியல் குருவாக ஏற்றார். குழந்தைப் பருவத்திலேயே வானர சேனையை உருவாக்கி முஸ்லீம்களுக்கு எதிராக நின்றார். தனது சகோதருடன் சேர்ந்து அபிநவ் பாரத் சங்கத்தைத் தொடங்கினார்.

      சியாம்ஜி கிருஷ்ண வர்மா உதவித்தொகையில் லண்டன் பாரிஸ்டர் படிக்கச் சென்ற சாவர்க்கர் இந்திய விடுதலைக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார். வெடிகுண்டு, ஆயுதத் தயாரிப்பு போன்ற பணிகளில் இந்த சட்ட விரோத அமைப்பு ஈடுபட்டது. பிரிட்டிஷ் அதிகாரி கர்சன் லில்லியை சாவர்க்கரின் சீடன் மதன்லால் திங்க்ரா கொன்றான். நாசிக் மாவட்ட நீதிபதி ஜாக்சனும் கொலையானர். இக்கொலையில் சாவர்க்கர் கைதானார். கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்குக் கொண்டுசெல்லும் வழியில் கப்பலிருந்து கடலில் குதித்துத் தப்பி மீண்டும் பிடிபட்டார். இரண்டு கொலைக்காக தலா 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்தமான் சிறையிலிருந்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருப்பதாகத் தொடர்ந்து மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவண்ணமிருந்தார்.

      1925இல் இந்து மகா சபையிலிருந்த கேசவ பலிராம் ஹெட்கோவர், வி.டி.சாவர்க்கர், பி.எஸ்.மூஞ்சே, கணேஷ் சாவர்க்கர், பரஞ்பே ஆகிய ஐவர் இணைந்து ராஷ்டிரிய சுயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் பின்னர் பலம் பொருந்திய ஆர்.எஸ்.எஸ்.இன் பின்னணியில் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டு இந்துத்துவக் கருத்தியல் விதைகள் இந்தியாவெங்கும் ஆழமாக விதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

     1951இல் இந்து மகா சபையைவிட்டு வெளியேறிய சியாமா பிரசாத் முகர்ஜி பாரதீய ஜனசங்கம் என்ற கட்சியை நிறுவினார். இந்த வெளியேறல்கள் எல்லாம் வெளிப்படையான நாடகங்களே. இவர்கள் அனைவருக்கும் இடையே மறைமுகக் கூட்டணியும் உள்ளார்ந்த கருத்தியல் உறவுகளும் என்றும் மறைந்துபோனதில்லை என்பதே உண்மை. 

       1948 பிப்ரவரி 4இல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் வேண்டுகோளை அடுத்து இந்தியத் தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாக செயல்படுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருப்போம் என்பது போன்ற நிபந்தனைகளுக்குட்பட்டு 1949 ஜூலை 11இல் தடை விலக்கப்பட்டது. இதன் பின்னணியில் சர்தார் பட்டேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியத் தேசியக்கொடி நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் இன்றும் ஏற்றப்படுவதில்லை.

         இவர்களுடைய முதன்மை நோக்கம் இந்துக்களை ராணுவமயமாக்குவது. எனவே உலகளவில் முசோலினியை இவர்கள் குருவாக ஏற்றனர். 1930-32 காலகட்டத்தில் நடந்த மூன்று வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொள்ளச் சென்ற பி.எஸ்.மூஞ்சே ராணுவப் பள்ளிகளைப் பார்வையிட்டார். உடற்பயிற்சிக்கான பாசிசக் கல்விக் கழகம், பலில்லா, அவான் கார்டிஸ்ட் போன்ற அமைப்புகளைக் கண்டு அதே பாணியில் இந்தியாவில் அமைப்புகளை உருவாக்க முடிவு செய்தார். மேலும் முசோலினியுடனான சந்திப்பில் இவற்றைப் பாராட்டினார். ராணுவப்பள்ளி தொடங்க மன்னர்கள், சமஸ்தானங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரைச்  சந்தித்து நிதி திரட்டினார். 1934இல் நாசிக்கில் ராணுவப்பள்ளி தொடங்கப்பட்டு, கற்பனை எதிரிகளான இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பரசியல் விதைக்கப்பட்டது.

        இந்தியா திரும்பியதும் ஹெட்கோவர் தலைமையில் ‘பாசிசமும் முசோலினியும்’ என்று மாநாடு கூட்டினார். அதில், இந்து தர்ம சாஸ்திரங்களின் அடைப்படையில் இந்து மதத்தைச் சீராக்கி ஒன்றுபடுத்த வேண்டும். நமது பழைய சிவாஜி அல்லது இன்றைய முசோலினி, ஹிட்லர் போன்ற ஓர் இந்துச் சர்வாதிகாரியின் கீழ் நமக்கு சுயராஜ்யம் கிடைக்காத வரையில் சாத்தியமில்லை. இதற்கு அறிவியல்பூர்வமான திட்டத்தை உருவாக்கிப் பரப்புரை செய்ய வேண்டும், என்று முழங்கினார்.  முசோலினி, ஹிட்லர் ஆகியோரை ஆரிய இந்துவாக அடையாளம் கண்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.

       இந்து இளைஞர்களை ராணுவமயமாக்குவது, சனாதன தர்மத்தைக் கற்பிப்பது, தனி நபர்களையும் தேசத்தையும் காப்பதற்கான விஞ்ஞானத்தையும் கலைகளையும் சொல்லித் தருவது ஆகியன மத்திய இந்து ராணுவக் கல்விக் கழகத்தின் பணிகளாக வரையறுக்கப்பட்டன. வெற்றியை நோக்கிய பெரும் குறிக்கோளுடன் மக்கள் திரளைக் கொன்று குவிக்கும் விளையாட்டிற்குத் தகுதியுடையவர்களாக நமது சிறுவர்களை தயாரிப்பதே பயிற்சியின் நோக்கம். எதிரிக்கு உச்சபட்ச இழப்புகளையும் மரணங்களையும் ஏற்படுத்துவதாகவும் நமது தரப்பில் ஆகக்குறைந்த மரணங்களும் இழப்புகளும் ஏற்படும் வகையில் இந்த வெற்றி அமையவேண்டும், என ராணுவப் பள்ளிக்கானத் திட்ட வரைவில் குறிப்பிட்டனர். இதிலிருந்து பாசிச அரசியல் வழியும் காந்திப் படுகொலையின்  பாதையும் நமக்கு எளிதில் புலப்படும்.

(தொடரும்…)

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் ஏப்ரல் 2024

மகாத்மாவின் இறுதி நாள்கள்

மகாத்மாவின் இறுதி நாள்கள்

(மகாத்மாவின் கதை தொடரின் பதினைந்தாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்

             சுதந்தர இந்தியாவில் காந்தி 168 நாள்கள் மட்டுமே வாழ்ந்தார். அதுவும் துயரம் நிரம்பிய வாழ்வாக அது அமைந்தது. சுதந்திரப் போரைவிட அதிக சக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்து – முஸ்லீம் – சீக்கிய ஒற்றுமைக்காக களம் கண்டார். அவரது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. 1947 ஜூலை 15இல் தொடங்கி 1948 ஜனவரி 30 முடிய காந்தியின் இறுதி 200 நாட்களை இந்து நாளிதழில் வி.ராமமூர்த்தி தொடராக எழுதினார். அந்நூல் கி.இலக்குவன் மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைக்கிறது.

       நாட்டின் ஒருபக்கம் சுதந்திரக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த வேளையில், மறுபக்கத்தில் மதக்கலவரங்கள் வெடித்துத் தீயெனப் பரவின. அவற்றை நிறுத்த காந்தி மேற்கண்ட முயற்சிகள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை. 1947 ஆகஸ்ட் 15 இரவில் புதுதில்லியின் ரெய்சினா ஹில் பகுதியில் அமைந்திருந்த அரசியல் சட்ட அவையில் பாபு ராஜேந்திர பிரசாத், ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். காந்தியோ கல்கத்தா பெலியகட்டா என்னுமிடத்தில் உள்ள ஹைதாரி மாளிகையில் வங்காள மாகாண முதல்வராக இருந்த ஹூசைன் ஷாகித் சுராவர்தி என்ற முஸ்லீம் தலைவருடன் தங்கி கலவரங்களை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.

        அவர் மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். காந்தியுடன் எளிய வாழ்க்கை வாழ மிகவும் சிரமப்பட்டார். கலவரங்கள் சற்றுக் குறைந்ததும் காந்தியுடன் தங்குவதைத் தவிர்த்தார். இதனால் அவர் மீது காந்தியிடம் புகார் கூறப்பட்டது. கூட்டு முயற்சி தொடங்கும் முன்பே சுராவர்தி மீது புகார் கூறினார்கள். இது நாங்கள் எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளது. அவருடன் இணைந்து செயல்படாமலிருந்தால் கல்கத்தாவில் நான் மட்டும் அமைதி ஏற்படுத்தியிருக்க முடியாது, என்றார் காந்தி.

        காந்தி வாரந்தோறும் திங்கள்கிழமை மவுன விரதத்தில் ஈடுபட்டார். இது ஓய்வெடுக்கும் நாளாக அவருக்கு இருந்ததில்லை. அன்று அவர் அதிகம் கடிதங்கள் எழுதுவதில் செலவிட்டார். இவர் தங்கியிருந்த இடத்திற்கு வரும் கூட்டத்தினரின் சிரமத்தைக் கருதி அவர்கள் இடத்திற்கே சென்று மாலை நேரப் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தினார். பாரக்பூரில் வன்முறை மூழும் சூழல் இருந்தது. காந்தியும் சுராவர்தியும் அங்கு விரைந்தனர். இவர்கள் செல்வதற்கு முன்னதாகவே அவர்கள் சமாதானத்திற்கு வந்துவிட்டனர். இரண்டு சமூக மக்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பையும் ஒற்றுமையையும் ஒருசேர உணர்த்திய விதம் காந்தியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தனது நோக்கங்களும் செயல்பாடுகளும் வீண்போகவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தார்.

        நவகாளியில் நம்பிக்கைக்குரிய உள்ளூர் மக்களைக் கொண்டு அமைதிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. கலவரங்கள் நடக்கும் பஞ்சாப்பிலும் இதேபோன்று குழுக்கள் அமைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். பயத்தால் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறிய முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை மீண்டும் அழைத்து குடியமர்த்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றார்.

        சமூக முன்னேற்றம், கிராமப்புற நலன் மேம்பாடு போன்ற நோக்கங்களுக்காக கஸ்தூரிபா அறக்கட்டளை  அவரது மறைவிற்குப்பின் (1944 பிப்ரவரி 22) நிறுவப்பட்டது. இதன் அறக்கட்டளைப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் கூட்டம் ஒன்றை இங்கு நடத்தினார். இதில் பெண்கள் பலர் விருப்பத்துடன் இணைந்திருந்தனர்.

       1947 ஆகஸ்ட் 22 கல்கத்தா தேசபந்து பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கரக்பூரில் பணிபுரிந்த இந்து அரசு அலுவலர்கள் முஸ்லீம்களிடம் பாரபட்சம் காட்டுவது குறித்துப் பேசினார். அரசு அலுவலர்களும் காவல் பணியாளர்களும் தங்கள் பணிகளைப் பொருத்தவரை இந்துக்களோ, முஸ்லீம்களோ, சீக்கியர்களோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்படும் மக்கள் எந்த மதப் பிரிவினர் என்று பார்க்காமல் செயல்பட வேண்டுகோள் விடுத்தார். மதம் என்பது தனிப்பட்ட விவகாரம்; அதனை தனிப்பட்ட முறையில் வரையறை செய்வதுடன் நிறுத்திக் கொண்டால் நமது அரசியல் வாழ்க்கையில் அனைத்தும் நன்றாக இருக்கும், என்றார்.

          மறுநாள் மாலை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி, ‘அல்லாஹூ அக்பர்’, எனும் முழக்கத்தை இந்துக்கள் எதிர்ப்பது குறித்துப் பேசினார். கடவுள் ஒருவரே உயர்ந்தவர் என்ற இந்த  முஸ்லீம்களின் முழக்கத்தையும் ‘சத் ஶ்ரீ அகால்’, என்ற சீக்கிய முழக்கத்தையும் அனைவரும் எழுப்ப வேண்டும். இதற்கு இந்து, முஸ்லீம், சீக்கிய சகோதரர்கள் தயங்கக்கூடாது.  இந்துக்களின் ராமநாமப் பாடலும் இவ்வாறே என்றார். பலவீனமானவர்களையும் தகுதி படைத்தவர்களையும் பாதுகாப்பவன் கடவுள் ஒருவனே, என்றும் வலியுறுத்தினார்.

       பஞ்சாப்பில் கொளுந்து விட்டெரிந்த வகுப்புவாதத் தீயை அணைக்க காந்தியால் மட்டும் இயலுமென அவர் வருகையை பலர் வலியுறுத்தினர். காந்தி எப்போதும் அரசியல் சட்ட எல்லைகளுக்குட்பட்டு செயல்பட விரும்புபவர். காந்தியை காஷ்மீருக்கு அழைத்தபோது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல், வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் ஆகியோரை கலந்தாலோசித்த பிறகே சென்றார். பஞ்சாப் செல்வது குறித்து  பிரதமர் ஜவகர்லால் நேருவின் கருத்தறிய, நான் பஞ்சாப்பிற்கு போகவேண்டிய அவசியம் உள்ளதா? எனக்கேட்டு,  தேவையெனில் நவகாளி மற்றும் பீகார் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு அங்கு செல்லலாம், என்று கடிதம் எழுதிவிட்டு அனுமதிக்காக காத்திருந்தார்.

