பாரதிதாசன்: தமிழ் அறிவொளிக் கால, பின்காலனிய முன்னோடி


பாரதிதாசன்: தமிழ் அறிவொளிக் கால,  பின்காலனிய முன்னோடி

(‘புதுமலர்பாவேந்தர் பாரதிதாசன் ஆவணச்சிறப்பிதழ் அறிமுகம்)

மு.சிவகுருநாதன்

          ‘புதுமலர்’ இதழ் வள்ளலார், கவிஞர் தமிழ் ஒளி ஆகியோருக்கு முன்பு ஆவணச் சிறப்பிதழ் வெளியிட்டது. பாரதிதாசனின் பிறந்த (1891, ஏப்ரல் 29) மற்றும் நினைவு நாள் (1964, ஏப்ரல் 21) வரும் ஏப்ரல் மாதத்தினை ஒட்டி வெளியான இச்சிறப்பிதழில் ஜமாலன், ஈரோடு தமிழன்பன், கண.குறிஞ்சி, வே.மு.பொதியவெற்பன், எஸ்.சண்முகம், ஆ.தனஞ்செயன், இரா.முரளி, செந்தலை ந.கவுதமன், எல்.இராமமூர்த்தி, மணிகோ பன்னீர்செல்வம்  ஆகியோரின் பாரதிதாசன் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

          பாரதிதாசனின் படைப்புகளை ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்து அரசே மலிவுப்பதிப்பாக வெளியிட வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்காகக் குரல்கொடுத்துப் போராடி, இந்து சனாதனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் நரேந்திர  தபோல்கரின் கோரிக்கையை ஏற்று அம்மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்ததுபோல், பாவேந்தர் பாரதிதாசன் நினைவாக, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவரவேண்டுமென, இதழின் தலையங்கம் வலியுறுத்துகிறது.

        ‘தமிழ் நவீனத்துவ மரபில் பாரதியும் பாரதிதாசனும்”, என்ற கட்டுரையில் தமிழில் மறுமலர்ச்சிக் காலத்தில் இயங்கிய பாரதியும் பாரதிதாசனும் என்றாலும் பாரதி மறுமலர்ச்சியுடன் நின்றுவிட, பாரதிதாசனோ தமிழ் அறிவொளி இயக்கத்தின் முன்னத்தி ஏராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதை அவரது இலக்கிய இயக்கம் வெளிப்படுத்துவதாக உள்ளது,  என்று   ஜாமலன் புதிய பார்வைக் கோணத்தை முன்வைக்கிறார்.

    பாரதி சமஸ்கிருத தர்மாக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர். பாரதிதாசன் தமிழ் அறக் கோட்பாட்டை ஏற்றவர். இதனால் திருக்குறளில் உள்ள துறவறம், வீடுபேறு உள்ளிட்ட சமணம் சார்ந்த நம்பிக்கைகளைப் புறந்தள்ளி,  சமஸ்கிருத தர்மாக் கோட்பாட்டின் அடிப்படைகளான நால் வர்ணம், நால்வேதம், நான்கு ஆசிரமம், நான்கு நிலைகள் ஆகியவற்றை மறுத்து, முத்தமிழ், முக்கனி, முச்சங்கம், மூவேந்தர்கள், அறம், பொருள், இன்பம் என்ற மூன்று நிலைகள்   என்கிற தமிழ் அறக் கோட்ப்பாட்டை தனது காப்பியங்களில் எடுத்துரைப்பதை ஜமாலன் விரிவாக விளக்குகிறார்.

        தமிழர் நிலவளங்களைப் பாதுகாப்பதும் தமிழ் மொழி மீதான பண்பாட்டுத் திணிப்பை எதிர்ப்பதும் பாரதிதாசனின் முதன்மை நோக்கமாக இருப்பதால் அவரை தமிழ்ப் பின்காலனியத்தின் முன்னோடி என்று பேரா.இரா.முரளியின் கட்டுரை மதிப்பிடுகிறது.

        பாரதிதாசனுடான நினைவுகளைப் பகிரும் ஈரோடு தமிழன்பனின் ‘பாவேந்தர் – சில நினைவுகள்’ கட்டுரையில் பெரியாரியத் தாக்கம் இருந்த காரணத்தினால் பொதுவுடையாளர்கள் பாரதிதாசனை உரிய இடத்தில் வைத்துப் பார்க்கவோ, பாராட்டவோ முன்வரவில்லை என்கிறார். பாரதிதாசன் வீட்டை அடமானம் வைத்து ‘பாண்டியன் பரிசு’ காவியத்தைத் திரைப்படமாக்க முயன்று ஏமாற்றங்களால் உடல்நலம் குலைந்துபோனதையும் எடுத்துக்காட்டுகிறார். இக்கட்டுரையில் பாவேந்தர் இறந்த நாள் தவறாக உள்ளது. (21.04.75  அல்ல 21.04.64) புதுவை முதல்வர் சுப்பையா என்றும் உள்ளது. அதுவும் தவறு. இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான வ.சுப்பையா (1911-1993) என்று இருக்க வேண்டும்.

         சீர்திருத்தக் கவி, தமிழ்த் தேசிய கவி, பொதுவுடைடைமைக் கவி, பிரபஞ்சக் கவி போன்ற பாரதிதாசனின்  சிந்தனைப் பரிமாணங்களையும் அவரது கவிதைகளில் உள்ள சில முரண்பாடுகளையும் விளக்குகிறது தோழர் கண.குறிஞ்சியின் கட்டுரை.

