அ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி!


அ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி!

                                                                                    – மு.சிவகுருநாதன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெரிய அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் ‘டிராஃபிக்’ ராமசாமி போட்டியிடுவதாக அறிவித்து பல்வேறு கட்சித்தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

ஊழல் அரசியல்வாதிகளின் ஆதரவைத் திரட்டுவதன் மூலம் சமூக ஆர்வலராக அறியப்பட்ட டிராஃபிக் ராமசாமி சராசரி அரசியல்வாதியாகிவிட்டதை நண்பர் கோ.சுகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இன்னும் ஜெயலலிதாவை சந்திக்கவேண்டியதுதான் பாக்கி என்கிற அளவிற்கு அவரது கருத்துக்கள் இருக்கின்றன.

சில நாட்களுக்கு (மே 30) முன்பு ‘தி இந்து’ வில் ‘டிராஃபிக்’ ராமசாமியின் நேர்காணல் இன்று வந்துள்ளது. அதில் “ஜெயலலிதா மிகவும் நல்லவர், அறிவுக்கூர்மை, நிர்வாகத்திறமை கொண்டவர்” என்றெல்லாம் பாராட்டி ‘தீய சக்திகளை அப்புறப்படுத்துங்கள்’ என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். அப்புறம் ஏன் ஜெ.ஜெயலலிதாவை எதிர்த்துப்போட்டியிட வேண்டும்?

இதற்கு ஜெ.ஜெயலலிதாவின் தொண்டரடிபொடிகளாக இருக்கும் செ.கு.தமிழரசன், தனியரசு, சரத்குமார், மா.பா. பாண்டியராஜன் உள்ளிட்ட தே.மு.தி.க. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், சில இயக்கங்களைச் சேர்ந்த இஸ்லாமியத் தோழர்கள் ஆகியோர் எவ்வளவோ பரவாயில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

டிராஃபிக் ராமசாமி சொல்லிய கருத்து ஜெயலலிதாவின் ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்பட்ட 1990 கள் காலகட்டத்திலிருந்து தொடர்ந்து பலரால் பல்வேறு வடிவங்களில் கூறப்பட்டு வருகிறது சிவப்பாய் இருக்கிறவன் தப்பு செய்யமாட்டான் என்பதைப்போல.

இதற்கு நீதியரசர் குமாரசாமியும் எவ்வளவோ பரவாயில்லை ரகந்தான். இவர் ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை என்றோ, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்க்கவில்லை என்றோ தனது தீர்ப்பில் எங்கும் கூறவில்லை. மாறாக சதவீத அடைப்படையிலேயே விடுவித்திருக்கிறார். அதில் குளறுபடிகளலிருப்பது வேறு சங்கதி.

டிராஃபிக் ராமசாமி போன்றோரின் இத்தகைய கருத்துக்களிலுள்ள சமூக, சாதீயப் பின்புலத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். முழுக்க முழுக்க சாதீயச் சமூகமாக இறுகிப்போகியுள்ள இந்திய, தமிழ்ச்சூழலில் நீதிமன்றங்கள்கூட லாலுவிற்கும் ஜெயலலிதாவிற்கும் தனித்தனி அளவுகோல்கள் வைத்திருக்கின்றனவே! வெண்மணிப் படுகொலைக் குற்றவாளி நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதும் இத்தகைய பின்னணி எனபதை மறுக்கமுடியுமா?

ஜெயலலிதா உடன் முன்பு தொழிற்கூட்டாளியாக இருந்த ‘துக்ளக்’ சோ.ராமசாமி நல்லவர்; தற்போது உடனிருக்கும் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தீயசக்திகள் என்கிற நிலைப்பாடு எத்தன்மையானது என்பதைப் புரிந்துகொள்ள பெரிய சமூக, அரசியல், பொருளியல் கோட்பாடெல்லாம் தேவையில்லை.

டிராஃபிக் ராமசாமி போன்ற போலி சமூக ஆர்வலர்கள் இனி ‘மக்கள் சேவைக்கு’ விடை கொடுத்துவிட்டு தங்களது இறுதிக் காலத்தையாவது ஜெயலலிதா சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள ஏதுவாக அ.இ.அ.தி.மு.க. வில் இணைந்துவிடுவது அனைவருக்கும் நல்லது.

Published by பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.

பின்னூட்டமொன்றை இடுக