         அரசு ஊழியர்களிடம் இந்தியா அல்லது பாகிஸ்தான் எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறீர்கள்? எனக் கேட்கப்பட்டதையும் பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவையும் முஸ்லீம்கள் பாகிஸ்தானையும் தெரிவு செய்ததை அறிந்த காந்தி, அரசுப்பணிகளில் வகுப்புவாத நச்சுக் கிருமி புகுந்தது எவ்வாறு? என்று வினா எழுப்பினார்.  இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நன்றாக இயங்க வேண்டுமெனில் வகுப்புவாத உணர்வும் அத்தகைய அணுகுமுறையும் களையப்பட வேண்டுமென்றார். இரு நாட்டுப் பிரதமர்கள் இந்த முக்கியப் பிரச்சினை குறித்து சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

      கல்கத்தா மற்றும் பீகாரிலிருந்து வந்த அமைதி குறித்த தகவல்கள் காந்திக்கு மகிழ்ச்சியளித்தன. பீகாரில் அமைதிக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் ஐ.என்.ஏ. அதிகாரி ஷா நவாஸ்கான் காந்தி – சுராவர்தி கூட்டு முயற்சி நன்கு பலனளிப்பதையும் பீகார் மாகாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லீம்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருவதையும் எடுத்துக் காட்டினார்.

      குழந்தைகளிடம் கடமையுணர்வை மழலையர் பள்ளியிலிருந்து வளர்க்க வேண்டும் என்று காந்தி விரும்பினார். சிறுவர்- சிறுமிகள் சமூக உறுப்பினர்கள் என்கிற வகையில் தகுதியுடையவர்களாக வளர்ப்பது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கடமையாகும். மாணவர்கள்  மீது முறையான கவனம் செலுத்தினால்தான் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். மாணவர்கள் உலகில் ஒழுங்கின்மை நிலவுகிறது. அவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்களுக்குக் கூட மரியாதை அளிப்பதில்லை. வருங்காலத் தலைவர்களின் இத்தகைய அணுகுமுறை தனக்கு மனவேதனையளிப்பதாக கல்கத்தாவில் கூடியிருந்த கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

        காங்கிரஸ் கட்சியினர் முகமது அலி ஜின்னாவை எதற்கெடுத்தாலும் குறைகூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காந்தி இதனை விரும்பவில்லை. பாகிஸ்தான் உருவான பிறகும் முஸ்லீம்  லீக் கட்சி நீடிப்பதை அவர் எதிர்க்கவில்லை. காங்கிரசோ, முஸ்லீம் லீக்கோ ஒருவர் பதவி, சொத்துகள் சேர்ப்பதற்கு இதை வாய்ப்பாக கருதக்கூடாது என்றார். ‘ஆசாத் இந்த் பவுஜ்’ எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தையும் (ஐ.என்.ஏ.) நேதாஜியின் தியாகங்களையும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பாராட்டிப் பேச மறக்கவில்லை.

       நேதாஜியின் துணிச்சலுக்கு ஈடு, இணையில்லை. மிகவும் பலம் பொருந்திய பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சிறிய எண்ணிக்கையிலான படைவீரர்களைத் திரட்டியது சாதாரணமான ஒன்றல்ல, என்றார். ஐ.என்.ஏ. படைவீரர்கள் சுதந்தர இந்தியாவில் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டதைக் குறிப்பிட்டு, அவர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்வது சாத்தியமானதல்ல என்றும் வாள்முனையை ஏர்முனையாக்கி வேளாண் பணிகளில் ஈடுபட்டு, அமைதி வழியில் அவர்கள் தங்களது  சொந்த முறையில் நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

      1947 ஆகஸ்ட் 31 நள்ளிரவில் கல்கத்தா நகரின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் மீண்டும் கலவரங்கள் ஏற்பட்டன. மக்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். மீண்டும் கலவரம் ஏற்பட்டதால் காந்தி மனம் உடைந்தார். காந்தி தங்கியிருந்த ஹைதாரி மாளிகையும் தாக்குதலுக்கு உள்ளானது. கற்கள், கம்புகள் வீசப்பட்டன. கல்வீச்சில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. எனவே செப்டம்பர் 1 தனது வழக்கமான ஆயுதமான உண்ணாவிரதத்தைக் கையிலெடுத்தார். அப்போது மேற்கு வங்காள (கல்கத்தா) ஆளுநராக இருந்த சி.ராஜாஜி காந்தியை சந்தித்துப் பேசினார்.

           அப்போது ராஜாஜி காந்தியிடம், குண்டர்களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருக்கலாமா? என்றார். குண்டர்களை உருவாக்குவது நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவுமின்றி அவர்களால் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னாலுள்ள இதயங்களை தொட விரும்புகிறேன், என்று காந்தி பதிலளித்தார்.

      அப்போது காந்தி வெளியிடத் தயாரித்த பத்தரிக்கைச் செய்தியில், 79 வயதை எட்டும் நிலையிலுள்ள மெலிந்த உடலுடைய கிழவனான நான், சில காலம் உயிர்வாழும் நோக்கத்துடன், உடனடியாக இறந்துவிடாமல் இருக்கவும் தண்ணீருடன் உப்பு, சோடியம் பை கார்பனேட், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை அருந்த முடிவு எடுத்ததாகக் கூறப்பட்டிருந்தது.

     இதைப் பார்த்த ராஜாஜி, கடவுளின் கரங்களில் உங்களை ஒப்படைத்துவிடும்போது ஏன் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்துக் கொள்கிறீர்கள்? என்று சற்றுக் கிண்டல் தொனியுடன் கேள்வி எழுப்ப, உண்மைதான், என்று சொல்லி எலுமிச்சைச் சாற்றை நீக்கியதன் வாயிலாக வைட்டமின் சி கிடைக்கக்கூடிய வாய்ப்பையும் தவிர்த்தார். 75 மணி நேரத்தைக் கடந்த உண்ணாநிலையில் பலர் காந்தியைச் சந்தித்து உண்ணா நோன்பை முடித்துக் கொள்ள வேண்டினர். இந்து மகா சபைத் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியும் காந்தியைச் சந்தித்தார். அவர்கள் பார்வார்டு பிளாக் கட்சியின் மீது குற்றம் சுமத்தினர்.  நேதாஜியின் அண்ணனும் பிரிவினைக்கு முன்னதாக ஒன்றுப்பட்ட வங்காள அமைப்பு உருவாக்க முயன்ற சரத் சந்திர போஸ் காந்தியை முதன்முறையாகச் சந்தித்தார். இந்தக் கலவரங்களின் பின்னணியில் இந்து மகா சபை இருப்பதையும் பஞ்சாப் பற்றி எரியும்போது நீங்கள் வேடிக்கைப் பார்ப்பது ஆண்மையற்ற செயல் என சீக்கியர்களை அவர்கள் தூண்டிவிட்டதையும்  அதை ஆதாரங்களுடன் நிருபிக்க முடியும் என்றார்.

      அமைதியும்  நல்ல புத்தியும்  திரும்ப வந்துவிட்டன என்று உண்மையாக காந்தியிடம் எடுத்துக் கூறி உண்ணா நோன்பை முடிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அனைவரும் பணிபுரிய வேண்டுமென பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் விரிவான வேண்டுகோள் ஒன்றை மேற்கு வங்காள ஆளுநர் சி.ராஜாஜி விடுத்தார்.

      செப்டம்பர் 5 அன்று மேற்கு வங்காள ஆளுநர் சி.ராஜாஜி, முதல்வர் பி.சி.கோஷ், சுராவர்தி ஆகியோர் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காந்தியின்  நிபந்தனைகளை ஏற்று  கையொப்பமிட்டு, இறுதியாக உண்ணா நோன்பை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அன்றைய தினத்தில் மிகவும் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து, தங்களிடமிருந்த துப்பாக்கிகள், குண்டுகள், அரிவாள்கள், கத்திகள், பெரிய உருட்டுக் கட்டைகள், கடப்பறைகள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களை காந்தியின் முன் போட்டனர். இந்த ஆயுதக் குவியல்களைக் கண்ட காந்தி, இவற்றில் சில ஆயுதங்களை எனது வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன், இதற்குமுன் இலகுரக எந்திரத் துப்பாக்கியைப் பார்த்ததே கிடையாது, என்றார்.

        உண்ணாவிரதத்தால் உடல்நிலை மோசமடைந்த நிலையில், ஓய்வெடுக்கச் சொன்ன மருத்துவர்களின் ஆலோசனைகளையும் மீறி செப்டம்பர் 6 இல் கல்கத்தாவை விட்டு கிளம்ப ஆயத்தமானார். காந்திக்கு ஏற்கனவே வர்வேற்பளித்த கல்கத்தா மாநகராட்சித் திடலில் வழியனுப்பும் விழாவும் நடைபெற்றது. அவ்விழாவில், கல்கத்தாவில் அமைதி நிலவினால் ஏற்படும் நல்ல விளைவுகளை எனது பேச்சைக் கேட்போரும் படிப்போரும் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்கத்தா அமைதியாக இருந்தால் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளம் முழுமையும் நல்லறிவுடன் இயங்கும். பின்னால் பீகாரிலும் பஞ்சாப்பிலும் அமைதி உறுதிப்படும். நான் பஞ்சாப் செல்லவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று நினைக்கிறேன். பஞ்சாப் மாநிலம் நற்புத்தியுடன் செயல்படத் தொடங்கினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முழுமையும் அதனைப் பின்தொடரும், என்று காந்தி உரையாற்றினார்.

       காங்கிரஸ் அமைச்சர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் உறவினர்களுக்குச் சிறப்புச் சலுகை காட்டுவதாகவும் விமர்சனக் கடிதங்கள் வந்த நிலையில், எளிமை, துணிவு, நேர்மை, உழைப்பு போன்ற பண்புகளை மற்றவர்களைவிட மக்கள் ஊழியர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். உழைப்பு, கட்டுப்பாடு ஆகிய இரண்டு பண்புகளைத் தவிர பிறவற்றுக்கு ஆங்கில ஆட்சியாளர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது. விமர்சனங்கள் மூலம் அமைச்சர்கள் பலன் பெறவேண்டும். மறுபுறம் விமர்சகர்கள் உண்மையாகவும் நிதானமாகவும் விமர்சிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், என்றும் காந்தி எழுதிய கட்டுரை ஒன்றில் வலியுறுத்தினார்.

       தில்லி ரயில் நிலையத்திலிருந்து நகரத்தினுள் நுழைந்தபோது அங்கு நிலவிய அமைதி நல்ல அமைதியாக காந்திக்குத் தோன்றவில்லை. கல்கத்தா நடைபெற்ற கொடுமைகள் தில்லியிலும் நடைபெற்றதால் ஏற்பட்ட மயான அமைதி என்பதை காந்தி உணர்ந்தார். உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் அனைத்தையும் காந்தியிடம் விளக்கினார். தில்லி பிர்லா மாளிகையில் தங்கியிருந்த காந்தியை பிரதமர் நேரு வந்து சந்தித்தார். வருத்த மிகுதியால் விரக்தியின் விளிம்பில் இருந்த நேருவைக் கண்ட காந்தி உணர்ச்சிப் வசப்பட்டார். இப்படிப்பட்ட கொடூரச் சூழலைக் கண்டதில்லை என்று நா தழுதழுக்க சொன்னார் நேரு, இந்தக் காட்டுமிராண்டித்தனங்களை எப்படிச் சாமளிப்பது என்று தெரியாத கையறு நிலையில் இருப்பதை காந்தியிடம் விவரித்தார்.

      பிர்லா மாளிகையிலிருந்து முஸ்லீம் இல்லம் ஒன்றிற்கு தனது இருப்பிடத்தை மாற்றக் கோரிய ஆலோசனையை காந்தி உடன் ஏற்றார். காங்கிரஸ்காரரும் ஆசப் அலியின் வீட்டுக்கு மாறுவது  என்ற முடிவை பாதுகாப்புக் காரணம் கூறி பட்டேல் தடுத்தார். விடுதலைப் போராட்ட வீரர் அருணாவை மணந்துகொண்ட ஆசப் அலி அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணியாற்றி வந்தார்.   

        காந்தி தனது பிரார்த்தனைக் கூட்டங்களை அனைத்து சமயக் கூட்டங்களாகவே வடிவமைத்திருந்தார். பல்சமய, பன்மொழிப் பாடல்கள் பாடப்படும். அனைத்து சமயங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்துக்களின் பகவத் கீதை, சீக்கியர்களின் கிரந்த் சாகிப், பார்சிகளின் ஜெண்ட் அவெஸ்தா, கிருஸ்தவர்களின் பைபிள், இஸ்லாமியர்களின் குர்ரான் போன்றவற்றை உரிய மரியாதையுடன் மதித்துப் போற்றினார்.  செப்டம்பர் 16 அன்று நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் புனித குர்ரான் வரிகள் பாடப்பட்டபோது எழுந்த எதிர்ப்பால் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. காந்தியைப் போல ஒரு பிடிவாதக்காரரைப் பார்ப்பது அரிது. இனி ஓவ்வொரு வழிப்பாட்டுக் கூட்டம் குர்ரான் வரிகளுடன் தொடங்கும் என்று அறிவித்தார். யாரும் எதிர்ப்பு தெரிவித்தால் கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும் சொல்லி, கூட்டங்களை தொடர்ந்து நடத்தினார். எதிர்ப்பு ஏற்பட்டால் பிரார்த்தனைக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்தார். இதன் காரணமாக எதிர்ப்பு குறைந்து போயிற்று.