       ‘மணிக்கொடி’ இதழில் எழுதிய பாரதிதாசனை நவீன இலக்கிய உலகம் பொருட்படுத்தவில்லை, என்கிற சுகுணா திவாகரின் கருத்தை பகுதி உண்மை என்று சொல்லும் தோழர் வே.மு.பொதியவெற்பனின் கட்டுரை (பாரதிதாசனும் புதுமைப்பித்தன்), இதன் பொருட்டு பேரா. ய.மணிகண்டன், தி.க.சி., இளங்கோ கிருஷ்ணன், தமிழவன் போன்ற தரப்புகளை இடையீடு செய்து, பாரதி பரம்பரை, பெரியார் பரம்பரை இரண்டிலும் ஒருசேர இயங்கிய பாரதிதாசனுக்கும் மணிக்கொடியாளர்களுக்கும்  இடையிலான உடன்பாடு மற்றும் முரண்பாடுகளின் வெவ்வேறு தரப்புகளை தமது வழக்கமான பாணியில் மேற்கோளிடுகிறார். 

         பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’ மூலம் ‘தமிழ்’ என்ற சொல் அவரது கவிதைகளின் இயற்கூறாகவும் விளங்குவதையும் ‘தமிழ்’ என்ற குறியீட்டை கவிதையாடலின் பரப்பில் நீட்சி கொள்ளச் செய்வதையும் நவீன இலக்கிய விமர்சகர் எஸ்.சண்முகம் எடுத்துக்காட்டுகிறார். இயற்கையின் எண்ணிலியான அசைவுகளை பல்வேறு காட்சிகளாக பிரதியாக்கம் செய்திருக்கும் ‘அழகின் சிரிப்பு’ தமிழின் மொழிபிம்பத்தை அகவயப்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறார்.

        “வட்ட மேசையில் சுயமரியாதை இதழியலின் இருக்கை” என்ற் பேரா.மணிகோ பன்னீர்செல்வத்தின் கட்டுரையில் சுயமரியாதை இதழியலின் படைக்கலன்களின் ஒன்றான ‘புதுவை முரசையும்’  பாரதிதாசனின் எழுத்தாக்கங்களையும் எடுத்துரைக்கிறது. ஸ்வராஜ்யம் பற்றிய சுயமரியாதை நோக்கு, நாட்டைச் சுற்றிய ராட்டை, ஆணவச் சுதந்திரம் அடைந்துவிட்டோர், வகுப்புவாரி உரிமையிலிருந்து இரட்டை வாக்குரிமை, வட்ட மேசையில் படர்ந்த  சதுர்வருணம் போன்ற தலைப்புகளில் பாரதிதாசனது பெரியாரியப் பார்வை வெளிப்படுத்தப்படுகிறது.     

       பாரதியார் வழியாக பெரியாரை வந்தடைந்த பாரதிதாசன, பரந்த அறிவுப்பார்வை கொண்டு உலகை அணுகி கவிதைகளில் புதிய போக்குகளைக் கையாண்டதையும் ‘பெரியார் ஒளியில் பாரதிதாசன்’ என்கிற செந்தலை ந.கவுதமன் கட்டுரை அவரது படைப்பு வழிநின்று நிறுவுகிறது.

        கவிதை என்பது வெறுமனே அகவுணர்வு வெளிப்பாட்டிற்கான வடிகால் சாதனமாக அமைவது என்னும் நிலைப்பாட்டிலிருந்து வேறுபடும் வகையில், சமுதாயத்தைப் பாதுகாக்கப் போராடுவோரின் ஆயுதமாகக் கவிதையின் பரிமாணத்தை வலிமைமிக்கதாக மாற்றியதை பாரதிதாசனின் சாதனையாக முனைவர் ஆ.தனஞ்செயன் கட்டுரை குறிப்பிடுகிறது.

       பேரா.எல்.இராம்மூர்த்தியின்  ‘பாவேந்தர் தமிழ்’ கட்டுரை எனும் கட்டுரை, மொழியியலின் ஊடாக பாரதிதாசனின் கருத்தியல்  கோட்பாடு அணுகுமுறைகளை ஆராய்கிறது. நாம் X பிறர், தெற்கு X வடக்கு, தமிழ்  X பிறமொழிகள், நகரம் X கிராமம், மாற்றம் X பழமை, அறிவியல் விவசாயம் X பண்டைய விவசாயம், சந்தைப் பொருளாதாரம் X தேவை சார்ந்த பொருளாதாரம், வளர்ச்சி X நிலைத்தன்மை போன்ற இருமை எதிர்வுகளைக் கட்டமைக்கும் மொழியியல் கூறுகளை கட்டுரை எடுத்துரைக்கிறது.

          இன்றைய அரசியல் சூழலைக் கவனத்தில் கொண்டும் நவீன இலக்கிய உலகில் பாரதியைப் போன்று யாரும் அதிகம் உச்சரிக்காத பாரதிதாசனின் பல்வேறு நவீன முகங்களை வெளிப்படுத்தும் வகையில் ‘புதுமலர்’ ஆவணச் சிற்ப்பிதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.  

Published by பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.

பின்னூட்டமொன்றை இடுக