        கல்கத்தாவைப் போன்று தில்லியிலும் காந்தியின் பணிச்சுமை கடுமையாக இருந்தது. இந்துக்களும் முஸ்லீம்களும் சீக்கியர்களும் அமைதியான முறையில் சேர்ந்து வாழமுடியவில்லை என்றால் நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை என்றார். இந்து, முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை காந்தியின் சிறிய குழு சென்று மக்களின் மனக் காயங்களுக்கு மருந்திட்டது. அக்குழுவில்  பிரதமர் நேருவின் மகள் இந்திரா பிரியதர்சினியும் இடம் பெற்றார்.

      செயலூக்கமுள்ள அகிம்சை அல்லது சத்தியாகிரகம் என்பதன் பொருள் தீமை செய்பவனிடன் எதிர்ப்பின்றி சரணடைதல் என்பது பொருளல்ல. கொடுங்கோலனின் எண்ணத்திற்கும் வலிமைக்கும் எதிராக முழு ஆன்மாவை நிறுத்தி வலிமையை வலிமையின் மூலம் எதிர்கொள்வதுதான் காந்திய முறை என்றார். தொடர் வண்டி, அச்சு உள்ளிட்ட சில நவீன வசதிகளைப் பயன்படுத்திய காந்தி நுரையீரலில் இன்ஃபுளுயன்சா நோய்த்தொற்று ஏற்பட்டு காய்ச்சல், சளி மற்றும் இருமலால் அவதியுற்றபோது பென்சிலீன் மருந்தை செலுத்திக்கொள்ள மறுத்தார். அகிம்சை வழியைப் பின்பற்றுபவர்கள் மலரைவிட மென்மையானவராகவும் கருங்கல் பாறையைவிட  கடினமானவராகவும் இருக்க வேண்டும் என்ற போதனையின்படியே செயல்பட்டார். 

      தேவநாகரி வடிவிலான இந்தியை ஆட்சி மொழியாக ஐக்கிய மாகாண அரசு (உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் பகுதிகள் அடங்கிய மாகாணம்) அறிவித்ததைக் கண்டு வருந்திய காந்தி, இது உருதுமொழி பேசும் மக்களுக்கும் பாதகமாக அமையும் என்பதை உணர்த்தினார். அந்த அரசைக் கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை என்றபோதிலும் நேச உணர்வுடன் உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். 

      காந்தி, கடைசி ஆயுதமான உண்ணா நோன்பை ஒரு ஆன்மீக நடவடிக்கை என்றார். இது பிரார்த்தனையை விரைவு படுத்துகிறது, இது கடவுளை நோக்கிச் செயல்படுகிறது, நோன்பு இருப்பவர் தெரிந்தவராக இருக்கும்போது அது அவர்களுடைய மனச்சாட்சியை விழித்தெழ வைக்கும் என்றும் நம்பினார். இறுதியாக, 1948 ஜனவரி 13இல் உண்ணா நோன்பைத் தொடங்கினார். காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் தலையீடு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்புத் தொகையிலிருந்து ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய ரூ.55 கோடியை சர்தார் பட்டேல் தர மறுத்தார். இதில் காந்தியின் அணுகுமுறை வேறாக இருந்தது.

      அனைவரும் பிர்லா மாளிகைக்கு ஓடிவரவேண்டாம் என்று காந்தி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். எனக்கு வேறு வழியில்லை. எனது இயலாமை ஒவ்வொரு நாளும் என்னை சித்ரவதை செய்கிறது. உண்ணா நோன்பில் அது அகன்றுவிடும். எனது முஸ்லீம் நண்பர்களுக்கு அளிக்க என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஒரு மனிதன் தூய்மையானவனாக இருந்தால் அவனால் கொடுப்பதற்கு அவனது உயிரைவிட மதிப்புமிக்கது எதுவும்  இல்லை என்றும் சொன்னார். பலரது முயற்சிகளுக்குப்பின் ஆறுநாள் உண்ணா நோன்பை முடித்துக் கொண்டார்.

       காந்தியின் உடல்நலத்தைப் பரிசோதித்த டாக்டர் பி.சி.ராய், ஜிவராஜ் மேத்தா, சுசிலா நாயர் ஆகியோரடங்கிய மருத்துவக்குழு, முகமலர்ச்சியுடன் காந்தி உடல்நலத்துடன் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் உள் உறுப்புகளின் இயக்கம் சீராக இல்லை. அவை சீரடைய நீண்டகாலம் பிடிக்கும். எனவே அதுவரையில் கவலைகளும் மனஅழுத்தங்களும் அவரை அண்டாத வகையில் கவனமாக இருக்க வேண்டும், என்றது.

       1948 ஜனவரி 20இல் பிர்லா மாளிகையின் புல்வெளியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் உரையாற்றும்போது காந்தியை நோக்கி வீசப்பட்ட குண்டு 70 அடி தொலைவில் வெடித்தது. அதிர்ந்து நடுங்கிய மனுபென் காந்தியை அமைதிப்படுத்திவிட்டு காந்தி தனது உரையைத் தொடர்ந்தார். குண்டு வீசிய மதன்லால் என்ற 20 வயதான பஞ்சாப் இந்து அகதி மதன்லால் கைது செய்யப்பட்டான். ஆனால் காந்தியை முடிக்க பெருந்திட்டத்துடன் வந்திருந்த  நாதுராம் கோட்சே, பாட்கே, கர்க்கடே, ஆப்டே, சங்கர், கோபால் கோட்சே போன்றோர் திட்டம் தோல்வியடைந்ததும் மிக எளிதாக தில்லியைவிட்டு வெளியேறினர். அவர்களைச் சுற்றிவளைத்திருந்தால் காந்தி சிலகாலம் நம்முடன் இருந்திருப்பார்.

      பிரதமர் நேருவிற்கும் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் பட்டேலும் பிளவு அதிகரித்துள்ளதாக பேசப்பட்டது.  அதை மறுத்த காந்தி இருவரும் ஒரே மாதிரியாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் முஸ்லீம் எதிரிகளாக இருக்க முடியாது. முஸ்லீம்களின் எதிரியாக இருப்பவர்கள் இந்தியாவிற்கும் எதிரிகளே, என்றார் காந்தி. பிரதமர் நேருவின் தன்னலமற்றப் போக்கினையும் பணிகளையும் காந்தி வெகுவாகப் பாராட்டினார்.

       ஜனவரி 23 அன்று நேதாஜியின் பிறந்த நாளை ஒட்டி பிரார்த்தனைக் கூட்டத்தில்  காந்தி பேசும்போது, நான் அகிம்சையைப் போதிப்பவன்; நேதாஜி வன்முறையை ஆதரித்தவர். அதனால் என்ன? பிறரது நல்ல குணங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். அவர் சிறந்த தேசபக்தர். நாட்டிற்காக தனது உயிரை அர்ப்பணித்தவர். இந்திய தேசிய ராணுவத்தில் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், பார்சிகள் என அனைவரும் இடம்பெற்றனர்.  வட்டார, சாதி, மத உணர்வுகள் அவருக்கு இல்லை, என்று புகழாரம் சூட்டினார். ஆச்சாரிய கிருபளானி பதவி விலகியதைத் தொடர்ந்து பாபு ராஜேந்திர பிரசாத் புதிதாக பதவியேற்றிருந்த செயற்குழுக் கூட்டத்திலும் காந்தி பங்கேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் காந்திக்கு நன்றிகளையும் மீண்டும் வகுப்பு நல்லிணக்கத்தை ஏற்படுத்த உறுதிமொழியும் அளித்தனர்.

         காந்தி கொலை செய்யப்படலாம் என்று அவர் உட்பட அனைவரும் அறிந்திருந்தனர் என்றே சொல்ல வேண்டும். யாராவது ஒருவன் என்னைக் கொலை செய்தால் அந்தக் கொலையாளி மீது எனக்கு எந்தக் கோபமும் ஏற்படக்கூடாது என்பதற்காக ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே மரணமடைய வேண்டும் என்கிற விருப்பத்தை பிரார்த்தனைக் கூட்டங்களிலும் அவர் எழுதிய கடிதங்களிலும் வெளிப்படுத்தி வந்தார்.

      ஜனவரி 26 விடுதலைக்கான போராட்டத்தில் சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது. அன்று அது பொருத்தமாக இருந்தது. இன்று சுதந்திரத்தை அனுபவித்த பிறகு ஏமாற்றமடைந்துள்ளோம், என்று தனது வருத்தங்களைப் பதிவு செய்தார். பாபு ராஜேந்திர பிரசாத்தை அழைத்துக் கொண்டு பிப்ரவரி 2 வார்தா செல்கிறேன். அங்கு ஒரு மாதம் வரையில் தங்கியிருப்பேன். அங்கேயே தங்கிவிட மாட்டேன். நான் இங்கிருந்து கிளம்பியவுடன் சண்டை போடமாட்டோம் என உறுதியளித்து, எனக்கு ஆசி வழங்கினால்தான் நான் இங்கிருந்து கிளம்புவேன் என்று அன்புக் கட்டளையிட்டார்.

       ஆகவே காந்தி தில்லியைவிட்டு கிளம்பும் முன்பு காரியத்தை முடிக்க சதிகாரக் கும்பல் உடனடியாகச்  செயலில் இறங்கியது. முதல் முயற்சியில் தோல்வியுற்ற இக்கும்பல் பம்பாய் மற்றும் குவாலியர் சென்று 9 மி.மீ. பெரெட்டா கைத்துப்பாக்கி வாங்கி உடன் பயிற்சியெடுத்து செயலில் இறங்கியது.

      1948 ஜனவரி 30 சர்தார் பட்டேல் வந்து காந்தியை சந்திக்கிறார். இருவரும் உரையாடியதால் பிரார்த்தனைக் கூட்டம் தாமதமானதால் உடன் விடைபெற்றார். அக்கூட்டத்தில் ஒருவனாக நாதுராம் கோட்சேயும் கலந்திருந்தான்.

      இடுப்பில் தொங்கும் கடிகாரத்தை நீங்கள் கவனிக்காததால் அது கோபித்துக் கொள்ளப்போகிறது, என்று காந்தியிடம் விளையாட்டாகக் கூறினாள் அபா. நேரக்கண்காணிப்பாளராக நீங்கள் இருவரும் இருக்கும்போது நான் ஏன் அதைப் பார்க்க வேண்டும், என்று காந்தியும் கிண்டலடித்தார். உயிர்க் கைத்தடிகளான மனுபென் காந்தி, அபா இருவரின் தோள்களைப் பிடித்த வண்ணம் காந்தி மேடையை நோக்கி நடந்தார்.

     கூட்டத்திலிருந்த நாதுராம் கோட்சே கைகூப்பியவாறு காந்தியை நோக்கிக் குனிந்தான். அவன் காந்தியின் காலில் விழுவதாக நினைத்த மனு அவனைத் தடுக்க முயன்றார். மனுவைத் தள்ளிவிட்ட கோட்சே கால்சட்டைப் பையிலிருந்த 9 மி.மீ. பெரெட்டா கைத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினான். இரண்டு குண்டுகள் காந்தியின் வலது மார்பிலும் ஒரு குண்டு வயிற்றிலும் பாய்ந்தது. காந்தி நிலைதடுமாறி தரையில் சரிந்தார். மதவெறி வென்றது; இந்தியா தோற்றது.

(தொடரும்…)

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் மார்ச் 2024        

சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை

சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும்  அறவியல் பார்வை

மு.சிவகுருநாதன்

(நக்கீரனின்இயற்கை 24*7 – சுற்றுச்சூழல் வழிகாட்டி நூல்குறித்த அறிமுகப்பதிவு.)

         சூழலியல் கற்பிதங்களையும் அதன் பின்னாலிருக்கும் அரசியலையும் சூழலியல் அறத்தையும் 18 தலைப்புகளில் நுட்பமாகவும் சுருக்கமாகவும் அதே சமயம் மிகத் தெளிவாகவும் இந்நூலில் எழுதியிருக்கிறார் நக்கீரன்.  அறிவியல் என்ற பிரிவில்  ஆறாம் அழிவு, புடவி (பிரபஞ்சம்), உயிர்க்கோளம், பெருங்கடல், கடற்கரை, மணல், தண்ணீர், காற்று, ஒளியும் ஒலியும், காடு  ஆகிய 10 தலைப்புகளும்  அரசியல் பிரிவில்  மனிதர், நுகர்வு, மக்கள்தொகைப் பெருக்கம், நிதி அரசியல், சூழல் நீதி, ஃபேஷன் சுற்றுச்சூழல், குப்பை, சுற்றுச்சூழல் அரசியல்  ஆகிய 8 தலைப்புகளும்  இந்நூலில் இடம்பெறுகின்றன. இவையும் இவற்றினுள் இடம்பெறும் உட்தலைப்புகளும் நூலின் தன்மையை நமக்கு வெளிக்காட்டிவிடுகின்றன.  ஆறாம் அறிவு அழிவாக மாறுவதை எச்சரிக்கை செய்கிறது.

        ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உயிர் மூச்சு’ பகுதியில் சனிதோறும்  ‘இயற்கை 24×7’ என்ற தலைப்பில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். நக்கீரனின் நீர் எழுத்து, சூழலும் சாதியும், தமிழ் ஒரு சூழலியல் மொழி  போன்ற நூல் வரிசையில் இயற்கை 24×7க்கும் இடமுண்டு. ‘Save Nature’ என்ற போலிச் சூழலியல் முழக்கத்தை ஒரு சிறுமி தகர்ப்பதைச் சுட்டி நூல் தொடங்குகிறது. சூழல் அறத்தைப் பேசுவதால் அதனுள் இருக்கும் மோசடிகளையும் கற்பிதங்களையும் பேசாமல் இருக்க முடியாது. இதன்மூலம் சூழலியர் என்கிற போர்வையில் உலவும் பலரும் உள்பட கார்ப்பரேட்டுகளும் அரச முகவர்களும் அம்பலப்படுத்தப்படுகின்றன. இது சிலருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடும்; வேறு வழியில்லை.

              அரசு மற்றும் பெருவணிக நிறுவனங்களின் ‘சேஃப்டி வால்வ்’ ஆகப் பணியாற்றிய ‘சூழலியலின் அன்னா ஹசாரே’ என்று அப்துல்கலாமை மிகச்சரியாக கணிக்கிறார். கடுகு, கத்தரிக்காய் போன்று மனிதர்களை மரபணு மாற்றம் செய்து குறுமனிதர்களை உருவாக்கப் பரிந்துரைக்கும் அறிவியல் பரிந்துரை ஒன்றைக் குறிப்பிட்டு இயற்கையின் குரலை செவிமெடுக்கவும் வலியுறுத்துகிறார். இயற்கை, காடு எல்லாம் வளர்ச்சிக்குத் தடை என்று பொதுப்புத்தியில் பதியவைக்க பெருமுயற்சிகள் நடைபெறுகின்றன. இவ்வாறான எழுத்துகள் அவற்றுடன் போராடுகின்றன.

        ஜேம்ஸ் லவ்லாக்கின் ‘கையா: உலகே ஓர் உயிர்’, ரெய்ச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’, ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘சூழலியல் புரட்சி’, பரிதியின் மாந்தர் கையில் பூவுலகு மேலும் பில் பிரையன், ஜாரெட் டயமண்ட் போன்றோரின் நூல்கள் என சூழலியல் நூல்களின் கருத்துகள் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்படுவதன் வாயிலாக புதிய வாசகர்களுக்கு இவற்றை மேலதிகமாக வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

        நக்கீரன் வழக்கம்போல் இந்நூலிலும் பல்வேறு புதிய கலைச் சொல்லாக்கங்களை உருவாக்கியிருக்கிறார். புடவி (பிரபஞ்சம்), மிதவி (பிளாங்டன்), பொழி (கழிமுகம்), நளிரி (ஏ.சி.எந்திரம்), நளிர் அரங்கம் (ஏ.சி.ஹால்)  ஆகியவை அவற்றுள் சில. தமிழ் இலக்கியங்களில்ருந்து சிலவற்றை மீட்டெடுக்கிறார். (எ.கா) எக்கி (பரிபாடல்), எக்கர் – ஆழிக்கிணறு (நற்றிணை), நீரகம் (கொன்றை வேந்தன்). ‘மறைநீர்’ போன்று இவையும் தமிழ் வழக்கில் நிலைக்கட்டும்.

       சுமார் 28% உயிர்வளியைத் தரும் அமேசான் அல்லது மழைக்காடுகளை ‘உலகின் நுரையீரல்’ என்கிறோம். சுமார் 70% உயிர்வளி கொடுக்கும்  ‘புவியின் கருப்பை’ கடலை மறந்து குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டோம்.  “நீலம் இல்லையேல், பச்சை இல்லை”, என்ற சில்வியா எர்ல் கருத்தை வெகு  இயல்பாக அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

      கடற்கரை மணல் திட்டுகள், மணற்குன்றுகள், மணல் மேடுகள் நிலத்தடி நன்னீர் தடுப்புச் சுவராக மாறி கடற்கரைக்கு நன்னீரை வழங்குகின்றன. இந்த இயற்கைச் செயல்பாட்டை இறைவனின் கருணை என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை அழித்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் வணிகத்திற்கு (RO) அடிமையாகி விட்டோம்.

      நுண்மிகளில் தீ நுண்மி, நல் நுண்மி என்பதெல்லாம் மனித மையப்பட்ட பார்வை. இயற்கையை இவ்வாறெல்லாம் அணுக இயலாது. இதைப்போலவே சூழல் மாசுகளுக்கு மனிதனை மட்டும் பொறுப்பாக்கி கார்ப்பரேட் மற்றும் அரசுகளை விடுவிக்கும் முயற்சிகளில் ஃபேஷன் சூழலியர்கள் ஈடுபடுகின்றனர். ஃபோர்டு நிறுவனம் போன்ற பெருநிறுவனங்கள் நிதி வழங்குகின்றன என்பதை “ஃபண்டு இலையேல், தொண்டு இல்லை”, என்று எளிமையாக விளங்க வைக்கிறது நூல்.

        மரபு சார்ந்த சூழலியர் பயிரினம், விலங்கினம் மட்டிற்காக போராடுபவர்கள்; மரபுசாரா சூழலியர் அழிவிலிருக்கும் விளிம்புநிலை மக்களுக்காகவும் போராடுபவர்கள் என்பதையும் தற்போது மூன்றாவது வகையினராக ஃபேஷன் சுற்றுச்சூழல் சேவையாளர்கள் அதிகமாக உள்ளனர். ‘தூய்மை இந்தியா’வினர் இவ்வகையைச் சேர்ந்தவர்கள். காமன் மனிதரை பொறுப்பாக்கும் இவர்கள் கார்ப்பரேட் மனிதர்களைக் கண்டு கொள்ள மாட்டார். எனவே இவர்கள் யாருக்காக இயங்குபவர்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மரம் நடவும், விதைப்பந்து வீசவும், மிதிவண்டியில் செல்லவும், மின்சாரத்தை அணைக்கவும், மழைநீரை சேமிக்கவும் சொல்லும் இவர்கள் கார்ப்பரேட் குப்பைக்காடாக இந்தியா போன்ற நாடுகள் மாற்றப்படுவது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். இந்த ஃபேஷன் வருமானம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளதை நக்கீரன் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

        சுற்றுச்சூழல் கானகவியல் (Ecological Forestry), பசுமைப் பொருளியல் (Green Economics), சூழல் சாதியம் (Eco Castism), சார்பற்ற சுற்றுச்சூழலியம் (Secular Environmentalism)  போன்ற யாரும் கண்டுகொள்ளாத புலங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது.  உலக வங்கி, பன்னாட்டி நிதியம் எனும் அமெரிக்க வட்டிக்கடைகள் பற்றிய கூர்மையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. உலகவங்கி புகுந்த நாடும் ஐஎம்எஃப் புகுந்த நாடும் உருப்பட்ட வரலாறு இல்லை என்பதை அழுத்தத்திருத்தமாகப் பதிவு செய்கிறது.

       காற்று மாசு அமில மழைக்குக் காரணமாகிறது. ஸ்ட்ரான்சியம் 90 என்ற கதிரியக்கத் தனிமம் மண்ணில் நுழைந்து, நெல், கோதுமை போன்ற உணவுப் பயிரிகள் வழியே நம் உடலில்  ஊடுருவித் தங்குகிறது. இது நமக்கு புற்றுநோய் எனும் வாடகையைத் தருகிறது. இந்த வாடகை யாருக்கு வேண்டும்? என்கிற உயிர்ப்பான கேள்வியை நம்முன் வைக்கிறது இந்த நூல்.

           இயற்கை எனும் கணினி ஐந்து முறை டெலிட் பொத்தானை அமுக்கி இவ்வுலகை முழுமையாக அழித்ததை நினைவூட்டி நம்மை நூல் எச்சரிக்கிறது. வளிமண்டல வள்ளல், காடு ஒரு கார்பன் வங்கி என்ற தலைப்புகள் இயற்கையின் முதன்மையை விளக்குகின்றன. இவற்றுடன் கற்பிதங்களையும் பொய்மைகளை அகற்றப்பட வேண்டிய தேவையும் வலியுறுத்தப்படுகிறது. சூழலியல் குறித்த உலகின் மீது திணிக்கப்பட்ட கற்பிதங்களையும் மாயைகளையும் பல களங்களிலிருந்து தகர்க்கும் வேலையை நக்கீரன் சிறப்பாக தொடங்கியிருக்கிறார். இத்தகைய அறவியல்-அரசியல் பார்வை சூழலியல் போலிகளை அம்பலப்படுத்தவும் மக்களை விழிப்புணர்வூட்டவும் பெரிதும் உதவும்.

நூல் குறிப்புகள்:

இயற்கை 24X7 – நக்கீரன்

பக். 140, விலை: ரூ.170

முதல் பதிப்பு:  அக்டோபர் 2023

வெளியீடு:

காடோடி பதிப்பகம்,

6, வி.கே.என். நகர், நன்னிலம் – 610105,

திருவாரூர் – மாவட்டம்.

அலைபேசி:  8072730977

இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும்

இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந் இந்திய விடுதலைப் போரும்

(மகாத்மாவின் கதை தொடரின் பதினான்காவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்

              இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் (Allan Octavian Hume) முயற்சியால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். 1885 டிசம்பர் 28 பம்பாயில் நடந்த முதல் அமர்வில் உமேஷ் சந்திர பானர்ஜி முதல் தலைவராகத் தேர்வானார்.  அன்று காங்கிரஸ் தலைவர்கள் ராஷ்டிரபதி (President) என்றழைக்கப்பட்டார். ஆண்டுகொருமுறை புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. இந்த அமைப்பில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மாகாணங்களில் ஆங்கில அறிவு பெற்ற இந்தியர்கள் பங்கேற்றனர். முதல் அமர்வில் பங்கேற்ற 72 பேரில் 22 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1887இல் காங்கிரசின் மூன்றாவது மாநாடு பக்ருதீன் தியாப்ஜி தலைமையில்  மக்கீஸ் தோட்டம் என்றழைக்கப்பட்ட இன்றைய ஆயிரம் விளக்கில் நடைபெற்றது. அதில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். 

        காந்தி 1924இல் பெல்காம் (கர்நாடகா) அமர்வில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டு மட்டுமே தலைவராக இருந்தாலும் காங்கிரசை தன் முழுக் கட்டுப்பாட்டில் காந்தி வைத்திருந்தார். இந்திய விடுதலைப்போரின் இறுதிக் காலத்தில் அவரது பிடி தளர்ந்தது என்று சொல்லலாம். 1947 இந்திய விடுதலை வரை 61 தலைவர்கள் அப்பதவியில் இருந்துள்ளனர். விடுதலைக்கு முன்பு அதிகமுறை தலைவராக இருந்தவர் ஜவகர்லால் நேரு.

         நேதாஜி 1921இல் ஐ.சி.எஸ். பதவியை விட்டு விலகி இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைப் போரில் பங்கு பெற்றார். 1937இல் குஜராத் மாநிலம் ஹரிபுராவில் கூடும் காங்கிரசின் 51வது மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸ் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என்கிற செய்தி முன்கூட்டியே கசிந்தது. இதற்கு முன்னதாக நேதாஜி ஐரோப்பிய பயணம் ஒன்றை மேற்கொண்டார். காங்கிரஸ் தலைவராகத் தேர்வான பிறகு 1938 ஜனவரி இறுதியில் இந்தியா திரும்பினார். கல்கத்தாவில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நேதாஜி தலைவரானதால் வங்காளத்திலும் சமதர்ம தேசியவாதிகள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

         இந்திய விடுதலைப் போராட்டத் திட்டங்களான அகிம்சை, சத்தியாகிரகம், ஒத்துழையாமை, கீழ்படியாமை ஆகியன தீவிர சக்தியற்றவை, அமைதியான எதிர்ப்புகள் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்து அவை அர்த்தமும் தீவிரமும் கொண்ட போராட்ட வழிமுறைகள் என்றார் நேதாஜி. மேலும் வறுமை, கல்லாமை, அறிவியல் ரீதியான உற்பத்தி மற்றும் பங்கீடு போன்ற பிரச்சினைகள் சமதர்ம வழிமுறைகளின்படி தீர்க்கப்படும் என்றார். தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு ஜவகர்லால் தலைமையேற்கவும் அழைப்பு விடுத்தார். அதன்படி 1938இல் பம்பாயில் திட்டக்குழுவும் தொடங்கப்பட்டது.

        ரவீந்திரநாத் தாகூர் நவீன இந்தியாவை வடிவமைக்கும் சிற்பிகளாக ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரை மட்டுமே மிகச் சரியாக இனம் கண்டார். நேதாஜி விரும்பியபடி நேரு திட்டக்குழுத் தலைவராகப் பொறுப்பேற்ற நிலையில் நேதாஜி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்று விரும்பி காந்திக்கு கடிதம் கூட எழுதினார். ஆனால் காந்தியின் சாய்வு நேருவிடம் மட்டுமே இருந்தது.

           1938இல் பிரிட்டன் ஹிடலருடன் முறையற்ற வகையில் மியூனிச் ஒப்பந்தம் செய்துகொண்டதும் ஐரோப்பியப் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்பதை நேதாஜி தெளிவாக அறிந்திருந்தார். அந்தளவிற்கு உலக அரசியல் பார்வைகளை அவர் பெற்றிருந்தார். அதே காலத்தில் இந்தியாவில் தேசியப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி பூரண சுயராஜ்யக் கோரிக்கையை வன்மையாக முன்னெடுத்துச் செல்ல விரும்பினார். இதனை நாம் நீண்ட காலம் நடத்த வேண்டியிருக்காது; 18 மாதங்களில் நாம் விடுதலை பெற்றுவிட முடியும் என்று அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். கங்கிரசில் இருந்த இந்துத்துவ, வலதுசாரி சக்திகள் இதை விரும்பவில்லை. அவர்கள் நேதாஜிக்கு எதிராக அணிதிரட்டி அதில் வெற்றியும் பெற்றனர்.

      சிறிதும் சமரசமற்ற நரேந்திர தேவா போன்ற தலைவர்கள் காங்கிரஸ் தலைவராகத் தேர்வாகும் நிலை இருப்பின் தான் போட்டியிலிருந்து விலகிவிடுவதாக சுபாஷ் அறிவித்தார். ஆனால் அது நடக்கவில்லை. காந்தியும் நேதாஜி எதிர்ப்பாளர்களும் பட்டாபி சீத்தாராமய்யாவை வேட்பாளராக அறிவித்தனர். எனவே போட்டி உறுதியானது. காந்தி பட்டாபிக்கு அளிக்கும் வாக்கு தனக்களிக்கும் வாக்கு என்றுகூறி வாக்கு சேகரித்தார். ஆனால் இறுதியில் 200க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார். இதை காந்தியால் ஏற்க இயலவில்லை. பட்டாபியின் தோல்வி, தனது தோல்வி என்று வெளிப்படையாக அறிவித்தார். காந்தி  நேதாஜியுடன் உடன்பட மறுத்து முரண்பட்டு நின்றார். அம்பத்கருக்கு அடுத்து காந்தியுடன் எதிர் நிலைப்பாடு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் நேதாஜி. இப்பிரச்சினைகளில் நேரு நடுநிலை வகித்தார். இருப்பினும் காந்தியின் விருப்பத்தேர்வு நேருவாக இருந்ததால் இருவரும் உள்ளுக்குள் முரண்பட வேண்டி வந்தது. லாகூர் காங்கிரஸ் (1929) மகாத்மாவிற்கு மகத்தான வெற்றி என்றும் மிகவும் பிரபலமான தீவிரவாதிகளில் ஒருவரான ஜவகர்லால் நேருவை காந்தி வசப்படுத்திக் கொண்டதாக என்று நேதாஜி ‘இந்தியப் போர்’ எனும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

         இதற்கிடையில் சுபாஷ் சந்திர போஸின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.       1939 ஜனவரியில் காங்கிரஸ் மகாசபை மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் அருகே திரிபுரியில் (தவார்) கூடியது. உடல் நலமின்றி இருந்த நேதாஜி மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி படுக்கையில் இருந்துகொண்டே கூட்டத்தில் பங்கேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் சமரசத்திற்குத் தயாராக இல்லை. ஆலோசனைகள் கூறவும் காந்தி அங்கில்லை. அவர் ராஜ்கோட்டில் உண்ணாவிரதம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இக்கூட்டத்தில் கோவிந்த் வல்லப் பந்த் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. முந்தைய காங்கிரஸ் செயற்குழு மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் காந்தியைக் கலந்தாலோசித்து அவரது விருப்பப்படியே புதிய செயற்குழுவை அமைக்க வேண்டும் என்பதே இத்தீர்மானத்தின் சாரமாகும்.

       1939 பிப்ரவரியில் நேதாஜி காந்தியை வார்தா ஆசிரமத்தில் நேரில் சந்தித்து உரையாடினார். அப்போதும் அவர்களிடம் ஒத்த கருத்து ஏற்படவில்லை. நேதாஜிக்கு எதிராக பெரும்பாலான காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மொத்தமாகப் பதவி விலகினர். இந்நிலையில், “நீங்கள் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் என்னுடைய முழுத் திறமையுடனும் மகிழ்ச்சியுடனும் உங்களுக்கு உதவி செய்வேன். வேறொரு தலைவரின் கீழ் காங்கிரஸ் மேலும் நன்றாகப் போராட முடியும் என்று நீங்கள் நினைத்தால் நான் மகிழ்ச்சியுடன் விலகிக் கொள்வேன். நீங்கள் விரும்புகிறபடி ஒரு காரியக் கமிட்டியை அமைத்தால், காங்கிரஸ் நன்றாகப் போராட முடியும் என்பது உங்கள் கருத்தானால் நான் மகிழ்ச்சியுடன் உங்கள் விருப்பத்தை ஏற்றுக் கொள்வேன். நான் விரும்புவதெல்லாம் நீங்களும் காங்கிரசும் இந்த நெருக்கடியான நேரத்தில் உறுதியாக நின்று சுயராஜ்யப் போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே. என்னுடைய தனித்தன்மையை நான் அழித்துக் கொள்வது தேசியக் குறிக்கோளுக்கு உதவுமென்றால் அதற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்“, என்று நேதாஜி காந்திக்கு கடிதம் எழுதினார்.

       “நாட்டில் இப்போது இருப்பது போல் முன்னெப்போதும் அகிம்சை இருந்ததில்லை என்ற உங்கள் கருத்திலிருந்து நான் முற்றிலும் வேறுபடுகிறேன். நான் சுவாசிக்கும் காற்றில் வன்முறையின் வாசத்தை நுகர்கிறேன். ஆனால் வன்முறை ஒரு நுட்பமான வடிவமெடுத்துள்ளது. நம்மிடையே பரஸ்பரமாக உள்ள அவநம்பிக்கை வன்முறையின் ஒரு மோசமான ஒரு வடிவமாகும். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இடைவெளி விரிவடைந்து வருவதும்  இதைத்தான் குறிக்கிறது”, என்று காந்தி எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டார்.

     மேலும் காந்தி அக்கடிதத்தில், “இந்தச் சூழலில் அகிம்சை முறையில் மக்கள் திரள் நடவடிக்கை எடுக்கக்கூடிய  நிலையைக் காண முடியவில்லை. செயல்படுத்த முடியாத இறுதி எச்சரிக்கை கொடுப்பதும் பயனற்றதாகும். நான் உங்களிடம் கூறியதுபோல் எனக்கு வயதாகிவிட்டது. அதனால் பயந்த சுபாவமும் அளவுக்கு அதிகமான எச்சரிக்கை உணர்வும் வளர்ந்துள்ளன. உங்களிடம் இளமை காரணமாக அச்சமற்ற நம்பிக்கை உணர்வும் உள்ளன. உங்கள் கருத்து சரியானது, எனது கருத்து தவறானது என்றே நம்ப விரும்புகிறேன். ஆயினும், காங்கிரஸ் இப்போதுள்ள நிலையில் பலனுள்ள முறையில் செயல்பட முடியாது என்றும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் சட்டமறுப்பு நடத்த முடியாது என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். எனவே உங்கள் கணிப்பு சரியாக இருந்தால் நான் காலம் கடந்தவனாகிவிட்டேன். சத்தியாகிரகத்தின் உயர் தலைவர் பங்கைச் செய்து முடித்தவாகி விட்டேன் என்றே கொள்ள வேண்டும்”, என்றும் எழுதுகிறார்.

      1939 ஏப்ரல் இறுதியில் காங்கிரஸ் மாநாடு கல்கத்தாவில் கூடவிருந்தது. அதற்கு முன்னதாக காந்தியும் நேதாஜியும் ஒருமுறை சந்தித்து இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஜவகர்லால் நேருவும் ராஜேந்திர பிரசாத்தும் உடனிருந்தனர். இதிலும் எவ்வித முடிவும் ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. காந்தி நேதாஜியுடன் ஒத்துழைக்க மறுத்தும் பந்த் தீர்மானத்தின்படி காரியக் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பதில் காலம் தாழ்த்தியும் வந்தார்.  இதனால் மாநாட்டில் தொடக்க நிலையிலேயே நேதாஜி தனது பதவி விலகலை அறிவித்தார். அவரது அனுபவங்கள் வாயிலாக நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, கட்டுப்பாடான இடதுசாரிகள் ஒற்றுமையே தற்போது தேவையென உணர்ந்தார். 1939 ஜூன் 22இல் பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கி அதன்மூலம் இடதுசாரிகளை ஒருங்கிணைக்கவும் முடிவெடுத்தார்.

        வலதுசாரிகளுக்கும் நேதாஜிக்கும் மிக்க்கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்ற சூழலில் 1939 ஜனவரியில் சாந்தி நிகேதனில் தாகூர் நேதாஜிக்கு வரவேற்பளித்தார். தாகூரின் உரையில் நேதாஜியை ‘தேச நாயக்’ (தேசத்தின் தலைவர்) பட்டம் சூட்டினார். கருத்து முரண்பாடு ஏற்பட்டபோதிலும் காந்தி நேதாஜி இருவரும் தாய்நாட்டைப் போலவே   ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புடன் இருந்தனர். 1940 ஜூனில் பார்வார்டு பிளாக் கட்சியின் இரண்டாவது மாநாடு நாக்பூரில் நடந்தது. நாக்பூரிலிருந்து கல்கத்தா திரும்பும் வழியில் சேவா கிராமத்தில் நேதாஜி காந்தியைச் சந்தித்தார். அப்போதும் தேசியப் போராட்டத்திற்கு காந்தியைத் தலைமை தாங்க வேண்டினார். காந்தி அதற்கு உடன்படவில்லை. நேதாஜி தனது மனச்சாட்சிக்கும் கருத்துகளுக்கும் ஏற்ற வகையில் செயல்பட உரிமையுண்டு என்ற காந்தி, அவரது வழிமுறைகள் மூலம் நாடு விடுதலை பெற்றால் வாழ்த்தும் முதல் நபராக நானிருப்பேன், என்றார் காந்தி.

      1939இல் உலகப்போர் தொடங்கியது. மதராஸ், பம்பாய், மத்திய மாகாணங்கள், ஒடிசா, பீகார், ஐக்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், அசாம் பள்ளத்தாக்கு (சர் முகம்மது சாதுல்லாவுடன் கூட்டணி) ஆகிய மாகாணங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியையும் அமைச்சரவையையும் கலந்தாலோசிக்காமல் பிரிட்டன் இந்தியாவை போரில் ஈடுபடுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முடிவுப்படி அமைச்சரவைகள் பதவி விலகின.

        அப்போது அரசப் பிரதிநிதியாக இருந்த லின்லித்கோ இந்தியர்களை சமாதானப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் தன்னாட்சி (டொமினியன்) தகுதி வழங்கப்படும் என்றார். காலக்கெடு இல்லாத இந்த வரையறையை காந்தி ஏற்க மறுத்தார். எனவே ஒருசிலர் மட்டும் பங்கேற்கும் வரையறைக்குட்பட்ட தனிநபர் சத்தியாகிரகத்தை அறிவித்தார். 1940 அக்டோபர் 17இல் வினோபா பாவே தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது. 25000க்கு அதிகமானோர் கைதாகி சிறை சென்றனர்.

       அன்றைய போர்ச் சூழலிலும் அதிகாரத்தை விட்டுத்தர பிரிட்டன் விரும்பவில்லை. 1942 மார்ச் 22இல் கேபினட் அமைச்சர் சர் ஸ்ட்ராஃபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது. இதுவே கிரிப்ஸ் குழு என அழைக்கப்பட்டது. காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போருக்குப் பின்னர் தன்னாட்சி அளிப்பது, போரின்போது பாதுகாப்பு பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருப்பது, பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய இளவரசர்கள் பிரிட்டனுடன் தனி ஒப்பந்தம் செய்வது போன்ற அறிவிப்புகள் வெளியாயின. இரு கட்சிகளும் இதனை ஏற்க மறுத்தன. திவாலாகும் வங்கி அளிக்கும் பின் தேதியிட்ட காசோலை என காந்தி இத்திட்டத்தை விமர்சனம் செய்தார்.  

       கிரிப்ஸ் தூதுக்குழுவினால் ஏமாற்றமடைந்த மக்கள் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட விலைவாசி உயர்வினாலும் அவதிப்பட்டனர். 1942 ஆகஸ்ட் 7 மற்றும் 8 தேதிகளில் பம்பாயில் கூடிய காங்கிரஸ் கமிட்டி பிரிட்டன் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் (Quit India) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இது ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. பொறுமை இழந்த காந்தி “செய் அல்லது செத்துமடி” (Do or Die) என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் பொருள் காந்தி அகிம்சையைக் கைவிட்டார் என்பதல்ல. தன்னை அழித்துக் கொள்ளும் சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாகவே இதைக் கண்டார். “இயக்கம் தொடங்கிய பிறகு ஒவ்வொருவரும் அகிம்சைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு முழு வீச்சுடன் இறுதிவரைப் போராடத் தயாராகுமாறு”, காந்தி அறைகூவல் விடுத்தார்.

        வைஸ்ராய் லின்லித்கோ பிரபுவை நேரில் சந்தித்து காங்கிரஸ் கோரிக்கைகளை ஏற்குமாறு மன்றாடுவேன். அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். அதுவரை பொறுத்திருங்கள், என்று மக்களுக்கு காந்தி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு உடனடியாக செயலில் இறங்கியது. மறுநாள் ஆகஸ்ட் 9 அன்று விடியற்காலையிலேயே காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். காந்தி பூனாவில் ஆகாகான் மாளிகையில் காவலில் வைக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது.

         இயக்கம் தொடங்குவதற்கு முன்னதாக பம்பாய் சிவாஜி பூங்காவில் காந்தி பேசுவதாக இருந்தது. ஆனால் காந்தி தடுப்புக் காவலில் இருந்தார். அந்தக் கூட்டத்திலும் போராட்டங்களிலும் கஸ்தூரிபா பங்கேற்றார். அவரும் கைதாகி பம்பாய் ஆர்தர் சாலை சிறைக்கு அனுப்பப்பட்டார். நுரையிரல் மற்றும் மூச்சுக்குழல் அழற்சியால் அவதிப்பட்ட கஸ்தூரிபா உடல்நலம் குன்றியதும் காந்தி சிறை வைக்கப்பட்டிருந்த ஆகா கான் மாளிகைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி 1944 பிப்ரவரி 22 இல் தடுப்புக் காவலில் காலமானார். மறுநாள் அங்கேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கஸ்தூரிபா இறப்பதற்கு முன்னர் காந்தி 1943 பிப்ரவரி 10 தொடங்கிய உண்ணாநோன்பு  மார்ச் 3 முடிய  21 நாள்கள் நீடித்தது.

         தலைவர்கள் அனைவரும் சிறைபட்ட நிலையில் பொதுமக்கள் சீற்றத்துடன்  பொங்கியெழுந்தனர். இதுவரை காங்கிரஸ் போராட்டங்களில் கண்டிராத வகையில் வன்முறைகள் தலை விரித்தாடின. பிரிட்டிஷ் அரசு கடும் அடக்குமுறைகளை கையாண்டது. இக்கலவரங்களுக்கான முழுப்பொறுப்பையும் சிறையில் இருந்த தலைவர்கள் மீது சுமத்தியது.

      காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைதானதைத் தொடர்ந்து சோசலிஸ்ட்கள் இயக்கத்திற்கு தலைமையேற்றனர். ஜெயப்பிரகாஷ் நாராயண், அருணா ஆசப் அலி, ராமாநந்த் மிஷ்ரா, உஷா மேத்தா போன்ற பலர் இயக்கத்தை வளர்த்தெடுத்தனர். நாடெங்கும் வன்முறைகள் வெடித்தன. வேலைநிறுத்தம், மறியல், ஆர்ப்பாட்டம் என வெகுமக்கள் போராட்டம் எங்கும் நடந்தது.

       இந்திய தேசியத் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட பலர் இந்துத் தலைவர்களாக இருந்தனர். காந்தி, நேரு எதிர்பார்த்த மதச்சார்பின்மை, மத சகிப்புத்தன்மை இல்லாது போயிற்று. எனவே பிரிவினையைத் தடுக்க முடியவில்லை. நேருவுடன் சேர்ந்து நவீன இந்தியாவின் முகமாக அறியப்பட்ட முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை கையில் எடுக்க வேண்டிய சூழல் உருவானது.

       நேதாஜியால் வழிநடத்தப்பட்ட இந்திய தேசிய ராணுவம் ஜப்பான் உதவியுடன் ‘தில்லி சலோ’ முழக்கத்துடன் இந்தியாவை நோக்கி முன்னேறியது. 1945 ஆகஸ்ட் 15இல் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததும் நேதாஜி விமான விபத்தில் மரணமடைந்ததும் ஐ.என்.ஏ.வின் பணிகள் முடிவுக்கு வந்தன.

        1946 பிப்ரவரியில் ராயல் இந்திய கடற்படை கிளர்ச்சி பம்பாயில் தொடங்கி அனைத்து இடங்களுக்கும் பரவியது. விமானப்படையிலும் வேலை நிறுத்தங்கள் தொடங்கின. ஆயுதப்படைகளையும் பிரிட்டனால் கட்டுப்படுத்த இயலவில்லை. இத்தகைய பின்னணியில் இந்தியாவிற்கு விடுதலை அளிப்பதைத் தவிர பிரிட்டனுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை.

       1945 ஜூன் 14 வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது. சிம்லா மாநாட்டில் காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் உடன்பாடு எட்டவில்லை. பிரிட்டனில் தொழிற்கட்சியின் கிளமண்ட் அட்லி பிரதமரானார். அமைச்சரவைத் தூதுக்குழு அனுப்பப்பட்டு அனைத்து சமூகப் பங்கேற்புடன் இடைக்கால அரசு அமைக்க முடிவானது. 1946 ஆகஸ்ட் 16ஐ நேரடி நடவடிக்கை நாளாக  முஸ்லீம் லீக்கின் தலைவர் ஜின்னா அறிவித்தார். இதன் மூலம் இந்து-முஸ்லீம் மத மோதல்கள் பெருமளவில் நடந்தன. வங்காளத்தின் பல மாவட்டங்களில் கலவரங்கள் பரவின. தற்போதைய பங்களாதேஷில் உள்ள நவகாளி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பீகாருக்கும் கலவரம் பரவியது. காந்தி நவகாளி யாத்திரை தொடங்கினார். 1946 அக்டோபர் 10 இல் தொடங்கி சில மாதங்கள் நடந்த இந்த யாத்திரை மூலம் இந்து-முஸ்லீம் கலவரங்களைத் தடுத்து நிறுத்தி அப்பகுதியை அமைதிப்படுத்தினார். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கான் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்றார். காந்தியுடன் சிலர் மட்டுமே யாத்திரையில் கலந்துகொள்ள, வங்க மொழிபெயர்ப்புக்காக பேரா.நிர்மல்குமார் போஸ் காந்தியுடன் சென்றார். அம்மாவட்டத்திலுள்ள சுமார் 60 கிராமங்களுக்கும் செருப்பின்றி நடந்து சென்று மக்களை அமைதிப்படுத்தினார்; அவர்களிடம் நம்பிக்கை கீற்றை உண்டாக்கினார். பல்லாயிரம் வீரர்களால் கட்டுப்படுத்த முடியாத கலவரத்தை அடக்கிய ஒற்றை வீரர் என காந்தியை மவுண்ட்பேட்டன் புகழ்ந்தார்.

        ஜவகர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. பின்னர் முஸ்லீம் லீக்கும் இடைக்கால அரசில் இணைந்தது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணய சபையும் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்ட வரைவுக் குழுவும் அமைக்கப்பட்டன. இந்திய விடுதலைக்கான பாதை அதன் இறுதிக் கட்டத்தை எட்டியது.

           அதிகார மாற்றத்தை கிளமண்ட் அட்லி உறுதி செய்தவுடன் அதற்கு இறுதிவடிவம் கொடுக்க மவுண்ட்பேட்டன் பிரவு இந்திய அரசப் பிரதிநிதியாக  அறிவிக்கப்பட்டார். அவரது திட்டத்தின் கீழ் இந்தியா யூனியன் மற்றும் பாகிஸ்தான் உருவாக வழிவகை செய்யப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14இல் பாகிஸ்தானும்  மறுநாள் ஆகஸ்ட் 15 இந்திய யூனியனும் உதயமாயின. மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்குப் பதிலாக நாட்டின் பெரும்பகுதி ரத்தக் களரியானது. காந்தி, நேரு போன்ற அகிம்சையாளர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவில்லை.

        125 ஆண்டுகள் வாழும் விருப்பத்தை இந்த வன்முறைச் சூழலில் கைவிடுவதாக காந்தி அறிவிக்கும் அளவிற்கு சூழல் துயரமாக இருந்தது. இந்தியா விடுதலை அடைந்த நிகழ்வில் பங்கேற்க காந்தி தில்லியில் இல்லை. நவகாளி யாத்திரைகளுக்குப் பின் கல்கத்தாவில் தங்கிருந்து மக்களின் காயங்களுக்கு மருந்தாக இருந்தார். 1947 செப்டம்பர் 9 அன்று தொடர்வண்டி மூலம் தில்லி வந்த காந்தியை வல்லபாய் பட்டேல், ஜவகர்லால் நேரு ஆகியோர் சந்தித்து பிரிவினைக் கலவரச் சூழலை எடுத்துக்காட்டினர்.

        அரசுடன் இணைந்து சமாதான முயற்சிகளை மேற்கொண்டார். பல்வேறு பிரார்த்தனைக் கூட்டங்களை நட்த்தினார். வானொலி முலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவிலிருந்து முஸ்லீம்களும் பாகிஸ்தானிலிருந்து இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தொடர்ந்து அகதிகளாக வெளியேறினர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய்க் கொண்டிருந்தது.

       ஜின்னா மக்களைப் பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என காந்தி வலியுறுத்தினார். அதே சமயம் இந்தியாவும் நியாயமாக நடக்க வேண்டும் என்றார். பிரிவினையின்போது பிரிக்கப்பட்ட சொத்துகள் 75 கோடியில் முதன் தவணையாக 20 கோடி வழங்கப்பட்ட நிலையில் மீதி 55 கோடியை வழங்க வலியுறுத்தினார். பாகிஸ்தானுடன் இணக்கமாக இருக்கவும் இங்குள்ள மக்கள் அவரவர் மத உரிமையுடன் சமாதானச் சகவாழ்வு வாழ்வதை காந்தி விரும்பினார். இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ  அமைப்புகளும் ஆதிக்கச் சக்திகளும் இதனை விரும்பவில்லை. அவர்கள் வன்முறையை நேசித்தனர். அகிம்சையை நேசித்த காந்தியை அகற்றி தொடர்ந்து வன்முறைகளை வளர்க்க அவர்கள் முடிவு செய்தனர்.

(தொடரும்…)

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் – பிப்ரவரி 2024

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் 

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும்

(மகாத்மாவின் கதை தொடரின் பதிமூன்றாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்

               காந்தி அரசியல் பணிகளுடன் சமூகப்பணிகளையும் இணைத்தே செயல்படுத்தினார். அரசியல் விடுதலையுடன் சமூக, பொருளாதார விடுதலையும் பெற வேண்டும் என்பதில் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். நிர்மாணத் திட்டங்கள் என்று பெயரில் பல்வேறு காலகட்டங்களில் இவற்றை முன்னெடுத்துச் சென்றார். கதர் பரப்புரை, மதுவிலக்கு, வார்தா (ஆதார) கல்வித் திட்டம், தீண்டாமை ஒழிப்பு, முதியோர் கல்வி, நலக்கல்வி, கிராம சுகாதாரம், கிராமத் தொழில்கள், பொருளாதார சமத்துவம், பெண்கள், விவாசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றம், தேசியமொழியாக இந்துஸ்தானி போன்றவற்றிற்கு  நிர்மாணத்திட்டங்களில் இடம் கிடைத்தது.

        மதுவிலக்கு 1920களிலிருந்து காங்கிரஸ் செயல்திட்டத்தில் இடம்பெற்ற ஒன்று. இதில் காங்கிரசார் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற வருத்தம் காந்திக்கு இருந்தது. மருத்துவத்துறையில் உள்ளவர்கள் இந்தத் தீமையைப் போக்க பெரிதும் பங்களிக்கலாம். இவற்றை விரைவுபடுத்துவதில் பெண்கள் மற்றும் மாணவர்களின் பங்கு முக்கியமானது என்றும் காந்தி மதிப்பிட்டார். 

        அப்போது காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் 1921இல் சேலத்தில் கள்ளுக்கடை மறியலை முன்நின்று நடத்தினார். தனது தென்னந்தோப்பிலுள்ள கள் இறக்கப் பயன்பட்ட 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற பின்னர் அவரது இணையர் நாகம்மாளும்  சகோதரி கண்ணம்மாளும் மறியலைத் தொடர்ந்தனர். அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றில் மறியலை நிறுத்துமாறு கேட்டபோது, அது என் கைகளில் இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பெண்களின் (நாகம்மாள், கண்ணம்மாள்) கைகளில் உள்ளது என்று காந்தி பதிலளித்தார்.

         தந்தை பெரியார் காங்கிரசின் இருந்த கால கட்டத்தில் (1919-1924) கதர்ப் பரப்புரை, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றில் முன்னணி வீரராக களத்தில் செயல்பட்டார். ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை முன்னேற்ற வகுப்புவாரி இடஒதுக்கீட்டைக் கோரினார். காந்தியும் காங்கிரசும் அதற்குத் தயாராக இல்லாதபோது 1925இல் சுயமரியாதை இயக்கம் கண்டார். இம்மாதிரியான கருத்தியல் கொண்ட தலைவர்கள் அன்று காங்கிரசில் இல்லை. காங்கிரசின் பல்வேறு செயல்பாடுகள் உள்ளும் புறமுமான வேறுபாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியில் செயல்பட்ட வ.வே.சு.அய்யரின் ஆசிரமத்தில் சாதிப்பாகுபாடு காட்டப்பட்டது. அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் சாதி பற்றிய பார்வையும் அணுகுமுறையும் காந்தியின் பார்வையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. காந்தி உயர்த்தப்பட்ட வர்க்கத்தினரிடம் சாதி, தீண்டாமை குறித்து மென்மையான மொழியில் பேசவேண்டியிருந்தது. மாறாக அம்பேத்கரும் பெரியாரும் அடித்தட்டு மக்களிடம் உண்மைகளை எளிமையாக உணர்த்தினர்.

         கதரை ஆதரித்துப் பரப்புரை செய்வது, சுதந்திரக் கப்பலை கடற்காற்றுக்கு எதிராக செலுத்தி மூழ்கடிக்கும் செயல் என்றும் தேசத்தை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சி எனவும் விமர்சிக்கப்பட்டது. சுதேசி மனப்பான்மையை வளர்க்கவும் இந்தியாவிற்குத் தேவையானதை இந்தியாவிலேயே அதுவும் கிராமங்களில் கிடைக்கும் உழைப்பு மற்றும் திறமையைக் கொண்டு தற்சார்பு அடைவதை கதர் உணர்த்துகிறது என்றும் காந்தி பதிலளித்தார்.

         இந்து மதத்தையும் அதன் சனாதன தர்மத்தையும் காந்தி முழுமையாக ஏற்றார். அவர் தன்னை ஒரு சனாதனி என்று வெளிப்படையாக அறிவித்தார். வர்ணத்தின் அடிப்படை தொழிலைக் குறிக்கிறது என்று நால் வர்ணத்தை ஏற்ற காந்தி சாதியை சமூகத் தீமையாக இனம் கண்டார். தீண்டாமைக்கு மத சம்மந்தம் கிடையாது. அது சாத்தானின் சூழ்ச்சி. அது இந்து மதத்தின்  பாகமில்லை. ஒருவேளை தீண்டாமை இந்து சமயத்தின் ஒருபகுதி என்றால் நான் இந்துவாக இருக்க முடியாது என்று அறுதியிட்டார்.  இந்து மதம், சனாதன, வர்ண தர்மம் குறித்து காந்தி அளிக்கும் விளக்கங்கள் ஆழமானப் புரிதலின்றி சற்று மேம்போக்காக அமைந்திருந்தன. அம்பேத்கர், பெரியார் போன்றோர் இதைச் சற்றுக் கடுமையாகவே எதிர்கொண்டனர்.

          தீண்டாமை விலக்கு என்பதன் பொருள் ஐந்தாவது சாதியை ஒழித்தல் என்கிறார். நான்கு வர்ணங்களும் ஆதாரமானவை; இயற்கையானவை. இவற்றை அழிக்க முயன்றால் நான் எதிர்ப்பேன் என்றும் சூளுரைத்தார். இது தீங்கிழைக்கும் ஏற்பாடு என்பதை காந்தி ஒத்துக் கொள்ளவில்லை. அது உற்பத்தியான காலத்தில் ஒரு நல்ல வழக்கமாக தேசிய நன்மைக்கு உதவி செய்தது. உடன் உண்ணலும் உடன் விவாகம் செய்வதும் தேசிய முன்னேற்றத்திற்கு அவசியம் என்பது மேலைநாட்டிலிருந்து வந்த தப்பெண்ணமாகும் என்றும் கருதினார். அவ்வாறு மணம் செய்தாலும் வர்ண அமைப்புக்கு கேடு ஏற்படாது என்றார். வர்ண அமைப்பு பிறப்புடன் தொடர்புடையது. அதனைப் பின்தொடர்வது இந்துக்களின் கடமை என்றார்.  

         ஐந்தாவது வர்ணமாக கூறப்பட்ட பஞ்சமர்கள் தீண்டத்தகாதவர்  ஆயினர். ஆலயங்களில் நுழைய நாலாம் வர்ணத்தார் சூத்திரர்களுக்கும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதே உண்மைநிலையாகும். ஆனால் காந்தியின் பார்வைக் கோணம் வேறாக இருந்தது. உண்மையான தேசிய சட்டசபை என் கைவசம் இருப்பின், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனியாக நல்ல கிணறுகளையும் அவர்கள் குழந்தைகள் கல்வி பயில நல்ல பள்ளிக்கூடங்களையும் கட்டி இந்துக்களின் அகங்காரத்தையும் குறும்பையும் அடக்குவேன். அந்த நாள் வரும் வரையில் காத்திருக்க வேண்டுமென்றார். இருப்பினும் அதுவரையில் என்னால் முடிந்த பணிகளை பஞ்சம சகோதரர்களுக்காக செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொதுவான கிணறு என சமத்துவம் வழங்க வேண்டும் என எதிர்க்குரல் எழுந்ததில் வியப்பில்லை. 

        தலித்களின் முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள் உண்டு. அவசரப்பட்டு தற்போதைய முதலாளியாகிய ஆங்கில அரசின் உதவியை நாடலாம். அப்படிக் கிடைக்கும் உதவி பொறிக்கும் சட்டியை விட்டு தீயில் விழுவதைப் போன்றது. அவர்கள் இந்து மதத்தை வீடு இஸ்லாம் அல்லது கிருஸ்தவ மதத்தை தழுவலாம். உலக நன்மைக்காக மதம் மாறுவதை ஆதரிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கைத் துயரங்கள் இதற்குச் சரியான காரணமாக அமையாது. மூன்றாவது வழி ஒத்துழையாமை அம்சங்களைக் கைக்கொண்டு பிறர் உதவியின்றி தமது காரியத்தை தாமே செய்துகொள்ளுதல் என்பதையே காந்தி ஆதரித்தார். தேச விடுதலைக்கு மட்டும் முதன்மையளித்து பிறவற்றை படிப்படியாக சரிசெய்து கொள்வது என்கிற நிலைப்பாடும் இதிலிருந்தது.

           பிராமணர்கள் மீது குற்றம் சுமத்துவதை காந்தி விரும்பவில்லை. வேறு எவரைவிடவும் கோகலே, ரானடே, திலகர் போன்ற பிராமண வகுப்பில் பிறந்த தலைவர்களை தன்னலமற்ற சேவைக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார். இவர்களைப் போன்றும் தம்மைப் போன்றும் எல்லோரும் அறவுணர்வுடன் செயல்படுவார்கள் என்று காந்தி நம்பினார். ஆனால் உயர்த்தப்பட்ட வர்க்கத்திருந்த பெரும்பாலானோர் அவ்வாறு இல்லை என்பதை காலம் அவருக்கு உணர்த்தியது.

        ஒவ்வொரு சாதி இந்துக் குடும்பமும் தாழ்த்தப்பட்ட ஆணையோ அல்லது பெண்ணையோ தனது குடும்பத்திற்குள் அழைத்துக் கொள்ள வேண்டும். வசதி உடையவர்கள் அவர்களை மேற்படிப்பிற்கு அனுப்ப முன்வரவேண்டும் என்றெல்லாம் காந்தி சொன்னார். வர்ணத்தை எவ்வளவுதான் கட்டிக் காத்தாலும் சாதி இந்துக்கள் காந்தியுடன் உடன்படப் போவதில்லை என்கிற கசப்பான உண்மையை  அவர் பின்னாளில் எதிர்கொள்ள நேரிட்டது.

          காங்கிரசின் ஆலய நுழைவுப் போராட்டங்கள் உள்ளார்ந்த உணர்வுடன் அன்றி எதோ பெயரளவிலும் சில இடங்களில் மோசடியாக குறுக்குவழியிலும் நடந்தது தலித்கள் மத்தியில் அவநம்பிக்கை உண்டாகக் காரணமாயிற்று. 1930இல் நாசிக் அருகே கலாராம் என்னுமிடத்தில் அம்பேத்கர் மேற்கண்ட ஆலய நுழைவுப் போராட்டம், தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் மேற்கொண்ட போராட்டங்களைப்போல காங்கிரசால் செய்ய முடியாமற்போனது அதிலுள்ள ஆதிக்க சக்திகளின் நிலைப்பாட்டை எடுத்துக் காட்டியது.

        1935இல் அம்பேத்கர் தன்னுடைய பெருந்திரள் மதமாற்ற அறிவிப்பை வெளியிட்டார். அவரது இந்து மதம் குறித்த விமர்சனத்தை இந்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அவரை இந்துவாக இருக்க வேண்டி யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றார். அவரை மதமாற வேண்டாம் என்று வலியுறுத்துவதற்குப் பதிலாக தீண்டாமை ஒழிப்பை தீவிரமாக்க வேண்டும் என்றார். பிற மதங்கள் இதைத் தங்களைச் சாதகமாக மாற்றி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி விடுவார்கள் என்கிற அச்சமும் காந்திக்கு இருந்தது.

          அடுத்த பிறப்பில் தலித் அல்லது பங்கியாக (தூய்மைப் பணியாளர்) பிறக்க வேண்டும் என்ற பேராவல் காந்திக்கு இருந்தது. இன்றுள்ள நீரைப் பயன்படுத்தும் நவீனக் கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லாத நிலையில் மலத்தை கைகளால் அள்ளி அகற்ற வேண்டியிருந்து. அப்பணிகளில் காந்தி செய்ததோடு தனது குடும்பத்தினர், ஆசிரமவாசிகள், தொண்டர்கள் என அனைவரையும் அப்பணிகளில் ஈடுபடத் தூண்டினார். கிராமம் மற்றும் நகரங்களில் தெருவோர மனிதக்கழிவுகளை அகற்றும் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட இவர்கள் அதுகுறித்த  பரப்புரைகளிலும் ஈடுபட்டனர்.

        அரிசன சேவை என்பது தீண்டாமைக் களங்கத்தை நீக்குவதாகும். தலித்கள் தங்களைத் தாமே தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாதி இந்துக்களிடம் காணப்படும் தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். குழந்தைத் திருமணங்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சாதியொழிப்பின் வழிகளை ஆராய்ந்து வெளிப்படுத்திய அம்பேத்கர், வேறு வழிகளில் பயணித்த காந்தியும், காங்கிரசும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்தது என்ன? எனக் கேள்வி எழுப்பினார். இந்து மதத்திலிருந்து தன்னை முற்றிலும்  விடுவித்துக் கொள்ள இயலாத காந்தி, தன் இறுதிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பூசாரிகளால் நடத்தப்படும் திருமணம், மணமக்களில் ஆணோ, பெண்ணோ தாழ்த்தப்பட்டவராக இருக்கும் நிகழ்வுகளில் மட்டும் தான் கலந்துகொள்ள விரும்புவதாகவும் பிற மண நிகழ்ச்சிகளுக்கு தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதையும் விளங்கிக் கொண்டால் அவரது மனமாற்றத்தை உணரலாம்.   அவர் தன்னை சனாதனி என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டாலும் வ.வே.சு. அய்யர், சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற சனாதனிகளிடமிருந்து வேறுபடுத்தி அணுக வேண்டிய தேவை உள்ளதை ஏற்கத்தான் வேண்டும். எதை வைத்து இந்திய மக்களை ஒன்றுபடுத்திவிடலாம் என்று காந்தி நினைத்தாரோ அதுவே அவரது உயிரையும் பறிக்கக் காரணமாக அமைந்ததையும் மறுக்க இயலாது. 

           பிரிக்க முடியாத உள்ளங்களை இணைவதை வகுப்பு ஒற்றுமை குறிக்கிறது. இதை அடைய ஒவ்வொரு காங்கிரசாரும் தமது சமயம் எதுவாக இருப்பினும் தம்மை ஒரு இந்து, இஸ்லாமியர், சொராஸ்ட்ரியர் (பார்சி), யூதர் என்று பாவித்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு இந்துவும் தம்மை இந்து அல்லாதவராக உணர வேண்டும். பிற மதத்தினரிடம் நட்பையும் அன்பையும் வளர்க்க வேண்டும். தனது  சமயத்திற்கு அளிக்கும் மரியாதையை பிற சமயங்களுக்கும் வழங்க வேண்டும், என்றெல்லாம் காந்தி விரும்பினார்.

           சட்டமன்றங்கள் மூலமே அதிகாரம் கிடைக்கிறது என்று நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். உண்மையில் அதிகாரம் மக்களிடமே உள்ளது. நமது இந்தியாவில் ஒரு செயற்கைத்தனமான இணக்கமின்மையை அதாவது தனித் தொகுதிகளை உண்டாக்கி நாடாளுமன்ற முறையை அமல் செய்வதாக பாசாங்கு செய்கிறோம். இத்தகைய செயற்கைத்தனங்களால் உயிர்த்துடிப்பான ஒற்றுமை மலருமா? என்று வினாவை எழுப்புகிறார். தனித்தொகுதி மக்களைக் கூறு போட்டுவிடும், மக்கள் இணக்கமாக ஒருவர் மற்றவரை ஏற்கும் நிலை வரவேண்டும், அதற்கு நம்மையும் சமூகத்தையும் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் வெகுவாக பிளவுண்ட இந்திய சமூகத்தை எளிதில் ஒட்டகூடிய பசை அவருக்கு இறுதிவரை கிடைக்கவில்லை. தேசிய மொழி (இந்துஸ்தானி) ஒன்றை முன்னிறுத்தினார்; இன்று அந்த இடத்தையும் இந்தி கைப்பற்றிவிட்டது.

       தமிழ்நாட்டு சனாதனிகள் காந்தியின் தமிழக வருகையின்போது தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 1934 பிப்ரவரி 16இல் இரண்டாவது அரிசன யாத்திரைக்காக காந்தி சிதம்பரம் வந்தபோது சிதம்பரம் கோயிலின் நான்கு வாயில்களும் அடைக்கப்பட்டன. “காந்தியே நீர் போம்”, என்ற துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. ஶ்ரீரங்கத்திலும் “வராதே காந்தி! ஓடிப்போ காந்தி!! பேசாதே காந்தி!!!”, என்ற தலைப்பில் துண்டறிக்கை வெளியானது. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மா.நீலகண்ட சித்தாந்தியார் என்பவர் ‘தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்  (தடை) என்னும் 67 பக்க நூலை வெளியிட்டார். மிகக் கொடிய வசைமொழிகளைப் பயன்படுத்தி இந்நூல் எழுதப்பட்டிருந்தது. மதுரையில் நடந்த தமிழ் சனாதனிகள் மாநாட்டின் தலைவராக இருந்த பூரி சங்கராச்சாரியார், “காந்தி சனாதனியுமல்ல, வர்ணாஸ்ரம தர்மத்தைக் கடைப்பிடிப்பவருமல்ல. வேதங்களிலோ, ஆலயங்களிலோ அவருக்கு நம்பிக்கை இல்லை”, என்றார். இந்து சனாதனம் காந்தியை இவ்வாறாகத்தான் எதிர்கொண்டது.

       “அகிம்சை, சத்தியாகிரகம், சர்வோதயம் என்ற காந்திய மும்மைக் கோட்பாடுகளும் சமண, பௌத்தக் கோட்பாடுகள். இந்து சமயத்தில் இவற்றிற்கு இடமில்லை. எளிமை, உழைப்பு, கூட்டு வாழ்வு என்பவற்றிற்கு வர்ணமுறையில் இடமில்லை. விடுதலை, போராட்டம், பணிவு மறுப்பு என்பவற்றிற்கு பக்தி முறையில் இடமில்லை. ஆனாலும் காந்தியம் இவற்றைக் கொண்டே இயங்க முயல்கிறது.

       சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், என்பதற்கு இந்தியப் பொது நம்பிக்கையில் இடமில்லை. ஆனால் மார்க்சியமும் பெரியாரியமும் அம்பேத்கரியமும் காந்தியமும் இவற்றைத்தான் வாழ்வு நெறியாக முன்வைக்கின்றன; வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு விளக்கங்களுடன். இவற்றில் முதல் மூன்றும் விஞ்ஞான வாதத்தையும் நவீனத் தன்மையையும் வெளிப்படையாகக் கொண்டவை. காந்தியம் இதில் வேறுபடுகிறது. ஆனால் முரண்படவில்லை”, என்று காந்தியத்தின்  (பிரேம்- காந்தியைக் கடந்த காந்தியம் – காலச்சுவடு) பின்நவீனத்துவ வாசிப்பு அடையாளம் காணுவதை இவ்விடத்தில் நினைவு கூரலாம். 

           இந்தியாவின் மெக்காலே கல்வித்திட்டத்தின் ஆங்கிலக் கல்வி அடிமைகளை உருவாக்குகிறது என்று காந்தி மிகக்கடுமையாகச் சாடினார். மனிதன் வெறும் அறிவுப் பிழம்போ அல்லது விலங்குகளைப் போன்ற தசைநார்ப் பிண்டமோ அல்ல. கைகள், கால்கள், கண்கள், காதுகள், மூக்கு முதலிய உடல் உறுப்புகளுக்கு சரியான தேர்ச்சியும் பயிற்சியும் அளிப்பதன் வாயிலாக அறிவுக்கு உண்மையான பயிற்சி தர இயலும் என்று கருதினார். ஒரு குழந்தையின் உடல் உறுப்புகளைப் புத்திசாலித்தனமான விதத்தில் பயன்படுத்துவது அக்குழந்தையின் அறிவு எளிதாகவும் விரைவாகவும் வளர்ச்சியடைய சிறந்த வழியாகும். புத்தியும் உடலும் சேர்ந்து வளர்ச்சி பெற வேண்டும். அதே சமயத்தில் உள்ளத்திலும் விழிப்பு ஏற்படவேண்டும். அறிவு மட்டும் வளர்வது அரைகுறையாகவே இருக்கும் என்று தீர்க்கமாக நம்பினார்.

        1937இல் ஆண்டு காந்தி கல்வி குறித்த தமது சிந்தனைகள், தென்னாப்பிரிக்க அனுபவங்கள்  ஆகியவற்றை முன்வைத்து ‘அரிசன்’ வார இதழில் கட்டுரை ஒன்றை எழுதினார்.  இந்தியாவில் தோல்வியடைந்து வரும் கல்வி முறை குறித்தும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் கல்வி முறையை விரிவுபடுத்துவதற்கு பின்பற்றக்கூடிய திட்டங்களைப் பற்றியும் தனது கண்ணோட்டங்களை அக்கட்டுரையில்  விவரித்தார்.

          மெக்காலே கல்வி நமது மரபுக்கும் பண்பாட்டிற்கும் முரணாக உள்ளது. குழந்தைகளை சமூகத்திலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் அந்நியப் படுத்துகிறது. கற்றவர்களை தனி இனமாக மாற்றி விட்டது. அரசு மற்றும் தனியாருக்குப் பணியாளராகும் பயிற்சியை மட்டும் தருகிறது. சமூக உணர்வின்றி சுயநல தனிமனித உணர்வைப் புகுத்திவிட்டது. தொடக்கக் கல்வியின் முன்னேற்றம் சுருங்கிவிட்டது. இது வாழ்க்கைக்குப் பயன்படாத கல்வித்திட்டம். பொதுமக்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையில்லை. அவரவர் தேவையை உணராமல் திணிக்கப்படும் எந்திரக்கல்வி. கல்வியும் தேர்வுகளும் குழந்தைகளுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டன, ஆகிய குற்றச்சாட்டுகள்  காந்தியால் முன்வைக்கப்பட்டன.

         காந்தி தனது புதிய கல்விமுறைக்கு சர்வோதயக் கல்வி என்று பெயரிட்டார். இக்கல்வியின் நோக்கம் கிராம சுயராஜ்யத்தை நிறுவதாகும். தனி மனிதர்களை சமூக மனிதர்களாக மாற்றும் இக்கல்வி முறையை “வாழ்க்கைக்கான கல்வி; வாழ்க்கை மூலம் கல்வி; வாழ்க்கை முழுதும் கல்வி”, என்று எளிமையாக வரையறுத்தார். தாய்மொழி வழியாக தொழில் அடிப்படையிலான ஆதாரக் கல்வியாக இது அமையும் என்று காந்தி விரும்பினார்.

           நாடு முழுவதும் குழந்தைகளுக்கு 7 ஆண்டுகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி, தாய்மொழி வழிக்கல்வி, கைத்தொழில் மற்றும் ஆக்கப்பணிகள் மூலம் கல்வி, சமூக சேவை உணர்வோடு கிராம சபைகள் நடத்தும் பள்ளிகள், ரொட்டி சுடுதல் – கழிப்பறைத் தூய்மை செய்தல் போன்ற குடிமைப் பயிற்சியுடன் கல்வி, வாய்மை, மதச்சார்பின்மை, பொதுவாழ்வு, சமூகப் பங்கேற்பு, தூய்மைப் பணி போன்ற அம்சங்கள் வழி சுயக்கட்டுபாடும் அர்ப்பணிப்பும் உடைய இந்தியக் குடிமக்களை உருவாக்க முடியும் என்று காந்தி நினைத்தார். இக்கல்வியானது படிப்பு மற்றும் தேர்வுக்காக இல்லாமல், கைத்தொழில் அல்லது உற்பத்தி வேலைகளை மையமாகக் கொண்டது. எனவே இதன்மூலம் உடல் சூழல், சமூக சூழல் மற்றும் கைவினைப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

          1935 இந்திய அரசியல் சட்டப்படி மாகாணத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 1937இல் நடந்த இத்தேர்தலில்  இந்திய தேசிய காங்கிரஸ் (INC) இலவச மற்றும் கட்டாயக் கல்வியை தேர்தல் அறிக்கைகளில் முன்னிறுத்தியது. ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காந்தியின் கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காங்கிரஸ் முடிவு செய்தது. 1937 அக்டோபர் 22 மற்றும் 23இல் வார்தாவில் காந்தி பங்கேற்ற அகில இந்திய தேசியக் கல்வி மாநாடு நடந்தது. கல்வியாளரும், பிற்காலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவருமான ஜாகீர் உசைன் தலைமையில் கல்விக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, விரிவான தேசிய அடிப்படைக் கல்வித் திட்டத்தை மார்ச் 1938இல் இந்தக் குழு சமர்ப்பித்தது. இது வார்தா திட்டம் என்றும் ஆதாரக் கல்வித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. காந்தியின் ஆதாரக்கல்வித் திட்டத்தின் அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

      6 முதல் 14 வயது வரையிலான அனைவருக்கும் 8 ஆண்டுகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படும். இது பாலினம், கலாச்சாரம் அல்லது மதம் ஆகியவற்றைச் சாராமல் இருக்கும். கல்வி கற்பதற்கு தாய்மொழி பயிற்று மொழியாக ஆக்கப்பட்டது. குழந்தை தனது சொந்த வேகத்தில், பாடத்தை முடிக்க எந்த கட்டாயமும் இல்லாமல், தேர்வுகள் பற்றிய பயமும் இல்லாமல் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டது. பாடத்திட்டத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் குழந்தை செயல்படுவதற்கான சுதந்திரச் சூழல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.

        வட்டாரக் கைவினை அல்லது உற்பத்தி வேலைகளுடன் கல்வி கொடுக்கப்பட வேண்டும். உள்ளூர் கைவினைப்பொருளுடன் கல்வியை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம். அது வேலை மையக் கல்வியாக இருந்தது. கைவினைத் திறன்களை ஊக்குவிப்பதன் மூலம் கூட்டுச் செயல்பாடு, உழைப்பின் கண்ணியம் போன்றவற்றில் கவனம் குவிக்கப்பட்டது.

        இந்தியாவின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுயசார்பு கல்வியை உருவாக்குவது, வர்க்கமற்ற சமூகத்தைக் கட்டுவது, தாய்மொழியில் கல்வி, மதச்சார்ப்பற்ற கல்வி, கல்வியின் ஊடாக பணம் சம்பாதிப்பது,  வேலையில்லாத் திண்டாட்டம் குறைதல், படித்த மற்றும் படிக்காத வகுப்பினருக்கு இடையிலான வேறுபாடுகள் அழிதல் போன்றவை நேர்மறையான அம்சமாக அணுகப்பட்டன.

        குழந்தைகள் ஒரே நேரத்தில் படித்து வேலையும் செய்வதால் ஏற்படும் எதிர்மறையான உளவியல் விளைவுகள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாத நிலை, பள்ளிப் பாடங்களுக்கும் கைவினைப் பொருட்களுக்கும் இடையே தொடர்பின்மை, பள்ளியை சிறுதொழிற்கூடமாக மாற்றிய சூழல், தொழில்மயமாக்கல் காலத்தின் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாமை போன்ற பல்வேறு குறைகள் இக்கல்விமுறையில் இருந்தன. உயர்கல்வி தனியாரிடம் இருக்க வேண்டும் என்பதும் பொருத்தமானதாக இல்லை. 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. இதன் வழியே ஆதாரக்கல்வி முடிவுக்கு வந்தது.

         இதை மீட்டெடுக்கும் முயற்சியாக காந்தி மாதிரிப் பள்ளிகளை வார்தா, செகாவோன் ஆகிய இடங்களில் தொடங்கினார். 1942 காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறை சென்றபிறகு இவை மூடப்பட்டன. ஆண்டுதொறும் ஆதாரக் கல்வி மாநாடு ஒப்புக்கு நடத்தப்பட்டது. 1945இல் காந்தி சேவாகிராமில் மூன்றாவது ஆதாரக் கல்வி மாநாட்டைக் கூட்டியபோது வினோபா, சித்த பூஷன் போன்ற ஒருசில காந்தியர்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர்.

          சுயமரியாதை இயக்கமும் பெரியாரும் தொழிற்கல்வியை ஏற்கவில்லை. அண்ணல் அம்பேத்கர் தலித் மக்களின் விடுதலைக்கு உதவாது என்றார். அன்று இந்தியாவின் நவீன முகமாக அறியப்பட்ட ஜவகர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் இம்முறைக்கு ஆதரவாக இல்லை. கிராமங்களில் உள்ள சாதியம், தீண்டாமை போன்றவை கல்வியிலும் எதிரொளிக்கும். ஆங்கிலத்தை மறுப்பது நமது முன்னேற்றத்தை பின்னோக்கிச்ச் செலுத்திவிடும் என இவர்கள் எண்ணினர். மதச்சார்பற்ற கல்வி என்பதால் இந்துத்துவவாதிகளும் இவற்றில் ஆர்வம் காட்டவில்லை. மொத்தத்தில் ஆதாரக் கல்வித் திட்டம் தோல்வியில் முடிந்தது.

         காந்தி தனது நிர்மாணத் திட்டங்களைப் பற்றிச் சொல்லும் போது, “இது ஒரு பைத்தியக்காரனுடையதைப் போல இருக்கலாம். காங்கிரஸ்காரர்களுக்கு இதில் பிடித்தம் இல்லையென்றால் நான் ஒதுக்கப்பட வேண்டியவனே. என்னைப் பொருத்தவரையில் இத்திட்டங்கள் இல்லாமல் சட்ட மறுப்பைக் கையாள்வது முடக்குவாதக் கையால் ஒரு கரண்டியைத் தூக்க முயல்வதாகும்”, என்கிறார். இதன்வழி  அன்றைய (1945) சூழலில் அவரது எண்ணவோட்டம் வெளிப்படுத்துவதாகக் கருதலாம்.

(தொடரும்…)

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் – ஜனவரி 2024